Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | சுதேச அரசுகள் ஒன்றிணைப்பு

தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல் - சுதேச அரசுகள் ஒன்றிணைப்பு | 12th Political Science : Chapter 7 : Challenges of Nation Building

   Posted On :  03.04.2022 12:55 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள்

சுதேச அரசுகள் ஒன்றிணைப்பு

பெரிய அளவிலான நிர்வாக மாகாணத்தில் ஒரு சிறிய அரசியல் அமைப்பே சுதேச அரசு என்பதாகும். அது பெரும் முடியாட்சியில் நேரடியாகவோ அல்லது துணைக் கூட்டமைப்பாகவோ ஆட்சி செய்வதாகும்.

தேச கட்டமைப்பின் சவால்கள்


கற்றலின் நோக்கங்கள்

* விடுதலைக்கு முன்பிலிருந்து விடுதலைக்கு பின்வரை இந்தியாவின் சுதேச அரசுகளின் தோற்றம் மற்றும் மறைவு பற்றி கூறுதல்.

* நிர்வாகம் மற்றும் அரசியல் பகுதிகளை ஒன்றுபடுத்துவதில் சுதேச அரசுகள் இந்தியாவோடு இணைவதன் முக்கியத்துவம் குறித்து அறிதல்.

* மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்புக் குறித்த இந்திய அரசின் தயக்கம்,குடிமக்களின் அழுத்தம் இவற்றிற்கான காரணங்களை ஒப்பிட்டு அறிதல். 

* மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பெற்றதால் சுதேச அரசுகள் இணைக்கப்பட்டு இந்தியாவில் ஏற்பட்ட சிறந்த பயன்களை விவாதித்தல். 

* மாநிலங்களை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் அரசு நியமித்த ஆணையங்கள், இயற்றப்பட்ட சட்டங்கள் குறித்து பகுப்பாய்வு செய்தல். 

* ஒரு நாட்டைக் கட்டமைப்பதில் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, அரசியல், மொழி மற்றும் நிர்வாக சவால்களை புரிந்து கொள்ளுதல். 

* மொழி, இனம் மற்றும் அரசியல் தன்னாட்சி பெற வலுவான அடித்தளமிட்டதற்குக் காரணமாக தமிழ்நாடு மாநில அரசு உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்திய பல்வேறு கூறுகள் குறித்து விரிவாக அறிதல் கொள்ளுதல்.



சுதேச அரசுகள் ஒன்றிணைப்பு 

இந்தியாவில் சுதேச அரசுகளின் தோற்றம்

பெரிய அளவிலான நிர்வாக மாகாணத்தில் ஒரு சிறிய அரசியல் அமைப்பே சுதேச அரசு என்பதாகும். அது பெரும் முடியாட்சியில் நேரடியாகவோ அல்லது துணைக் கூட்டமைப்பாகவோ ஆட்சி செய்வதாகும். இந்த சிறிய நிர்வாகப் பகுதியானது அரசியல், கலாச்சார, மொழி மற்றும் பூகோள அமைப்பு அடிப்படையில் அமைந்திருக்கும் கி.பி.(பொ.ஆ) 200-ல் மத்திய ஆசிய பகுதியிலிருந்து இந்தியக் துணைக் கண்டத்திற்கு புலம் பெயர்ந்து வந்த இராஜபுத்திரர்களால் சுதேச அரசுகள் தொடங்கப்பட்டது. இராஜபுத்திரர்கள் என்றால் அரசர்களின் இளவரசர்கள் என்பது பொருளாகும். எனவே இந்தியாவில் சுதேச அரசுகள் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இராஜபுத்திரர்கள் அல்லாமல் நவாப் மற்றும் நிஜாம்களாலும் சுதேச ஆட்சிகள் நடைபெற்றன. மைசூர், திருவிதாங்கூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகள் உள்ளூர் அரச வம்சங்களால் ஆட்சி செய்யப்பட்டன. இந்த அனைத்து வகை முடியாட்சி முறைகளும் பிரிட்டிஷ் இந்தியாவில் சுதேச அரசுகள் என்றழைக்கப்பட்டன. இந்த வகை அரசுகள் பிரிட்டன் ஆளுகைக்குகீழ் கட்டுப்பட்டது என்பதனை குறிக்க இந்த சுதேச அரசுகள் என்ற சொல் வேண்டுமென்றே கையாளப்பட்டது.


