Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்சனை

இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் - மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்சனை | 12th Political Science : Chapter 5 : Federalism in India

   Posted On :  02.04.2022 07:47 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி

மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்சனை

இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறையை மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் சிக்கல்கள் பெரிய அளவில் பாதிக்கின்றன.

மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்சனை

இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறையை மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் சிக்கல்கள் பெரிய அளவில் பாதிக்கின்றன. பல்வேறு நதிநீர் சிக்கல்கள் நமது நாட்டில் காணப்படுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவை காவிரி பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ளன. ஆண்டாண்டு காலமாக நதிநீர் பிரச்சனையில் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் சம்பந்தப்பட்டுள்ளன. சட்லெஜ் ஆறு பிரச்சனையில் பஞ்சாப், அரியானா சம்பந்தப்பட்டுள்ளன. கோவா, மஹாராஷ்டிரா, கர்நாடகம் ஆகியவை மகாதயி ஆற்றுப் பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்திய அரசியலில் கீழ்கண்ட அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.


1. அரசமைப்பும் மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல்களும்

அரசமைப்பின் 262 இன் உறுப்பு மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப் பிரச்சனைகள் தீர்ப்பதற்கு வழிமுறையை வழங்குகின்றது. இவ்வகையான பிரச்சனைகளில் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இருந்து நாடாளுமன்றம் விலக்கி வைக்கலாம். நாடாளுமன்றம் நதி நீர்ப் பிரச்சனைகள் சம்பந்தமாக ஒரு சட்டத்தை இயற்றலாம். நதி நீர் பிரச்சனை பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றது. நீதிமன்றங்கள் தீர்ப்பை வழங்கினால் மக்களிடையே கசப்புணர்வும் பிளவும் அதிகரிக்கலாம். ஆகவே சுமூகமான பேச்சு வார்த்தை மூலமாக நதிநீர்ப் பிரச்சனைகளை நாம் தீர்க்க வேண்டும் என்பது அரசமைப்பின் உறுப்பு 262 இன் நோக்கமாகும்.


2. மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல்கள் சட்டம் 1956

மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல்கள் சட்டம் 1956 நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. நதி நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் தீர்ப்பாயங்களை அமைக்கலாம் என்று இச்சட்டம் வழிவகுக்கின்றது. நதி நீர்ப் பிரச்சனைகள் பேச்சு வார்த்தைகள் மூலமாக தீர்க்கப்பட வேண்டும். பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்தால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மத்திய அரசாங்கத்தை நாடலாம். மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட நதிநீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு தீர்ப்பாயத்தை அமைக்கும்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அந்த தீர்ப்பாயத்திற்கான தலைவரை நியமிப்பார். ஆரம்பத்தில் தீர்ப்பாயம் அல்லது நடுவர் மன்றம் ஒரே ஒரு உறுப்பினரைத் தான் கொண்டிருந்தன. பின்னர் நடுவர் மன்றங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை பெறுவதற்கு சட்டம் மாற்றப்பட்டது. நடுவர் மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பார். நடுவர் மன்றத்தின் தீர்ப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சமமானதாகும். நடுவர் மன்றம் விசாரிக்கும் நதிநீர் பிரச்சனையில் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. மேலும் நதிநீர் ஆணையம் சட்டம் 1956 இன் கீழ் வரும் நதிகளில் மீது நடுவர் நீதிமன்றங்களை அமைக்க முடியாது.

சுருக்கமாக கூறவேண்டுமென்றால் நமது நாட்டில் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் சிக்கல்கள் அணுகுமுறையில் இரண்டு தன்மைகள் காணப்படுகின்றன. பேச்சுவார்த்தைகள் மூலமாக இப்பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் நடுவர் நீதிமன்றம் அமைத்து தீர்வைக் காண வேண்டும்.


செயல்பாடு:காவிரி நதி நீர் உரையாடல் 


மாணவர்: ஐயா, காவிரி நதி நீர்ப் பிரச்சனையை விவரிக்க முடியுமா? 

ஆசிரியர்: காவிரி நதி நீர் சிக்கல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆளுகைக்குட்பட்ட பகுதி ஆகிய நான்கு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனையாகும். 

மாணவர்: இப்பிரச்சனையின் வரலாற்றுப் பின்னணி என்ன? 

ஆசிரியர்: இப்பிரச்சனை நீண்ட வரலாற்றுப் பின்னணி உடையதாகும். மெட்ராஸ் மாகாணமும், மைசூர் அரசும் 1924 ஆம் ஆண்டு காவிரி நதி நீரை பயன்படுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டன. ஐம்பது ஆண்டுகள் கழித்து 1974 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் காலாவதியானது.

மாணவர்: ஐயா, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் 1974 ஆம் ஆண்டிற்குப் பின் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனவா? 

ஆசிரியர்: ஆம், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தின. ஆனால், எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை . நாம் ஏற்கனவே படித்தது போல நதி நீர் சிக்கல்கள் சட்டம் 1956 இன் படி காவிரி நதி நீர் நடுவர் மன்றம் 1991 ஆம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்டது. 

மாணவர்: நடுவர் மன்றம் தீர்ப்பை வழங்கிவிட்டதா? தீர்ப்பின் முக்கிய தன்மைகள் என்ன? 

ஆசிரியர்: நடுவர் மன்றம் தீர்ப்பை 2007-ஆம் ஆண்டு வழங்கிவிட்டது. மாதந்தோரும் கர்நாடகம் பிலிகுண்டுலு என்ற எல்லை பகுதியில் தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்ட அளவு நீரை வழங்க வேண்டும். காவிரி நதியில் இருந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தண்ணீரை குறிப்பிட்ட அளவில் நடுவர் மன்றம் பங்கீடு செய்தது. மழை இல்லா வருடங்களில், துன்பக் காலங்களில் எவ்வாறு நீர் பங்கீடு இருக்க வேண்டும் என்பதையும் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் விவரித்துள்ளது. 

மாணவர்: காவிரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன? 

ஆசிரியர்: காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியது. 

மாணவர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளதா? 

ஆசிரியர்: பல ஆண்டுகள் வழக்கு நடந்த பிறகு உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி தமிழ்நாடு 177.25 டி.எம்.சி தண்ணீ ரை கர்நாடகத்திடமிருந்து எல்லைப் பகுதியில் பெறும். மொத்த காவிரி நீரில் தமிழ்நாடு 404.25 டி.எம்.சி, கர்நாடகம் 284.25 டி.எம்.சி, கேரளா 30 டி.எம்.சி, புதுச்சேரி 7 டி.எம்.சி என்று உச்ச நீதிமன்றம் நீர்ப் பங்கீடு செய்துள்ளது.


Tags : Federalism in India | Political Science இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 5 : Federalism in India : Inter - State River Water Dispute Federalism in India | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி : மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்சனை - இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி