Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்சிலும் நடந்த விடுதலை போராட்டங்கள்

இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு - இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்சிலும் நடந்த விடுதலை போராட்டங்கள் | 12th History : Chapter 14 : Outbreak of World War II and its Impact in Colonies

   Posted On :  12.07.2022 01:05 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 14 : இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்

இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்சிலும் நடந்த விடுதலை போராட்டங்கள்

இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து வந்த மாவோவின் வெற்றி காலனிய நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகள் தோற்கடிக்கப்படகூடியவைதான் என்ற செய்தியை தெளிவுபடுத்தியது.

இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்சிலும் நடந்த விடுதலை போராட்டங்கள்

இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து வந்த மாவோவின் வெற்றி காலனிய நாடுகளில் ஏகாதிபத்திய சக்திகள் தோற்கடிக்கப்படகூடியவைதான் என்ற செய்தியை தெளிவுபடுத்தியது. ஆனால் தென்கிழக்காசியாவில், அதிலும் குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவில் தேசியவாதம் ஆரம்பகட்டத்தில் தேங்கி நின்றதோடு 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை சுயஅரசை நிர்ணயிப்பது குறித்து பெரிய முன்னேற்றம் ஏதும் இருக்கவில்லை. மூன்றரை ஆண்டுகளுக்கு ஜப்பானிய ஆக்கிரமிப்பின் விளைவாக ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் கௌரவத்தை கணிசமாக கீழிறக்கியதோடு ஆக்கிரமிப்புக்குட்பட்ட நாடுகளில் தேசிய இயக்கங்கள் வலுப்பெறவும், சக்தி கொள்ளவும் செய்தன. ஆனால் ஜப்பான் 1945இல் தோற்கடிக்கப்பட்ட பின், மேற்கத்திய சக்திகள் தங்களின் பழைய எல்லைப் பகுதிகளுக்கு திரும்ப முனைந்தன. அவர்கள் மீண்டும் காலனிய ஆட்சியாளர்களாகவே பொறுப்புவகிக்க முயன்றபோது குறுகிய காலத்திலேயே அது உண்மைக்குப் புறம்பானதென தெரியத் துவங்கியது. இதன் விளைவாக டச்சுக்காரர்களும் அமெரிக்கர்களும் உலகப்போருக்குப் பின் எழுந்த பொதுவுடைமை தலைமைத்துவத்திடம் அதிகாரம் சென்றுவிடாத வகையில் நண்பர்களாக தெரிந்த மிதவாத தேசாபிமானிகளிடம் பொறுப்பை ஒப்படைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.


கிழக்கிந்திய தீவுகள் (இந்தோனேஷியா)

1640ஆம் ஆண்டிலிருந்தே ஜாவா, சுமத்ரா ஆகிய பகுதிகளை டச்சுக்காரர்கள் ஆக்கிரமித்து வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் அவர்கள் கிழக்கிந்திய தீவுகளின் வெளிசுற்று தீவுகளையும் ஆக்கிரமிக்கலானார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் போது டச்சுக்காரர்கள் அரசியல் அதிகாரத்தை விரும்பாமல் பொருளாதார கட்டுப்பாட்டை மட்டுமே முதன்மையாக விரும்பினர். அத்தீவுகளில் பெரும்பான்மையான மக்கள் மீன் பிடித்தலையும் விவசாயத்தையுமே தொழிலாகக் கொண்டிருந்தனர். ஐரோப்பியர்களுக்கு சொந்தமான கரும்பு, புகையிலை, தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் பலரும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இத்தோட்டங்களில் செய்யப்பட்டிருந்த அதிக அளவிலான முதலீடுகளும் எண்ணெய் (1900) கண்டுபிடிக்கப்பட்டப்பின் மேற்கொள்ளப்பட்ட பிற முதலீடுகளும், அவை விளைவித்த ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் இப்பகுதியை டச்சுக்காரர்களுக்கு முக்கியமானதாக ஆக்கியது.


