Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | முக்கிய உயிரற்ற ஆக்கக்கூறுகள் அல்லது காரணிகள்

உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் - முக்கிய உயிரற்ற ஆக்கக்கூறுகள் அல்லது காரணிகள் | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population

   Posted On :  24.03.2022 06:09 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்

முக்கிய உயிரற்ற ஆக்கக்கூறுகள் அல்லது காரணிகள்

உயிரற்ற காரணிகள் என்பவை உயிரினங்களிலும் அவற்றின் செயல்பாடுகளிலும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் இயற்பியல் மற்றும் வேதியியல் காரணிகளை உள்ளடக்கியது ஆகும்.

முக்கிய உயிரற்ற ஆக்கக்கூறுகள் அல்லது காரணிகள் 

உயிரற்ற காரணிகள் என்பவை உயிரினங்களிலும் அவற்றின் செயல்பாடுகளிலும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் இயற்பியல் மற்றும் வேதியியல் காரணிகளை உள்ளடக்கியது ஆகும். முக்கியமான உயிரற்ற காரணிகளாவன.


வெப்பநிலை (Temperature)

வெப்பநிலை அல்லது வெப்பம் மற்றும் குளிர்ச்சியின் அளவு, ஒரு சுற்றுச் சூழலில் மிகவும் அவசியமான மற்றும் மாறுபடும் காரணி ஆகும். இது உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களின் முக்கிய செயல்களான வளர்சிதை மாற்றம், நடத்தை, இனப்பெருக்கம், கருவளர்ச்சி மற்றும் மரணம் ஆகிய அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழலில் உள்ள குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை செல்கள் உயிர் வாழ்வதை நெறிப்படுத்துகிறது. 

உயிரினத்தின் வளர்சிதை மாற்றங்களை நொதிகள் நெறிப்படுத்துகின்றன. நொதிகள் வெப்பநிலை உணர்வுத்திறன் கொண்டவை.

வான்ட் ஹாஃப் விதி (Vant Hoff's rule)  

உயிரினங்களில் ஒவ்வொரு 10°C வெப்பநிலை உயர்வுக்கும் வளர்சிதை மாற்ற வீதம் இரட்டிப்படைகிறது அல்லது ஒவ்வொரு 10°C வெப்பநிலை குறையும் போதும் வளர்சிதை மாற்றவீதம் பாதியாகிறது என வான்ட் ஹாஃப் தெரிவித்தார். இவ்விதி வான்ட் ஹாஃப் விதி என அழைக்கப்படுகிறது. வெப்பநிலை, வினைகளின் வேகத்தின் மீது ஏற்படுத்தும் விளைவு வெப்பநிலைக் கெழு (Temperature coefficient) அல்லது Q10 மதிப்பு எனப்படும். இம்மதிப்பானது X°C வெப்பநிலையில் ஒரு வினையின் வேகத்திற்கும் X-10°C வெப்பநிலையில் அவ்வினையின் வேகத்திற்கும் இடையே உள்ள விகிதத்தால் கணக்கிடப்படுகிறது. உயிரினங்களில் Q10 மதிப்பு சுமார் 2.0 ஆகும். Q10 மதிப்பு 2.0 ஆக இருந்தால் ஒவ்வொரு 10°C வெப்பநிலை உயர்வுக்கும் வளர்சிதை மாற்ற வீதம் இரட்டிப்படையும் என்பது பொருள்.

வெப்பநிலையானது பெரும்பாலான உயிரினங்களில் பால் நிர்ணயம், பாலின விகிதம், இன உறுப்புகள் முதிர்ச்சி அடைதல், இனச்செல்லாக்கம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில சுற்றுச்சூழல்களில் உயிரினங்களின் அளவு மற்றும் நிற அமைப்பு ஆகியவற்றிலும் வெப்பநிலை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குளிரான பகுதிகளில் வசிக்கும் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் வெப்பமான பகுதியில் வசிக்கும் உயிரினங்களை விட அதிகமான உடல் எடையை எட்டுகின்றன (பெர்க்மானின் விதி) (Bergmann's rule). குளிரான பகுதிகளில் வாழும் மாறா உடல் வெப்பம் கொண்ட விலங்குகளின் கால்கள், காதுகள் மற்றும் பிற இணை உறுப்புகள், வெப்பமான பருவ நிலையில் வாழும் அதே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களை விடச் சிறியதாக உள்ளன (ஆலென் விதி) (Allen's rule). சில நீர்வாழ் சூழலில், நீரின் வெப்பநிலைக்கும் மீன்களின் உடல் அமைப்பு மற்றும் எண்ணிக்கைக்கும் எதிர்மறைத் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறைவான வெப்பநிலையில் அதிக எண்ணிக்கையில் முதுகெலும்புகள் உருவாக்கப்படுகின்றன (ஜோர்டானின் விதி) (Jordon's rule).



பெர்க்மானின் விதி 

பெர்க்மானின் விதி எனும் சூழல் புவியியல் தத்துவத்தின்படி, பல்வேறு வகைப்பாட்டு நிலையில் உள்ள விலங்குகளிலும், பல்வேறு இனக்கூட்டங்கள் மற்றும் சிற்றினங்களிலும், -- குளிரான பகுதிகளில் பெரிய அளவிலான விலங்குகளும், வெப்பமான பகுதிகளில் சிறிய அளவிலான விலங்குகளும் காணப்படும்.


ஆலென் விதி 

வடக்கு தூந்திரக் குழிமுயலிலிருந்து (லிபுஸ் ஆர்டிகஸ்) தெற்குப் பகுதியில் வாழும், பாலைவன ஜாக் முயல் வரை (லி. அல்லெனி), முயல்களின் உடலில் எல்லைப்பகுதி உறுப்புகள் (கால்கள் மற்றும் காதுகள்) நீளமாக மாறும், உடல் மெலிவடையும்.

உயிரினங்களின் பரவலிலும் வெப்பநிலை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெப்ப மண்டலப் பகுதிகளில் உயிரினக் கூட்டத்தின் பல்வகைதன்மை, உயிரி மற்றும் செறிவு ஆகியவை மித வெப்பமண்டலம் மற்றும் துருவப்பகுதிகளை விட அதிகமாகும்.


வெப்பநிலைக்கேற்ற தகவமைப்புகள்

சிற்றினங்கள் உயிர்வாழ வெப்பநிலைக்கேற்ற தகவமைப்புகளைப் பெறுதல் மிகவும் அவசியமாகும். அதிக வெப்பநிலை மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்கினங்கள் மிகை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் (Eurytherms) எனப்படும் (பூனை, நாய், புலி மற்றும் மனிதன்). மிகை வெப்ப வேறுபாடு பரிணாமத்திற்கு சாதகமானது ஆகும். பனியுகத்தில் உயிரினங்கள் வாழ குறைந்த வெப்பநிலைக்கான தகவமைப்புகள் (மிகைகுளிர் வெப்ப வேறுபாடு) (Cold-Euryhermy) வாழத் தேவையாக இருந்தன. மேலும் வெப்பநிலை வேறுபாடுகளைத் தாங்கும் திறனால் உயிரிகள் பிற பகுதிகளில் குடியேறி, வாழும் திறனை அதிகரித்துக் கொள்கின்றன.


இது இயற்கை தேர்வுக்குச் சாதகமானதாகும். உயிரினங்களில் மிகை வெப்ப வேறுபாடு (Eurthermy) ஒரு வகையான வெப்பநிலை ஒழுங்கு பாட்டு முறை ஆகும்.

உயிரினங்களில் குறைவான அளவு வெப்பநிலை வேறுபாடுகளை மட்டுமே தாங்கிக் கொள்ளும் திறன் பெற்றவை குறை வெப்ப வேறுபாடுடைய (Stenotherms) உயிரினங்கள் எனப்படும் (எ.கா மீன்கள், தவளைகள், பல்லிகள் மற்றும் பாம்புகள்)

