Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | சட்டம் இயற்றும் நடைமுறைகள்

இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - சட்டம் இயற்றும் நடைமுறைகள் | 12th Political Science : Chapter 2 : Legislature

   Posted On :  31.03.2022 10:59 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம்

சட்டம் இயற்றும் நடைமுறைகள்

இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் நடைமுறைகள் அதன் மக்களாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சட்டம் இயற்றும் நடைமுறைகள்

இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் நடைமுறைகள் அதன் மக்களாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளின் பங்கு மிக இன்றியமையாததாக அமைகிறது. மக்களாட்சி அமைப்பினை முறைப்படுத்துவதில், ஒரு சட்ட முன்வரைவு மற்றும் அதன் மீது தங்கள் கருத்துகளை எதிரொலிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் மிக மிக முக்கிய பங்களிக்கின்றன. மாநிலங்கள் மற்றும் மக்களின் நலனை பேணும் பொருட்டு சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முறைப்படுத்தி வழிகாட்டும் சக்தியாக சட்டங்கள் விளங்குகின்றன. பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தில் "சட்ட முன்வரைவாக" (சட்ட முன்வரைவு) சட்டங்கள் முன்மொழியப்படுகின்றன.


சட்ட முன்வரைவை அரசமைப்பிற்கு உட்பட்டு முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு முழுமையான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும். அந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு சட்டமாக இயற்றப்படும். அரசமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில் புதிய சட்டங்களை இயற்றுவதும் நடைமுறையிலுள்ள சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருவதும் நாடாளுமன்றத்தின் தலையாய கடமையாகும். இந்திய நாடாளுமன்றம் இருவகையான முன்வரைவுகளை நிறைவேற்றுகிறது அவை :

1. நிதி முன்வரைவு 

2. நிதிசாரா முன்வரைவு அல்லது சாதாரண அல்லது பொது முன்வரைவு

ஒரு சாதாரண சட்ட முன்வரைவு ஒரு சட்டமாக இயற்றப்படுவதற்கு முன் பல்வேறு நிலைகளை கடந்து வர வேண்டும். சாதாரண முன்வரைவுகளை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை இரு வேறு பகுப்புகளாக அரசமைப்பு வகுத்துள்ளது.

இவைகள் பின்வருமாறு : ஒரு சாதாரண சட்ட முன்வரைவு பின்வரும் நிலைகளைக் கடந்து இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டு ஒப்புதலைப் பெற்றிருக்கவேண்டும்.

1. "முதல் நிலையில் சட்ட முன்வரைவானது ஏதாவது ஒரு அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அங்கு சட்ட முன்வரைவு வாசிக்கப்படுகிறது. பெரும்பாலான முன்வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களால் அறிமுகப்படுத்தப்படும். அந்த முன்வரைவு குறிப்பிட்ட தொழில் துறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுனர்களால் முன்வரைவு செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெறவேண்டும். எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் "தனி நபர் முன்வரைவை" அறிமுகப்படுத்தலாம்.அவ்வாறு அறிமுகப்படுத்த மக்களவை சபாநாயகருக்கோ அல்லது மாநிலங்களவை தலைவருக்கோ ஒரு மாதம் முன்பே தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு தனிநபர் முன்வரைவைசமர்ப்பிக்கும் நாள் குறிக்கப்பட்டு நாடாளுமன்ற அவையில் அது அறிமுகப்படுத்தப்படும். பொதுவாக வரைவு நிலையிலுள்ள முன்வரைவுகளின் மீது விவாதம் எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை ஏனென்றால் அது ஒரு அலுவல் சார்ந்த நடவடிக்கையாகும்.

2. முன்வரைவு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு இந்திய அரசிதழில் பிரசுரிக்கப்படும். சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் முதல் வாசிப்புக்கு முன்னரே சில முன்வரைவுகளை அரசிதழில் வெளியிட அனுமதிக்கலாம். அப்போது அந்த முன்வரைவை சமர்ப்பிப்பதற்கு எந்த தீர்மானமும் தேவையில்லை.

3. முன்வரைவின் முதல் வாசிப்பு நடைபெற்ற இரண்டு நாள் கால இடைவேளைக்கு பிறகு இரண்டாவது வாசிப்பு நடைபெறும். அந்த நிலையில் கீழ்கண்ட நான்கு நடைமுறைகளில் ஏதாவது ஒன்று பின்பற்றப்படும்.

அந்த முன்வரைவு மன்றத்தின் பரிசீலனைக்காக உடனடியாக எடுத்துக்கொள்ளப்படலாம்.

அது நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படலாம்.

அது ஈரவைகளும் இணைந்த தேர்வுக்குழுவிற்கு வைக்கப்படலாம் அனுப்பி அல்லது

பொதுமக்கள் கருத்துகளை அறிந்து கொள்ளுவதற்காக சுற்றுக்கு விடப்படலாம். முன்வரைவுகளை பரிசீலனைக்கு நேரடியாக எடுத்துக்கொள்ளுவது மிக அரிதாகவே நிகழும்

முன்வரைவு சுற்றுக்கு விடப்பட்டால் (4வது வழிமுறைப்படி) அவையின் சம்பந்தப்பட்ட செயலர் உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் மாநில அரசிதழ்களில் வெளியிடச்சொல்லி மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்ளுவார். அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்கள் உறுப்பினர்களிடையே சுற்றுக்கு விடப்படும்.


குழு நிலை

முன்வரைவு தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டால், அவையின் சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் அந்தக் குழுவின் ஒரு உறுப்பினரையும் மற்றும் தலைவரையும் நியமிப்பார். அக்குழு அந்த முன்வரைவை பரிசீலித்து அவைக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

செயல்பாடு - செயல்வழிப்படம் ஒவ்வொரு சட்ட முன்வரைவும் கீழ்கண்ட நிலைகளை கடக்க வேண்டும்.

முதல் வாசிப்பு

இரண்டாம் வாசிப்பு

குழுநிலை

அறிக்கை நிலை

மூன்றாவது வாசிப்பு 



அறிக்கை நிலை

அறிக்கை நிலை என்பது மிக முக்கியமான ஒரு நிலையாகும். அதில்தான், அந்த முன்வரைவின் உட்கூறுகள் ஒவ்வொன்றும் விவாதத்துக்கு உட்படுத்தப்படும். இந்த நிலையில் அந்த அறிக்கை அசல் முன்வரைவு மற்றும் தேர்வுக்கமிட்டி அறிக்கையுடன் இணைத்து சுற்றுக்கு விடப்படும். அறிக்கை நிலை என்பது அந்த முன்வரைவுக்கு இறுதி வடிவம் கொடுப்பது. பிறகு அந்த முன்வரைவு மூன்றாவது வாசிப்புக்கு சமர்ப்பிக்கப்படும். முன்வரைவு பெரும்பான்மை வாக்குகள் பெற்று நிறைவேற்றப்படும். மூன்றாவது வாசிப்பு என்பது நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் பெறுவதற்கானதாகும்.

மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு ஏதாவது ஒரு அவையில் அந்த முன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த அவைக்கு அது மாற்றப்பட்டு அங்கு மேற்கண்ட அனைத்து நிலைகளையும் கடந்து செல்லும். அடுத்த அவை அந்த முன்வரைவை அப்படியே மாற்றமின்றி ஏற்றுக்கொள்ளலாம். அனைத்து நிலைகளையும் கடந்த நிலையில் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அது அனுப்பி வைக்கப்படும்.

அந்த முன்வரைவு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகும் அடுத்த அவையில் அது நிராகரிக்கப்படலாம். மாறாக முதல் அவையினால் ஏற்றுக்கொள்ளப்படாத மாற்றங்களை அறிமுகம் செய்யலாம் அல்லது ஆறு மாத காலத்திற்கு திருப்பி அனுப்பாமல் நிறுத்தி வைத்துக்கொள்ளலாம். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஈரவைகளுக்குமிடையே அரசியல் சாசனம் முடக்கப்படலாம். அப்போது சபாநாயகர் அல்லது அவர் இல்லாத காலங்களில் துணை சபாநாயகர் ஈரவைகளின் கூட்டு கூட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்துவார். இந்த முடக்கம் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். முன்வரைவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தால் அது சட்டமாக்கப்பட்டுவிடும். ஆனால் குடியரசுத்தலைவர் அதை மறு பரிசீலனைக்காக திருப்பி அனுப்பி வைக்கலாம்.

அந்த முன்வரைவு மாற்றம் செய்யப்படாமல் அல்லது மாற்றம் செய்யப்பட்டு திரும்பவும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுமேயானால் குடியரசுத்தலைவர் அவரது ஒப்புதலை அளித்தே ஆக வேண்டும். இவ்வாறான சிக்கல் நிறைந்த காலம் அதிகம் பிடிக்கும் வழிமுறைகள், அவசர நிலையிலும் குறைபாடுகளுடனும், சட்டம் இயற்றப்படுவதை தடுக்கும் நோக்கத்தோடு பின்பற்றப்படுகிறது.


தனிநபர் சட்ட முன்வரைவு

அமைச்சர் அல்லாத உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் சட்ட முன்வரைவு தனிநபர் முன்வரைவு என்று அழைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சிகளைச் சேர்ந்த எவரும் தனிநபர் சட்ட முன்வரைவு கொண்டு வரலாம். தனிநபர் சட்ட முன்வரைவு என்பது அமைச்சரவையிலோ நிர்வாகத்திலோ உறுப்பினராக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்மொழியப்படுவது ஆகும். தனிநபர் சட்ட முன்வரைவு மீதான விவாதம் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.

இந்த சட்ட முன்வரைவு கொண்டு வர ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்அறிவிப்பு தர வேண்டும். தனிநபர் முன்வரைவுகள் நிராகரிக்கப்பட்டாலும் அது ஆட்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதுவரை நாடாளுமன்றத்தில் 14 தனிநபர் சட்ட முன்வரைவு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. கடைசியாக , தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1970. இவ்வாறு கொண்டு வரப்படும் தனிநபர் முன்வரைவுகளில் பெரும்பாலானவை வாசிக்கப்படுவதோ, விவாதிக்கப்படுவதோ, நிராகரிக்கப்படுவதோ கூட கிடையாது. அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கோரும் முன்வரைவுகள் கூட தனிநபர் முன்வரைவுகளாக ஏற்கபடலாம். ஆனால் நிதி முன்வரைவுகளை தனிநபர் சட்ட முன்வரைவாக கொண்டு வர முடியாது.


மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு 2014 

மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு திருச்சி சிவா அவர்களால் கொண்டு வரப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு ஆகும். இந்தியாவில் மூன்றாம் பாலின மக்கள் சந்தித்து வரும் புறக்கணிப்புகளுக்கு முடிவுகட்ட இம்முன்வரைவு கோருகிறது.



Tags : India Legislature | Political Science இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 2 : Legislature : Law Making Process India Legislature | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம் : சட்டம் இயற்றும் நடைமுறைகள் - இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : சட்டமன்றம்