Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி அல்லது உலக வங்கி

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் - மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி அல்லது உலக வங்கி | 12th Economics : Chapter 8 : International Economic Organisations

   Posted On :  16.03.2022 07:48 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி அல்லது உலக வங்கி

இரண்டாம் உலகப் போரினால் சீரழிந்த உலக நாடுகளின் பொருளாதார சூழ்நிலையை அமைதி கால சூழ்நிலையாக மாற்றியமைக்கும் நோக்கத்துடன் உலக வங்கி தொடங்கப்பட்டது.

மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி அல்லது உலக வங்கி

மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி உலக வங்கி எனவும் அழைக்கப்படுகிறது. 1944ல் நடைபெற்ற பிரட்டன் வூட்ஸ் மாநாட்டுத் தீர்மானத்தின்படி 1945ல் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரினால் சீரழிந்த உலக நாடுகளின் பொருளாதார சூழ்நிலையை அமைதி கால சூழ்நிலையாக மாற்றியமைக்கும் நோக்கத்துடன் உலக வங்கி தொடங்கப்பட்டது. பன்னாட்டு பண நிதியத்தின் சகோதர நிறுவனமாகவும் கருதப்படுகின்றது. ஒரு நாடு உலக வங்கியின் உறுப்பினராக இருக்க வேண்டும் எனில் அது நிதியத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. நாடுகளின் நீண்டகால பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி உதவி செய்வதற்காகவே உலக வங்கி தொடங்கப்பட்டது.




1. உலக வங்கியின் நோக்கங்கள் (Objectives of IBRD)

உலக வங்கியின் நோக்கங்கள்

1. மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு 

2. மூலதன முதலீட்டிற்கு ஊக்குவிப்பு 

3. பன்னாட்டு வாணிபத்திற்கு ஊக்குவிப்பு 

4. அமைதிகால பொருளாதாரத்தை உருவாக்கல் 

5. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பன்னாட்டு வாணிப வளர்ச்சியையும் பொருளாதார வளமையையும் பன்னாட்டு வாணிகத் தடைகளை நீக்குவதன் மூலம் அடைவதே அடிப்படை குறிக்கோளாகும்.

1. உறுப்பு நாடுகளின் மறுகட்டமைப்பிற்கும், உதவுதல் பொருளாதார மேம்பாட்டிற்கும்

2. உறுப்பு நாடுகளின் நீண்ட கால அயல் நாட்டு செலுத்துநிலை சமமின்மையை போக்குவதற்கு நீண்ட கால கடன் வழங்குவதன் மூலம் அனைத்து நாடுகளுடைய பன்னாட்டு வாணிபத்தையும் சமமாக மேம்பாடு அடைவதற்கு உறுதி செய்தல்.

3. உறுப்பு நாடுகளின் கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்கான கடன்களுக்கு ஈட்டுறுதி வழங்குதல்.

4. போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளை அமைதிக் கால சூழ்நிலைக்கு மாற்றுவதற்கு உதவுதல்.

5. வங்கியின் சொந்த நிதியிலிருந்து உற்பத்தியை அதிகரிக்கும் கடன்களை வெளிநாட்டு மூலதனத்துக்கு உறுதுணையாக செயல்படும் வகையில் வழங்குவது.

உலக வங்கி கடன் வழங்கும் நடைமுறை (Lending Procedure of IBRD)

உலக வங்கி கடன் வழங்க மூன்று வகைகயான நடைமுறைகளை கடைபிடிக்கிறது.

i) வங்கியின் இருப்பில் உள்ள சொந்த நிதியிலிருந்து கடன் வழங்குவது

ii) கடன் நிதியிலிருந்து கடன் வழங்குவது 

iii) ஈட்டுறுதி வழங்கி கடன் பெற்றுத் தருவது

உலக வங்கி (WB) கடன் வழங்கும் செயல்யுக்தியை மாற்றிக் கொண்டுள்ளது. உறுப்பு நாடுகளின் பெருந்திரளான ஏழைமக்களுக்கு பலனளிக்கும் கடன் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. வேளாண்மைத்துறைக்கு மற்ற துறைகளைக் காட்டிலும் கூடுதல் கடன் வழங்குகிறது. ஊரக மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் நடவடிக்கைகளுக்கு கடன் வழங்க கவனம் செலுத்துகிறது. அவ்வாறான மூன்று நடவடிக்கைகள். 