காலப்போக்கில் பரிணாம மாற்றங்களால், வெவ்வேறு சூழலியல் வாழிடங்களில் வாழும் விலங்குகள் வெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப வெவ்வேறு வேறுபாடுகளையும், தகவமைப்புகளையும் உருவாக்கிக் கொண்டுள்ளன. இதனால் அவ்விலங்குகள் வெவ்வேறு வாழிடங்களில் வாழவும், சிறுவாழிடங்களை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறது. அதீதமான வெப்பநிலை உள்ள சூழலில், உயிரினங்கள் வெப்பம் தாங்கும் ஸ்போர்கள் மற்றும் கூடுகள் (எண்டமீபா), உறை எதிர் புரதங்கள் (ஆர்ட்டிக் மீன்கள்) ஆகியவற்றை உருவாக்குதல், குளிர் உறக்கம் மற்றும் கோடை உறக்கம் போன்ற தகவமைப்புகளை மேற்கொண்டு கடுமையான குளிர் மற்றும் கோடைகாலங்களைக் கடக்கின்றன. சில சூழல்களில் அதீதமான வெப்பநிலையையும் அதனால் ஏற்படும் நீர் மற்றும் உணவுப் பற்றாக் குறையையும் தவிர்க்க விலங்குகள் வலசைபோதல் எனும் பொருத்தமான தகவமைப்புப் பண்பைப் பெற்று அவ்விடரை எளிதில் கடக்கின்றன (படம் 11.2).


ஒளி (Light)

இது ஒரு முக்கியமான உயிரற்ற காரணி ஆகும். சூழலியல் நோக்கில், ஒளியின் தரம் (அலைநீளம் அல்லது நிறம்), ஒளியின் செறிவு (கிராம் கலோரி அளவிலான ஆற்றல்) மற்றும் கால அளவு (பகல் பொழுதின் நீளம்) ஆகியவை உயிரினங்களுக்கு மிகவும் அவசியமானவை ஆகும்.

விலங்கினங்களின் வளர்ச்சி, நிறமியாக்கம், இடப்பெயர்ச்சி மற்றும் இனப்பெருக்க நிகழ்வுகளில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒளியின் செறிவு மற்றும் அலைவெண் ஆகியவை வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மரபணுக்களில் திடீர் மாற்றத்தைத் தூண்டுகின்றன (புற ஊதாக்கதிர்கள் மற்றும் X- கதிர்கள்). கண்பார்வைக்கு ஒளி மிகவும் அவசியம். குகையில் வாழும் உயிரினங்களில் சரியாக வளர்ச்சிடையாத அல்லது முழுமையாகக் கண்கள் இல்லாத நிலை ஆகியவற்றால் இது நிரூபிக்கப்படுகிறது. விலங்குகளின் ஊடுவளர்ச்சித் தடை (Diapause) நிகழ்வில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கோடைக்காலங்களில் அதிக ஒளிச் செறிவின்போது பறவைகளின் இன உறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கிறது. எளிய விலங்குகளில் இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஒளிதாக்கத்தை ஏற்படுத்துகிறது. 


நீர் (Water)

பூமியில் உள்ள உயிரினங்கள் முதன் முதலில் கடலில் தான் தோன்றின. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ நீர் மிகவும் அவசியமானதாகும். பூமியின் மேற்பரப்பில், சுமார் நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. (நீர்க்கோளம்) திட, திரவ மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் நீர் காணப்படுகிறது.

ஒளிச்சார்பியக்கம்: ஒளிக்கான எதிர்வினை காரணமாக முழு உயிரினமும் நகர்வது ஒளிச்சார்பியக்கம் (Phototaxis) எனப்படும். உயிரினங்கள், அந்திப் பூச்சியைப் போல் ஒளியை நோக்கியோ (நேர்மறை ஒளிச் சார்பியக்கம்) அல்லது யூக்ளினா, வால்வாக்ஸ் மற்றும் மண்புழுக்களைப் போல் ஒளிக்கு எதிர் திசையிலோ (எதிர்மறை ஒளிச்சார்பியக்கம்) நகருகின்றன. 

ஒளிநாட்டம் (Phototropism): ஒளித் தூண்ட லின் விளைவாக, உயிரினங்கள் வளர்ச்சி அல்லது திசையமைவில் ஏற்படும் மாற்றம், ஒளிநாட்டம் எனப்படும். சூரிய காந்தித் தாவரத்தின் மலர் ஒளியை நோக்கி நகர்வது 'நேர்மறை ஒளிநாட்டம்' எனவும், தாவரங்களின் வேர்கள் ஒளிக்கெதிரான திசையில் வளர்ச்சியடைவது "எதிர்மறை ஒளிநாட்டம்" எனவும் அழைக்கப்படும். 

ஒளித்தூண்டல் இயக்கம் (Photokinesis): நகரும் உயிரிகளின் அல்லது செல்களின் இடப்பெயர்ச்சியின் வேகம் (அல்லது திரும்புதல் அலைவெண்) ஒளியின் செறிவால் மாற்றியமைக்கப்படுவது ஒளித்தூண்டல் இயக்கம் எனப்படும். இலக்கற்ற இவ்வியக்கம் ஒளிக்கான எதிர்விளைவாகும்.

புவியில் உள்ள நீர், நன்னீர் (ஆறு, ஏரி, குளம்) மற்றும் உவர்நீர் (கடல் மற்றும் பெருங்கடல்) என இரண்டு வகைகளாக உள்ளது. நீரில் கரைந்துள்ள உப்புக்களின் அடிப்படையில், கடினநீர் (கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் சல்பேட்டுகள் அல்லது நைட்ரேட்டுகள் கரைந்துள்ளது) மற்றும் மென்னீர் (உப்புக்களற்றது) என இரு வகைகள் உள்ளன. கொதிக்க வைத்தல் முறையில் நீரின் கடினத் தன்மையை நீக்க முடிந்தால் அது தற்காலிக கடினத் தன்மை ஆகும். அவ்வாறு இல்லையெனில் அது நிரந்தரக் கடினத் தன்மை ஆகும்.


நீரின் முக்கியப் பண்புகள்

* மண் உருவாக்கத்தில் (Pedogenesis) நீர் ஒரு முக்கியக் காரணி ஆகும்.

* பல்வேறு சூழ்நிலை மண்டலங்களுக்கான ஊடகமாகத் நீர் திகழ்கிறது. நீர், வளிமண்டலத்திலும், பாறைக்கோளத்தின் வெளிஉறையிலும் ஈரநிலையில் உள்ளது. பூமியில் நீர் சமமற்ற நிலையில் பரவியுள்ளது. 

* நீர் காற்றை விடக் கனமானது, மேலும் நீர்ச்சூழலில் அது மிதவைத் தன்மையை அளிக்கிறது. இப்பண்பு, நீர்வாழ் உயிரிகள் நீர்நிலையின் வெவ்வேறு மட்டங்களில் மிதக்க உதவி செய்கிறது. 

* நீரின் அதிக வெப்பத் திறன் மற்றும் உள்ளுறை வெப்பம் காரணமாக, அதிக அளவு வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனுடையது. அதனால் பெருங்கடல் மற்றும் ஏரிகளில் சீரான வெப்பநிலை பாரமரிக்கப்படுகிறது. மற்றும் உயிர்க்கோளத்தில் நிலைத்த வெப்பநிலை காணப்படுகிறது. 

* இதன் இயற்பியல் தன்மை தனித்துவமானது. திடநிலையில் (பனிக்கட்டி) உள்ள நீர் திரவநிலையில் உள்ளதை விட அடர்த்தி குறைவானது ஆகும். 

* உறைநிலையில் (0°C) நீர் சுருங்குகிறது. 4°C வெப்பநிலையில் திரவ நீரின் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது. இதற்கு கீழ்நிலையில் நீரானது குறிப்பிடத்தக்க அளவில் விரிவடையத் துவங்குகிறது. இப்பண்பு பனிக்கட்டியை, நீர்நிலைகளில் உள்ள நீரின் மேல் மிதக்கச் செய்கிறது. இதனால் நீர் நிலைகளில் மேல்புறம் உள்ள நீர் மட்டும் உறைகிறது; அதன் கீழ்ப்பகுதியில் உள்ள நீர் திரவ நிலையிலியே இருந்து, உயிரினங்கள் வாழ்வதை நிலைப்படுத்துகிறது (படம் 11.3).


* நீர் பொதுக்கரைப்பானாகக் கருதப்படுகிறது. வேதிப்பொருட்கள் உயிரற்ற ஆக்கக்கூறுகளிலிருந்து, சூழ்நிலை மண்டலத்தின் உயிர்ச் சூழலுக்குக் கடத்தப்பட நீர் முக்கியமான ஊடகமாகச் செயல்படுகிறது. 

* நீர் அதிகப் பரப்பு இழுவிசை கொண்டதாகும். நீரின் இப்பண்பினால், மகரந்தத் தூள், தூசி மற்றும் நீர் மேல் நடக்கும் பூச்சிகள் ஆகியவை நீரை விட அதிக அடர்த்தி கொண்டிருந்தாலும், நீரின் புறப்பரப்பில் மிதக்கின்றன.


மண் (Soil) 

மண் என்பது, கரிமப்பொருட்கள், தாது உப்புகள், வாயுக்கள், திரவங்கள் மற்றும் உயிரினங்களின் கலவை ஆகும். இவையனைத்தும் உயிரிகளின் வாழ்க்கைக்குத் துணை நிற்பனவாகும். புவிப்பரப்பிலுள்ள மண் நிறைந்த பகுதி மண் கோளம் (Pedosphere) எனப்படும். மண்ணின் தாய்ப்பொருளான பாறைகளிலிருந்து மண் உருவாகின்றது. பாறைகள், காலநிலைக் காரணிகளால் சிதைவுற்று மண்ணாக மாறுகிறது (மண் உருவாக்கம் - paedogenesis). இவை மூலமண் (Embryonic soil) எனப்ப டும். 


மண்ணின் நான்கு பெரிய பணிகள்:

* தாவரங்கள் வளர்வதற்கான ஊடகம் 

* நீரைச் சேமிக்கவும், சுத்தப்படுத்துவதற்குமான வழிமுறையாகும்.  

* புவியின் வளிமண்டலத்தை மாற்றியமைப்பவை 

* மண்ணின் தன்மையை மாற்றியமைக்கக்கூடிய பல உயிரினங்களின் வாழிடம் 

* மண் பலகிடைமட்ட அடுக்குகளாகக் கட்டமைந்து காணப்படும். இது மண் விபரம் (Soil profile) என அழைக்கப்படும்.


மண்ணின் பண்புகள் 

1. மண்ணின் நயம் (Soil texture) - மண்ணில் உள்ள துகள்களின் அளவைப் பொறுத்தது மண்ணின் நயம் அமைகிறது. மண் துகள்களின் அளவின் அடிப்படையில் மணல், வண்டல் மற்றும் களிமண் என பல மண் வகைகள் காணப்படுகிறது. 

2. மண் புரைமை (Porosity) - ஒரு குறிப்பிட்ட கனஅளவு உள்ள மண்ணின், துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி புரைவெளி  (Pore space) எனப்படும். அதாவது புரை வெளிகளால் நிரம்பியுள்ள மண்ணினுடைய கன அளவின் ஒட்டுமொத்த பருமனின் சதவீதமே மண் புரைமை ஆகும். 

3. மண்ணின் ஊடுருவ விடும் தன்மை (அ) உட்புகவிடும் தன்மை (Permeability) - புரைவெளி ஊடாக நீர் மூலக்கூறுகள் நகர்வதை தீர்மானிக்கும் மண்ணின் தன்மை, மண்ணின் ஊடுருவ விடும் தன்மை எனப்படும். மண்ணின் ஊடுருவ விடும் தன்மை புரைவெளியின் அளவினை நேரடியாகச் சார்ந்துள்ளது. மண்ணின் நீரைப் பிடித்து வைக்கும் திறன் மண்ணின் ஊடுருவ விடும் தன்மைக்கு எதிர் விகிதத்தில் உள்ளது. 

4. மண் வெப்பநிலை - மண் சூரியனிடமிருந்தும், சிதையும் கரிமப்பொருட்களிலிருந்தும் மற்றும் புவியின் உட்புறத்திலிருந்தும் வெப்ப ஆற்றலைப் பெறுகிறது. மண்ணின் வெப்பநிலை, விதைகள் முளைப்பதையும், வேர்கள் வளர்வதையும் மற்றும் மண்ணில் வாழும் நுண்ணிய மற்றும் பெரிய உயிரினங்களின் உயிரியல் செயல்களையும் பாதிக்கிறது. 

5. மண் நீர் - மண்ணில் காணப்படும் நீர் முக்கியமான கரைப்பானாகவும், கடத்தும் காரணியாகவும் செயல்படுவது மட்டுமல்லாது மண்ணின் நயம், மண் துகள்களின் கட்டமைப்பு ஆகியவற்றையும் பராமரித்து, பல்வேறு தாவரங்களும் விலங்குகளும் வாழத்தகுதியான வாழிடங்களாக மாற்றுகின்றன.


