Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பன்னாட்டு சங்கம்

ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு - பன்னாட்டு சங்கம் | 12th History : Chapter 13 : Imperialism and its Onslaught

   Posted On :  11.07.2022 07:56 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

பன்னாட்டு சங்கம்

அமெரிக்க குடியரசுத்தலைவர் உட்ரோ வில்சனின் சிந்தனையில் உதித்ததே பன்னாட்டு சங்கம் ஆகும்.

பன்னாட்டு சங்கம்

அமெரிக்க குடியரசுத்தலைவர் உட்ரோ வில்சனின் சிந்தனையில் உதித்ததே பன்னாட்டு சங்கம் ஆகும். வில்சன் உலக நாடுகள் யாவும் கூடி ஒத்துழைப்பை நல்கி உலக அமைதியை காக்க முற்படுவதற்கான தளம் ஒன்று இருப்பதன் அவசியத்தையுணர்ந்து அதனை ஏற்படுத்த விரும்பினார். பாரிஸ் அமைதி மாநாட்டின் போது முதல் உலகப்போர்நிறுத்த உடன்படிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கி சங்கம் ஏற்படுத்துவதற்குரிய பொது ஆவணம் (Covenant) உருவாக்கப்பட்டது. அவர் ஜெர்மனியின் தோல்வியைத் தொடர்ந்து இராணுவவாதம் மறுக்கப்படவும், அதையடுத்து உறவுகளை சீரற்ற அதிகார சமநிலைக்குத் தள்ளாமல் சுமுகமாகக் கொண்டு செல்லும் வகையில் உறுப்பு நாடுகளின் அமைப்பு உருவாக்கப்படவும் வேண்டும் என நினைத்தார். அதனால் வில்சன் தனிப்பட்ட ஆர்வம் கொண்டு இச்செயல் நடந்தேறுவதைக் காண முற்பட்டார்.


அமைப்பு மற்றும் அங்கம்

இவ்வமைப்பிற்கான அரசியல் சாசனத்தை ஏற்படுத்தும்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் சிந்தனைகளே மேலோங்கி நின்றன. சங்கம் ஐந்து உறுப்புகளைக் கொண்டிருந்தது. அவை பொதுச்சபை, குழு, செயலகம், நிரந்தர நீதிமன்றம் மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ஆகியவைகளாகும். ஒவ்வொரு உறுப்பு நாடும் அவையில் பிரதிநிதித்துவம் கொண்டிருந்தன. அவையின் உறுப்பினர்கள் பொதுக்கொள்கைகள் குறித்து விவாதித்து முடிவுகளை ஒருமனதாக எடுக்க முற்பட்டனர். குழுவே சங்கத்தின் நடைமுறைப்படுத்தும் (Executive) உறுப்பாக விளங்கியது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவையே குழுவின் நிரந்தர உறுப்பினர்களாக ஆரம்பத்தில் பிரகடனப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு மட்டுமே என்ற நிலையில், அனைத்து முடிவுகளும் ஒரு மனதாக எடுக்கப்பட வேண்டும் என்பதால், நடைமுறையில் சிறுதேசங்களும் தடுப்பதிகாரம் (Veto power) கொண்டிருந்தன.

செயலகம்

பன்னாட்டு சங்க செயலகம் ஜெனீவாவில் அமைக்கப்பெற்று அதன் முதல் பொதுச்செயலர் பதவியை பிரிட்டனின் சர் எரிக் ட்ரம்மோன்ட் ஏற்றுக்கொண்டார். தி ஹேக் நகரில் பன்னாட்டு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ஒரு செயலகத்தையும், ஒரு பொது மாநாட்டையும் உள்ளடக்கியதாக இருந்ததோடு, ஒவ்வொரு நாட்டிற்கும் நான்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்தது.

சங்கத்தின் குறிக்கோள்கள்

பன்னாட்டு சங்கத்தின் இருமுனை குறிக்கோள் என்பது போரைத் தவிர்ப்பதும், உலக அமைதியை நிலைநிறுத்தி பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதுமாகும். சங்கம் எந்த ஒரு சிக்கலையும் பெரிதாக்கிவிடாமல் ஆரம்பகட்டத்திலேயே சமரசப்படுத்தியும், மத்தியஸ்தராக செயல்பட்டும் தீர்க்க முனைந்தது. மத்தியஸ்தத்தை மீறி போர் ஏற்பட்டால் போர்தொடுப்போர் மீது உறுப்பு நாடுகள் முதலில் பொருளாதாரத் தடைகளை விதித்தும், பின் இராணுவத்தடையை விதித்தும் செயலாற்ற வேண்டும் என கொள்ளப்பட்டது. இக்குறிக்கோளை எட்ட ஆரம்பம் முதற்கொண்டே சிக்கல் ஏற்படக் காரணமாக கூறப்படுவது மூன்றுப் பெரும் சக்திகளான அமெரிக்க ஐக்கிய நாடு (உறுப்பினராகமல் இருந்தது), ஜெர்மனி (தோற்கடிக்கப்பட்ட நாடு) மற்றும் ரஷ்யாவின் பங்கெடுப்பு இல்லாமல் போனதேயாகும். ஜெர்மனி 1926லும் ரஷ்யா 1934லும் சங்கத்தில் இணைந்தன. ஆனால் ஜெர்மனி 1933இல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட, ரஷ்யாவோ 1939இல் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.

சங்கத்தின் செயல்பாடுகள்

சங்கம் 1920 முதல் 1925 வரையான காலத்தில் பல சிக்கல்களைத் தீர்த்துவைக்க அழைக்கப்பட்டிருந்தாலும் குறிப்பாக மூன்று பிரச்சினைகளை அது வெற்றிகரமாக அணுகியிருந்தது. ஆலந்து தீவுகளின் இறையாண்மை மீது ஸ்வீடனும், பின்லாந்தும் 1920இல் உரிமை கோரி சர்ச்சையைக் கிளப்பின. சங்கம் அத்தீவு பின்லாந்தையே சென்று சேர நெறி ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு மேல்புற சைலேசியாவை முன்னிறுத்தி போலந்தும், ஜெர்மனியும் சர்ச்சையைக் கிளப்பிய போது சங்கம் அதில் தலையிட்டு வெற்றிகரமாகத் தீர்த்துவைத்தது. மூன்றாவது சிக்கல் 1925 இல் கிரீசுக்கும், பல்கேரியாவிற்கும் இடையே நடந்ததாகும். கிரீஸ் பல்கேரியா மீது படையெடுத்தபோது சங்கம் போர்நிறுத்த ஆணையை வெளியிட்டு ஆக்கிரமிப்பை நிறுத்தியது. விசாரணை மேற்கொண்ட பின் கிரீசை நஷ்டஈடு வழங்க ஆணையிட்டது.

சர்வதேச அபினி பரிமாற்றத்தைக் குறைத்ததிலும், ஏழ்மையிலிருந்த நாடுகளில் ஆபத்தான நோய்கள் பரவுதலைத் தடுத்ததிலும் சிறப்பான பங்காற்றி சங்கம் தன் இருப்பை நியாயப்படுத்திக் காட்டியது. அதன் முகமைகள் தொழிலாளர் குறித்தும், வணிக சூழல் குறித்தும் பெருமளவில் தரவுகளை உலகம் முழுவதிலுமிருந்தும் சேமித்துவைத்தன. சர்ச்சைக்குரியப் பகுதிகளில் அது பொதுவாக்கெடுப்பு நடத்தியதோடு அகதிகளுக்கு வாழ்விடம் கிடைக்கத் துணைபுரிந்தது. பன்னாட்டு சட்டங்கள் இயற்றப்பட துவக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அத்துமீறல் சம்பவங்கள்

ஐரோப்பிய சக்திகள் எதிர்கொண்ட முக்கியமானப் பிரச்சினைகளில் ஒன்று ஆயுதவொழிப்பை சென்றடைவது பற்றியதாகும். சங்கத்தின் குழு 1925ஆம் ஆண்டு ஓர் ஆணையத்தை நியமித்து ஆயுதவொழிப்பு மாநாட்டை நடத்தப் பணித்தது. ஆனால் அவ்வாறான மாநாடு 1932ஆம் ஆண்டுதான் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் பிரான்சுக்கு சமமாக ஆயுதம் வைத்துக்கொள்ளும் அந்தஸ்தை ஜெர்மனி கோரியது நிராகரிக்கப்பட்டது. இதனால் அம்மாநாட்டிலிருந்தும், சங்கத்திலிருந்தும் ஹிட்லர் ஜெர்மனியை வெளிக்கொணர்ந்தார்.

