Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்தியக் கூட்டாட்சியில் பிரச்சனைகளும் தேவைகளும்

இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் - இந்தியக் கூட்டாட்சியில் பிரச்சனைகளும் தேவைகளும் | 12th Political Science : Chapter 5 : Federalism in India

   Posted On :  13.05.2022 08:13 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி

இந்தியக் கூட்டாட்சியில் பிரச்சனைகளும் தேவைகளும்

கூட்டாட்சி முறையில் காணப்படும் பல்வேறு சிக்கல்கள் மத்திய-மாநில உறவுகளை பாதிக்கின்றன.

இந்தியக் கூட்டாட்சியில் பிரச்சனைகளும் தேவைகளும்

கூட்டாட்சி முறையில் காணப்படும் பல்வேறு சிக்கல்கள் மத்திய-மாநில உறவுகளை பாதிக்கின்றன. 



ஆளுநரின் நியமனம் மற்றும் பணி


மத்திய அரசாங்கத்தின் முகவராக ஆளுநர் மாநிலத்தில் செயல்படுவதை மாநில அரசாங்கங்கள் எதிர்க்கின்றன. ராஜமன்னார் குழு மாநில ஆளுநர்கள் கூட்டாட்சி முறைக்கு எதிராக இருப்பதாக விமர்சித்தது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் காலத்தில் இருந்து ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

மாநில கட்சி அரசியலில் தீவிரமாக இயங்கும் தலைவர்களை மாநில ஆளுநராக நியமிக்க கூடாது என கூறுகின்றன. ஆளுநர்களின் நியமனத்தில் மாநில அரசாங்கங்களையும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று மாநில கட்சிகள் வலியுறுத்துகின்றன.இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட, மிகச்சிறந்த அறிஞர்களை, சேவையாளர்களை, ஆளுநர்களாக நியமிக்க வேண்டுமென கோரப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை உருவாக்கியுள்ளன. மாநிலங்களில் ஆளும் கட்சி உடைந்து போனாலோ, அல்லது தொங்கு சட்டமன்றம் உருவானாலோ ஆளுநர்களின் முடிவுகள் சர்ச்சைகளை உருவாக்குகின்றன.

செயல்பாடு

மாநில அரசியலில் ஆளுநர்களின் பங்கை பற்றி ஒரு திட்ட அறிக்கைத் தயார் செய்யவும்.


கல்வி

ஆரம்ப காலத்தில் கல்வி இரண்டாவது பட்டியலான மாநிலப் பட்டியலில் தான் இடம்பெற்றிருந்தது. 1976ஆம் ஆண்டு நாடாளுமன்றம் 42 வது அரசியல் சாசன திருத்தச்சட்டத்தின் மூலம் கல்வியை மூன்றாவது பட்டியலான பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரம் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பொதுவானதாக மாற்றப்பட்டது. பொதுப் பட்டியலில் தற்போது கல்வி இருப்பதால் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே முரண்பாடுகள் தோன்றினால் மத்திய அரசின் அதிகாரமே செல்லுபடி ஆகும். ஆகவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என கூறுகின்றன.




மாநில சட்ட முன்வரைவுகளை குடியரசுத்தலைவரின் கவனத்திற்கு தேக்கி வைத்தல்.

மாநிலங்கள் நிறைவேற்றும் சட்ட முன்வரைவுகளை ஆளுநர்கள் குடியரசுத்தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். மாநிலத்தின் நிதி சட்ட முன்வரைவுகளை ஆளுநர்கள் தேக்கி வைத்தால் குடியரசுத்தலைவர் அவைகளை நிராகரிக்கலாம் அல்லது அவைகளுக்கு தனது இசைவைத் தெரிவித்தது அவைகளை சட்டமாக்கலாம். மாநிலத்தின் சாதாரண சட்ட முன்வரைவுகள் ஆளுநர்களால் தேக்கி வைக்கப்பட்டால் குடியரசுத்தலைவர் அந்த முன்வரைவுகளை திரும்பவும் விவாதிக்குமாறு மாநில சட்டமன்றத்திற்கே அனுப்பி வைக்கலாம்.

மறுபரிசீலனை செய்து மீண்டும் அந்த முன்வரைவுகளை மாநில சட்டமன்றம் அனுப்பினாலும் குடியரசுத்தலைவர் முன்வரைவை நிராகரிக்கலாம். நமது நாட்டின் ஒற்றுமையை காப்பதற்காக அரசமைப்பு இவ் வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.

ஆனால் பல மாநில அரசாங்கங்கள் இவ்வழிமுறை மீது அதிருப்தி தெரிவித்துள்ளன. அரசியல் காரணத்திற்காக ஆளுநர்கள் இப்பிரிவை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக ஆளுநர்கள் இவ்விவகாரத்தை பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.



உறுப்பு 356 தவறாக பயன்படுத்தப்பட்டால்

அரசமைப்பின் 18-வது பகுதியில் 356 உறுப்பு ஒரு மாநிலத்தில் அரசமைப்பு ஆட்சி முறை சீர்குலைந்து விட்டால் குடியரசுத்தலைவர் அவசர காலத்தை அமல் படுத்தலாம் என்று கூறுகின்றது. ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையிலோ அல்லது ஆளுநரின் அறிக்கை இல்லாமலோ குடியரசுத்தலைவர் உறுப்பு 356-ஐ அமல்படுத்தலாம். நமது நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக இப்பிரிவை அரசமைப்பு உருவாக்கியுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்கள் உறுப்பு 356 மத்திய அரசாங்கத்தினால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று விமர்சித்துள்ளனர்.

மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக இவ்வுறுப்பை தவறாக பயன்படுத்தியுள்ளதாக பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. கட்சி அரசியல் காரணங்களுக்காக இவ்வுறுப்பு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பல மாநில கட்சிகள் அரசமைப்பின் உறுப்பு 356-ஐ அகற்ற வேண்டும் என கோருகின்றன.


அனைத்து இந்தியப் பணிகள்

அரசமைப்பின் உறுப்பு 312 வழியாக அனைத்து இந்தியப் பணிகள் உருவாக்கப்படுகின்றன. இப்பணிகளின் அதிகாரிகள் மத்திய அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநிலங்களுக்கு மத்திய அரசினால் இவ்வதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மாநில அரசாங்கங்கள் அனைத்து இந்தியப் பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்யலாம். ஆனால் மத்திய அரசாங்கம் மட்டுமே அனைத்து இந்தியப் பணி அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆகவே இவ்வதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மாநில அரசாங்கங்களின் மீது மத்திய அரசு இவ்வதிகாரிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ்நாடு அரசாங்கம் அமைத்த இராஜமன்னார் குழு அனைத்து இந்தியப் பணிகளை அகற்ற வேண்டும் என பரிந்துரைத்தது.

மத்திய மாநில உறவுகளை பற்றி இது வரையில் பல்வேறு குழுக்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளன.


Tags : Federalism in India | Political Science இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 5 : Federalism in India : Issues and Demands in Indian Federalism Federalism in India | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி : இந்தியக் கூட்டாட்சியில் பிரச்சனைகளும் தேவைகளும் - இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி