Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | சர்வதேச அரசு-சாரா நிறுவனங்கள்
   Posted On :  04.04.2022 04:30 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள்

சர்வதேச அரசு-சாரா நிறுவனங்கள்

சர்வதேச அரசு-சாரா நிறுவனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவது உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

சர்வதேச அரசு-சாரா நிறுவனங்கள்

சர்வதேச அரசு-சாரா நிறுவனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவது உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவற்றின் செயல்பாட்டு எல்லை, அளவு, உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் அமைந்துள்ள இடத்தை பொருத்து பெரும் அளவில் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக சர்வதேச பொது மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம், மருத்துவ சான்ஸ் பிராண்டியர்ஸ் (MSF:ஆனது எல்லை அற்ற மருத்துவர்களாக அறியப்படுகிறது) போன்றவற்றை கூறலாம். சர்வதேச அரசுசாரா அமைப்புகள் முக்கியமாகக் கொள்கை உருவாக்கம் மற்றும் அதன் வழிமுறைகளைத் தீர்மானிப்பதில் பெரும் அளவில் பணியாற்றுகின்றன. சர்வதேச அரசு-சாரா அமைப்புகள் உள்நாட்டுக் கொள்கை வடிவமைப்பாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆதரவை திரட்டுவது மற்றும் தகவல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற பணியில் ஈடுபடுகின்றன. மேலும் சர்வதேச நிகழ்வுகளில் சர்வதேச அரசு-சாரா நிறுவனங்கள் அரசுகளுக்கு இடையிலான அமைப்புகள் மற்றும் நன்கொடையாளர்களிடையே தங்கள் பணியின் மூலம் குறிப்பிட்ட கொள்கைக்கான பெரும் அளவிளான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமீப காலமாக சர்வதேச அரசு-சாரா நிறுவனங்களின் தாக்கமானது வர்த்தக மற்றும் முதலீட்டு நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொள்கை முடிவுகள் மீதான மனிதநேய குறுக்கீடு, பொருளாதாரதடை மற்றும் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கிறது.

1945இல் ஐ.நா-வின் சாசனம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை அரசு - சாரா நிறுவனங்கள் என்ற பதமே வழக்கத்தில் இல்லை . 1910ஆம் ஆண்டு , 132 அமைப்புகள் ஓர் குழுவாக இணைந்து சர்வதேச அமைப்புகளுக்கான சங்கத்தை துவக்கினர். 1929இல் சில அமைப்புகள் தொடர்ச்சியாக சர்வதேச சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டன. மேலும் தனியார் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள் இணைந்து ஜெனிவாவில் ஓர் கூட்டமைப்பை ஏற்படுத்தினர். ஐ.நா-வின் சாசனமானது சான் பிரான்ஸ்கோ மாநாட்டில் இறுதி செய்யப்பட்டபிறகு சர்வதேச அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகிய இரண்டும் முறையே அங்கீகரிக்கப்பட்டு பொருளாதார மற்றும் சமூக குழுவுடன் (ECOSOC) உறவுகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை இயற்றின. இருந்தபோதும் இரண்டு அமைப்புகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இரண்டு சர்வதேச அமைப்புகளும் ஒரே தகுதியுடன் குறிப்பிடப்படுவதை விரும்பவில்லை. உறுப்பு 57 ஆனது, ஓர் புதிய வரையறையாக சிறப்பு முகவாண்மைகள் என்ற வார்த்தையை அரசுக்களுக்கு இடையிலான அமைப்புகளை குறிப்பிடப் பயன்படுத்தியது. உறுப்பு 71 ஆனது, இரண்டாவது புதிய வரையறையாக அரசுசாரா நிறுவனங்கள் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தியது.

ஐ.நா-வானது, உலக அரசுக்கான அமைப்பாக கருதப்படும் வேளையில் அரசுசாரா நிறுவனங்கள் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களின் பிரதிநிதியாக கருதப்படுகின்றன.

71-வது உறுப்பு

பொருளாதாரம் மற்றும் சமூக குழுவானது அரசு-சாரா நிறுவனங்கள் தாங்கள் தொடர்புடைய பணிகளில் ஆற்றல்களை வளர்த்து கொள்வதற்கான தகுந்த ஏற்பாடுகளை உருவாக்கி தருகிறது. இந்த ஏற்பாடுகள் சர்வதேச அமைப்புகள் மற்றும் அதன் தேவைக்கானவை, தேசிய அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகே இவற்றை ஐ.நா உறுப்பினராக்குகிறது.