வில்னாவை 1920இல் போலந்து ஆக்கிரமித்தபோது சங்கத்தால் ஏதும் செய்யமுடியாமல் போயிற்று. இத்தாலிக்கும், கிரீசுக்கும் 1923இல் போர் அபாயம் மூண்டபோது, இத்தாலியர்கள் சங்கத்தின் மத்தியஸ்தத்திற்கு கட்டுப்பட மறுத்தனர். ஜப்பான் செப்டம்பர் 1931இல் மஞ்சூரியாவை தாக்கியபோது சங்கம் அதற்குக் கண்டனம் தெரிவித்தது. இதனால் ஜெர்மனியின் வழியில் ஜப்பானும் தனது உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்தது. இத்தாலி எத்தியோப்பியாவை தாக்கியபோது சங்கம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தடை நடைமுறைக்கு வந்தபோது அதை எதிர்த்து இத்தாலி 1937இல் இராஜினாமா செய்தது.

இதற்குப்பின் சங்கம்ரைன்லாந்து, ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாகியா, போலந்து போன்ற பகுதிகளில் சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம் எதுவும் செய்ய இயலாமல் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தது. அதன் கடைசி முடிவென்பது பின்லாந்தை ரஷ்யா தாக்கியதற்காக அதனை டிசம்பர் 1939இல் சங்கத்தைவிட்டு வெளியேற்றியதேயாகும். அதன்பின் சபை மீண்டும் கூடாமலேயே 1946 இல் பன்னாட்டு சங்கம் கலைக்கப்பட்டது.

தோல்விக்கான காரணங்கள்

சங்கம் முதல் உலகப்போரில் வென்றோருக்கான மன்றம் போன்றே தோற்றம் கொண்டிருந்தது. உலகளாவிய உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் அது ஐரோப்பிய இராஜதந்திரத்தின் மையமாகவேத் திகழ்ந்தது.

அரசியல் சர்ச்சைகளில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமனதான முடிவு தேவை எனக் கொள்ளப்பட்டது. அதற்கென்று தனி இராணுவபலம் இல்லாதிருந்ததால் அதனுடைய முடிவுகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை .

இவ்வமைதி அமைப்பை நிறுவியோர் தேசியவுணர்வின் வீரியத்தைக் குறைத்து மதிப்பிட்டதாகவேத் தெரிகிறது. கூட்டுப் பாதுகாப்பு எனும் கொள்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பன்னாட்டு சங்கம் ஓர் திறன் குறைந்த அமைப்பை போல் அதிகாரத்தை செயல்படுத்த முடியாமல் இருந்தது. அது முழுக்க உறுப்பு நாடுகளின் நல்லெண்ணத்தையும் நேர்மறை அணுகுமுறையையுமே சார்ந்திருந்தது. சர்வாதிகார தலைவர்களால் ஆளப்பட்ட இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் சங்கத்தின் கட்டளைகளுக்கு இணங்க மறுத்தபோது பிரிட்டனும் பிரான்சும் மட்டுமே சங்கத்தின் முக்கிய சக்திகளாக செயலாற்றும் நிலை ஏற்பட்டது. ஆனால் சங்கம் வில்சனின் சிந்தனையில் உதித்த ஒன்று என்பதால் இவ்விரு நாடுகளுமே ஆர்வத்தோடு அதில் செயலாற்றவில்லை.

Tags : Imperialism and its Onslaught | History ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு.
12th History : Chapter 13 : Imperialism and its Onslaught : League of Nations Imperialism and its Onslaught | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் : பன்னாட்டு சங்கம் - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்