சுதேச அரசுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள்

முன்பே குறிப்பிட்டது போன்று துண்டுதுண்டாகக் காணப்பட்ட சுதேச அரசுகளை ஒருங்கிணைக்கும் முயற்சி சுதந்திரத்திற்கு முன்பிருந்தே குறிப்பாக காலனிய ஆதிக்கத்திற்கு முன்பே நீண்ட வரலாற்றை கொண்டிருக்கிறது. பல சிறிய அரசுகளை இணைத்து பேரரசுகளாக மாற்றும் முயற்சியானது ஆறாம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. மகத பேரரசு காலத்தில் பிம்பிசாரர் மற்றும் அஜய்சத்ரு, மௌரியர்கள் காலத்தில் அசோகர் மற்றும் 5ஆம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் வந்த சந்திரகுப்தர், அவரது மகன் சமுத்திரகுப்தர் போன்றவர்களால் சிற்றரசுகள், தங்கள் பேரரசின் கீழ் செயல்படும் சுதந்திர அரசுகளாக நிர்வகிக்கப்பட்டனர். பின்னர் பேரரசர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் இடையே அதிகாரப் போட்டி, பொறாமை மற்றும் வெறுப்புணர்ச்சி ஆகியன நம்பிக்கையின்மையின், விளைவாக அரபு மற்றும் பாரசீக படையெடுப்புகளுக்கு வாய்ப்பளித்தன. வடஇந்தியா முழுவதும் முகலாய பேரரசு தனது ஆதிக்கத்தினை நிலைபெறச் செய்துக் கொண்டது.


பிரிட்டிஷ் ஆட்சியில் சுதேச அரசுகள்

அ) குண்டு முழங்கி மரியாதை செய்யும் முறை 

இம்முறை ஜரோப்பியர்களின் காலனியாதிக்கத்தின் போது ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் பிரெஞ்சுகாரர்களால் கடைபிடிக்கப்பட்டது. முதலில் தங்கள் வியாபாரத் தொடர்புப் பகுதிகளிலும் பின்பு பிறபகுதிகளிலும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதற்கான குறியீடாக இதனை பயன்படுத்தினர். குறிப்பாக இம்மூன்று காலனிய அரசுகளில் பிரிட்டிஷ் அரசானது சில சுதந்திர அரசுகளுக்கான இறைமை உரிமையை தங்கள் மன்னராட்சி முறைக்கு உள்பட்டு வழங்கின. சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியாவில் சுதேச அரசுகளின் எண்ணிக்கை 565 ஆக இருந்தது. இதன் அதிகாரமானது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் வழங்கப்பட்ட குண்டு முழங்கும் மரியாதை அடிப்படையில் அமைந்திருந்தன. இவை இரண்டு விதமாக காணப்பட்டன. ஒன்று குண்டு முழங்கி மரியாதை செய்யும் சுதேச அரசுகள் என்றும், மற்றொன்று குண்டு முழங்கும் உரிமை அற்ற சுதேச அரசுகள் என்று பிரிந்திருந்தன. 

ஆ) குண்டு முழுங்கும் மரியாதை பெற்ற அரசுகள்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் குண்டு முழங்கும் மரியாதை வழங்கப்பட்ட சுதேச அரசுகளின் எண்ணிக்கை சுமார் 117-லிருந்து 120-வரை இருக்கலாம். இந்த அரசுகளின் தலைவர்கள், ஆட்சியாளர்கள் அல்லது இளவரசர்கள் அம்மரியாதைக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். இவர்களுக்கு வழங்கப்படும் இவ்வுரிமையானது முழங்கப்படும் குண்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதன் சிறப்பு நிலை அறியப்பட்டது. மிக அதிக மரியாதைக்குரிய சுதேச அரசுகளுக்கு 21 குண்டுகள் எனவும் அதனிலும் குறைவான சுதேச அரசுகளுக்கு 9 குண்டுகள் எனவும் இது அமைந்திருந்தது. சில சுதேச அரசுகள் 21 குண்டுகளை முழங்கும் உரிமை பெற்று இருந்தன. அவையாவன

