Posted On :  25.09.2023 07:26 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்

சுதந்திரம்

சுதந்திரத்தின் முக்கியத்துவம், சுதந்திரத்தை வெளிப்படுத்துபவர்களின் அர்த்தத்தையும் பல்வேறு பார்வைகளையும் சுருக்கமாகக் கூறுவதன் மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சுதந்திரம் 

மனிதர்களுடைய வளர்ச்சிக்கும், அரசின் மேம்பாட்டிற்கும் சுதந்திரம் அதிமுக்கியமான அடிப்படைக் கூறாகும். முற்காலத்திலும், இடைக்காலத்திலும், இங்கிலாந்து முடியாட்சி மக்களுக்குத் தேவையான சுதந்திரத்தை ரத்து செய்தது வரலாற்று பதிவாகும். மக்களின் பொறுமையை சோதித்த முழுமையான முடியாட்சி புரட்சியை சந்திக்க நேரிட்டது. இங்கிலாந்து பேரரசர் ஜான் பணிய நேர்ந்ததுடன் குடிமக்களுக்கு சுதந்திரத்தை அளித்து பதவியை விட்டு விலகியதிற்கு பிறகே இந்த புரட்சி ஓய்ந்தது.

டியூடர் மற்றும் ஸ்டூவர்ட் பேரரசர்களுக்குப் பின்னால் வந்தவர்களும் முழுமையான முடியாட்சி முறையைத் தொடர்ந்ததால் "உள்நாட்டுப்போர்" வெடித்தது. சுதந்திர வேட்கையினால் உந்தப்பட்டு இப்போராட்டத்தில் அனைத்து குடிமக்களும் பங்கேற்றனர். சார்லஸ் மன்னர் சிரச்சேதம் செய்யப்பட்டு, பின்னர் க்ரோம்வெல் ஆட்சியில் இருந்தபோதும் கூட மக்களுக்கு தேவையான அடிப்படை சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது வரலாற்று நிகழ்வு ஆகும்.


சமத்துவம் உரிமை (உறுப்பு 14-18) 

• சட்டத்தின் முன் சமம் (உறுப்பு -14)

• மத அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு தடை (உறுப்பு -15) 

• பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்புரிமை (உறுப்பு -16) 

• தீண்டாமை ஒழிப்பு (உறுப்பு -17) 

• பட்டங்கள் ஒழிப்பு (உறுப்பு -18)

சில நேரங்களில் தனிநபர்களை வேறுபடுத்தி நடத்துதல் மூலம், சம உரிமைகள் உறுதிசெய்யப்படுவது அவசியமாகிறது. இது போலவே சமத்துவம் பாதிக்கப்படாமல் இருக்க, அரசாங்கத்தின் மூலம் சில கொள்கைகள் அவசியமாகிறது. உதாரணத்திற்கு இந்தியாவில் இட ஒதுக்கீடு கொள்கையும், ஏனைய பிற நாடுகளில் "உடன்பாட்டு நடவடிக்கை”யும் (Affirmative Action) பின்பற்றப்படுகிறது.


கற்றலின் நோக்கங்கள் 

❖சுதந்திரத்தின் பொருள், மற்றும் முக்கியத்துவத்தினை பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களை விளக்குவதன்மூலம் அறிமுகப்படுத்துதல்.

❖சுதந்திரத்தின் வகைகளை தெரிந்து கொள்வதின் மூலம் மாணவர்களுக்கு பல வகையான சுதந்திரங்களையும், அதனைப் பற்றி அரசினுடைய கருத்துக்களையும் விளக்குதல். 

❖ஓர் சமுதாயத்தில் குடிமகனுக்கு சுதந்திரத்தின் விழுமியங்களைப் புரிய வைப்பது மூலம், அரசு மற்றும் அரசமைப்பு அதிகாரத்துவம் பற்றியும் விளக்கி சுதந்திரம் எனும் கருத்தாக்கத்தின் முக்கியத்துவத்தினை அறிய வைத்தல். 

❖ சட்டத்தின் மூலமான கட்டுப்பாடு என்பதும் ஒரு வகை சுதந்திரம் என்பதை மாணவர்களுக்கு போதித்தல். 

❖ மக்களாட்சி மற்றும் சுதந்திரமான நீதித்துறையும், சுதந்திரத்தின் விழுமியங்களை உட்புகுத்துவதற்கான காரணிகள் என்றும், சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்றும் புரிய வைத்தல்.

