Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | மௌரியப் பேரரசு

வரலாறு - மௌரியப் பேரரசு | 11th History : Chapter 4 : Emergence of State and Empire

   Posted On :  27.07.2022 02:45 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

மௌரியப் பேரரசு

கிரேக்க வரலாற்றாளர்கள் எழுதிய சமகாலத்துப் பதிவுகள் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவந்த போது, சந்திரகுப்தர் தட்சசீலத்தில் வாழ்ந்துவந்த இளைஞராக இருந்தார் என்று குறிப்பிடுகின்றன.

மௌரியப் பேரரசு

கிரேக்க வரலாற்றாளர்கள் எழுதிய சமகாலத்துப் பதிவுகள் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவந்த போது, சந்திரகுப்தர் தட்சசீலத்தில் வாழ்ந்துவந்த இளைஞராக இருந்தார் என்று குறிப்பிடுகின்றன. கிரேக்க வரலாற்றாளர்கள் அவரது பெயரை ‘சண்ட்ரகோட்டஸ்' என்றும் ‘சண்ட்ரகோப்டஸ்’ என்றும் குறிப்பிடுகின்றனர். இவை ‘சந்திரகுப்தர்’ என்ற சொல்லின் திரிபுகள். அலெக்சாண்டரிடமிருந்து பெற்ற உந்துதலால் சந்திரகுப்தர் பல ஆண்டுகள் கழித்து நந்தர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அவர்களை விரட்டினார். மக்கள் செல்வாக்கு இல்லாத அரசரை எதிர்த்து கிளர்ச்சி செய்யுமாறு மக்களைத் தூண்டியோ அல்லது மக்கள் செல்வாக்கு இல்லாத அரசனைத் தூக்கி எறிய மக்களின் ஆதரவைப் பெற்றோ இதை அவர் சாதித்தார். சந்திரகுப்தர் பொ.ஆ.மு. 321 இல் மௌரியப் பேரரசை அமைத்து, அதன் முதல் பேரரசர் ஆனார்.




சந்திரகுப்தர் தனது பேரரசை குஜராத் வரை விரிவுப்படுத்தியிருந்தார் என்று ஜுனாகத் பாறை எழுத்துகள் மூலம் (இது பற்றி நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம்) அறிகிறோம். உள்ளூர் வரலாறுகளின்படி, அவரது மற்றொரு சாதனை, அவர் அலெக்சாண்டர் விட்டுச் சென்ற கிரேக்கத் தளபதிகளுடன் போரிட்டு அவர்களை அழித்ததாகும். இதனால் பேரரசை விரிவாக்கும் அவரது திட்டத்திற்கான வழியும் கிடைத்தது. அவரது ஆட்சியில் மற்றொரு முக்கியமான நிகழ்வு, அவர் அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவரான செலியுகஸுடன் நடத்திய போர் ஆகும். அலெக்சாண்டரின் மரணத்திற்குப் பிறகு, செலியுகஸ் பஞ்சாப் வரை பரவியிருந்த பகுதியில் தமது அரசை நிறுவினார். பொ.ஆ.மு. 301க்குச் சிலகாலம் முன்பாகச் சந்திரகுப்தர் அவர்மீது போர் தொடுத்துத் தோற்கடித்து, பஞ்சாப் பகுதியை விட்டே விரட்டினார். இறுதியில் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி சந்திரகுப்தர் செலியுகஸிற்கு 500 போர் யானைகளை வழங்கினார். செலியுகஸ் தனது தூதரைச் சந்திரகுப்தரின் அரசவைக்கு அனுப்பினார். அந்தத் தூதர்தான் மெகஸ்தனிஸ். அந்த மெகஸ்தனிஸிற்கு நாம்மிகவும் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் சந்திரகுப்தர் குறித்து நாம் அறியவரும் பெரும்பாலான தகவல்கள், மெகஸ்தனிஸ் எழுதிய ‘இன்டிகா’ என்ற நூலில் உள்ளவையே. இந்த நூலின் மூலம் கிடைக்கவில்லை. ஆனால் பல கிரேக்க வரலாற்றாளர்கள் சந்திரகுப்தரின் அரசு, நிர்வாகம் ஆகியவை குறித்து மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ள பகுதிகளை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார்கள்.

