Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | முதலீட்டு சார்பு

பொருளாதாரம் - முதலீட்டு சார்பு | 12th Economics : Chapter 4 : Consumption and Investment Functions

   Posted On :  15.03.2022 04:08 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 4 : நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்

முதலீட்டு சார்பு

முதலீட்டு சார்பு என்பது முதலீடு மற்றும் வட்டி வீதத்திற்கிடையேயான தொடர்பைக் குறிப்பிடுகிறது.

முதலீட்டு சார்பு

முதலீட்டு சார்பு என்பது முதலீடு மற்றும் வட்டி வீதத்திற்கிடையேயான தொடர்பைக் குறிப்பிடுகிறது. முதலீட்டிற்கும் வட்டி வீதத்திற்கும் உள்ள சார்பு தலைகீழ் தொடர்பு உள்ளது. முதலீட்டுச் சார்பானது கீழ்நோக்கிச் செல்லும்.

I = f(r)  

I = முதலீடு (சார்பு மாறிகள்) 

r = வட்டி வீதம் (சார்பற்ற மாறிகள்)



1. முதலீடு - பொருள்

முதலீடு என்பது பங்குகள், கடன் பத்திரங்கள், அரசாங்க பங்கு மற்றும் பத்திரங்கள் வாங்குவது ஆகும். கீன்ஸின் கூற்றுப்படி, முதலீடு என்பது நிதி முதலீட்டை மட்டும் குறிக்கும், உண்மையான முதலீட்டைக் குறிக்காது. இது மாதிரியான முதலீடு நாட்டின் உண்மையான மூலதன இருப்பில் சேர்ப்பதில்லை .

கீன்ஸின் பார்வையில் முதலீடு மூலதன முதலீட்டுச் செலவை உள்ளடக்கியது ஆகும்.



2. முதலீட்டின் வகைகள் 

தன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு. 

i) தன்னிச்சையான முதலீடு

தன்னிச்சையான முதலீடு என்பது மூலதனத் திரட்சியின் மீது ஆகும் செலவு ஆகும். மாறுகின்ற வருமானம், வட்டி விகிதம், இலாப வீதத்தை சார்ந்து இருக்காது.

தன்னிச்சை முதலீடு 

• முதலீடு நாட்டு வருமானத்தைச் சார்ந்ததல்ல. 

• இலாப நோக்கின்றி நலத்திற்காக முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.

•  உதாரணம் : சாலைகள் அமைத்தல், பாலங்கள், பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் 

• உயரும் கச்சாப் பொருட்கள் மற்றும் உழைப்பாளர்களின் ஊதியம் ஆகியவற்றை பாதிக்காது. 

• நாட்டு வளர்ச்சிக்கும், பொருளாதார மந்தத்திலிருந்து விடுபடுவதற்கும் இது அவசியம்.

பொருளாதார நடவடிக்கைகளில் சுதந்திரமான எதையும் சாராத முதலீடு இது. தன்னிச்சையான முதலீடு வருமானம் நெகிழ்சியற்றது, தன்னிச்சையான முதலீடு அளவு எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

தன்னிச்சை முதலீட்டு வரை கோடு X அச்சுக்கு படிக்கிடை இணைக்கோடாக இருக்கும்.


பொருளாதார மந்த காலத்தில் அரசு தன்னிச்சை முதலீட்டிற்கு ஊக்கமளிக்கும். நலப் பொருளாதரத்தின் முக்கிய பகுதி தன்னிச்சையான முதலீடு ஆகும்.

பொதுவாக, அரசு நலத்தினை கருத்தில் கொண்டு தன்னிச்சையான முதலீட்டை மேற்கொள்ளும்.

ii) தூண்டப்பட்ட முதலீடு

பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது அதிகரிக்கின்ற வருமானம் மற்றும் தேவை உயர்வினால் ஏற்படும் நிலையான சொத்து மற்றும் பங்குகள் மீதான செலவே தூண்டப்பட்ட முதலீடு ஆகும்.

தூண்டப்பட்ட முதலீடு லாப நோக்கம் உடையது. தேசிய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தோடு தொடர்புடையது. தேசிய வருமானத்திற்கும், தூண்டப்பட்ட முதலீட்டிற்கும் நேரிடையான தொடர்பு இருக்கிறது. தேசிய வருமானம் குறைந்தால் தூண்டப்பட்ட முதலீடும் குறையும் மற்றும் தூண்டப்பட்ட முதலீடு வருமான நெகழிச்சியுடையது. பின்வருமாறு நேர்மறை சாய்வு கோடாக இருக்கும்.





3. முதலீட்டுச் சார்பின் காரணிகள் (Determinants of Investment Function)

தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் முதலீடு வட்டிவீதத்தை மட்டுமே சார்ந்தது என்று கூறினார்கள். ஆனால் உண்மையில் முதலீடு பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது. அவை கீழ்வருமாறு:

1. வட்டி வீதம்

2. நிலையற்ற தன்மை

3. அரசியல் சூழல்

4. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 

5. மூலதனப் பொருட்களின் இருப்பு 

6. புதிய பொருட்களின் தேவை 

7. முதலீட்டாளர்களின் வருமான அளவு 

8. கண்டுபிடிப்புகளும், புத்தாக்கமும் 

9. நுகர்வுத் தேவை 

10. அரசுக் கொள்கை 

11. மூலதனம் கிடைத்தல் 

12. முதலீட்டாளர்களின் சொத்துக்களின் ரொக்கத்தன்மை

ஆகிய காரணிகள் முதலீட்டளவை நிர்ணயிக்கின்றன.

கீன்ஸின் கருத்துப்படி, வாணிப எதிர்பார்ப்பு மற்றும் இலாபம் ஆகியவை முதலீட்டு அளவை முடிவு செய்வதில் முக்கிய காரணிகளாக விளங்குகின்றது. மேலும் அவர் முதலீடு மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் மற்றும் வட்டி வீதத்தைப் பொருத்து அமையும் என்கிறார்.

i. தனியார் முதலீடு என்பது மூலதன இருப்பை அதாவது தொழிற்சாலை அல்லது இயந்திரங்களை அதிகரிக்க செய்வது.

ii. மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன் (MEC) என்பது முதலீட்டுத் திட்டத்தில் கிடைக்கும் எதிர்பார்க்கப்படும் வருமானம் ஆகும். குறிப்பாக இருக்கின்ற ஆண்டு உற்பத்தியில் ஏற்படும் இறுதியாக அதிகரிக்கப்பட்ட ஒரு அலகு மூலதனத்தினால் ஏற்பட்ட உற்பத்தியாகும்.

iii. மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் 5 சதவீதமாகவும், வட்டி வீதம் 4 சதவீதமாக இருக்கும் பொது 4 சதவீத வட்டியில் கடன் வாங்கினாலம் 5 சதவீத உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதால் வாங்கலாம்.



4. வட்டி வீதத்திற்கும் முதலீட்டிற்கும் இடையே உள்ள உறவு

வட்டி வீதத்திற்கும் முதலீட்டிற்கும் இடையே உள்ள உறவு எவ்வாறு பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதை விளக்கப்படுகிறது. கடன்களின் மீதான வட்டி வீதம் உயரும்போது, குறைவான முதலீடே நடைபெறும். ஏனெனில் வட்டி வீதம் அதிரிக்கும் போது கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். இதனால் அதிக வருவாய் தரக்கூடிய இனங்களில் மட்டும் முதலீடு செய்யப்படும்.


வட்டி வீதமும் முதலீட்டு அளவும்


கடனுக்கான செலவு உண்மையாக உயரும்போது குறைந்த அளவு முதலீட்டில் இலாபம் தரக்கூடிய இனங்களில் முதலீடு செய்வர்.

5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக வட்டி வீதம் அதிகரித்தால், முதலீட்டின் அளவு ₹100 கோடியிலிருந்து ₹80 கோடியாக குறைவதைக் காணலாம்.

முதலீட்டிற்கான செலவு அதிகளவு வாய்ப்புச் செலவாக இருப்பதால்வட்டி வீதம் குறையும் போது, முதலீட்டை அதிகரிக்கும் போக்கு ஏற்பட்டு விடும்

1. அதிக வட்டியோடு வங்கியில் இருந்து பணம் பெறுவது அதிக செலவிற்கு வழி வகுக்கும். 

2. வங்கியில் பணத்தை சேமிப்பதினால் அதிகப்படியான ஈவு வீதம் கிடைக்கும். ஆதலால் சேமிப்பை நிதி முதலீட்டிற்கு பயன்படுத்துவதில் குறைந்த வட்டி செலுத்துவதற்கான வாய்ப்புச் செலவாக அமையும்.