இவ்வாறு மக்கள் போராட்டத்தின் விளைவாக, இங்கிலாந்தில் 1688-இல் "மகத்தான புரட்சி", முடியாட்சியை எதிர்த்து அரங்கேறியது. இதில் மக்களுக்கு மகத்தான வெற்றிகிடைத்ததுடன் சிலகாலம் முழுமையான முடியாட்சி கட்டுப்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு வெடித்த "பிரெஞ்சு புரட்சி" 1789-ல் ஏற்பட்டது. இது பல மாற்றங்களை ஏற்படுத்தினாலும், மக்களின் விடுதலை வேட்கைக்கு சரியான அளவில் தீர்வு ஏற்படாதிருந்தது.ஏனெனில் நெப்போலியனுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்தவர்களும் முடியாட்சியைத் தொடர்ந்தார்கள். மூன்றாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்கு பிறகு மூன்றாவது பிரெஞ்சு குடியரசு நிறுவப்பட்டது. 1940-இல் இதன் வீழ்ச்சிக்குப் பின்னர் வரிசையாக நான்காம் குடியரசும், 1958-இல் அதன் வீழ்ச்சிக்குப் பின்னர் ஐந்தாம் குடியரசும் நிறுவப்பட்டது. இதற்கிடையே காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் விடுதலைக்கான நீண்ட நெடிய புரட்சிக்குப் பின்னர் சுதந்திரத்தை பெற்றன. 19-ஆம் நூற்றாண்டில் இத்தாலியும், 20-ம் நூற்றாண்டில் இந்தியாவும் மிகுந்த தியாகங்களுக்கு பின்னரே தேசிய சுதந்திரம் அடைந்தன. 

சுதந்திரத்தின் பொருள் விளக்கம்

சுதந்திரம் என்பது "லிபர்" என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவாகி ஆங்கிலத்தில் "கட்டுப்பாடில்லாதது" என்று பொருள் பெறுகிறது. "லிபர்" என்கிற வார்த்தைக்கு "தடைகள் இல்லாத" எனப் பொருள்படுகிறது. 

குறிப்பிடத்தக்க மேற்கோள்

மனிதர்கள் சிறப்பாக செயல்படும் வாய்ப்பிற்குரிய சூழ்நிலையை நிர்வகிப்பதே சுதந்திரம் ஆகும். - ஹெரால்ட் லாஸ்கி


சுதந்திரம் தொடர்பான அறிஞர்களின் கருத்துக்கள்

சுதந்திரம் என்பது தனிமனிதர்கள், தங்கள் ஆளுமைத்தன்மையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தங்களை வெளிப்படுத்துவதாகும்.

-ஜி.டி.எச். கோல் (G.D.H.Cole) 

சுதந்திரம் என்பதன் பொருள் தடைகள் இல்லாத நிலை என்பதல்ல, மாறாக சுதந்திரத்தை மேம்படுத்துவதில் உள்ளது 

- மகாத்மாகாந்தி (Mahatma Gandhi)


• சுதந்திரம் என்பது அடக்குமுறையிலிருந்தும்,  வெளிகட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபெறும் விடுதலை நிலை ஆகும். 

• 'எஜீஸ்டெம் ஜெனரிஸ்' (இலத்தின் வார்த்தை) எனும் சட்டமொழியில் கூறுவதுயாதெனில் 'சுதந்திரம்' என்ற சொல் உறுப்பு 19-ல் உள்ள பொதுவான வார்த்தையாகும். உறுப்பு 21-ல் 'சுதந்திரம்' என்ற சொல்லுக்கு முன்பாக 'தனிப்பட்ட' என்னும் குறிப்பிட்ட வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டது.


சுதந்திரத்தின் இரண்டு கட்டங்கள் (Two Phases of liberty)

நேர்மறை சுதந்திரம் (Positive Liberty)

நேர்மறை சுதந்திரம் என்பது சிலவற்றை செய்வதற்கான சுதந்திரம் ஆகும். இது தனிமனிதன் தன்னுடைய உரிமைகள் மூலம் ஆளுமை தன்மையை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கின்றது. 

