Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | நிலவரைபடத்தை கற்றறிதல்

மூன்றாம் பருவம் அலகு -2 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - நிலவரைபடத்தை கற்றறிதல் | 7th Social Science : Geography : Term 3 Unit 2 : Map Reading

   Posted On :  19.04.2022 07:00 pm

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -2 : நிலவரைபடத்தை கற்றறிதல்

நிலவரைபடத்தை கற்றறிதல்

கற்றலின் நோக்கங்கள் • நிலவரைபடம் மற்றும் அளவையைப் பற்றி அறிந்து கொள்ளுதல் • நிலவரைபடங்களின் வகைகளை அடையாளம் காணுதல் • நிலவரைபடக்கூறுகளைப் புரிந்து கொள்ளுதல் • நிலவரைபடத்தின் குறிப்பு, குறியீடு மற்றும் சின்னங்களைக் கற்றுக்கொள்ளுதல்

அலகு - 2

நிலவரைபடத்தை கற்றறிதல்



கற்றலின்  நோக்கங்கள் 

நிலவரைபடம் மற்றும் அளவையைப் பற்றி அறிந்து கொள்ளுதல் 

நிலவரைபடங்களின் வகைகளை அடையாளம் காணுதல் 

நிலவரைபடக்கூறுகளைப் புரிந்து கொள்ளுதல் 

நிலவரைபடத்தின் குறிப்பு, குறியீடு மற்றும் சின்னங்களைக் கற்றுக்கொள்ளுதல் 


அறிமுகம் 

நிலவரைபடத்தினை வாசித்தல் என்பது புவியியல் ரீதியான இருப்பிடம், இயற்கை அமைப்புகளான மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் குறித்தும், நீர்நிலைகளான ஆறு, ஏரி, கடல் குறித்தும், கலாச்சார அமைப்புகளான சாலைகள் மற்றும் குடியிருப்புகள் குறித்தும், புரிந்து கொள்ள வழிவகுக்கின்றது. நிலவரைபடங்களானவை கடந்த காலத்தினைப் பதிவு செய்தலாக இருக்க வேண்டும். இவை கடந்த காலத்தினைப் புரிந்து கொள்ளவும் எதிர்காலத்தினை உணரவும் வழிவகை செய்யவேண்டும்.

நிலவரைபடங்கள், வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை படங்களாகக் காட்டுகின்றன. அனைத்து நாடுகள் மற்றும் கண்டங்களின் அளவு மற்றும் வடிவத்தினை மாணவர்கள் புரிந்துகொள்ள வழிவகைச் செய்கிறது. நிலவரைபடங்கள் புவியியல் எல்லைகளின் பண்புகளைக் குறித்து தெளிவாகக் குறிப்பிடுகின்றன.


நிலவரைபடங்கள்

புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக நிலவரைபடம் அமைகிறது. நிலவரைபடம் என்பது புவியின் முழு பகுதி அல்லது ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும். நிலவரைபடமானது கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் உட்பட சில குறிப்பிட்ட விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது. இது கையாள்வதற்கும் சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் கணினியில் சேமித்து வைப்பதற்கும் எளிதானதாக அமைகிறது.

ஆரம்பகாலங்களில் காகிதத்தோல் (விலங்குகளின் தோல்), பாப்பிரஸ் (Papyrus), துணிகள், ஈரநிலம் மற்றும் களிமண் பலகைகள் நிலவரைபடம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன.


நிலவரைபடங்களின் வகைகள்

ஒவ்வொரு நிலவரைபடமும் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம் மற்றும் கட்டமைப்பில் தனித்துவமுடையது. பொதுவான சில அமைப்புகளின் அடிப்படையில் நிலவரைபடங்கள் பல வகைப்படும்.




அளவையின் அடிப்படியிலான நிலவரைபடங்கள் 

பெரிய அளவை நிலைவரைபடம்: குறைந்த பரப்பளவிலான இடங்களைக் குறித்து அதிக விவரங்களைக் கொடுக்கக் கூடியது பெரிய அளவை நிலவரைபடம் ஆகும். ஏனெனில் அவை ஒப்பீட்டளவில் பெரிய பகுதிகளில் வரையப்படுகிறது.

* நில அளவைப் படங்கள் (Cadastral) என்பது கிராமம் மற்றும் நகர்ப்புறங்களின் வரைபடமாகும். அவை நிலம் மற்றும் வீடு இருப்பிடம் (sides) குறித்து விளக்குகின்றன. 

* தல வரைபடம் (Topographical) சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்களைத் தருவனவாகும். இவை இந்தியாவின் நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது. இவ்வகை பெரிய அளவை நிலவரைபடங்கள் இயற்கை அமைப்புக்களான குன்றுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் குறித்தும், கலாச்சார அமைப்புக்களான மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள், சாலைகள், மற்றும் கால்வாய்களை குறித்தும் விளக்குகின்றன.

