Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | தமிழகத்தில் சமணம்

மூன்றாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - தமிழகத்தில் சமணம் | 7th Social Science : History : Term 3 Unit 3 : Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu

   Posted On :  19.04.2022 02:00 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -3 : தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

தமிழகத்தில் சமணம்

கற்றலின் நோக்கங்கள் • கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்த அறிவினைப் பெறுதல் • அவைதீகச் சமயப் பிரிவுகளான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகியவை குறித்த சான்றுகளையும் இலக்கியங்களையும் அறிந்து கொள்ளுதல் • மகாவீரர், புத்தர், ஆசீவகப் பிரிவை நிறுவிய கோசலா ஆகியோரின் போதனைகள் பற்றிய அறிவினைப் பெறுதல் • தமிழ்நாட்டிலுள்ள மேற்சொல்லப்பட்ட சமயப் பிரிவுகள் சார்ந்த நினைவுச் சின்னங்களைத் தெரிந்துகொள்வது

அலகு - 3

தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்



கற்றலின்  நோக்கங்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்த அறிவினைப் பெறுதல் 

அவைதீகச் சமயப் பிரிவுகளான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகியவை குறித்த சான்றுகளையும் இலக்கியங்களையும் அறிந்து கொள்ளுதல்

மகாவீரர், புத்தர், ஆசீவகப் பிரிவை நிறுவிய கோசலா ஆகியோரின் போதனைகள் பற்றிய அறிவினைப் பெறுதல் 

தமிழ்நாட்டிலுள்ள மேற்சொல்லப்பட்ட சமயப் பிரிவுகள் சார்ந்த நினைவுச் சின்னங்களைத் தெரிந்துகொள்வது


தமிழகத்தில் சமணம்


அறிமுகம்

பிகநிதயா எனப்படும் பழமையான பௌத்த சமய நூல் கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ, சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாகக் கூறுகின்றது. இருந்தபோதிலும் இப்பலவகைப்பட்ட பிரிவுகளில் ஆசீவகம் மட்டுமே இடைக்காலத்தின் பிற்பகுதி வரை செயல்பாட்டில் இருந்தது. ஆனால் சமணமும், பௌத்தமும் நவீன காலம் வரையிலும் தொடர்ந்து செழிப்படைந்தன. மகாவீரரும் புத்தரும் தங்கள் அற போதனைகளை வேத மதத்தின் பலிகொடுக்கும் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக வைத்தனர். அவர்களின் போதனைகள் பாதுகாக்கப்பட்டு, பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளின் மூலமாகப் பின்வந்த சந்ததிகளிடம் கையளிக்கப்பட்டன.


சமணம்: சான்றுகள், இலக்கியங்கள்

மகாவீரரின் அறவுரைகள் ஓராயிரம் ஆண்டுகளாக அவருடைய சீடர்களால் வாய்மொழி மூலமாகவே மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்தன. சமணத்தின் தொடக்க காலத்தில் சமணத்துறவிகள் சமணத்தின் ஐந்து உறுதி மொழிகளைக் கடுமையாகப் பின்பற்றினர். சமயம் சார்ந்த கையெழுத்துப் பிரதிகளே சொத்தாகக் கருதப்பட்டதால் சமயம் பற்றிய அறிவானது ஆவணப்படுத்தப்படவில்லை . மகாவீரர் இயற்கை எய்திய (நிர்வாணா) இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், சமண அறிஞர்கள் பாடலிபுத்திரத்தில் ஒரு பேரவையைக் கூட்டித் தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இது தொடர்பாகக் கூட்டப்பட்ட முதல் சமணப் பேரவைக்கூட்டம் இதுவேயாகும். சட்ட விதிகளை வரையறுப்பதில் ஒருமித்தக் கருத்து எட்டமுடியாமல் போனதால் இக்கூட்டம் தோல்வியில் முடிந்தது. இருந்தபோதிலும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வல்லபியில் கூட்டப்பட்ட பேரவைகருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்றது. இது அறிஞர்களை, சமண சமயத்தின் கொள்கைகளை உறுதிபட விளக்க ஊக்குவித்தது. மேலும் காலப்போக்கில் அதிக வயதும் ஆழமான ஞானமும் கொண்ட கற்றறிந்த பல சமணத் துறவிகள் சமண சமயம் தொடர்பாகப் பல்வேறு தலைப்புகளிலான உரைகளைத் தொகுத்தனர். ஏறத்தாழ கி.பி.500இல் சமண ஆச்சாரியார்கள் ஒன்றை உணர்ந்தனர். அதாவது கடந்தகாலம், நிகழ்காலம் ஆகிய காலப்பகுதிகளைச் சேர்ந்த பல அறிஞர்களால் தொகுக்கப்பட்ட ஒட்டுமொத்த சமண இலக்கியங்களையும் மனனம் செய்வது மிகச்சிரமமானது என்பதை உணர்ந்தனர். உண்மையில் சமணம் குறித்த மிக முக்கியச் செய்திகள் இழக்கப்பட்டு விட்டன. ஆகவே அவர்கள் தாங்கள் அறிந்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்துவது என முடிவுசெய்தனர். 

சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகள் : 1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது - அகிம்சை; 2. உண்மை - சத்யா; 3. திருடாமை - அசௌர்யா; 4. திருமணம் செய்து கொள்ளாமை - பிரம்மச்சரியா; 5. பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா

கி.பி முதலாம் நூற்றாண்டில் சமணத்தில் பெரும்பிளவு ஏற்பட்டு திகம்பரர், சுவேதாம்பரர் என இருபெரும் பிரிவுகள் ஏற்கனவே தோற்றம் பெற்றிருந்தன. திகம்பரர் சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே ஆகம சூத்திரங்களைத் தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவற்றின் உள்ளடக்கம், கொடுக்கப்படும் விளக்கம் ஆகியவற்றில் வேறுபட்டனர்.


சமண இலக்கியங்கள்

சமண இலக்கியங்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


1. ஆகம சூத்திரங்கள்

ஆகம சூத்திரங்கள் பல சமண சமயப் புனித நூல்களைக் கொண்டுள்ளது. அவை அர்த்த-மகதி பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. 12 நூல்களைக்கொண்ட அவை மகாவீரரின் நேரடி போதனைகளைக் கொண்டுள்ளன. அவை மகாவீரரின் நேரடிச் சீடர்களால் தொகுக்கப்பட்டவையாகும். 12வது ஆகம சூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.


2. ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்

ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் என்பன ஆகமங்கள் மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள், தனிநபர்களால் எழுதப்பட்டு துறவிகளாலும் அறிஞர்களாலும் தொகுக்கப்பட்ட நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அவை பிராகிருதம், சமஸ்கிருதம், பண்டைய மராத்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, இந்தி, கன்னடம், தமிழ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. மொத்தம் 84 நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் 41 சூத்திரங்கள், 12உரைகள், ஒரு மாபெரும் உரை (மகா பாஷ்யா) ஆகியன இடம் பெற்றுள்ளன. 41 சூத்திரங்கள் என்பன 11 அங்கங்களையும் (சுவேதாம்பரர்களால் பின்பற்றப்படும் நூல்கள்) 12 உப அங்கங்களையும் (நெறிமுறைக் குறிப்பேடுகள்) 5 சேடாக்களையும் (துறவிகளுக்கான நடத்தை விதிகள்) 5 மூலங்களையும் (சமணத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்) பத்ரபாகுவின் கல்பசூத்ரா போன்ற எட்டு பல்வகைப்பட்ட நூல்களையும் கொண்டுள்ளது. பஞ்சதந்திரம் எனும் நூலில் பெருமளவில் சமணத்தின் தாக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது.