எதிர்மறை சுதந்திரம் (Negative Liberty)

ஜே.எஸ்.மில்லின் கூற்றுப்படி சுதந்திரம் என்பது எதிர்மறையானதாகும். இது சுதந்திரம் என்ற நூலில் உள்ளது மனிதனின் மீதும், அவனது செயல்பாட்டின் மீதும் எவ்வகை கட்டுப்பாடுகளும் விதிக்கப்படக் கூடாது என்கிறார். மேலும் மனிதனின் பாதையில் எவ்வகை தடைகளும் இருக்கக் கூடாது என வலுயுறுத்துகிறார். 


சுதந்திரத்தின் வகைகள் (Types of Liberty)



அ) இயற்கை சுதந்திரம் (Natural Liberty)

ஒருவர் நினைப்பதைத் தங்கு தடையில்லாமல் நடத்தி முடிப்பதற்கான சுதந்திரமே இயற்கை சுதந்திரம் ஆகும். முற்றிலும் தடைகளில்லாத, கட்டுப்பாடுகளற்ற மற்றும் ஒருவர் நினைக்கக்கூடியதை செய்யக்கூடிய சுதந்திரமே இயற்கை சுதந்திரமாகும்.

அனைவருக்குமே சுதந்திரத்தைப் பற்றிய தெளிவற்ற பார்வைகள் உண்டு. அது அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்து அமைகிறது. பத்து நபர்கள் சுதந்திரத்தைப் பற்றி கருத்துரைக்கிறார்கள் எனும்போது ஒரு வேளை எந்த இருவேறு நபர்களும் அவர்களின் சுதந்திரத்தைப் பற்றிய வரையறையில் ஒன்றுவது இல்லை. மேலும் சுதந்திரத்தின் கருப்பொருளையும் அவர்கள் விரும்பியவகையில் தெளிவாக்கூறுவதில்லை. இந்தப் பொதுப்படையான அறிவியல் சார்பில்லாத சொற்பிரயோகத்தினையே இயற்கை சுதந்திரம் என்கிறோம். - ஆர்.என். கில்ரீஸ்ட். (R.N.Gilchist)


ஆ) குடிமைச் சுதந்திரம் (Civil Liberty):

சட்டத்தின் ஆட்சியை பிரதிபலிப்பதே குடிமை சுதந்திரமாகும். இது குடிமக்கள் சமுதாயத்தில் அனுபவிக்கும் சுதந்திரம் அரசில் உள்ளது என்பதைக் குறிப்பதாகும். சட்டத்தின் வரன்முறைகளுக்கு உட்பட்டு அச்சுதந்திரம் அனுபவிக்கப்படுகிறது. குடிமை சுதந்திரத்தை, பாதுகாப்பதற்கு உண்டான உத்திரவாதத்தை அரசின் சட்டங்கள் வழங்குகின்றன. 

இ) அரசியல் சுதந்திரம் (Political Liberty)

அரசியல் சுதந்திரம் என்பது குடிமக்கள் அரசியல் வாழ்வில் பங்கேற்பதுடன், அரசின் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதும் ஆகும். (i) வாக்குரிமை (ii) தேர்தலில் போட்டியிடும் உரிமை, (iii) பொதுக்கருத்து உரிமை (iv) அரசாங்கத்தின் குறைபாடுகளை எடுத்துரைக்கும் உரிமை, (v) மனுசெய்யும் உரிமை போன்றவை ஆகும். 

ஈ) தனிப்பட்ட சுதந்திரம் (Personal Liberty)

தனிமனிதர்கள் தாங்கள் நினைக்கும் காரியங்களை செயல்படுத்தும் நிலையினை இச்சுதந்திரம் எடுத்துரைக்கின்றது. மேலும் எந்த ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அடுத்தவர்கள் குறுக்கிட அனுமதிக்காத உரிமையும் ஆகும். அனைத்து தனிநபர்களுள்க்குமே உடுத்துதல், உண்ணுதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், திருமணம் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்றவைகளில் தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு, தனிநபர் விவகாரத்தில் தலையிடுவது ஆகாது.

ஒரு செம்மறியாட்டின் கழுத்தை பிடித்திருக்கும் ஓநாயை, மேய்ப்பவன் துரத்தியடிக்கிறான். அதற்காக அந்த செம்மறியாடு அவனுக்கு நன்றியை தெரிவிக்கிறது.


ஆனால் அந்த ஓநாயோ, அவனை சுதந்திரத்தை ஒழிப்பவன் என குறை கூறுகிறது. ஏனெனில் குறிப்பாக அந்த ஓநாய்க்கும், கறுப்பு செம்மறியாட்டிற்கும் சுதந்திரம் தொடர்பான ஒத்த கருத்துகள் அமைவதில்லை. இதைப் போலவே தான் மனித இனத்திற்கு இடையேயும் தற்பொழுது சுதந்திரத்தைப் பற்றிய வேறுபாடுகள் உள்ளன. ஆப்ரகாம் லிங்கம் (Abharam Lincoin)


உ) பொருளாதார சுதந்திரம் 

ஒருவரின் அன்றாட வாழ்வாதாரத்திற்கான உணவை தேடி கொள்ளும் தனிநபர் சுதந்திரம் பொருளாதார சுதந்திரம் ஆகும். சாதி, நிறம், இனம் , மற்றும் பாலினம் போன்றவைகளுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக வருவாய் ஈட்டுவதே பொருளாதார சுதந்திரம் ஆகும்.

ஏ) நிதி சுதந்திரம்

பிரதிநிதித்துவம் இன்றி வரிவிதிப்பு கூடாது. தங்களுடைய வரிப்பணம் எவ்வாறு செலவிடப்பட வேண் டும். யாருக்குபோய் சேர வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கையாகும்.

ஐ) குடும்பம் சார்ந்த சுதந்தரம்

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கல்வியுரிமை வழங்க வேண்டும் என்பதே குடும்ப சுதந்திரத்தின் சிறப்பு அம்சங்களாகும். கொடுமையாக நடத்துதல் மற்றும் சுரண்டல் போன்ற அநாகரீகமான செயல்களுக்கு எதிராக அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒ) தேசிய சுதந்திரம்

ஒரு நாட்டில் நிலவக்கூடிய சுதந்திர சூழ்நிலையை தேசிய சுதந்திரம் என்கிறோம். ஒரு நாடு இறையாண்மையுடன் கூடிய நிலையை அடையும் போது தேசிய சுதந்திரம் இருக்கிறது எனலாம். 

சுதந்திரம் என்பது மனிதர்களை நோக்கி வருவது அல்ல, மாறாக மனிதர்களே சுதந்திரத்தை நோக்கி எழுச்சி கொண்டு செல்ல வேண்டும். மகிழ்வுடன் வாழ்வதற்காக சிரமப்பட்டு பெறப்படுகின்ற சுதந்திரம் ஓர் ஆசீர்வாதமாகும்.

- புது தில்லி, மத்திய செயலகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஓ) பன்னாட்டு சுதந்திரம்

உலகநாடுகளிடையே கூட்டாட்சியையும், பன்னாட்டு கூட்டுறவையும் மற்றும் பன்னாட்டு அமைதியையும் பேணுவதையே பன்னாட்டு சுதந்திரம் ஆகும்

குறியீட்டு பொருள்


சுதந்திரதேவி சிலைக்கென்று ஒரு குறிக்கோள் உள்ளது. அது விடுதலையை பற்றிய உலகளாவிய நினைவூட்டலாகவும், அமெரிக்க குடிமக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.


சுதந்திரம், இறையாண்மை மற்றும் சட்டம் ஆகியவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது?

அரசு ஒழுங்குமுறையில் இயங்கினால் மட்டுமே சுதந்திரம் செயல்படுகிறது.

அரசு சட்டங்களை இயற்றுகிறது. இறையாண்மை மிக்க அரசு செயல்படுவது சட்டங்களால் மட்டுமே ஆகும். சுதந்திரம், இறையாண்மை,மற்றும் சட்டம் ஆகியவற்றிற்கு இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

சட்டம் எவ்வாறு சுதந்திரத்தை பாதுகாக்கிறது?

• சட்டம் குற்றவாளிகளை தண்டித்து தனிமனிதர்களின் உரிமைகளை பாதுகாக்கின்றது.

• தனிமனித உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு சட்டம் உத்திரவாதம் அளிப்பதுடன் அவற்றை பாதுகாக்கவும் செய்கிறது. சக மனிதர்களுக்கு, ஒருவர் தீங்கு விளைவிக்கும்போதும், அவர்களின் வழியில் குறுக்கீட்டு சீர்குலைக்கும்போதும் அரசு அவர்களை தண்டிக்கிறது.

• சுதந்திரத்தின் பாதுகாவலனாக அரசமைப்பு விளங்குகிறது. அரசின் அதிகாரத்துவத்தை கட்டுப்படுத்துவதுடன் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கின்றது.