சந்திரகுப்தர்

சந்திரகுப்தர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பது வெளிப்படை. தனது பரந்த அரசை நிர்வகிக்க அவர் ஒரு வலுவான நிர்வாக இயந்திரத்தை மறு கண்டுபிடிப்பு செய்தாக வேண்டி இருந்தது. (நிர்வாக அமைப்பும், அரசு முறையும் அடுத்த பகுதியில் விவரிக்கப்படுகின்றன.) அரசியல் தந்திரங்களுக்குப் பெயர் போன சாணக்கியரின் ஆலோசனைகள் நிர்வாகத்தை நடத்துவதற்கு உதவின. சந்திரகுப்தரின் சமகால பௌத்த, சமண நூல்கள் சாணக்கியர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் அனைவருக்கும் பரிச்சயமான வாய்மொழிக்கதைகள் சந்திரகுப்தர் ஆட்சியின் சிறப்பிற்குச் சாணக்கியரின் அறிவும், மேதமையும்தான் காரணம் என்கின்றன. விஷ்ணுகுப்தர் என்று அழைக்கப்பட்ட சாணக்கியர் அல்லது கௌடில்யர் ஒரு பிராமணர். நந்தர்களின் கடும் எதிரி. நந்தர்களை வீழ்த்துவதற்கான திட்டங்களை இவர்தான் வகுத்தார் என்றும், சந்திரகுப்தர் மகதப் பேரரசராவதற்கு உதவினார் எனவும் கூறப்படுகிறது. அரசியல் நிர்வாகம் குறித்த புகழ்பெற்ற நூலான அர்த்த சாஸ்திரத்தை சாணக்கியர் எழுதினார் என்பது மரபு. மகத நாட்டிற்கு வரவிருந்த படையெடுப்பைத் தடுப்பதற்கு இவரது சூழ்ச்சி மிக்க தந்திரங்களும், அற்புதமான யுக்தியும் முத்ராராட்சசம் எனும் நாடகத்தின் கருப்பொருளாகும்.


பிந்துசாரர்

சந்திரகுப்தரின் புதல்வர் பிந்துசாரர் பொ.ஆ.மு. 297இல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்குப் பின் ஆட்சியில் அமர்ந்தார். சந்திரகுப்தருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. சில சமண நூல்கள் சொல்வது போல, அவர் இவ்வுலக வாழ்வைத் துறந்து, சமணத் துறவியாகி இருக்கலாம். சமண கதைகளின்படி, சந்திரகுப்தர், கர்நாடகாவின் சரவணபெலகொலாவிற்கு அருகிலுள்ள சந்திரகிரியில் துறவியாக வாழ்ந்ததாகத் தெரிகிறது. பிந்துசாரர் நல்ல திறமையான அரசர். மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார். இவருக்கு சாணக்கியரும் மற்ற அமைச்சர்களும் ஆலோசனைகள் வழங்கினர். பேரரசின் பல பகுதிகளுக்கு இவருடைய புதல்வர்கள் அரசப்பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர். இவருடைய ராணுவ வெற்றிகள் பற்றி நமக்கு அதிகம் தெரியவில்லை. ஆனால், பிந்துசாரருக்குப் பிறகு மௌரியப் பேரரசு சிதையாமல் அப்படியே அவருடைய மகனான அசோகர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் பொ.ஆ.மு. 272இல் இறந்திருக்க வேண்டும். அசோகர் அவர் தேர்ந்தெடுத்த வாரிசு அல்ல. நான்காண்டுகளுக்குப் பிறகே, பொ.ஆ.மு. 268இல் ஆட்சிக்கு வந்தார் என்பதன் மூலம் அரசுரிமைக்காகப் புதல்வர்களுக்கிடையில் போட்டி நடந்திருக்கிறது என்பதை உய்த்துணர முடிகிறது. அசோகர் தட்சசீலத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்தார். அங்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியை அடக்கினார். பின்னர் அவந்தியின் தலைநகரும், முக்கிய நகரமும், வணிக மையமுமான உஜ்ஜயினியில் அரசின் பிரதிநிதியாக இருந்தார். பேரரசராக அவர் அற்புதமான நினைவுச் சின்னங்களைக் கட்டியவர் என்ற புகழ் பெற்றவர். அவை பாடலிபுத்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் வெளிப்பட்டுள்ளன. அவரும் மேற்கு ஆசியாவுடன் நெருக்கமான உறவு என்ற மரபைத் தொடர்ந்தார். இருதரப்பிலும் நல்லுறவு காக்க தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்.

அசோகர்

சோகரது ஆட்சிக்காலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியின் எட்டாவது ஆண்டில் நடந்த கலிங்கத்தின் (இன்றைய ஒடிசா) மீதான அவரது படையெடுப்பு ஆகும். இது ஒன்றுதான் மௌரியர்கள் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்த படையெடுப்பு ஆகும். போரில் கொல்லப்பட்டவர்கள், காயம் பட்டுப் பின்னர் இறந்தவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை பல பத்தாயிரங்களாகும். இப்போர் மற்ற போர்களை விட மிகக் கொடூரமானதாக, வெறிகொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இப்போர் மகதப் பேரரசிலிருந்து பிரிந்து சென்ற, கலிங்கத்தைத் தண்டிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட போர் ஆகும். (ஹதிகும்பா கல்வெட்டு கலிங்கம் நந்தப் பேரரசின் பகுதியாக இருந்தது என்று குறிப்பிடுகிறது) இந்த அழிவினால் அசோகர் மிகவும் வருந்தினார். போரினால் ஏற்பட்ட துன்பங்களால் நெகிழ்ந்த அவர் மனிதாபிமான மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக மாறி, பௌத்தராக மதம் மாறினார். அவர் புதிதாய் அறிந்த மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் வரிசையாகப் பதிவு செய்யப்பட்டன. இவை அமைதி, அறவழிப்பட்ட நேர்மை, தம்மம் (சமஸ்கிருதத்தில் தர்மம்) மீதான அவரது பெருவிருப்பத்தை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.


அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள்

அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் மௌரியப் பேரரசு பற்றிய தகவல்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட சான்றுகளாகத் திகழ்கின்றன. 14 முக்கியமான பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள், கலிங்க கல்வெட்டுக் கட்டளைகள் என்று அழைக்கப்படும் 2 கல்வெட்டுக் கட்டளைகள், 7 தூண் கல்வெட்டுக் கட்டளைகள், சில சிறு பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள், மிகச் சில சிறு தூண்களில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் என்று மொத்தம் 33 கல்வெட்டுக் கட்டளைகள் இதுவரை கிடைத்துள்ளன. முக்கியமாகப் பாறைகளில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் ஆப்கனிஸ்தானின் காந்தஹார், வடமேற்கு பாகிஸ்தானின் ஷாபஸ்கார்ஹி மற்றும் மன்ஷேராவிலிருந்து வடக்கே உத்தரகாண்ட் மாவட்டம், மேற்கே குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா, கிழக்கே ஒடிசா, தெற்கே கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டம் வரை பரவியுள்ளன. சிறு பாறையில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் வடக்கே நேபாளம் (லும்பினி) வரை காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுக் கட்டளைகள் பெரும்பாலும் பிராமி எழுத்துமுறையிலும், சில கல்வெட்டுக் கட்டளைகள் மகதி மற்றும் பிராகிருதத்திலும் அமைந்துள்ளன. காந்தஹார் பிரகடனங்கள் கிரேக்கத்திலும், அராமிக்கிலும் உள்ளன. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள இரண்டு கல்வெட்டுக் கட்டளைகள் கரோஷ்டி எழுத்தில் உள்ளன.