அ) ஊரக வாழ்மக்களுக்கு கல்வியை பரப்புதல். 

ஆ) ஊரக சாலைகளை மேம்படுத்துதல் 

இ) கிராமங்களை மின்சாரமயமாக்கல்.



2. உலக வங்கியின் பணிகள் (Functions of World Bank)

உறுப்பு நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன் வழங்கும் பணியை உலக வங்கி செய்கிறது. இதற்காக நீண்ட கால கடன்களை வழங்குகிறது. உலக வங்கி ஒப்பந்தத்தின் முதல் ஷரத்தின் படி கீழ்கண்ட பணிகளை வங்கி செய்கிறது:

1. உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் முதலீட்டுக்கான கடன் உதவி

உற்பத்திக்கு கடன் முதலீடு வழங்கும் திட்டத்தின் மூலம் உறுப்பு நாடுகளின் நில எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு உதவி செய்யும் பணியை உலக வங்கி செய்கிறது. பின் தங்கிய நாடுகளில் உற்பத்தி வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு உதவுகின்றது.

2. பன்னாட்டு வாணிகத்தின் சரிவிகித வளர்ச்சி

பன்னாட்டு கடன் மூலதனம் வழங்கி உறுப்புநாடுகள் அனைத்தும் சரிவிகித பன்னாட்டு வாணிப நீண்டகால வளர்ச்சியடைய உதவும் பணியை வங்கி செய்கிறது. இதன் விளைவாக உறுப்பு நாடுகளின் அயல்நாட்டுச் செலுத்து நிலை சமநிலையை அடையும்.

3. கடன் மற்றும் ஈட்டுறுதி வழங்குதல்

முக்கியமான திட்டங்களுக்கு கடன் வழங்குவது மற்றும் பிற வழிகளில் கடன்பெற ஈட்டுறுதி வழங்குவது ஆகிய பணிகளையும் வங்கி செய்கிறது.

4. வெளிநாட்டுத் தனியார் முதலீட்டிற்கு ஊக்கமளித்தல்

தனியார் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் உலக வங்கியின் உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்க ஈட்டுறுதிகள் வழங்கும் பணியைச் செய்து வெளிநாட்டு மூலதனத்துக்கு ஊக்கமளிக்கிறது. இந்தப் பணியின் மூலம் தனியார் மூலதனத்துடன் ஒன்று சேர்ந்து சொந்த நிதியிலிருந்து மட்டும் கடன் வழங்காமல் கடன் நிதியிலிருந்தும் கடன் வழங்க முடிகிறது.

5. தொழில்நுட்ப சேவைகள்

உலக வங்கி வாஷிங்டனில் அமைந்துள்ள பணியாளர் கல்லூரி நிபுணர்களைக் கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் உறுப்பு நாடுகளுக்கு வழங்குகிறது.



3. உலக வங்கியின் சாதனைகள் (Achievements of IBRD) 

உலக வங்கி அதன் முதன்மைக் குறிக்கோளான போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டை அடைந்ததில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு ஐரோப்பிய நாடுகள் மீண்டெழ உலக வங்கி பெரிய அளவில் பங்காற்றியுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் என்ற பாகுபாடில்லாமல் கடனுதவி செய்து வருகிறது.

i) உலக வங்கியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வே சாதனையின் ஆதாரம். துவங்கிய ஆண்டில் 30 ஆக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 1960ல் 68 ஆகவும், 1988ல் 151 நாடுகளாகவும் அதிகரித்தது. தற்பொழுது 189 நாடுகள் வங்கியின் உறுப்பினர்களாக உள்ளனர்.

ii) திட்டத்தின் தேவைக்கேற்ப 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பி செலுத்தத்தக்க வகையில் உறுப்பு நாடுகளுக்கு மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டக் கடன் வழங்குகிறது. கடனின் கால அளவு நிதிக்கான தொழில் அல்லது தளவாட மதிப்பின் பயன்பாட்டைப் பொறுத்து அமைகிறது.

iii) துவக்க காலங்களில் உலக வங்கி ஐரோப்பிய நாடுகளின் மறுகட்டமைப்புக்கு அதிகமாக கடன் வழங்கியது. பிற்காலங்களில் ஏழைகள் பெருந்திரளாக வாழும் வளரும் நாடுகளுக்கு கடன் வழங்கும் விதமாக தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டது.