காற்று (Wind)

குறிப்பிட்ட திசையிலிருந்து குறிப்பிட்ட வேகத்தில், இயற்கையான நகரும் வளி, காற்று என அழைக்கப்படுகிறது. நிலநடுக்கோடு மற்றும் துருவப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு மற்றும் பூமியின் சுழற்சி (கோரியோலிஸ் விளைவு) ஆகிய இரு காரணங்களால் காற்று உருவாகிறது. மகரந்தத் துகள்கள் மற்றும் விதைகள் கடத்தப்படவும், பறவைகள் பறக்கவும் காற்று உதவுகிறது. காற்றின் மூலம் உற்பத்தியாகும் ஆற்றலுக்கு மூலகாரணமாக விளங்குவதுடன் காற்று மண் அரிப்பையும் ஏற்படுத்துகிறது. அனிமோமீட்டர் என்ற கருவியின் உதவியால் காற்றின் வேகம் அளவிடப்படுகிறது.


ஈரப்பதம் (Humidity)

வளிமண்டலத்தில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நீராவியினால் ஏற்படும் ஈரம், ஈரப்பதம் எனப்படும். ஈரப்பதம் பொதுவாக முழுமையான ஈரப்பதம் மற்றும் ஒப்புமை ஈரப்பதம் (அல்லது) குறித்த ஈரப்பதம் (Specific humidity) ஆகிய இரு வகைகளில் குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட கொள்ளளவு (அல்லது) பொருண்மை, அளவுள்ள காற்றில் உள்ள ஒட்டு மொத்த நீராவியின் பொருண்மை முழுமையான ஈரப்பதம் எனப்படும். இதில் வெப்பநிலை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. காற்றில் உள்ள நீராவியின் அளவு ஒப்புமை ஈரப்பதம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் காற்றில் உள்ள ஈரப்பதம் தெவிட்டு நிலையை அடைய தேவைப்படும் நீராவியின் அளவை விழுக்காட்டில் குறிப்பதே ஒப்புமை ஈரப்பதம் எனப்படும். ஒப்புமை ஈரப்பதம் அதன் விழுக்காட்டில் குறிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒப்புமை ஈரப்பதத்தின் விழுக்காடு அதிகமாக இருந்தால் காற்று-நீர் கலவை அதிக ஈரத்தன்மையுடன் உள்ளது எனக் கொள்ளலாம். ஈரப்பதத்தை ஹைக்ரோமீட்டர் எனும் கருவியால் அளக்கலாம்.


உயரம் (Altitude)

ஏற்றம் அல்லது சரிவைக் கொண்ட இக்காரணி ஒரு சூழ்நிலை மண்டலம் அல்லது உயிர்த் தொகையில் வெப்பநிலை மற்றும் மழையளவைக் கட்டுப்படுத்துகிறது. உயரம் அதிகரிக்கும் போது வெப்பநிலை மற்றும் ஆக்சிஜனின் அடர்த்தி குறைகிறது. அதிக உயரத்தில் வெப்பநிலை குறைவு காரணமாக மழைக்குப் பதிலாக பனிப்பொழிவு ஏற்படுகிறது.

விலங்குகள் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாறுபாடுகளுக்கேற்ப, தங்கள் எதிர்வினையை குறுகிய காலத்திற்குள் மாற்றிமைத்துக் கொள்கின்றன. இதற்கு இணக்கமாதல் (Acclimatization) என்று பெயர். எடுத்துக்காட்டாக தரைப்பகுதியில் வாழ்பவர்கள் உயரமான பகுதிக்குச் செல்லும்போது, புதிய சூழலுக்கு உட்பட்ட சில நாட்களுக்குள் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது அவர்களுக்கு, வளிமண்டல ஆக்சிஜன் குறைபாடு காரணமாக ஏற்படும் அதிக அளவு ஆக்சிஜன் தேவையைச் சமாளிக்க உதவும்.


Tags : Organisms Reproductive and Population உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்.
12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population : Major Abiotic Components or Factors Organisms Reproductive and Population in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : முக்கிய உயிரற்ற ஆக்கக்கூறுகள் அல்லது காரணிகள் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்