வட்டி வீதம் அதிகரித்தால், நிறுவனம் ஆதாயத்தை அதிகரிப்பதற்கான தேவை ஏற்படும்.



5. மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன்

தன்னிச்சையான முதலீட்டை தீர்மானிக்கின்ற முக்கிய காரணியான மூலதன இறுதிநிலை ஆக்கம் என்ற கருத்தினை ஜே.என்.கீன்ஸ் 1936-ல் அறிமுகப்படுத்தினார். கூடுதலான மூலதன அலகிலிருந்து இருந்து எதிர்பார்க்கப்படும் இலாபமே மூலதன ஆக்கத்திறன் (MEC) என்று வரையறுக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் வருவாய்க்கும் மூலதனத்திற்கான செலவிற்கும் உள்ள வீதமே மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் ஆகும்.

MEC இரண்டு காரணிகளை சார்ந்து இருக்கும் 

1) மூலதன சொத்தின் மூலம் கிடைக்கும் வருங்கால லாபம் 

2) மூலதன சொத்தின் அளிப்பு விலை


MEC - யை பாதிக்கும் காரணிகள்


மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் குறுகிய கால மற்றும் நீண்ட கால காரணிகளால் தூண்டப்படுகிறது. இந்த காரணிகளை சுருக்கமாக காணலாம்.


அ) குறுகிய கால காரணிகள் 

(i) பொருளுக்கான தேவை

ஒரு குறிப்பிட்ட பொருளின் சந்தை விலை உயரும் என்ற எதிர்பார்ப்பும், அதன் செலவு குறைந்தும் காணப்படும் போது முதலீட்டிலிருந்து எதிர்ப்பார்க்கும் வருவாய் அதிகரிக்கும். தொழில் முனைவோர்கள் பொருட்களுக்கான தேவை குறையும் என்றும் செலவு கூடும் என்று எதிர்பார்த்தால் முதலீடு குறையும்.

(ii) நீர்மைதீன்மையுள்ள சொத்துக்கள்

செயல்திறன் மூலதனத்தை அதிக அளவில் தொழில் முனைவோர் வைத்திருந்தால், தன் வழியே வரும் முதலீட்டு வாய்ப்புகளின் நன்மையை ஏற்றுக் கொள்வர். இது மூலதனத்தின் இறுதி நிலை ஆக்கத்திறனை அதிகரிக்கும்.

 (iii) வருமானத்தில் ஏற்படும் திடீர் மாற்றம்

தொழில் முனைவோரின் திடீர் வருமான மாற்றமும் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனைப்பாதிக்கும். வணிக சமூகம் எதிர்பாராமல் இலாபமோ அல்லது வரி சலுகைகளோ பெற்றால் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன் அதிகரிக்கும். ஆதலால் நாட்டில் முதலீடு அதிகரிக்கும். மாறாக, வருமானம் குறைந்தால் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன் குறையும்.

(iv) நடைமுறை முதலீட்டு வீதம்

குறிப்பிட்ட தொழில்களில் உள்ள நடைமுறை முதலீட்டு வீதமும் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனைப் பாதிக்கின்ற மற்றொரு காரணி ஆகும். குறிப்பிட்ட தொழில்கள் ஏற்கனவே அதிக அளவில் முதலீடு செய்யப்பட்ட நிலையில் அதே தொழிலில் மேலும் முதலீடு செய்தால் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனைக் குறைக்கும்.

(v) நம்பிக்கை மற்றும் நம்பிக்கையற்ற அலைகள்

வணிகச் சூழ்நிலையில் ஏற்படும் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையற்ற நிலைகள் மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறனைப் பாதிக்கும். தொழில் செய்பவர் எதிர்கால நம்பிக்கை கொண்டிருந்தால் இறுதிநிலை உற்பத்தித் திறன் அதிகமாகவும், மாறாக நம்பிக்கையற்று இருந்தால் இறுதிநிலை உற்பத்தித் திறன் குறைவாகவும் இருக்கும்.


ஆ) நீண்ட கால காரணிகள்

மூலதன இறுதி நிலை ஆக்கத்திறனை பாதிக்கின்ற நீண்ட காலக் காரணிகள் பின்வருமாறு:

(i) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்

மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை பாதிக்கின்றது. மக்கள் தொகை வளர்ச்சி மிக அதிகமாக இருந்தால், வெவ்வேறு வகையான பொருட்களுக்கு தேவை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே விரைவான மக்கள் தொகை வளர்ச்சி மூலதன ஆக்கத்திறனை அதிகரிக்கும், குறைவான வளர்ச்சி முதலீட்டை குறைத்து, அதன் மூலம் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனையும் குறைக்கும்.

(ii) தொழில் நுட்ப முன்னேற்றம்

தொழில்களில் முதலீடும், தொழில் நுட்ப முன்னேற்றமும் ஏற்பட்டால் நிகர இலாபத்தில் சுபிட்சமான ஏற்றத்தை கொண்டு வரும். எடுத்துக்காட்டாக 20ம் நூற்றாண்டில் ஆட்டோ மொபைல்ஸ் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் ரப்பர் தொழிற்சாலை, எஃகு மற்றும் எண்ணெய் தொழிற்சாலை முதலியவற்றில் பெரிய அளவில் உந்துதல் ஏற்படச் செய்தது. ஆதலால் புதிய கண்டுப்பிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் பலவகையான திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு ஊக்கம் அளித்து மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனையும் அதிகரிக்கும்.

(iii) பண மற்றும் நிதி கொள்கை

மலிவுப் பண கொள்கை மற்றும் தளர்வான வரிக் கொள்கை அதிகப்படியான இலாபத்தை ஈட்ட வழி செய்து, அதனால் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனையும் உயர்த்துகிறது.

(iv) அரசியல் சூழ்நிலை

அரசியல் நிலைபெற்ற தன்மை , சுமூகமான நிர்வாகம், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவையும் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை அதிகரிக்கிறது.

(v) வளங்கள் கிடைப்பது

மலிவான மற்றும் மிகுதியான இயற்கை வளங்கள், திறன்மிக்க உழைப்பாளர்கள், மூலதன இருப்பு போன்றவும் மூலதன இறுதி நிலை ஆக்கத்திறனை அதிகரிக்கின்றது.



6. முதலீட்டின் இறுதி நிலை உற்பத்தித் திறன் (MEI)

ஒரு குறிப்பிட்ட காலத்தில், மேற்கொள்ளப்பட்ட கூடுதல் முதலீட்டில் இருந்து எதிர்ப்பார்க்கப்படுகிற விளைவின் விகிதம் முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தித் திறன் ஆகும். கடனுக்கான வட்டி வீதம் அதிகமாக இருந்தால், பல்வேறு திட்டங்களில் தொழில் செய்வதற்கான ஆர்வம் குறையும். இதனால் நிறுவனங்களின் இலாப விகிதம் குறையும்.




மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் (MEC)  

1) இது மூலதனத்தின் அளிப்பு விலையைப் பொறுத்து அமைகிறது

2) ஆரம்பத்தில் உள்ள மூலதனத்தை கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு மூலதன அலகிலிருந்து கிடைக்கும் விளைவைக் குறிக்கிறது.

3) வரைபடத்தில் படுக்கை அச்சில் மூலதன இருப்பு அளக்கப்படுகிறது.

4) இது ஒரு "இருப்பு" கருத்துரு (stock) 

5) ஒவ்வொரு வட்டிவீத அளவிலுமான உத்தம மூலதன இருப்பை இது நிர்ணயிக்கிறது 


முதலீட்டின் இறுதி நிலை உற்பத்தித் திறன் (MEI)

1) மூலதனத்தின் தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள், விலையை தூண்டும் மாற்றத்தைப் பொறுத்து அமைகிறது. 

2) ஆரம்ப மூலதனத்திற்குப் பின்னர் வந்த மூலதனத்தின் விளைவு விகிதத்தைக் காட்டுகிறது. 

3) வரைபடத்தில் படுக்கை அச்சில் முதலீடு அளவு இருப்பு அளக்கப்படுகிறது

4) இது ஒரு ஓட்டக் (FLOW) கருத்துரு 

5) கொடுக்கப்பட்ட மூலதன இருப்பில், ஒவ்வொரு வட்டி வீத அளவிலும் நிகர முதலீடு எவ்வளவு என்பதை நிர்ணயிக்கிறது.


Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 4 : Consumption and Investment Functions : Investment Function Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 4 : நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் : முதலீட்டு சார்பு - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 4 : நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்