சிறிய அளவை வரைபடங்கள் : கண்டங்கள் அல்லது நாடுகள் போன்ற பெரிய அளவிலான பகுதிகளை சிறிய அளவுகளைக் கொண்டு வரையப்படும் வரைபடம் சிறிய அளவு வரைபடமாகும். இவ்வகை வரைபடம் 1 செ.மீ = 1000 கி.மீ. ஆகும். 

* சுவர் வரைபடங்கள் என்பது அதிகபரப்பளவை காட்டும் சிறிய அளவை படங்களாகும். இவை வகுப்பறையில் மணவர்களுக்கும் மற்றும் அலுவலகங்களிலும் பயன்படுகிறது. சிறிய அளவை வரைபடமானது அதிக பரப்பளவிலான இடங்களுக்கு குறைந்த அளவு விவரங்களைக் கொடுக்கக் கூடியது. 

* நிலவரைபட நூல் என்பது பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் ஆகும். இவை அதிக பரப்பளவிலான கண்டங்கள் மற்றும் நாடுகளைக் காட்டும் சிறிய அளவை வரைபடங்களைக் கொண்டது. மலைகள், பிரதான சாலைகள், இரயில்பாதைகள் மற்றும் முக்கிய நகரங்களை நிலவரைபட நூல் வரைபடங்களில் முதன்மையாகக் காட்டப்படுகின்றன. அதிக பரப்பின் புவியியல் கூறுகள் குறித்து அறிந்துகொள்ள நிலவரைபட நூல் உதவுகிறது.

நில வரைபடத்தை  உருவாக்கும் அறிவியல் என்பது கார்ட்டோகிராஃபி என அழைக்கப்படுகிறது. கார்டே (Carte) என்பது நிலவரைபடம் கிராபிக் (graphic) என்பது வரைதல் நிலவரைபடத்தை வரைந்து உருவாக்குபவர் கார்டோகிராஃபர் (Cartographer) ஆவர்.


நிலவரைபட நூலின் வகைகள் 

* பள்ளி நிலவரைபட நூலில் வீடு மற்றும் நாடுகள் குறித்து போதுமான விவரங்களை அளிக்கக் கூடிய வரைபடங்கள் உள்ளன. 

* மேம்படுத்தப்பட்ட நிலவரைபட நூல் கண்டங்களின் சிறிய பகுதிகளின் அதிக விவரங்கள் கொண்டதுடன் குறிப்பு நிலவரைபட நூலாகவும் பயன்படுத்தப்படுகின்றன. 

* பிராந்திய நிலவரைபட நூல் சிறிய பரப்பளவிற்கான, அதிக அளவு விவரங்களை உள்ளடக்கியது. இவை பிராந்திய திட்டமிடுதலுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்படுகிறது.

* தேசிய நிலவரைபட நூல் என்பது நாடுகளைக் குறித்து அதிக விவரங்கள் உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்படுகிறது. இவை பெரிய அளவையுடன் இரு நாட்டின் பொதுவான மற்றும் புவியியல் கூறுகள் குறித்தும் சித்தரிக்கின்றது.


கருத்தின் அடிப்படையில் 

இயற்கை அமைப்பு நிலவரைபடங்களாது நிலத்தோற்றம் (மலை) பாறையில் மண், வடிகால், வானிலை கூறுகள் மற்றும் தாவரங்கள் போன்ற இயற்கை அமைப்புகளைக் காட்டுகிறது. 

* நிலத்தோற்ற வரைபடம் பொதுவான நில அமைப்புகளான மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், பீடபூமிகள் மற்றும் நதிகளைக் பற்றிக் காட்டக்கூடியது.

• புவியியல் வரைபடம் புவியியல் கட்டமைப்புகள், பாறைகள் மற்றும் தாதுக்களைக் குறித்து வரையப்படுகிறது. 

* காலநிலை வரைப்படங்கள் வெப்பநிலை பரவல், மழையளவு, மேகமூட்டம் ஒப்பு ஈரப்பதம், காற்று வீசும் திசை, வேகம் மற்றும் சில வானிலை கூறுகளைக் குறித்து காட்டுகின்றன.

* மண் நிலவரைபடங்கள் என்பன வெவ்வேறு வகையான மண் மற்றும் அதன் பண்புகள் குறித்துக்காட்ட வரையப்படுவனவாகும்.

* கலாச்சார நிலவரைபடங்கள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளைக் காட்டுவது ஆகும்.

* அரசியல் நிலவரைபடங்கள் ஒரு நாட்டின் மாநிலம் அல்லது மாவட்டத்தின் நிர்வாக பிரிவுகளைக் காட்டுவதாகும். சம்பந்தப்பட்ட நிர்வாகப் பிரிவுகளில் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை எளிதாக்க இந்த வரைபடம் உதவுகிறது.

* மக்கள் தொகை நிலவரைபடங்கள் என்பது மக்கள் தொகை பரவல், அடர்த்தி மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு அமைப்பு மற்றும் படித்தோர் குறித்துக்காட்டுவது ஆகும்.

* பொருளாதார நிலவரைபடங்கள் வெவ்வேறு வகைப்பட்ட பயிர்வகைகள், தாதுக்கள், தொழிற்சாலை அமைவிடங்கள், வாணிப வழிகள், பொருள்களை எடுத்து செல்லும் வழிகளைப் பற்றி விளக்குவது ஆகும்.

* போக்குவரத்து நிலவரைபடங்கள் என்பது சாலைகள், இருப்புப்பாதை, இரயில்வே நிலையம், விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றைக் காட்டுகின்றன.

* கருத்து நிலவரைபடங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அம்சம் அல்லது கருத்தின் பரவலைக் கொண்டும், இடத்திற்கு இடம் மாறுபடுதலைக் குறித்தும் குறிப்பிடுகின்றன.

மின்னணு வரைபடங்கள் (Digital Maps) என்பது உலகம் முழுவதும் அமைந்துள்ள புவியியல் பகுதிகள் மற்றும் தலங்களைக் குறித்து அதிகப்படியான தகவல்களை வழங்கும் வலைதள சேவைப்பகுதி ஆகும்.


நிலவரைபடக் கூறுகள்

நிலவரைபடம் அதிக தகவல்களை வழங்குகிறது. நிலவரைபடத்தினை எப்படி வாசித்து விளக்கமளிக்க வேண்டுமென ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில அம்சங்களுடன் வழங்கப்படும் நிலவரைபடமானது அதில் அடங்கியுள்ள தகவல்களை அறிய உதவும் கருவியாக செயல்படுகிறது. தலைப்பு, திசை, அளவை, குறிப்பு அல்லது சின்னங்களின் விளக்கங்கள் போன்றவை நிலவரைபடத்தின் அடிப்படைக் கூறுகள் ஆகும்.


தலைப்பு

நிலவரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விவரிக்கும் தலைப்பினை ஒவ்வொரு நிலவரைபடமும் கொண்டிருக்கும். உதாரணமாக, இந்திய நதிகள் என்னும் தலைப்பு கொண்ட நிலவரைபடமானது இந்திய நதிகளைப் பற்றி விளக்குவதாகும்.


திசைகள்

பொதுவாக வரைபடங்கள் வடக்கு நோக்கிய நிலையில் வரையப்படுகிறது. நிலவரைபடத்தில் மற்ற திசைகளான கிழக்கு, மேற்கு, மற்றும் தெற்கு திசையை கண்டறிய உதவுகிறது. வடக்குக் குறியீட்டிற்குக் கூடுதலாக அட்சரேகைகள் மற்றும் தீர்க்க ரேகைகள் விளிம்புகளில் வரையப்படுகிறது. வடக்கு என்பது 'N' எனும் எழுத்தால் அம்புக்குறியீட்டுடன் குறிக்கப்படுகிறது.


அளவை

நிலவரைபடத்தின் அளவை என்பது நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்திற்கும் நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் ஆகும். உதாரணமாக குறிக்கப்படும் அளவையானது 1 செ.மீ. = 10 கி.மீ அதாவது, நிலவரைபடத்தில் 1 செ.மீ. என்பது நிலத்தில் 10 கி.மீ.க்கு சமம். இது நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்தை கண்டறிய உதவுகிறது.



குறிப்பு

குறிப்பு என்பது நிலவரைபடத்தில் வேறுபட்ட இயற்கை மற்றும் கலாச்சார அம்சங்களைக் காட்ட பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் மற்றும் குறியீடுகளைக் குறித்து விளக்குவதாகும். நிலவரைபடத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான சின்னம் மற்றும் குறியீடுகள், தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும். அவை மரபுக்குறியீட்டுகளின் சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிலவரைபடம் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணம் மற்றும் சின்னங்களை விளக்கும் குறிப்பினைப் பெற்றுள்ளன. நிலவரைபடத்தில் குடியிருப்புகள், பாலங்கள், தபால்நிலையங்கள், இரயில்வே பாதைகள் மற்றும் காடுகள் போன்றவற்றின் உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது கடினம். அவைகளைக் குறிப்பிட்ட சில வண்ணங்கள், சின்னங்கள் அல்லது எழுத்துக்களால் சித்தரித்துக் காட்டப்படுகின்றன.