கிழக்கு தீவுகளில் தேசியவாத இயக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டை விட மிகவும் தாமதமாக உருவானது. இதற்கு டச்சுக்காரர்கள் மேற்கத்திய கல்வியை காலதாமதமாக அறிமுகப்படுத்தியதே காரணமாகும். பிலிப்பைன்ஸில் யூரோசியன்கள் (ஐரோப்பிய-ஆசிய கலப்பினத்தார்) தங்களை சொந்த மண்ணின் பிரச்சனைகளோடு இனங்கண்டு கொண்டதோடு தேசிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றனர். மாறாக டச்சுக்காரர்கள் இன முன்விரோதமின்றி பூர்வீக குடிகளுடன் திருமண உறவை ஏற்படுத்திக்கொண்டு யூரோசியன்களையும் அவர்களின் சமூகத்திற்குள் அரவணைத்துக் கொண்டார்கள். யூரோசியன்களும் தங்களின் எண்ணங்கள் டச்சுக்காரர்களோடு ஒத்திருப்பதாகவே உணர்ந்தார்கள்.

 

தேசியவாதத்தின் எழுச்சி

கிழக்கிந்திய தீவுகளில் தெளிவான தேசியவாதத்தை வெளிப்படுத்திய முதல் நிகழ்வென்பது 1908ஆம் ஆண்டு உள்ளூர் அரசியல் சங்கமான போய்டி ஓடோமா (உயர் முயற்சி Boedi Oetomo) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்தே துவங்குகிறது. இச்சங்கம் முதல் டச்சு மருத்துவப் பள்ளியின் மாணவர்களால் அவர்களின் மூத்த மாணவரான வஹிதின் சுதுரோஹூசோடோ (Wahidin Sudurohusodo) என்பவரின் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டது. உள்ளூர் அறிஞர் பெருமக்களே நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கான வழிகாட்டும் தலைவர்களாக திகழவேண்டும் என்பதை பறை சாற்றுவதே இச்சங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும். ஜாவாவின் குடிமைப் பணியாளர்களையும் மாணவர்களையும் உள்ளடக்கிய அமைப்பான இது ஒரு கலாச்சார அமைப்பாக மாறியது. ஆனால் சற்று காலத்தில் போய்டி ஓடோமா செயலிழந்த நிலை ஏற்படவே, சரேகத் இஸ்லாம் (Sarekat Islam என்னும் முஸ்லிம் கூட்டியக்கம்) என்ற செல்வாக்குப் பெற்ற அரசியல் சமூக அமைப்பு தோன்றியது.

சீனர்களின் பொருளாதார ஆதிக்கத்தை எதிர்க்கவே சரேகத் இஸ்லாம் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் படிப்படியாக அது ஒரு சோஷலிச மற்றும் தேசியவாத அமைப்பாக உருக்கொண்டது. 1916இல் சுயாட்சிக்கான தீர்மானத்தை அது நிறைவேற்றியது. இரண்டு ஆண்டுகளில் அதன் உறுப்பினர் எண்ணிக்கை 3,50,000 என்ற நிலையிலிருந்து இரண்டரை மில்லியனாக வளர்ந்தது. ரஷ்யப் புரட்சி 1917இல் ஏற்படுத்திய தாக்கத்தில் சரேகத் இஸ்லாம் அமைப்பினுள் இருந்தப் பொதுவுடைமைவாதிகள் அமைப்பை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயன்றார்கள். அம்முயற்சி தோற்றதால் அவர்கள் சரேகத் இஸ்லாமை விட்டு வெளியேறி 1919ஆம் ஆண்டு இந்தோனேஷிய பொதுவுடைமை கட்சியை உருவாக்கினர்.