மாட்சிமை தாங்கிய மகாராஜா குவாலியர் மன்னர் சிந்தியா 

மாட்சிமை தாங்கிய பரோடா மகாராஜா கேக்வார் 

மாட்சிமை தாங்கிய ஜம்மு-காஷ்மீர் மகாராஜா 

மாட்சிமை தாங்கிய மைசூர் மகாராஜா 

மாட்சிமை தாங்கிய ஜதாராபாத் மற்றும் பிரார் நிஜாம்கள்

சில சுதேச அரசுகள் 9 குண்டுகள் முழங்கும் உரிமையை பெற்றிருந்தன. அவையாவன

சச்சின் நவாப் 

பாட்னா மகாராஜா

வாத்வான் மகாராஜா 

லாகரு நவாப்


இ) குண்டு முழங்கும் உரிமை பெறாத சுதேச அரசுகள்

565 சுதேச அரசுகளில் 117 முதல் 120 வரை மட்டுமே குண்டு முழங்கப்படும் உரிமையை பெற்றிருந்தன.

பிற சுதேச அரசுகள் பிரிட்டிஷ் அரசுகளுக்கு கீழ் இருந்தபோதும் குண்டு முழங்கும் உரிமை வழங்கப்படவில்லை. சில சுதேச அரசுகள் எந்தவித குண்டு மரியாதையையும் பெறாமல் இருந்ததற்கான வேறு காரணங்களும் இருந்தன. அவையாவன:

1) சில சுதேச அரசுகள் இந்த முழங்கும் முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. 

2) சில சுதேச அரசுகள் இம்முறையை தங்களுக்கான மரியாதைக் குறைவாகக் கருதினர்.

3) சில சுதேச அரசுகளின் ஆட்சி மாறின. ஆனால் தங்களது அரசப் பட்டங்களையும் ஓய்வூதியத்தையும் பயன்படுத்தினர்.

செயல்பாடு

கீழ்க்கண்ட தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பங்களிப்பு குறித்து உனது நண்பர்களுடன் விவாதம் செய்க.



இந்தியாவில் சுதேச அரசுகள்

விடுதலைக்கு முன்பு பல சுதேச அரசுகள் காலனிய பிரிட்டன் அரசின் ஆதரவுடன் இயங்கின. பிரிட்டிஷ் அரசின் கீழ் சுதேச அரசுகளாக இயங்கியதால் இதுவரை பெற்றிருந்த சலுகைகளை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பு என்ற யோசனையை அவர்கள் ஏற்கவில்லை . பல அரசர்கள் விடுதலைக்குப் பின்னர் தன்னாட்சியுடன் கூடிய சுதந்திர அரசுகளை அமைத்துக்கொள்ளும் வாய்ப்புக்காக காத்திருந்தனர். இந்த சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பு என்பது பிரிட்டனின் ஆட்சிக்கு முடிவு கட்டவும். சுதேச அரசுகள் மற்றும் மாகாணங்கள் கலைக்கப்படுவதுடன் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு முடிவு கட்டுவதையும் நோக்கமாக கொண்டதாகும்.

அரசியல், இராஜதந்திர பேச்சு வார்த்தைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு இடையே சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பு செயல்கள் 1947-இல் நிகழ்ந்தன. பிரிட்டனின் அன்றைய பிரதமர் கிளெமென்ட் அட்லி பொதுச்சபையில் மார்ச் 15, 1946 அன்று உரையாற்றும் போது இந்தியாவிற்கான விடுதலையை அங்கீகரித்தார். அப்போது விடுதலைப் போராட்டத்தையும், அதில் உயிர்த்தியாகம் செய்தோரையும் நினைவு கூர்ந்தார். மேலும் புதிய இந்தியாவில் அதன் பன்முகப் பண்பாட்டுப்பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் ஏற்பட உள்ள சவால்களை குறிப்பிட்டு பேசினார். "இந்தியா பல இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகள் கொண்ட நாடு என்பதையும் அதனால் உருவாகும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் நன்கு அறிவேன். ஆனால், இத்தகைய தடைகளை இந்தியர்களே எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும். சிறுபான்மையோர் உரிமைகள் எப்போதும் நமது சிந்தனையில் இருக்க வேண்டும். அவர்கள் அச்சம் இல்லாமல் வாழும் சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்" என்றார்.