இந்த மௌரியப் பேரரசின் கல்வெட்டுக் கட்டளைகள் புவியியல் நோக்கில் பரவியுள்ள விதம், அசோகர் ஆட்சி செய்த ஒரு பெரிய பேரரசின் பரப்பளவைக் காட்டுகிறது. அவரது இரண்டாவது அரசாணை அவரது பேரரசின் எல்லைக்கு வெளியேயான நிலப்பரப்புகளைக் கூறுகிறது. அவை; “சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரளபுத்திரர்கள் (சேரர்கள்), தாமிரபரணி, யோன (யவன) அரசர் அந்தியோகா (அந்தியோகஸ்) இந்த அந்தியோகாஸ் அருகில் இருந்த நாடுகளின் அரசர்கள்”. இந்த அரசாணை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றில் அசோகருக்கு இருந்த நம்பிக்கை, மக்களது நல்வாழ்வின் மீது அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றை வலியுறுத்திக் கூறுகின்றன. வன்முறை, போர் ஆகியவற்றை நிராகரித்து அமைதியையும் தர்மத்தையும் வலியுறுத்தியதன் மூலம் அசோகர் ‘ஒரு பேரரசர் போர்கள் மூலம் தனது அரசை விரிவுபடுத்தி, வலுப்படுத்த வேண்டும் என்று அக்காலத்தில் நிலவி வந்த கொள்கையை முற்றிலும் நிராகரித்தார்.

மூன்றாம் பௌத்த சங்கம்

அசோகர் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று, பொ.ஆ.மு. 250இல் தலைநகரமான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த சங்கத்தைக் கூட்டியது ஆகும். அசோகரது ஆழமான பௌத்தமத ஈடுபாட்டால் பௌத்த மதத்திற்கு அரச ஆதரவு கிட்டியது. பௌத்தத்தை மற்ற பகுதிகளுக்கும் பரப்பவும், மக்களை பௌத்த மதத்திற்கு மாற்ற பிரச்சாரகர்களை அனுப்பவும் வேண்டும் என்பது இச்சங்கத்தின் முக்கியமான முடிவாகும். இவ்வாறாக பௌத்தம் மதமாற்றம் செய்யும் மதமாகவும் மாறியது. பேரரசிற்கு வெளியே அமைந்த பகுதிகளான காஷ்மீர், தென்னிந்தியா போன்ற பகுதிகளுக்கும் பிரச்சாரகர்கள் அனுப்பப்பட்டார்கள். அசோகர் தனது குழந்தைகளான மகேந்திரன், சங்கமித்திரை ஆகியோரை மதத்தைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பினார் என்பர். புத்தர் அமர்ந்த போதி மரத்தின் சென்றதாகவும் நம்பப்படுகிறது.


அசோகரது ஆட்சிக்காலம் கி.மு.232 வரை இருந்திருக்கலாம். அவரது ஆட்சி நிர்வாகம், அகிம்சை குறித்த புரட்சிகரக் கருத்துக்கள் இன்று நமது சமகால உணர்வுகளில் ஓர் அதிர்வை ஏற்படுத்தினாலும், அக்காலத்தின் யதார்த்தத்திற்கு அவை பொருத்தமாக இல்லை என்பது வருந்தத்தக்கதே. அவரது மரணத்திற்குப் பிறகு, மகதப் பேரரசு மெதுவாகச் சிதைந்து, ஐம்பதாண்டுகளுக்குள்ளாக அழிந்துபோனது. ஆனால், அசோகரின் மரணம், மௌரியப் பேரரசின் அழிவு ஆகியனவற்றுக்கு முந்தைய இரண்டு நூற்றாண்டுகளும் இந்திய காலகட்டமாகும். அது மிகப் பெரிய மாற்றத்தின் காலமாக இருந்தது. இந்தப் பேரரசு கிட்டத்தட்ட துணைக்கண்டத்தின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பகுதிகளில் பரவியிருந்தது. நிர்வாகம் முறைப்படுத்தப்பட்டது. அதிகார நிறுவனங்கள் வளர்ச்சியடைந்தன. பொருளாதார விரிவாக்கம் நடந்தது. மேலும், ஏற்கெனவே நிலைபெற்றிருந்த சனாதன பழக்க வழக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கிய புதிய மதங்களும் தத்துவங்களும் தோன்றின.


Tags : History வரலாறு.
11th History : Chapter 4 : Emergence of State and Empire : Mauryan Empire History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் : மௌரியப் பேரரசு - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்