 

கட்சி அரசியல்

ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் விதமாக அதிகாரப்பரவல் சட்டம் (Decentralisation Law) 1903இல் இயற்றப்பட்டது. அதனடிப்படையில் மாகாண சபைகள் (Provincial Councils) அடுத்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அவ்வரசில் இந்தோனேஷியர்கள் எந்தப் பங்கும் ஆற்றவில்லை. தேசியவாதிகளின் எதிர்ப்பால் டச்சு அரசு வோக்ஸ்ராட் (Volksraad, 1918) என்னும் மக்களின் பாராளுமன்றத்தை வெல்டெவ்ரெடன், படாவியா (ஜகார்தா), ஜாவா ஆகிய இடங்களில் ஏற்படுத்தியது, அவை 1942ஆம் ஆண்டு வரை செயலாற்றின.

1920களின் போது பொதுவுடைமைவாதிகளும் சரேகத் இஸ்லாம் அமைப்பும் தேசிய இயக்கத்தில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற நிலையில் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். தலைமைத்துவத்திற்கான இப்போட்டியில் பொதுவுடைமைவாதிகளே வெற்றிபெற்றனர். அவர்கள் 1926-27ஆம் ஆண்டுகளில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கு ஜாவா மற்றும் சுமத்ராவில் பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. உடனடியாக அடக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதால் பொதுவுடைமைவாதிகளுக்கு தற்காலிகமான ஒரு பின்னடைவாகவே இருந்தது.  ஏறக்குறைய இதன் சமகாலத்தில் சுகர்னோ என்ற இளம் பொறியாளர் இந்தோனேஷிய தேசிய கட்சியை நிறுவினார். நாட்டில் உதித்த இந்த மூன்றாவது அணி, மேற்கத்திய வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த மதச் சார்பற்ற வர்க்கத்தினரால் ஆதரிக்கப்பட்டது. ஆனால் 1931ஆம் ஆண்டு காவல்துறை இதன் தலைமை அலுவலகத்தை சோதனைக்குட்படுத்தியது. சுகர்னோ கைது செய்யப்பட்டு அவரது கட்சியும் கலைக்கப்பட்டது.


 

டச்சு ஒடுக்குமுறையும் ஜப்பானிய ஆக்கிரமிப்பும்

1930களில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை அடுத்து வேலையின்மை, ஊதிய குறைப்பு மற்றும் அதிகரித்த ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் விளைவாக எழுந்த தேசியவாதத்தை தடுக்க அரசாங்கம் அடக்குமுறை மற்றும் பத்திரிகை தணிக்கைக்கு முயன்றது. சுகர்னோவும் பிற தேசியவாத தலைவர்களும் 1942ஆம் ஆண்டு வரை சிறையில் வாடினர். கிழக்கிந்திய தீவுகளில் 1942 மார்ச்சில் டச்சுக்காரர்கள் ஜப்பானியர்களிடம் சரணடைந்தார்கள். ஜப்பானியர்களை எதிர்த்த சிலர் இரகசிய எதிர்ப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்க முற்பட்டார்கள். இதற்கு மாறாக சுகர்னோ, ஹட்டா போன்ற தலைவர்களால் வழிநடத்தப்பட்ட சிலர் விடுதலை அடைய சிறந்த வழி ஜப்பானியர்களை ஆதரிப்பதே என்று கருதினார்கள். இறுதிகட்டப்போரில் ஜப்பானியர்கள் விடுதலை வழங்குவதற்குரிய விதிமுறைகள் குறித்து இந்தோனேஷிய தலைவர்களுடன் பேச முடிவெடுத்தனர்.

 

விடுதலை அடைதல்

ஜப்பானியர்கள் வெளியேற்றப்பட்ட பின், போட்ஸ்டாம் மாநாட்டு முடிவின்படி 1945 செப்டம்பரில் பிரிட்டிஷ் படைகள் கிழக்கிந்திய தீவுகளில் வந்திறங்கின. அவர்கள் பெரும்பாலும் டச்சுக்காரர்களை உள்ளடக்கிய 2,00,000 போர் கைதிகளை விடுவித்தனர். சுகர்னோவின் ஆட்சி நிலவிய ஜாவா, சுமத்ரா நீங்கலாக கிழக்கிந்திய தீவுகளின் பிற பகுதிகளை டச்சுக்காரர்கள் மறு ஆக்கிரமிப்பு செய்தனர். டச்சுக்காரர்கள் சுகர்னோவின் ஆட்சியை அங்கீகரிக்க மறுத்தனர். அவரோ குடியரசுத் தலைவர் பதவியைத் துறக்க முன்வரவில்லை . இதனால் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புப் படைகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டதன் விளைவாக டச்சு - இந்தோனேஷிய ஒப்பந்தம் உருவானது. இதன் விளைவாக, ஜாவா மற்றும் சுமத்ராவை விடுதலை பெற்ற குடியரசாக டச்சுக்காரர்கள் ஏற்றுக்கொண்டதோடு, பிற தீவுகளை கூட்டாட்சி முறையில் இணைத்து இந்தோனேஷிய ஐக்கிய நாடு உருவாக்கப்பட்டது. எனினும் டச்சுக்காரர்கள் இருமுறை இந்தோனேஷியாவின் அமைதியைத் தகர்க்க முயன்றனர். ஆனால் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் வெளிவந்த உலக கருத்தோட்டமும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவும் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் 1949ஆம் ஆண்டின் இறுதியில் இந்தோனேஷியாவிற்கு சாதகமான தீர்வு வழங்கப்பட்டது. தி ஹேக்கில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் விடுதலை பெற்ற இந்தோனேஷியாவின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1949 டிசம்பரில் இந்தோனேஷியா விடுதலை பெற்ற நாடானது.


 

பிலிப்பைன்ஸ்

மன்னர் ஐந்தாம் சார்லஸின் மகனானஸ்பானிய இளவரசர் பிலிப்பின் பெயர் சூட்டப்பட்ட ஏறக்குறைய 7,000 தீவுகளின் கூட்டமே பிலிப்பைன்ஸ் ஆகும். கிழக்கிந்திய தீவுகள் போன்றே பிலிப்பைன்ஸிலும் பதினாறாம் நூற்றாண்டில் இருந்தே ஐரோப்பியரது ஆட்சி நடைபெற்று வந்தது. மிகுவெல் லோப்பஸ் டெ லெகாஸ்பின் (Miguel Lopez de Legazpin) 1565 பிப்ரவரி மாதத்தில் கால்பதித்தது முதற்கொண்டே இங்கு ஸ்பானிய காலனிய ஆட்சி துவங்கிவிட்டது. இதைத் தொடர்ந்து ஸ்பானியர்கள் 300 ஆண்டுகள் ஆட்சி செலுத்தி தங்களின் மொழி, கலாச்சாரம், சமயம் போன்றவற்றை உள்நாட்டு மக்கள் மீது திணித்தனர். தேசியவுணர்வு பிலிப்பைன்ஸ்வாசிகளிடம் பிற பகுதிகளில் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது. கவைட் (Cavite) ஆயுதக்கிடங்கில் (1872 ஜனவரி 20இல்) 200 பிலிப்பினோ துருப்புகள் மற்றும் ஊழியர்கள் நடத்திய கவைட் கிளர்ச்சியை காட்டுமிராண்டித்தனமாகக் கையாண்ட செயலானது தேசியவுணர்வை வளர்த்தெடுக்க பெரிதும் உதவியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் அறிவார்ந்த மக்கள் கைது செய்யப்பட்டு குறுகியகால விசாரணைக்குப் பின்னர் மூன்று குருக்கள் (ஜோஸ் பர்கோஸ், ஜசின்டோ சமோரா மற்றும் மரியானோ கோமஸ் ஆகியோர்) பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டு தியாகிகளானார்கள்.


கியூபா மீதான அமெரிக்காவின் ஆர்வத்தால் எழுந்த அமெரிக்காவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான சர்ச்சை ஸ்பானிய-அமெரிக்கப் போருக்கு வழிவகுத்தது. உள்நாட்டில் அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருந்ததால் கியூபாவிற்கு குறைந்தபட்ச உள்ளாட்சி அதிகாரத்தை வழங்க ஸ்பெயின் ஏற்கனவே முடிவுசெய்திருந்தது. ஆனால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ் கியூபாவில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்பெயினின் ஆயுதப்படைகளை உடனடியாக திரும்பப்பெற வற்புறுத்தியது. மேலும் காங்கிரஸ் ஆயுதப்படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கையை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு படைபலத்தை பிரயோகிக்கவும் தனது நாட்டிற்கு அதிகாரம் வழங்கியிருந்தது. ஸ்பெயின் இழுத்தடித்துக் கொண்டிருந்ததால் 1898 ஏப்ரல் 25இல் அமெரிக்க நாடு போர் அறிவிப்பு செய்தது. தூரத்தில் வீற்றிருக்கும் வலுவான எதிரியான அமெரிக்காவை எதிர்கொள்ள ஸ்பெயின் தனது இராணுவத்தையோ, கடற்படையையோ தயார் நிலையில் வைத்திருக்கவில்லை. ஆகவே அமெரிக்கா எளிமையாக வென்றது. ஸ்பெயின் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் (1898 டிசம்பர் 10இல் கையெழுத்திடப்பட்டது) கியூபா மீது கொண்டிருந்த அனைத்து உரிமைகளையும் விட்டுக்கொடுத்ததோடு குவாமையும், போர்டோரிக்கோவையும் அமெரிக்காவிற்கு தாரைவார்த்தது மேலும் பிலிப்பைன்சின் மீது கொண்டிருந்த இறையாண்மையையும் ஸ்பெயின் விட்டுக்கொடுத்தது.


அகுயினால்டோவும், பிற கவைட் தலைவர்களும் ஸ்பானியப் படைகளை எதிர்த்துப் பல போர்களிலும் சிறப்பான வெற்றிகளை அடைந்து ஸ்பானியர்களை விரட்டியடித்திருந்தனர். அகுயினால்டோ 1898 மே 28இல் 18,000 துருப்புக்களை கொண்ட படை ஒன்றை திரட்டி சிறிய ஸ்பானிய காவற்படையை எதிர்த்து அலபன், இமுஸ், கவைட் போன்ற பகுதிகளில் சண்டையிட்டார் அலபனின் வெற்றிக்குப் பின்னர் முதன்முறையாக கவைட் நூவோவில் (Cavite Nuevo 6T60TOILU தற்கால கவைட் நகரம்) அமைந்த டிட்ரோ கவைட் டெனோ (Teatro Caviteno) என்னும் இடத்தில் 300 கைது செய்யப்பட்ட ஸ்பானிய துருப்புக்களின் முன்பும் பிலிப்பினோ புரட்சியாளர்களின் முன்பும் பிலிப்பைன்சின் கொடியை எமிலியோ அகுயினால்டோ பறக்கவிட்டார். மலோலோஸ் அரசியல் சாசன பிரகடனத்தை அறிவித்து எமிலியோ அகுயினால்டோ புதிய குடியரசின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எமிலியோ அகுயினால்டோ 1901 மார்ச் 23இல் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்படும் வரை முதல் குடியரசு தாக்குப்பிடித்து பின் கலைக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசியவாதிகள் கியூபா மட்டுமே அமெரிக்காவிற்கு சர்ச்சைக்குரிய பகுதி என்ற எண்ணம் கொண்டிருந்தனர். ஆனால் குறுகிய காலத்திலேயே அவர்கள் ஒரு தலைமைக்கு மாற்றாக மற்றொரு தலைமையின் கீழ் தங்கள் தேசம் கொண்டு செல்லப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டார்கள். ஸ்பானிய - அமெரிக்கப் போரால் வெறுப்படைந்திருந்த அவர்கள் கொரில்லா போர் முறையை கைக்கொள்ளலானார்கள். பிலிப்பைன்சின் தேசியவாதிகள் அமெரிக்க அரசிற்கு கொடுத்த எதிர்ப்பிற்கு அந்நாட்டில் போதுமான அளவு ஆதரவுப் பரப்புரையாளர்கள் இருந்தமையால் அவ்வரசு பிலிப்பைன்ஸில் பிரதிநிதித்துவ அமைப்புகளை விரைந்து ஏற்படுத்த முனைந்தது. அமெரிக்க ஆட்சியின் ஆரம்பத்தில் (1902) முதன்மையான காலனிய நிறுவனங்கள் யாவும் தோற்றுவிக்கப்பட்டன: ஆங்கில வழி கல்வி முறை, தேர்வுகள் அடிப்படையில் குடிமைப்பணி, மாகாண நீதிமன்றங்களை உள்ளடக்கிய நீதித்துறையை உருவாக்கல், தேர்தல் மூலம் நகராட்சி மற்றும் மாகாண அரசுகளை நிறுவுதல் இறுதியாக தேசிய அவைக்கு தேர்தல்கள் நடத்தி தேர்ந்தெடுத்தல் போன்றவைகள் அதில் உள்ளடங்கும். 80 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அவைக்கு நடைபெற்ற தேர்தலில் தேசியவாத கட்சியே பெரும்பான்மை பெற்றது.

தேசியவாத கட்சி சுயாட்சியைத் தொடர்ந்து கோரியது. அக்கட்சியின் தலைவரான குவிசோன் கூறுகையில், பிறரின் ஆட்சி சொர்க்கமாகவே இருந்தால் கூட அதைவிட நரகமேயானாலும் எங்களை நாங்களே நிர்வகிக்க விரும்புகிறோம் என்றார். பொருளாதாரப் பெருமந்த காலமான 1930களில் இடதுசாரிகளின் தொடர் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. பர்திதோ கொமுனிஸ்டா ங்க் பிலிப்பினாஸ் (PKP என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் Partido Komunista ng Pilipinas என்னும் இடதுசாரி கட்சி) என்ற 1930களில் உருவாக்கப்பட்ட கட்சியை அமெரிக்க ஐக்கிய நாட்டின் காலனிய அதிகாரிகள் சட்டத்திற்குப் புறம்பானதென்று தடை செய்தார்கள். இருப்பினும் பொதுவுடைமைவாதிகள் அமெரிக்க ஐக்கிய நாட்டை, உள்நாட்டில் சுயாட்சி ஏற்படுத்த இணங்கச் செய்தார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு பத்தாண்டுகளில் அதிகாரத்தை வழங்க 1934ஆம் ஆண்டு இயற்றப்பட்ட டைடிங்ஸ் - மெக்டஃப்பி சட்டம் (Tydings-McDuffie Act என்னும் பிலிப்பைன்ஸ் சுதந்திர சட்டம்) வழியேற்படுத்தியது. இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு பிலிப்பைன்ஸில் தனது இராணுவத்தளத்தை பராமரித்துக் கொள்ளவும், வெளியுறவுக் கொள்கைகளை கட்டுப்படுத்தவும்

பர்திதோ கொமுனிஸ்டா ங்க் பிலிப்பினாஸும் (பிலிப்பைன்ஸ் பொதுவுடைமை கட்சி) ஹக் கிளர்ச்சியும்: அமெரிக்க அரசால் பர்திதோ கொமுனிஸ்டா ங்க் பிலிப்பினாஸ் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என ஆரம்பத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அது சட்டரீதியான அங்கீகாரம் பெற்று ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்த மக்களின் படை எனப்படும் ஹக்பாலாஹப்பின் தலைமைப் பொறுப்பை தக்கவைத்துக் கொண்டது. ஹக்பாலாஹப் ஒரு வலுவான கொரில்லா அமைப்பாக உருவான காலகட்டத்தில் மறுஆக்கிரமிப்பை முடித்து திரும்பிக் கொண்டிருந்த அமெரிக்கப்படைகள் பர்திதோ கொமுனிஸ்டா ங்க் பிலிப்பினாஸின் உறுப்பினர்களையும், ஹக் என்றழைக்கப்பட்ட பொதுவுடைமைவாத விவசாயிகளையும் அவர்கள் போர்க்காலத்தில் தோழர்கள் என கருதியவர்களே தாக்கினார்கள். அரசின் படைகளால் ஹக்குகளின் பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானதால் பர்திதோ கொமுனிஸ்டா ங்க் பிலிப்பினாஸ் கொரில்லா போர் முறையை கையாண்டது. ஆரம்பத்தில் அதை தற்காப்பு அடிப்படையில் மட்டுமே கைக்கொண்டார்கள். ஆனால் 1950 முதல் அக்கட்சி அதிகாரத்தை பெறும் உத்தியாக அதைப் பயன்படுத்திக் கொண்டது. எனினும் 1950களின் மத்தியில் பிலிப்பைன்ஸ் அரசு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதரவைப் பெற்று "ஹக் கிளர்ச்சியை ஒடுக்கியது.


முடியும் என்றிருந்தது. இச்சட்டம் அடுத்த ஆண்டு (1935) பொதுவாக்கெடுப்பின் மூலமாக ஒப்புதலுக்குட்படவும் இருந்தது. குவி சோன் 1935 முதல் 1941 வரை குடியரசு தலைவராக பொறுப்புவகித்தார். பேர்ல் ஹார்பரை தாக்கியவுடன் ஜப்பான் பிலிப்பைன்ஸையும் தாக்கியது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரலாற்றில் பிலிப்பைன்ஸ் மீது ஜப்பான் போர் தொடுத்தமையே மோசமான இராணுவ தோல்வியாக கருதப்படுகிறது. கொல்லப்பட்ட 1,00,000 நபர்களில் 23,000 பேர்கள் அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் என்பதோடு எஞ்சியோர் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆவர்.


ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தவுடன், அமெரிக்க ஐக்கிய நாடு சட்டப்பூர்வமாக தான் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றியது. தேர்தல்கள் ஏப்ரல் 1946இல் நடத்தப்பட்டு 1946 ஜூலை 4இல் பிலிப்பைன்ஸ் விடுதலை பெற்ற நாடானது. பிலிப்பைன்சை விட்டு அகன்றாலும் அமெரிக்க ஐக்கிய நாடு 1946 முதல் 1954 வரையிலான காலத்தில் ஹக்குகளுக்கெதிராக இராணுவப் பயிற்சியும், நிதியுதவியும் நல்கி வந்தது. காலம் முழுவதும் பிலிப்பைன்ஸ் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நம்பிக்கையைப் பெற்ற நட்பு நாடாகவே இருந்துவந்துள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் 1954 ஆம் ஆண்டு உருவான தென் கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பில் (South East Asian Treaty Organisation - SEATO) அங்கம் வகிக்கும் மூன்று ஆசிய நாடுகளில் பிலிப்பைன்சும் ஒன்றாகும்.

Tags : Outbreak of World War II and its Impact in Colonies | History இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு.
12th History : Chapter 14 : Outbreak of World War II and its Impact in Colonies : Liberation Struggles in Indonesia and Philippines Outbreak of World War II and its Impact in Colonies | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 14 : இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் : இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்சிலும் நடந்த விடுதலை போராட்டங்கள் - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 14 : இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்