செயல்பாடு

இந்தியாவில் உலக வங்கியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாணக்கர்கள் கேட்டு அறியவும்.


சர்வதேச பொது மன்னிப்புச் சபை

சர்வதேச பொது மன்னிப்புச் சபை ஆனது மிகப் பெரிய சர்வதேச அரசு-சாரா நிறுவனங்களில் ஒன்று. இதன் பணியானது உலகம் தழுவிய அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகும். இது தனது பணிக்காக சர்வதேச மனித உரிமைக்கான பிரகடனம் (UDHR) மற்றும் பிற சர்வதேச மனித உரிமைகளுக்கானக் கருவிகளைக் கொண்டு எல்லா விதமான மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கான உலக அளவிலான பிரச்சார இயக்கத்தினை மேற்கொள்கிறது. இது உலகின் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2.2 மில்லியன் மக்களை தனது உறுப்பினராகவும், கையெழுத் திட்டவர்களாகவும் மற்றும் ஆதரவாளராகவும் கொண்டிருக்கிறது. சர்வதேச பொது மன்னிப்புச் சபை ஆனது 1961இல் லண்டனில் அதன் ஸ்தாபனரான பீட்டர் பென்சன் ஆல் தோற்றுவிக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு சர்வதேச பொது மன்னிப்புச் சபை சித்திரவதைகளுக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்காக நோபல் பரிசை பெற்றது.

சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் முக்கிய குறிக்கோள்கள் சிலவற்றை கீழே காண்போம். 

பெண்களைப் பாதுகாத்தல். 

குழந்தைகளைப் பாதுகாத்தல். 

சட்டத்திற்கு புறம்பாக சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வருதல் 

கைதிகளின் கருத்துரிமையை பாதுகாத்தல் (உணர்வுகள், கருத்துகளுக்கான சுதந்திரம் மற்றும் கருத்துரிமைக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல்). 

அகதிகளை பாதுகாத்தல்.

உடல் மற்றும் உளவியல் ரீதியான மனித உரிமை மீறல்களிலிருந்து விடுவித்து பாதுகாத்தல். 

கைதிகளுக்கான, மரண தண்டனை, சித்திரவதைகள் மற்றும் கொடூர தண்டனை முறைகளை ஒழித்தல். 

அரசியல் கைதிகளுக்கான வெளிப்படையான விரைவான விசாரணை. 

எல்லாவிதமான பாகுபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருவது குறிப்பாக பால், இனம், மதம், மொழி, அரசியல் கருத்துகள், தேசியம் (அல்லது) சமூக தோற்றம் மற்றும் பிற. 

உலக ஆயுத வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவது. 


மனித உரிமை கண்காணிப்பகம்

1978இல் தோற்றுவிக்கப்பட்ட மனித உரிமை கண்காணிப்பகமானது துவக்கத்தில் ஐரோப்பா மற்றும் ஆசிய பகுதிகளின் "ஹெல்சிங்கி வாட்ச்" ஆக அறியப்பட்டது. இது ஓர் சர்வதேச லாபநோக்கம் இல்லாத அரசு - சாரா நிறுவனமாகும். இதன் ஊழியர்களாக மனித உரிமையில் மிகவும் திறமை பெற்றவர்கள் பல்வேறு நாடுகளில் புகழ் பெற்ற அறிஞர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பல்வேறுபட்ட பின்புலன்களில் தேசங்கடந்த செயல்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் மிக துல்லியமான ஆய்வுகள், பாரபட்சமற்ற அறிக்கைகள், ஊடகங்களுக்கும் மேலும் உள்ளுர் மனித உரிமை குழுக்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக அறிப்படுகிறது. உலகின் 90-க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை நடவடிக்கைகளைக் குறித்த 100-க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம் உலகளவில் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்.

நாங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்த மிகவும் பொறுப்புமிக்க ஆய்வினை மேற்கொண்டு அதற்கான காரணங்களை பரந்த அளவில் வெளிப்படுத்துகிறோம். இதன் நோக்கம் உரிமைகளை மதித்து நீதியை பாதுகாப்பதற்கான அதிகாரப்பூர்வ அழுத்தத்தைக் கொடுப்பதே ஆகும்."

மனித உரிமை கண்காணிப்பகத்தின் சாதனைகள்

மனித உரிமை இயக்கங்களுக்கு பங்களித்தல் மற்றும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வருதல் போன்றவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்காக மனித உரிமை கண்காணிப்பகத்தற்கு ஐ.நா விருது வழங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது, சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு வழங்கப்பட்டது


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை (UNHRC) 

• இது உலக அளவில் மனித உரிமையை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிபுணத்துவம் கொண்ட நிறுவனமாகும். 

• இந்த அவை 47 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கிறது, உறுப்பினர்கள் பொது அவையால் ஆண்டுக்கு ஒருமுறை நேரடியாக, ரகசிய வாக்கெடுப்பு முறைமூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், பதவிக்காலம் ஓர் ஆண்டாகும். 

• ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவைக்கு இந்தியாவை, அதிக வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் பொது அவை தேர்ந்தெடுத்து உறுப்பினராக்கியது. 

• இதன் உறுப்பினர்கள் அனைவரும், புவியியல் ரீதியான சமத்துவ-சுழற்சி அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் "மண்டலக் குழுக்கள் முறையில்" தேர்வு செய்யப்படுவர். * உறுப்பினர் நாடுகள், இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பதவியில் இருக்க முடியாது.

மனித உரிமை கண்காணிப்பகம் சுதந்திரமான ஒரு சர்வதேச அமைப்பாகும். இதன் பணியானது ஒரு செயலாக்கமிக்க இயக்கமாக தனிமனித சுயமரியாதையைப் பாதுகாத்து அனைவருக்குமான மனித உரிமைகளை மேம்படுத்துவதாகும். இதன் மதிப்புமிக்க பணி மனித உரிமைக்கான சர்வதேச நெறிமுறைகள் மற்றும் மனிதநேய சட்டங்களை வழிகாட்டியாகக் கொண்டு தனிமனித சுயமரியாதையை மதிக்கச் செய்வதாகும். மனித உரிமை கண்காணிப்பகம் தனது சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் அரசின் நேரடியான (அ) மறைமுகமான உதவிகளையும் (அ) எந்த தனிப்பட்ட நிதிநிறுவனங்களின் ஆதரவையும் பெறுவதற்காக தனது நோக்கம் மற்றும் சுதந்திரமான செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் சமரசம் செய்து கொள்வது இல்லை. மேலும், இது எந்த அரசியல் சார்பும் இல்லாமல் மற்றும் எந்த பாகுபாடுமின்றி ஆயுத மோதல்கள் நடைபெறும் இடங்களில் நடுநிலையோடு பணியாற்றுகிறது.

மனித உரிமை கண்காணிப்பகம் மிகவும் உயர்ந்த நுட்பமான மற்றும் வெளிப்படையான தன்மையை கடைப்பிடிக்கிறது. குறிப்பாக, பல்நோக்கு பார்வையை வளர்க்கும் விதமாக பிரச்சனைகளை மிகவும் ஆழமாகப் பகுத்து ஆராய்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புமிக்க சாட்சியாளராக கண்காணிப்பகம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும், மனித உரிமை கண்காணிப்பகம் செயல் நோக்கத்துடன் அதன் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. மனித உரிமை கண்காணிப்பகம் தற்போது குறிப்பாக ஆயுத வியாபாரம் மற்றும் மனித உரிமைகள், குழந்தைகள் உரிமைகள், மாற்றுதிறனாளி உரிமைகள், சுற்று சூழல் மற்றும் மனித உரிமைகள், சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள், சர்வதேச நீதி, ஓரின சேர்க்கையாளர்கள், தன்பால் இனத்தவர், மாற்றுப்பால் இனத்தவர் உரிமைகள், அகதிகள், தீவிரவாதம் மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் அவசர கால பிரச்சனைகள் என பல்வேறு கருத்துகள் சார்ந்த துறைகள் அல்லது திட்டங்களை கொண்டு செயல்படுகிறது.

