தலப்பட விவரணம் - புவியியல் - தலப்பட விவரணம் | 11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map

   Posted On :  15.05.2022 09:03 pm

11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம்

தலப்பட விவரணம்

தலப்படம் என்பது பொதுவாக மேற்கோள் நில வரைபடம் ஆகும்.

தலப்பட விவரணம்

தலப்படம் என்பது பொதுவாக மேற்கோள் நில வரைபடம் ஆகும். இது பொதுவாக போர் தளவாட நிலவரைபடம் எனப்படும். இவை ஆய்வாளர்கள், திட்டமிடுபவர்கள், நிர்வாகிகள், பாதுகாப்பு படையினர், நடை பயணம் மேற்கொள்வோர்சுற்றுலா பயணிகள் மற்றும் வகுப்பறை பயன்பாட்டிற்கு ஏற்றதாகும். இது பொதுவாக உண்மையில் கணக்கெடுக்கப்பட்ட இயற்கை மற்றும் கலாச்சார கூறுகள் குறித்த விரிவான விளக்கத்தை கொடுக்கிறது. இவ்வகை நிலவரைபடம் அளவையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகிறது.

இந்திய தல படத்தை புரிந்துகொள்வதற்கு புவியியல் சார்ந்த அறிவு மற்றும் முறைக் குறியீடுகள் மற்றும் குறிகள் பற்றிய புரிதல் அவசியமாகும்.

தல படம் கீழ்காணும் தலைப்புகளின் கீழ் விவரணம் செய்யப்படுகிறது.

• எல்லையோர விவரங்கள்

• நிலத்தோற்றம்

• இயற்கையாக மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட வடிகால் அமைப்பு

• தாவரங்கள்

• நிலப்பயன்பாடு

• குடியிருப்புகள்

• போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு

 

எல்லையோர விவரங்கள்

எல்லையோர விவரங்களான தலப்பட எண், திசைகள், அமைவிடம், குறிப்புச் சட்டக விவரம், அட்ச மற்றும் தீர்க்க ரேகை பரவல், அளவை, மாவட்டங்கள், சம உயரக்கோடுகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

நிலத்தோற்றம்

கொடுக்கப்பட்டுள்ள நிலப்பகுதியின் நிலத்தோற்றம் விரிவாக விவரிக்கப்படுகிறது. முதலில் மலைத்தொடர்கள், மலைகள், பீடபூமிகள், சிகரங்கள் மற்றும் முகடு போன்ற நிலத்தோற்றங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் பொதுவான சாய்வு திசை தீர்மானிக்கப்படுகிறது. சம உயரக்கோடுகளின் அமைப்பு மற்றும் மதிப்பு குறித்து விவரிக்கப்படுகிறது. தல உயர புள்ளிகள், பெஞ்ச் மார்க்குகள் போன்றவை ஓரிடத்தின் உயரத்தை தெரிந்துகொள்ள உதவுகின்றது.

 

வடிகால்

ஓரிடத்தின் வடிகால் அமைப்பை ஆறுகள், வடிகுழாய்கள், வடிகால் முறை ஆகியவற்றின் பண்புகளை உற்று நோக்குவதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

 

தாவரங்கள்

முக்கிய தாவரங்கள் சிறப்பு குறியீடுகளால் காட்டப்படுகிறது. மரங்கள்புல்வெளிகள், புதர்கள் போன்றவற்றிற்கு பச்சை நிறம் பயன்படுத்தப்படுகிறது. வேளாண் நிலங்கள் மஞ்சள் நிறத்தில் காட்டப்படுகிறது.

 

நிலப்பயன்பாடு

நிலப்பயன்பாடு என்பது வேளாண்மை, மேய்ச்சல், தரிசு நிலம் மற்றும் காடுகள் போன்ற வெவ்வேறு பயன்பாடுகளை உள்ளடக்கியதாகும். சுரங்கத் தொழில் தொழிற்சாலை, வர்த்தகம், சுற்றுலா, மீன்பிடித்தல் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவை பிற நிலப் பயன்பாடுகளாகும். மேலும் இது விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், பள்ளிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், துணை மின் நிலையங்கள் போன்றவற்றையும் குறிப்பிடுகிறது. சில நேரங்களில் நிலப்பயன்பாடு நேரடியாக குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, செங்கல் சூளை, சுண்ணாம்பு கல் குவாரி.

 

குடியிருப்புகள்

குடியிருப்புகளின் அளவு, வடிவம், மாதிரி, தலம், பயன்பாடு போன்றவை விவரணம் செய்ய எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் அனைத்து கூறுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன.

குடியிருப்புகள் பிரிக்கப்பட்ட அல்லது சிதறியவையாகவும், நெருக்கமான அல்லது தனித்த குடியிருப்புகளாகவும் வகைப்படுத்தப்படுகிறது. இவை வட்ட வடிவ அல்லது நீள் வடிவ அமைப்பை கொண்டிருக்கின்றன. மேலும் இவை அவற்றின் அளவு மற்றும் மக்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் விளக்கப்படுகிறது.

நிரந்தரக் குடியிருப்புகள் திட சதுரங்களாகவும்தற்காலிக குடியிருப்புகள் புற வரி சதுரங்களாகவும் வரையப்பட்டிருக்கும்.

 

கிராமப்புற குடியிருப்புகள்

இவை நெருக்கமானநெருக்கம் குறைவானசிதறிய அல்லது நேர்க்கோட்டு அமைப்பில் காணப்படும்.

 

நகர்ப்புற குடியிருப்புகள்

இவை தலைநகரம்நிர்வாக நகரம்வர்த்தக மையம்துறைமுக நகரம்மதம் சார்ந்தவை அல்லது சுற்றுலாத் தலங்கள் அல்லது மலைப்பிரதேசங்கள் போன்றவை ஆகும்.

நிலப்பயன்பாட்டு அமைப்பு மற்றும் குடியிருப்பின் வகைகளைக் கொண்டு மக்கள் மேற்கொள்ளும் தொழில்களை புரிந்துகொள்ளலாம்.

 

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புப் பயன்பாட்டை தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட மற்றும் கிராமப்புற சாலைகள், மாட்டு வண்டித் தடம், ஒட்டகப் பாதை, ஒற்றையடிப் பாதை, இருப்புப் பாதை, நீர்வழிப்பாதை, தொலைபேசி மற்றும் தந்தி கம்பிகள், தபால் நிலையங்கள் போன்றவற்றை வைத்து கண்டறியலாம்.

சாலைகள் அளவைகளுக்கு ஏற்ப வரையப்பட்டிருக்காது. கப்பிப் போடப்பட்ட சாலைகள் இரட்டை கோடுகளாக வரையப்பட்டிருக்கும். கப்பிப் போடப்படாத சாலைகள் விடுபட்ட இரட்டை கோடுகளாக வரையப்பட்டிருக்கும். ஒற்றையடிப் பாதை சிவப்பு நிற புள்ளிகளாகவும் மற்றும் மாட்டு வண்டிப் பாதை விடுபட்ட ஒற்றை கோடுகளாகவும் வரையப்பட்டிருக்கும். பலவகையான இருப்புப் பாதைகள் வெவ்வேறு வகையான குறியீடுகளால் குறிக்கப்பட்டிருக்கும்.



Tags : Topographical Map | Geography தலப்பட விவரணம் - புவியியல்.
11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map : Interpretation of Topo sheet Topographical Map | Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம் : தலப்பட விவரணம் - தலப்பட விவரணம் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம்