Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியலா? அல்லது ஒர் கலையா?
   Posted On :  25.09.2023 03:23 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்

அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியலா? அல்லது ஒர் கலையா?

அரசியல் அறிவியல் என்ற இந்த பாடம் ஒரு கலைப் பாடமா? அல்லது ஒரு அறிவியல் பாடமா? என்பது பற்றியான ஒரு பெரிய விவாதமே அரசியல் அறிவியல் அறிஞர்களிடையே நிலவி வருகிறது.

அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியலா? அல்லது ஒர் கலையா? (Is Political Science, a Science or an Art?)

அரசியல் அறிவியல் என்ற இந்த பாடம் ஒரு கலைப் பாடமா? அல்லது ஒரு அறிவியல் பாடமா? என்பது பற்றியான ஒரு பெரிய விவாதமே அரசியல் அறிவியல் அறிஞர்களிடையே நிலவி வருகிறது. சில அறிஞர்கள் இப்பாடமானது அரசு மற்றும் அரசாங்கம் என்பது பற்றிய ஒரு அறிவியல் பாடம் என்று கருதுகின்றனர். மற்றும் சிலரோ இப்பாடத்தினை மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு கலைப் பாடம் என்கின்றனர். இப்பாடத்தின் தன்மை, வழிமுறைகள், அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவியல் தன்மை மிகவும் குறைவாக காணப்படுவதால் அகஸ்டே கோம்டே (Auguste Comte) மற்றும் மைட்லேன்ட் (Maitland) போன்ற அறிஞர்கள் இப்பாடத்தினை ஒரு கலைப் பாடமாகக் கருதுகின்றனர். ஏனெனில் இப்பாடத்தில் தொடர்ச்சி, மேம்பாட்டுதன்மை, அடிப்படை தெளிவு போன்றவைகளும், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளக் கூடிய பொதுவான கொள்கைகளும், அறிவியல் பூர்வ அணுகுமுறைகளும், பரிசோதனை முறைகளும் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்று இவர்கள் வாதிடுகின்றனர். மேலும் நம்பகத்தன்மை, சரிபார்ப்புத்தன்மை, தெளிவு, துல்லியம் போன்ற தூய அறிவியலின் கூறுகள் இப்பாடத்தில் இல்லை என்பதும் இவர்களின் வாதமாகும். தூய அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், போன்ற பாடங்களில் உள்ளது போல காரணங்களையும் விளைவுகளையும் (Cause and Effect) தொடர்புப்படுத்தி உருவாக்கும் பொதுக்கோட்பாடுகள் உலகம் முழுதும் இப்பாடத்தில் ஒரே மாதிரியாக இல்லை என்பதனால் இப்பாடத்தினை ஒரு கலைப் பாடம் என்றே பல அறிஞர்களும் கருதுகின்றனர்.

இப்பாடத்தினை ஒருகலைப் பாடமே என்று வாதிடுவோர் மத்தியில் அரிஸ்டாட்டில்தான் இதனை ஒரு மேலான அறிவியல் என்று முதன்முதலாக அழைத்தார். ப்லன்ட்சிலி (Bluntschli), மாண்டெஸ்கியூ (Montesquieu), போடின், (Bodin), ஹாப்ஸ் (Hobbes) போன்ற அறிஞர்கள் இந்த கருத்தினை ஒப்புக்கொண்டு இப்பாடம் ஒரு அறிவியல் பாடமே என்கின்றனர். முனைவர் கார்னர் (Dr.Garner) போன்றோர் இப்பாடத்திலும் முறைமையான அணுகுமுறை, உற்றுநோக்கல், பரிசோதனை போன்றவை இருப்பதாக கூறுகின்றனர். தூய அறிவியல் பாடங்களில் உள்ளதுபோல உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் அரசியல் அறிவியல் பாடத்தில் முழுக்க இல்லாமல் போனாலும் கூட இந்த அரசியல் அறிவியல் பாடத்திலும் பல கருத்துக்களை பொதுமைப்படுத்தி நிரூபிக்க முடியும் என்பது இவர்களின் கருத்தாகும். உதாரணமாக சமூக நல மேம்பாட்டுக்கும், பன்மைத் தன்மை கொண்ட சமுதாயங்களுக்கும் மக்களாட்சியே சிறந்த ஆட்சிமுறை என்ற கருத்து பொதுவானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து முடிவு முற்காலம், இடைக் காலம், நவீனகாலம் ஆகியவற்றில் பல்வேறு வகையான ஆட்சி முறைகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே உருவாக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் இப்பாடத்தின் தன்மை, வழிமுறை, கோட்பாடுகள் ஆகியன பற்றி ஒத்த கருத்துக்களை ஏற்படுத்தமுடியவில்லை. ஏனெனில் இப்பாடத்தில் அரசியல் நிறுவனங்கள் அனைத்திலுமே மனித உறவுகள் தொடர்பில் இருக்கின்றன. மனிதனோடு தொடர்புடைய எந்த ஒரு செயல்பாடும் நிலையானதாக இல்லாமல் மாறக்கூடியதாகும். இந்த காரணத்தாலேயே இப்பாடத்திற்கு முழுமையான அறிவியல் என்ற தகுதியினை கொடுக்க இயலவில்லை. எப்படியிருப்பினும் ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், சமத்துவமின்மை, எழுத்தறிவின்மை, வறுமை போன்றவை சமுதாயத்தினை பெரிதும் பாதிக்கும் காரணிகள் என்பதை அனைத்து அரசியல் அறிஞர்களும் ஏகமனதாக ஒப்புக்கொள்கின்றனர்.

அதேபோல ‘காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள்’ பற்றிய தூய அறிவியல் கோட்பாடு அரசியல் அறிவியலுக்கு பொருந்தாது என்று கூறினாலும் ‘வறுமை, வேலையின்மை போன்ற காரணிகள் புரட்சியினை ஏற்படுத்திவிடும்’என்பது அரசியல் அறிவியலிலும் ‘காரண விளைவுக் கோட்பாடு’ (Cause and Effect Theory) உள்ளதைக் காட்டுகிறது. எனவேதான் சில அரசியல் அறிஞர்கள் இப்பாடத்தினை ஒரு அறிவியல் பாடம் என தொடர்ந்து கூறிவருகின்றனர்.

எப்படியிருப்பினும், அரசியல் அறிவியலை இயற்கை அறிவியலுடன் ஒப்பிட முடியாமல் இருந்தாலும் அது அரசு மற்றும் அரசாங்கத்துடனான தனிமனிதர்களின் உறவினைப் பற்றிய ஓர் சமூகவியலாகும். அரசியல் அறிவியல் என்பது கலையா அல்லது அறிவியலா என்பது கற்பதற்கு எடுத்துக் கொண்ட பொருள் மற்றும் அதனைக் கற்றறிய பயன்படுத்தும் அணுகுமுறையைப் பொறுத்ததாகும்.


• அரசியல் அறிவியல் என்றால் என்ன?

அரசு அரசாங்கம் மற்றும் அரசியல் பற்றிய அறிவியல் பூர்வ படிப்பே அரசியல் அறிவியல் எனலாம்.


• அரசியல் அறிவியல் பாடம் எதுவாக இல்லை?

அரசியல் அறிவியல் என்பது அனைத்து விடைகளையும் தன்னகத்தே கொண்ட முழுநிறைவான அறிவியலாக இல்லை.

• அரசியல் அறிவியல் ஓர் அறிவியலா? அவ்வாறெனில், அது எங்ஙனம் அறிவியல் தன்மையுடையதாகிறது?

‘அரசியல்’ என்ற இந்த பாடம் அமெரிக்க அரசியல் அறிவியல் சித்தனையாளர்களின் அறிவியல் பூர்வ அணுகு முறைகளுக்குப் பிறகுதான் “அரசியல் அறிவியல்” எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டது. எனினும் தூய அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களுக்கு இணையாக இந்த அரசியல் அறிவியல் பாடத்தினைக் கருத முடியாது. ஆகவே, மனித நடத்தையைப் பற்றியதாக இருப்பதால் மற்றொரு புறத்தில் அரசியல் அறிவியல் என்பது அரசு மற்றும் அரசாங்கத்தைப் பற்றிய அறிவியலாகும் என வாதிட்டனர்.அரசியல் அறிவியல் பாடத்தினை ஓர் சமூக அறிவியல் பாடம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.


11th Political Science : Chapter 1 : Introduction of Political Science : Is Political Science, a Science or an Art? in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம் : அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியலா? அல்லது ஒர் கலையா? - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்