செயல்பாடு

மனித உரிமை கண்காணிப்பகத்தின் பணிகள் உலக அளவில் மனித உரிமைகளை பாதுகாக்கிறது என்பதை விவாதிக்கவும்.


கிரீன்பீஸ் அமைப்பு

இது ஓர் அரசு-சாரா சுற்றுச்சூழல் நிறுவனமாகும். இதன் தலைமையகம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ளது. மேலும் 39 நாடுகளில் தனது அலுவலகங்களை கொண்டுள்ளது. சூழலியல் செயல்பாட்டாளர்கள் கனடாவை சார்ந்த இர்விங் ஸ்டோவே மற்றும் அமெரிக்காவின் டோரதி ஸ்டோவே என்ற இருவரால் 1971ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஏற்ப்படுத்தப்பட்டது. பல்வகை உயிர்களும், தாவரங்களும் செழித்து வளருமாறு அமைந்துள்ள பூமியின் திறனை காப்பதே இதன் நோக்கமாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும், வன அழிப்பு, பருவநிலை மாற்றம், அளவுக்கதிகமாக கடல் வளங்களை பயன்படுத்துதல் மற்றும் அணு ஆயுதம் போன்றவற்றிற்கு எதிராக இந்த அமைப்பு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

இதன் குறிக்கோளை அடைவதற்கு, களத்தில் நேரடி செயல்பாடு, ஆராய்ச்சி மற்றும் பரப்புரை என பல வழிமுறைகளை கொண்டுள்ளது. இந்த அமைப்பு எந்த அரசாங்கத்திடமிருந்தும், வர்த்தக நிறுவனங்களிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் நிதியை பெறுவதில்லை . மாறாக முப்பது லட்சத்துக்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடமிருந்தும் அறக்கட்டளைகளிடமிருந்தும் இதற்கான நிதியை பெறுகிறது. ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பிற்கு ஆலோசனை அளிக்கும் குழுவிலும், சர்வதேச அரசு - சாரா நிறுவனங்களின் அமைப்பின் உறுப்பினராகவும், இந்த கிரீன்பீஸ் அமைப்பு உள்ளது. கிரீன்பீஸ் அமைப்பானது அதன் நேரடி கள செயல்பாட்டிற்காக பாராட்டப்பட்டுள்ளது. உலகில் அனைவரும் அறிந்த ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாக இது விளங்குகிறது.


முடிவுரை

சர்வதேச அமைப்புகள் சர்வதேச வாழ்க்கைக்கான பொது கருத்தியலாக வளர்ச்சியடைந்துள்ளன. சர்வதேச அமைப்புகளின் பெருக்கம் மற்றும் நாடுகளின் பிரதிநிதிகளிடையே ஒப்பந்தங்கள் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாக சர்வதேச அரசியலில் காணப்படுகிறது. இது மேலும் மேலும் அமைப்பியல் ஆக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக சர்வதேச அமைப்புகளின் கொடையாக கடந்த பத்தாண்டுகளாக கோட்பாட்டு ரீதியாக ஏன் சர்வதேச அமைப்புகள் நீடிக்கின்றன என்ற புரிதலையும், அதன் செயல்பாடுகளையும், உலக அரசியலைத் தொடர்ந்து சுத்திகரித்தவண்ணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை அனுபவமுறையினை கொண்டு மேலும் வசதியாக பகுத்தாய்வு செய்கிறது. இதுமட்டுமின்றி பிற புதிய வடிவிலான பகுத்தாய்வின் துணைக் கொண்டு சர்வதேச அமைப்புகள் குறித்து படிப்பதற்கான புதிய ஆராய்ச்சிக்கான வடிவங்களை உருவாக்குகின்றது. வரக்கூடிய ஆண்டுகளில் மாணாக்கர்களுக்கு மாறிவரும் சர்வதேச அமைப்புகளின் மரபுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மேலும் சர்வதேச அமைப்புகளின் நடைமுறைகள் மற்றும் அதன் ஆற்றல்கள் மிகவும் பரந்த அளவில் மாறிவரும் உலகின் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

12th Political Science : Chapter 11 : International Organisations : International Non- Governmental Organisations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள் : சர்வதேச அரசு-சாரா நிறுவனங்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள்