Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பெரும்பிரிவு: மைசீட்டே (பூஞ்சைகள்)

தாவரவியல் - பெரும்பிரிவு: மைசீட்டே (பூஞ்சைகள்) | 11th Botany : Chapter 1 : Living World

   Posted On :  05.07.2022 02:06 am

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

பெரும்பிரிவு: மைசீட்டே (பூஞ்சைகள்)

இவை ஒரு செல் அல்லது பல செல் அமைப்புடைய (மைசீலியம்), கைட்டினாலான செல் சுவரைக் கொண்ட பச்சையமற்ற, சாற்றுண்ணி அல்லது ஒட்டுண்ணிகளாகும்.

பெரும்பிரிவு: மைசீட்டே (பூஞ்சைகள்)

இவை ஒரு செல் அல்லது பல செல் அமைப்புடைய (மைசீலியம்), கைட்டினாலான செல் சுவரைக் கொண்ட பச்சையமற்ற, சாற்றுண்ணி அல்லது ஒட்டுண்ணிகளாகும். ஸ்லைம் மோல்டுகளைத் தவிர மற்றவை உறிஞ்சுதல் ஊட்டமுறையைக் கொண்டுள்ளன. பாலிலா மற்றும் பாலினப்பெருக்க முறைகளில் இனப்பெருக்கம் நடைபெறுகின்றன.

பிரிவு - I ஜிம்னோமைக்கோட்டா

விழுங்குதல் ஊட்டமுறை காணப்படுகிறது. இக்குழுவைச் சார்ந்த பூஞ்சைகளில் செல்சுவர் காணப்படுவதில்லை. எடுத்துக்காட்டு: டிக்டியோஸ்டீலியம்

பிரிவு – II மாஸ்டிகோமைக்கோட்டா

கசையிழைகளைக் கொண்ட செல்கள் (கேமீட் / இயங்குவித்து) காணப்படுகின்றன. உறிஞ்சுதல் வகை ஊட்டமுறை, பல்லுட்கரு கொண்ட மைசீலியம் போன்றவை இவற்றின் பண்புகளாகும்.

எடுத்துக்காட்டு: அல்புகோ

பிரிவு – III ஏமாஸ்டிகோமைக்கோட்டா

ஒரு செல் மற்றும் பல செல் அமைப்புடைய பூஞ்சைகளைக் கொண்டுள்ளன. தடுப்புச்சுவர் கொண்ட மைசீலியம் காணப்படுகிறது. மொட்டுவிடுதல், துண்டாதல், வித்தகவித்துகள், கொனிடியங்கள் மூலம் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகிறது. கருமுட்டையில் குன்றல் பகுப்பு நடைபெறுகிறது. எடுத்துக்காட்டு: பெசைசா.

அண்மைக்காலத்தில் மூலக்கூறு நுட்பத்தின் அடிப்படையில் மிக்சோமைசீட்ஸ், ஊமைசீட்ஸ் போன்றவை மறுவகைப்பாடு செய்யப்பட்டு, குரோமிஸ்டாவின் கீழ்ச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஊமைசீட்ஸ், சைகோமைசீட்ஸ், ஆஸ்கோமைசீட்ஸ் பெசீடியோமைசீட்ஸ் மற்றும் வடிவ வகுப்பு டியூட்ரோமைசீட்ஸ் ஆகியவற்றின் சிறப்புப்பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

ஊமைசீட்ஸ்

பல்உட்கரு மைசீலியம் காணப்படுகிறது. செல்சுவரில் குளுக்கான், செல்லுலோஸ் உள்ளன. இயங்குவித்து வழியாகப் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகிறது. இயங்குவித்துகள் சாட்டை ஒத்த ஒரு கசையிழையையும், குறுநா தகடொத்த ஒரு கசையிழையையும் பெற்றுள்ளன. முட்டை கருவுறுதல் முறையில் பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது. (எடுத்துக்காட்டு: அல்புகோ).


சைகோமைசீட்ஸ்

• பெரும்பாலான சிற்றினங்கள் மட்குண்ணிகளாக மண்ணில் உள்ள அழுகிய தாவர, விலங்கின உடல்களின் மீது வாழ்கின்றன. சில ஒட்டுண்ணி வகையைச் சார்ந்தவை. (வீட்டு ஈக்களில் வாழும் எண்டமஃப்தோரா).

• ரொட்டி மீது வளரக்கூடியவை (மியூக்கர், ரைசோபஸ்), சாணத்தில் வாழ்பவை எடுத்துக்காட்டு: பைலோபோலஸ் இந்தத் தொகுப்பைச் சார்ந்தவைகளாகும் (படம் 1.20).

• மைசீலியம் கிளைத்து பல்உட்கரு நிலையைப் பெற்றுள்ளது

• பாலிலா இனப்பெருக்கம் வித்தகங்களில் வித்துகளைத் தோற்றுவிப்பதன் மூலம் நடைபெறுகிறது.

• பாலினப்பெருக்கத்தின்போது கேமீட்டகங்கள் இணைந்து தடித்த சுவருடைய உறக்ககருமுட்டை தோற்றுவிக்கின்றன. இவை நீண்ட காலம் ஒய்வு நிலையில் இருந்து குன்றல் பகுப்பிற்குப் பிறகு வித்துகளைத் தோற்றுவிக்கின்றன.



ஆஸ்கோமைசீட்ஸ்

• ஆஸ்கோமைசீட்ஸ் என்பவை ஈஸ்ட்கள், மாவொத்தப் பூசணங்கள், கிண்ணப்பூஞ்சைகள், மோரல்கள் போன்றவைகளைக் கொண்ட தொகுப்பாகும் (படம் 1.21).

• பெரும்பாலான சிற்றினங்கள் நிலத்தில் வாழ்பவையாக இருப்பினும் சில நன்னீர் மற்றும் கடல் நீரிலும் வாழ்கின்றன.


• மைசீலியம் கிளைத்து, நன்கு வளர்ச்சியடைந்து எளிய தடுப்புச்சுவரைப் பெற்றுள்ளது.

• பெரும்பாலானவை சாற்றுண்ணிகளாகவும், சில ஒட்டுண்ணிகளாகவும் அறியப்படுகின்றன (எடுத்துக்காட்டு : மாவொத்த பூசணங்கள் - எரிசைஃபி).

• பாலிலா இனப்பெருக்கம் பிளவுறுதல், மொட்டுவிடுதல், ஆய்டிய வித்துகள், கொனிடியங்கள், கிளாமிடவித்துகள் வழி நடைபெறுகிறது.

• இரண்டு ஒத்த உட்கருக்கள் இணைவதன் வழி பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது.

• சைட்டோபிளாச இணைவைத் தொடர்ந்து உட்கரு இணைவு உடனே நடைபெறுவதில்லை. பதிலாக இரட்டை உட்கருநிலையிலேயே நீண்ட காலம் ஹைஃபாக்கள் காணப்படுகின்றன.

• ஆஸ்கஸ் உருவாக்கச் சிறப்பு ஹைஃபாக்கள் தோன்றுகின்றன.

• ஆஸ்கஸ் உருவாக்க ஹைஃபாக்களின் நுனி பின்புறமாக வளைந்து கொக்கி போன்ற அமைப்புடைய செல்லினைத் தோற்றுவிக்கிறது. இதற்குக் கொக்கி செல் என்று பெயர். நுனி அடி அமைசெல்லில் உள்ள இரண்டு உட்கருக்கள் ஒன்றாக இணைந்து இரட்டைமடியுட்கரு உருவாகிறது. இந்தச் செல் இளம் ஆஸ்கஸாக உருவாகிறது.

• இரட்டைமடிய உட்கரு குன்றல் பகுப்படைதலுக்குப் பிறகு நான்கு ஒற்றைமடிய உட்கருக்களைத் தருகிறது. இவை மேலும் குன்றலில்லா பகுப்பிற்குப் பின் எட்டு உட்கருக்களைத் தருகிறது. இவை ஒருங்கிணைந்து எட்டு ஆஸ்கோ வித்துகளைத் தருகின்றன.

• ஆஸ்கோவித்துக்கள் ஆஸ்கஸ் எனும் பை போன்ற அமைப்பினுள் காணப்படுவதால் இந்தக் குழுமப் பூஞ்சைகள் 'பை பூஞ்சைகள்’ எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

• ஆஸ்கஸ்களை மலட்டு ஹைஃபாக்கள் சூழ்ந்து ஆஸ்கோகனியுருப்பு உருவாகிறது.

• நான்கு வகையான ஆஸ்கோகனியுருப்புகள் உள்ளன. அவை கிளிஸ்டோதீசியம் (முழுமையாக மூடியது), பெரிதீசியம் (குடுவை வடிவம் ஆஸ்டியோல் எனும் துளையுடன்,) அப்போதீசியம் (கோப்பை வடிவம் திறந்த வகை), சூடோதீசியம் (பொய் கனி உடலம்) ஆகும்.


பசிடியோமைசீட்ஸ்

இதில் ஊதல் காளான் (Puff ball), தவளை இருக்கை பூஞ்சை (Toad Stool), பறவைகூடு பூஞ்சை (Birds nest fungus), அடைப்புக்குறி பூஞ்சை (Bracket fungus), துர்நாற்றக் கொம்புப் பூஞ்சைகள் (Stink horns), துரு (Rust) மற்றும் கருப்பூட்டை (Smut) பூஞ்சைகள் இப்பிரிவைச் சார்ந்தவை.

• இவ்வகுப்பு பூஞ்சைகள் சாற்றுண்ணிகளாகவோ, ஒட்டுண்ணிகளாகவோ நிலத்தில் வாழ்கின்றன (படம் 1.22).


• நன்கு வளர்ச்சியடைந்த, மத்தளத் துளைத் தடுப்பு சுவருடைய மைசீலியம் காணப்படுகிறது. மூன்று வகையான மைசீலியங்கள் உள்ளன அவை முதல் நிலை (ஒரு உட்கரு நிலை), இரண்டாம் நிலை (இரட்டை உட்கரு நிலை), மூன்றாம் நிலை என்று அறியப்படுகிறது.

• இரட்டை உட்கரு நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பிடிப்பு இணைப்பு தோற்றுவிக்கப்படுகிறது.

• பாலிலா இனப்பெருக்கம் கொனிடியங்கள், ஆய்டிய வித்துகள், மொட்டுவிடுதல் வழி நடைபெறுகிறது.

• பாலினப்பெருக்கம் நடைபெறுகிறது, ஆயினும் பாலுறுப்புகள் காணப்படுவதில்லை. உடலசெல் இணைவு அல்லது ஸ்பெர்மேஷிய இணைவு வழி சைட்டோபிளாச இணைவு நடைபெறுகிறது. உட்கரு இணைவு தாமதமடைந்து நீண்ட இரட்டைஉட்கரு நிலையில் ஹைஃபாக்கள் உள்ளன. பசிடியத்தில் உட்கரு இணைவு நடைபெற்று உடனடியாகக் குன்றல் பகுப்படைதல் நடைபெறுகிறது.

இவ்வாறு உருவாகும் நான்கு பசிடிய வித்துகள் பசிடியத்தின் வெளிப்புறத்தில் சிறுகாம்பு எனும் அமைப்பின் மீது காணப்படுகின்றன. குண்டாந்தடி வடிவ ஒவ்வொரு பசிடியமும் நான்கு பசிடியோவித்துகளைப் பெற்றுள்ளன. இவை பிரபலமாக 'கிளப் பூஞ்சைகள்’ என்று அறியப்படுகின்றன. இதன் கனியுறுப்பு பசிடியகனியுறுப்பு எனவும் அழைக்கப்படுகிறது.


டியூட்டிரோமைசீட்ஸ் அல்லது முழுமைப்பெறா பூஞ்சைகள்

இவ்வகை பூஞ்சைகளில் பாலினப்பெருக்கம் காணப்படுவதில்லை. எனவே இவை முழுமைபெறாப் பூஞ்சைகள் (Fungi imperfecti) எனவும் அழைக்கப்படுகின்றன. எண்ணற்ற சிற்றினங்கள் மண்ணில் சாற்றுண்ணிகளாகவும் பல தாவர மற்றும் விலங்குகளில் ஒட்டுண்ணிகளாகவும் வாழ்கின்றன. கொனிடியங்கள், கிளாமிட வித்துகள், மொட்டுவிடுதல், ஆய்டியவித்துகள் போன்றவைகளைத் தோற்றுவித்துப் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன. கொனிடியங்கள் சிறப்பு அமைப்புகளான பிக்னிடியம், கொத்துக்கனியுறுப்பு (Acervulus), வித்துத்தண்டு (Sporodochium), கொனிடிய தாங்கித்தூண் (Synnema) போன்ற அமைப்புகளில் தோற்றுவிக்கப் படுகின்றன (படம் 1.23) இப்பூஞ்சைகளில் பாலிணையொத்தத்தன்மை சுழற்சி (Parasexual cycle) நடைபெறுகிறது. இது மரபணு சார்ந்த வேறுபாடுகளைக் கொண்டுவருகிறது.

 

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 1 : Living World : Kingdom : Myceteae (Fungi) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம் : பெரும்பிரிவு: மைசீட்டே (பூஞ்சைகள்) - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்