சுதந்திரம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

அ) மக்களாட்சி

சுதந்திரம் என்பது மக்களாட்சியில் பாதுகாப்பாக இருக்கிறது. மக்களின் அரசாங்கமாக மக்களாட்சி செயல்படுகிறது.

ஆ) அரசமைப்பு

ஒரு நாட்டின் அரசமைப்பில் இருந்து தான் அரசின் அதிகாரத்துவம்/ ஆணையுரிமை பெறப்படுகிறது.

மக்களாட்சியைப் பற்றிய கவிதையாக இந்தியஅரசமைப்பின்முகவுரை விளங்குகிறது. இதுஒட்டுமொத்த இந்திய அரசமைப்பினுடைய அடிப்படை தத்துவத்தை தன்னுள் கொண்டதாகும். அரசாங்கத்தால் உருவாக்கப்படுகின்ற சட்டமும், அதனால் நிறைவேற்றப்படுகின்ற மக்கள் நல நடவடிக்கைகளும், மக்கள் நலனிற்கு உகந்ததா, இல்லையா என்பதை ஆராய்ந்து மதிப்பிடும் தன்மை படைத்தது அரசமைப்பு முகவுரையாகும். இந்திய அரசமைப்பின் ஆன்மாவாக முகவுரை கருதப்படுகிறது. 

இ) அடிப்படை உரிமைகள் 

அரசின் அதிகாரத்துவத்தை வரையறுப்பது அடிப்படை உரிமைகள் ஆகும். தனிமனிதர்களின் சொந்த விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடின்றி இருப்பதற்கு இவ்வகை உரிமைகள் உறுதியளிக்கின்றன.


ஈ) அதிகாரப் பரவலாக்கம்

சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு அதிகாரப் பரவலாக்கம் அவசியமாகின்றது. அதிகாரங்கள் முறையே மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கத்திற்கு பகிர்ந்து அளிக்கும் பட்சத்தில் நிர்வாகம் திறம்பட செயலாற்ற இயலும். 

சுதந்திரமான நீதித்துறை

இந்திய அரசமைப்பு, நீதித்துறை சுதந்திரமாக செயல்படத் தகுந்த முறையிலான அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சுதந்திரமாக செயல்படும் நீதித்துறையே, மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும், அரசமைப்பின் மேலான தன்மையையும் பாதுகாக்கிறது. 

* நீதிபதிகளின் நியமனத்திற்கு பாகுபாடற்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. 

* நீதிபதிகளுக்கு, உயர்ந்த தகுதிகளை நிர்ணயித்துள்ளது. 

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயது வரையிலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 62வயது வரையிலும் பணியாற்றுவார்கள். 

உ) பொருளாதார இடர்காப்பு 

சுதந்திரத்தின் நிபந்தனையாக பொருளாதார சுதந்திரம் அமைகிறது. "ஏழை மற்றும் பணக்காரர், படித்தவர் மற்றும் படிக்காதவர் என்ற பிரிவினை சமூகத்தில் நிலைக்கும் வரையிலும் எஜமானர் மற்றும் பணியாளர் என்ற உறவுமுறை நீடிக்கும்". 

ஊ) சட்டத்தின் ஆட்சி

சட்டத்தின் ஆட்சி என்பது இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. சாதி, இனம், நிறம், மற்றும் நம்பிக்கை போன்றவைகளில் வேறுபாடுகள் இல்லாத சமமான ஆட்சியே சட்டத்தின் ஆட்சியாகும். சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம். குற்றங்களில் ஈடுபடும் போது தண்டனைக்கு உள்ளாக வேண்டிய நிலை அனைவருக்குமே ஏற்படுகிறது. 

எ) அரசியல் கல்வி மற்றும் காலவரம்பற்ற கண்காணிப்பு

சுதந்திரம் என்பதை நிரந்தரமாக பாதுகாக்க முடியும். கல்வியறிவு பெற்றவர்கள் முற்றிலுமாக உரிமைகளையும் கடமைகளையும் பற்றி அறிவர். காலவரம்பற்ற கண்காணிப்பு இருந்தாலொழிய, மக்கள் தவறுகள் செய்வதை நாம் கண்டறியமுடிவதில்லை . அரசாங்கம் தன் அதிகார எல்லையை மீறி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடும்போது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சி செய்கிறார்கள்.

11th Political Science : Chapter 3 : Basic Concepts of Political Science : Liberty in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் : சுதந்திரம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்