இருந்தபோதிலும் தேச கட்டமைப்பு செயல்பாடுகளும் சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பும் பேச்சுவார்த்தைகளும் ஏப்ரல் 1947-இல் தொடங்கின. தேச கட்டமைப்பின் போது மதக்கலவரம், தேசப் பிரிவினை மற்றும் அகதிகள் பிரச்சனை ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. சர்தார் வல்லபாய் பட்டேல் துணை பிரதமராகவும் உள் துறை அமைச்சராகவும் பதவியேற்றவுடன் 565 சுதேச அரசுகளின் ஒருங்கிணைப்பு தொடங்கியது. மூன்று பிரிட்டிஷ் வைசிராய்களுடன் பணியாற்றிய வி.பி.மேனன் பட்டேலின் செயலாளராக பொறுப்பேற்று அதற்கான களப்பணிகளை மேற்கொண்டார்.

பட்டேலும், வி.பி.மேனனும் சுதேசி அரசர்களிடம் அரசியல் நிர்ணய சபையில் இணைய செய்தனர். அவர்களின் சுதேச அரசுகளின் சொத்துக்கள் உடமைகள் பறிமுதல் செய்யப்படாது என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. பல சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்தனர். ஜூனாகத், காஷ்மீர் மற்றும் ஐதராபாத் சுதேச அரசர்கள் தனித்திருக்க விரும்பினர்.


ஜூனாகத்

ஜூனாகத் நவாப் அல்லது அவரின் திவான் ஷா நவாஸ் (பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜில்பிகார் அலி பூட்டோவின் தந்தையார்) இணைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜூனாகத்தை சுற்றியுள்ள மற்ற மூன்று அரசுகள் இந்தியாவின் அங்கமாக இருந்தன. நான்காவது பகுதி அரபிக்கடல் அந்த பகுதி மக்கள் பெரும்பாலோர் முஸ்லிம் அல்லாதோர். இருந்தபோதிலும் திவான் பூட்டோ பாகிஸ்தானோடு ஆகஸ்ட், 15 1947 அன்று இணைந்துவிட்டார். இதனைக் கண்டித்து பொதுமக்கள் எதிர்த்து போராட்டங்கள் நடத்தினர். ஜூனாகத் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று கோரினார். திவான் தனது குடும்பத்தினருடனும் அரசு கஜானாவுடனும் பாகிஸ்தானின் அன்றைய தலைநகர் கராச்சிக்கு தப்பி சென்று விட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது.


ஐதராபாத்

நிஜாம் தலைமையிலான ஐதராபாத் மற்றொரு சுதேச அரசாகும். முஸ்லிம்கள் அல்லாதோர் பெரும்பான்மையினராக இருந்தனர். அவர் தன்னாட்சி உரிமையை எதிர்பார்த்தார். மவுண்ட்பேட்டன் பிரபு "டொமினியன்" நிலை அளிக்க மறுத்து விட்டார். "டொமினியன்" என்றால் பிரிட்டிஷ் காமன்வெல்த் கூட்டமைப்பில் தன்னாட்சி அரசாக விளங்கும் நிலையைக் குறிப்பதாகும். உண்மையில் அப்போது காசிம் ரஷ்வி எனும் மதவாதத் தலைவரின் செல்வாக்குக்கு நிஜாம் அடிமைப்பட்டிருந்தார். ஆயுதம் தாங்கிய அமைப்பான இந்தேகத் -உல்- முசுல் மான் எனும் அமைப்பின் தலைவராக ரஷ்வி இருந்தார். இந்த அமைப்பினர் 'ரசாக்கர்' என அழைக்கப்பட்டனர். மேலும் 1943-இல் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடையையும் நீக்கினார் நிஜாம். ராசாக்கார்களும் கம்யூனிஸ்ட்களும் இணைந்து வன்முறையில் முடிந்தது. ரயில் வண்டிகள் தாக்கப்பட்டது. இதன் பின்பு, செப்டம்பர் 1948-இல் இந்திய ராணுவம் ஐதராபாத்திற்குள் நுழைந்து கலவரத்தை அடக்கியது. இந்தியாவுடன் இணைவதாக நிஜாம் அறிவித்தார். நிஜாமுக்கு ஏராளமான செல்வமும் சலுகைகளும் அளிக்கப்பட்டன.