நிறங்கள் - அமைப்புகள் 

வெள்ளை - பனி 

மஞ்சள் - விவசாயம் 

பச்சை - காடுகள் 

நீலம் - நீர்நிலைகள் (பெருங்கடல்/கடல்/ஆறுகள்) 

பழுப்பு - மலை, குன்று மற்றும் சம உயரக்கோடு (Contour) 

சிவப்பு - குடியிருப்பு, சாலை 

கருப்பு - இரயில் பாதை 


முறைக்குறிகளும் குறியீடுகளும்

நிலவரைபடத்தில் புவிக்கூறுகளை, முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளாக காட்டப்படுகின்றன. இத்தகைய குறியீடுகள் கோட்டுக் குறியீடுகள் (அல்லது) நிறங்கள் போன்றவற்றால்காட்டப்படுகின்றன. இந்தியநில அளவைத் துறையானது நிலவரைப்படத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ளது. நிலவரைப்படத்தில் பொதுவாக பல வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.



நிலவரைபடத்தின் பயன்கள் 

1. ஒரு இடத்தினை நேரில் சென்று பார்க்காமல் நிலத்தோற்றம் மற்றும் நில அமைப்புகளின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. 

2 நிலவரைபடங்கள் இராணுவத்தின் திட்டமிடல் பணியில் மகத்தான செயல்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

3. விமானங்கள் குறிப்பிட்ட இடத்தை சேரவும், கப்பல் கடலில் பாதுகாப்பாக செல்லவும் உதவுகின்றது. 

4. நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.



நிலவரைபடம் மற்றும் புவி மாதிரிக்கு இடையேயள்ள வேறுபாடுகள்

நில வரைபடம் 

1. நிலவரைபடம் என்பது புவியின் இரு பரிமாண அமைப்பு. 

2. சிறிய மற்றும் பெரிய பரப்பளவைக் காட்டுகிறது. 

3. ஒரு இடத்தின் அதிகப்படியான தகவல்களை நிலவரைபடம் வழங்க இயலும். 

4. நிலவரைபடமானது கையில் எடுத்துச் செல்ல ஏதுவானது.

புவி மாதிரி 

1. புவி மாதிரி என்பது புவியின் முப்பரிமாண அமைப்பு. 

2. புவியின் மாதிரி அமைப்பு. 

3. ஒரு இடத்தின் அதிகப்படியான தகவல்களை நிலவரைபடம் வழங்க இயலாது. 

4. புவிமாதிரியினை கையில் எடுத்துச் செல்ல இயலாது.


மீள் பார்வை

நிலவரைபடம் என்பது புவியின் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ கொடுக்கப்பட்ட அளவையில் வரைந்து காட்டுவதாகும். 

நிலவரைபடமானது அளவையின் அடிப்படையிலும், கருத்தின் அடிப்படையிலும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. 

நிலவரைபடத்தின் அடிப்படைக் கூறுகள் தலைப்பு, திசை, அளவை மற்றும் குறிப்பு. 

அடிப்படை திசைகள் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு.

நிலவரைபடத்தின் அளவை என்பது வரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்திற்கும், நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் ஆகும். 

நிலவரைபடத்தின் குறிப்பு என்பது வரைபடத்தின் விவரங்களை விளக்குகிறது. இந்திய நில அளவைத் துறையானது நிலவரைப்படத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ளது.


கலைச்சொற்கள் :

1.  நிலவரைபடம் - Representation of Earth on a flat surface - Map

2. அளவை - Ratio between the Actual distance of two points on the earth and the distance on a map - Scale

3. குறி விளக்கம் - It is a representation of different geographical features by using different colours and symbols - Legend

4. நிலத்தோற்ற வரைபடம் - Map that shows the physical appearance of hills, mountains, ridges, valleys, slopes - Relief maps

5. வரைபடம் - Collection of several maps - Atlas

6. முதன்மையான திசைகள் - North, south, east and west are called cardinal Direction - Cardinal direction

7. கருத்துப்படம் - Represent the distribution of a particular feature. - Thematic map

8. பகுத்துக் குறியிட்ட அளவு - Arranged in a series - Graduated




References: 

1. Practical Geography R.L. Singh Practical Geography: 

2. RP. Misra, A. Ramesh (2002) Fundamental of Cartography, publishedandprintedby Ashok kumar Mittal. New Delhi.


Tags : Term 3 Unit 2 | Geography | 7th Social Science மூன்றாம் பருவம் அலகு -2 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Geography : Term 3 Unit 2 : Map Reading : Map Reading Term 3 Unit 2 | Geography | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -2 : நிலவரைபடத்தை கற்றறிதல் : நிலவரைபடத்தை கற்றறிதல் - மூன்றாம் பருவம் அலகு -2 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -2 : நிலவரைபடத்தை கற்றறிதல்