iv) உற்பத்தியை அதிகரிக்க உதவும் துறைகளான வேளாண்மை , நீர்ப்பாசனம், ஆற்றல் வளம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு மட்டும் உலகவங்கி கடன் வழங்கியது. அடுத்தக்கட்ட மேம்பாட்டுக்கு அடித்தளமிடும் அடிப்படைக் கட்டமைப்புத் துறைகள் வலுப்பெற உலக வங்கி உதவுகின்றது.

v) உலக வங்கியின் எளிதான கடன் பெறும் பிரிவான பன்னாட்டு பொருளாதார மேம்பாட்டு கூட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நாடுகளுக்கு மிகக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. இருந்தபோதிலும் உறுப்பு நாடுகளுக்கிடையே பொருளாதார சமச்சீரின்மை நிலவுகின்றது. அநேக ஆப்பிரிக்க நாடுகள் இன்னும் பொருளாதாரத்தை மேம்படுத்தவில்லை.



4. இந்தியாவும் உலக வங்கியும் (India and World Bank)

இந்தியா உலகவங்கியின் அதிகாரபூர்வ பெயரான International Bank for Reconstruction and Development என்ற பெயரை வரைவு குழுவுக்கு முதலில் பரிந்துரை செய்தது. அன்றிலிருந்து இந்தியாவில் பொருளாதார கொள்கைகளை வடிவமைப்பதிலும் அவற்றை செயல்படுத்த கடன் வழங்குவதிலும் உலக வங்கி நெருக்கமாக உள்ளது. இந்தியாவுக்கு பல பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தக் கடன் தந்து உதவியுள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்களான மின்னாற்றல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, நீர்ப்பாசனம், மற்றும் இரும்பு எஃகு போன்றவற்றை குறிப்பாக சொல்லலாம்.

உலக வங்கியின் துணை நிறுவனமாக பன்னாட்டு நிதி கழகம் (International Finance Corporation) கடன் வழங்க ஐந்து முன்னுரிமை பகுதிகளை அடையாளம் காட்டியது. அவையாவன மூலதன சந்தை மேம்பாடு, வெளிநாட்டு நேரடி முதலீடு, வெளிநாட்டு சந்தை நுழைவு, வாய்ப்புகள், புதிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் உள்கட்டமைப்புத் துறை பகுதிகளாகும். வறுமையைப் போக்கவும் பொருளாதார மேம்பாட்டை அடையவும் உலக வங்கி இந்தியாவுக்கு கடன் வழங்கியுள்ளது. 1980 ல் சீனா உலக வங்கியின் உறுப்பினராகும் வரை இந்தியா உலக வங்கியால் பலனடைந்த நாடுகளில் முதலிடத்திலிருந்த நாடு ஆகும்.

இந்தியா மற்றும் IBRD: நீடித்த நெடுநாள் உறவு 

* உலக வங்கி குழுமத்தில் உள்ள ஐந்து அமைப்புகளில் நான்கு அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ளது. 

* மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பன்னாட்டு வங்கி (IBRD, 1945) 

* பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு (IDA, 1960)

* பன்னாட்டு நிதிக் கழகம் (IFC, 1956) 

* பன்முக முதலீட்டு ஒப்புறுதி முகமை (MIGA, 1958) 

* முதலீட்டு தகராறுகள் தீர்விற்கான பன்னாட்டு மையம் (ICSID, 1966) (இந்தியா இதில் உறுப்பினராக இல்லை )

* இந்தியா தொடக்க கால உறுப்பினராக IBRD, IDA, IFC ஆகியவற்றில் உள்ளது.

* இந்தியாவிற்கான உலக வங்கியின் உதவி, வேளாண் இயந்திர செயல்திட்டம் தொடங்கப்பட்ட 1948 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது. 

* IFC யின் முதல் இந்திய முதலீடாக US$ 1.5 மில்லியன் 1959 ஆம் ஆண்டு செலுத்தியது.

* ஜனவரி 1994 ஆம் ஆண்டு MIGA வில் இந்தியா உறுப்பினரானது

* இந்தியா IBRD/IFC/IDA/MIGA ஆகிய அமைப்புகளில் இயக்குநர் அவையின் செயல் இயக்குநராக இருந்து வருகிறது.


Tags : International Economic Organisations பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்.
12th Economics : Chapter 8 : International Economic Organisations : International Bank For Reconstruction And Development (IBRD) or World Bank International Economic Organisations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி அல்லது உலக வங்கி - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்