தெலங்கானாவில் நில உடைமையாளருக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் கிளர்ச்சி செய்தனர். இதன் விளைவாக வினோபாபாவே ஆரம்பித்த பூமி தானம் இயக்கம் தொடங்கப்பட்டது. பூமி தானம் என்றால் அதிகமான நிலம் வைத்திருப்போரிடம் கோரிக்கை வைத்து தானமாக நிலம் பெறுவதாகும். மகாத்மா காந்தியின் சீடரான வினோபாபாவே இவ்வியக்கத்தினை ஆரம்பித்து அதன் மூலம் பலநிலங்கள் பெற்று நிலமற்றவிவசாயிகளுக்கு அளித்தார்.


ஜோத்பூர்

ஜோத்பூர் அரசு முதலில் இந்தியாவுடன் இணைவதாக இருந்தது. ஹன்வந்த் சிங் அரசு பொறுப்பேற்றதும் பாகிஸ்தானுடன் இணைய முடிவு செய்தது. பாகிஸ்தான் சார்பில் கராச்சி துறைமுகத்தை சுதந்திரமாக பயன்படுத்திக் கொள்ளவும், ஆயுதங்களை உற்பத்தி செய்து கொள்ளவும் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்துக் கொள்ளவும் ஹன்வந்த் சிங்க்கு உரிமை வழங்குவதாக முகமது அலி ஜின்னா அறிவித்தார். இதனை அறிந்த பட்டேல், மகாராஜா ஹன்வந்த் சிங்கிற்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக கூறினார். அச்சலுகைகளின் படி ஆயுதங்கள் இறக்குமதி செய்து கொள்ளவும், ஜோத்பூர் - கத்திவார் இடையே இரயில் போக்குவரத்து அமைத்துக் கொள்ளவும், பஞ்சகாலங்களில் தமது விவசாயிகளுக்கு உணவு தானியங்களை விநியோகித்துக் கொள்ளவும் உரிமைகள் வழங்குவதாக அறிவித்தார், மேலும் இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஜோத்பூர் பாகிஸ்தானில் இணைந்தால் மதக்கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தியாவுடன் இணைய சம்மதித்தது.



காஷ்மீர்

சுதந்திரத்திற்கு பின்பு இந்து மகாராஜா ஹரிசிங் ஆட்சி செய்த காஷ்மீர் மட்டுமே சுதேச அரசாக இருந்தது. காஷ்மீரில் பெரும்பான்மையாக முஸ்ஸிம் மக்கள் இருந்ததால் அப்பகுதி, தங்கள் நாட்டோடு இணைந்துவிடும் என்று பாகிஸ்தான் நினைத்தது. ஆகஸ்டு 15, 1947 அன்று மகாராஜா ஹரிசிங்கினால் முன்மொழியப்பட்ட நிரந்தர ஒப்பந்தமானது, பாகிஸ்தானில் மக்கள் குடியேறவும், பொருள்களை கொண்டு செல்லவும் அனுமதித்தது. இதனை இந்தியா கண்டித்த போதும், பாகிஸ்தான் அலட்சியம் செய்தது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறியது. இதனால் பதற்றமான சூழல் உருவாகியது.


மகாராஜா ஹரிசிங் இந்தியாவிடம் இராணுவ உதவி நாடினார். இதனை அறிந்த மவுண்ட்பேட்டன் பிரபு பன்னாட்டு சட்டங்களின்படி இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு இந்தியாவும், காஷ்மீர் மகாராஜாவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டார். இதன்படி 1954 அக்டோபர் 26-ம் நாள் ஹரிசிங் உடன்படிக்கை மேற்கொண்டார். அதற்கு மறுநாள் 1954 அக்டோபர் 27-ம் நாள், இந்திய இராணுவம் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டு அங்கு அமைதி ஏற்படுத்தப்பட்டது.


Tags : Challenges of Nation Building | Political Science தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 7 : Challenges of Nation Building : Integration of Princely States Challenges of Nation Building | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள் : சுதேச அரசுகள் ஒன்றிணைப்பு - தேச கட்டமைப்பின் சவால்கள் | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : தேச கட்டமைப்பின் சவால்கள்