கல்பசூத்ராவின் ஜைனசரிதா எனும் சமண நூல் சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக சமண சமயத்தை நிறுவியவரும் முதல் தீர்த்தங்கரருமான பார் சவநாதர், கடைசியும் 24 வது தீர்த்தங்கரருமான மகாவீரர் ஆகியோரின் வரலாறுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் ஆசிரியராகக் கருதப்படும் பத்ரபாகு, சந்திரகுப்த மௌரியரோடு மைசூருக்குப் புலம்பெயர்ந்து (ஏறத்தாழ கி.மு.298) பின் அங்கேயே குடியமர்ந்தார்.

நிர்வாண நிலையை அடைந்து அதன் பின்னர் இவ்வுலகிற்கும் அடுத்த உலகத்திற்குமிடையே பாதை அமைப்போரே தீர்த்தங்கரர்கள் ஆவர்.

இவைகளோடு இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய இந்திய பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட சில சமண நூல்களையும் நாம் பெற்றுள்ளோம். அதற்கு எடுத்துக்காட்டு தமிழ்மொழியில் எழுதப்பட்ட காப்பிய நூலான சீவகசிந்தாமணி ஆகும். இந்நூல் சங்க இலக்கிய மரபில் திருத்தக்கத் தேவர் என்பாரால் இயற்றப்பட்டது. இந்நூல் தன் சொந்த முயற்சியால் மேநிலையை அடைந்த சமயப்பற்றுடைய, இறுதியில் துறவுபூண்ட ஒரு அரசனின் வாழ்க்கையை வர்ணிப்பதாகும். தமிழில் எழுதப்பட்ட மற்றொரு அறிவுசார் நூலான நாலடியார் சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது.


தமிழ் நாட்டில் சமணங்கள்

சமணர்கள் கர்நாடகாவிலிருந்து கொங்குப்பகுதிக்கும் (சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகள்) காவேரி கழிமுகப்பகுதிக்கும் (திருச்சிராப்பள்ளி) தெற்குமுகமாக புதுக்கோட்டைப் பகுதிக்கும் (சித்தன்னவாசல்) இறுதியில் பாண்டிய நாட்டுக்குள்ளும் (மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள்) இடம் பெயர்ந்தனர் என்பதற்குத் தெளிவான சான்று உள்ளது. பொதுவாகத் தமிழர்கள் திகம்பரர் பிரிவைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். களப்பிரர்கள் சமண சமயத்தின் ஆதரவாளர்களாய் இருந்ததாக நம்பப்படுகிறது.


சித்தன்னவாசல் குகைக்கோவில்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது. இதன் ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையாக அமைந்த குகையும், மற்றொரு முனையில் ஒரு குடைவரைக் கோவிலும் உள்ளன. வேலி அமைக்கப்பட்டுள்ள குகையின் பின்னே தரையில் 17 சமணப்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்துயிலிடங்கள் சமணர்களின் தங்குமிடங்களாக இருந்துள்ளதாய் நம்பப்படுகிறது. இத்துறவிகளின் கற்படுக்கைகளில் அளவில் பெரிதாக இருக்கும் ஒன்றில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ளது கி.பி. எட்டாம் நூற்றாண்டு, அதற்குப் பின்னரான காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளும் உள்ளன. அவைகளில் துறவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் இவ்விடத்தில் தனிமையில் தங்கள் வாழ்வைக் கழித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.


அறிவர் கோவில் எனும் பெயருடைய சித்தன்னவாசல் குகைக்கோவில் குன்றின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோவிலின் முகப்பு எளிமையானதாக கல்லில் செதுக்கப்பட்ட நான்கு தூண்களைக் கொண்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவிலின் முன்பகுதியில் அர்த்த மண்டபமும் பின்பகுதியில் கருவறையும் (கர்ப்பகிரகம்) உள்ளன.

இக்கோவிலில் காணப்படும் சுவரோவியங்கள் புகழ்பெற்ற அஜந்தா சுவரோவியங்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன. 1958இல் தான் மத்திய அரசின் தொல்லியல் துறை (ASI) இதைத்தனது பாதுகாப்பின் கீழ்க்கொண்டு வந்தது. அதன் பின்னர் இதைச் சுற்றி வேலிஅமைக்கவும், பார்வையாளர்களின் வருகையை முறைப்படுத்தவும் இருபது ஆண்டுகளாயின. கருவறைக்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள மண்டபத்தின் இடப்புறச்சுவரில் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் வலப்புறச்சுவரில் ஆச்சாரியார்களின் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன.



காஞ்சிபுரத்தில் சமணர்கள் (திருப்பருத்திக் குன்றம்)

பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் சமண சமயம் செழித்தோங்கியது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீனப்பயணி யுவான் சுவாங் அங்கு பெரும் எண்ணிக்கையிலான பௌத்தர்களும் சமணர்களும் இருந்ததாகத் தனது பயணக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான பல்லவ அரசர்கள் சமணர்களாவர். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமணராக இருந்தவராவார். காஞ்சியில் இரண்டு சமணக் கோவில்கள் உள்ளன. ஒன்று திருப்பருத்திக் குன்றத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் மற்றொன்று சந்திரபிரபா எனும் பெயரைக் கொண்டிருந்த தீர்த்தங்கரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்திரபிரபா கோவிலாகும். பல்லவர் கட்டடக்கலைப் பாணியில் இக்கோவில்கள் அமைந்துள்ளன. ஆனால் காலப்போக்கில் இவை சேதமடைந்துவிட்டன. விஜயநகர ஆட்சியின்போது (1387) புஷ்பசேனா எனும் சமண முனிவரின் சீடரான இருகப்பா என்பவரும் விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயரின் (1377-1404) அமைச்சரும் சேர்ந்து இக்கோவிலில் சங்கீத மண்டபம் ஒன்றைக் கட்டி கோவிலை விரிவுபடுத்தினர். அழகுமிக்க சுவரோவியங்களும் இக்காலத்தில்தான் வரையப்பட்டன.


கோவில்களிலுள்ள சுவரோவியங்கள் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கையில் நடந்த சில காட்சிகளைச் சித்தரிக்கின்றன. திருப்பருத்திக் குன்றத்திலுள்ள திரிலோக்கியநாத கோவிலின் ஓவியங்களின்மீது புதுப்பித்தல்பணியின்போது வர்ணங்கள் பூசப்பட்டுவிட்டதால் பாழாகிவிட்டன. திரிகூட பஸ்தி எனப்படும் இரண்டாவது கருவறையினுள் ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் கோவிலின் வளர்ச்சி குறித்த செய்திகளும், நூற்றாண்டுகளின் போக்கில் இக்கோவிலுக்குக் கொடையளித்த பலரைப்பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பருத்திக் குன்றம் தவிர மாநிலத்தின் வேறுபல கிராமங்களிலும் சமண சமயம் குறித்தத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை 83,359 ஆகும். மொத்த மக்கள்தொகையில் இது 0.12 விழுக்காடாகும்.


கழுகுமலை சமண குடைவரைக் கோவில்கள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் கழுகுமலையிலுள்ள கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் கோவில், தமிழ் நாட்டில் சமணம் புத்துயிர் பெற்றதைக் குறிக்கின்றது. இக்குகைக்கோவில் பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையனால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலில் பஞ்சவர் படுக்கை என்றழைக்கப்பட்ட பாறையில் செதுக்கி மெருகேற்றப்பட்ட கற்படுக்கைகள் உள்ளன. கழுகுமலை குகைக்கோவிலில் தீர்த்தங்கரர்களின் உருவங்களைத்தவிர யக்சர்கள், யக்சிகள் (முறையே ஆண், பெண் பணியாளர்கள்) ஆகியோரின் உருவச் சிலைகளும் இடம் பெற்றுள்ளன.



தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சமணக் கோவில்கள்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள குகைகளின் உள்ளே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் துறவிகளின் கற்படுக்கைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா லத்தேரியிலுள்ள பைரவ மலையில் இப்படுக்கைகள் காணக்கிடைக்கின்றன. மூன்று குகைகளில் இரண்டில் மட்டுமே கற்படுக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் நான்கு படுக்கைகளும் மற்றொன்றில் ஒரு படுக்கையும் உள்ளன. ஏனைய பகுதிகளில் காணப்படும் கற்படுக்கைகளில் உள்ள தலையணைப் பகுதி இங்குள்ள கற்படுக்கைகளில் காணப்படவில்லை .

திருமலை

திருமலை சமணக் கோவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரின் அருகே அமைந்துள்ள ஒரு குகை வளாகத்தில் அமைந்துள்ளன. கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்வளாகத்தில் மூன்று சமணக் குகைகளும், இரண்டு சமணக் கோவில்களும், 22வது தீர்த்தங்கரரான நேமிநாதருடைய 16 மீட்டர் உயரமுடைய சிலையும் உள்ளன. நேமிநாதரின் இச்சிலையே தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிகவும் உயரமானதாகக் கருதப்படுகின்றது.

மதுரை

மதுரையிலும் அதைச் சுற்றிலும் 26 குகைகளும் 200 சமண கற்படுக்கைகளும், 60 கல்வெட்டுகளும் 100க்கும் மேற்பட்ட சிலைகளும் உள்ளன. மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது கீழக் குயில்குடி கிராமமாகும். இங்குள்ள குன்றுகள் மதுரை நகருக்கு மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. இங்குள்ள சிற்பங்கள் கி.பி. 860 முதல் 900 வரை ஆட்சிபுரிந்த பாண்டிய அரசன் பராந்தக வீரநாராயண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவையாகும். இங்கு எட்டு சிற்பங்கள் உள்ளன. ரிஷபநாதர் அல்லது ஆதிநாதர், மகாவீரர், பார்சவநாதர், பாகுபலி ஆகியோரின் சிற்பங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.



கல்விக்குச் செய்த பங்களிப்பு

சமண மடாலயங்களும் கோவில்களும் கல்வி கற்றுக்கொடுக்கும் மையங்களாகவும் சேவை செய்துள்ளன. இந்நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் கல்வி கற்றுத்தரப்பட்டது. சமணர்கள் தங்கள் கோட்பாடுகளைப்பரப்புரை செய்ததோடு, வெகு மக்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதில் தாங்கள் ஆற்றல்மிக்கத் தொடர்புச் சாதனங்கள் என்பதையும் நிரூபணம் செய்தனர். நாம் முன்னரே குறிப்பிட்டுள்ள பைரவமலை என்பது குக்கரப் பள்ளி என்னும் சிறு கிராமத்தின் அருகே அமைந்துள்ளது. 'பள்ளி' என்பது சமணர்களின் கல்வி மையங்களாகும். தமிழ்நாட்டில் 'பள்ளி' எனும் சொல்லை தங்கள் ஊர்ப்பெயர்களில் பின் ஒட்டாகக் கொண்ட கிராமங்களைப் பல பகுதிகளில் சாதாரணமாகக் காணமுடியும்.

கல்வி நிலையங்கள் அவற்றோடு இணைக்கப்பட்ட நூலகங்களைக் கொண்டிருந்தன. சமணத்தைப் போதித்தவர்களால் சமண மதத்தின் முக்கியக் கூறுகளை வலியுறுத்தி பற்பல நூல்கள் எழுதப்பட்டன. பெண்களும் துறவறம் பூண அனுமதிக்கப்பட்டதானது பெண்களிடையே கல்வியைக் கொண்டுசெல்வதற்கு ஊக்கமளித்தது.

Tags : Term 3 Unit 3 | History | 7th Social Science மூன்றாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 3 Unit 3 : Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu : Jainism in Tamil Nadu Term 3 Unit 3 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -3 : தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் : தமிழகத்தில் சமணம் - மூன்றாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -3 : தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்