Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | அரசியல் அறிவியலின் பொருள், வரையறை மற்றும் தோற்றம்
   Posted On :  25.09.2023 03:23 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்

அரசியல் அறிவியலின் பொருள், வரையறை மற்றும் தோற்றம்

'அரசியல்' என்ற சொல் 'பொலிஸ்' என்ற கிரேக்க வார்த்தையுடன் நெருங்கிய தொடர்புடையது, அதாவது 'நகர-அரசு' (நகரங்களின் விவகாரங்களுக்கு-அரசின் விவகாரங்களுக்கு).

அலகு 1

அரசியல் அறிவியலின் அறிமுகம்




அரசியல் அறிவியலின் பொருள், வரையறை மற்றும் தோற்றம்

அரசியல்


அரசியல் என்றால் என்ன? எனது சிறு வயது முதலே தேநீர் கடைகள், உணவகங்கள், பேருந்துகள், இப்படி எங்கே போனாலும் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்கிறேனே!... இதனைப்பற்றி பேசும்போதெல்லாம் பலரும் மிகவும் தீவிரமாக மாறிவிடுகிறார்களே!... அதனாலேயே நானும் இந்த அரசியல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும்!!


கற்றலின் நோக்கங்கள் 

❖ இந்த அறிமுக அத்தியாயம் அரசியல் என்பதன் பொருள் மற்றும் மக்களின் வாழ்வில் அது எந்த விதமான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்ற நுண்ணறிவைத் தருவதாகும். 

❖ அரசியல் அறிவியலின் வரையறைகளையும் மற்றும் அதன் மாறிவரும் தன்மையினையும் ஆராய்தல். 

❖ அரசியல் அறிவியலின் பரப்பெல்லையை விளக்குதல்  

❖ அரசியல் அறிவியலைப் படிப்பதில் உள்ள பல்வேறு அணுகுமுறைகளை வெளிக்கொணர்தல் 

❖ அரசியல் அறிவியலுக்கும் பிற சமூக அறிவியல் பாடங்களுக்கும் உள்ள உறவினை விவாதித்தல்


அரசியல் என்ற சொல் கிரேக்க மொழியில் நகர அரசு என்ற பொருள்படும் "பொலிஸ்" (Polis) என்ற சொல்லோடு நெருங்கிய தொடர்புடையதாகும். அரசியலைக் கற்பது என்பதை பொ.ஆ.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த பிளாட்டோ (Plato) (428 BCE - 347 BCE) மற்றும் அரிஸ்டாட்டில் (Aristotle) (384 BCE - 322 BCE) ஆகிய அரசியல் தத்துவஞானிகளின் அளப்பரிய பங்களிப்பினால் தொடங்கப் பட்டதாகும். இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பு வரையிலும் அரசியலைக் கற்றறிவது என்பது வரலாறு மற்றும் தத்துவம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது எனலாம்.

அரசியல் என்பது அடிப்படையில் நன்னெறியைப் பற்றிய கல்வியாகும். அரசியல் பாடத்தின் பார்வை அரசு பற்றிய கருத்தாக்கங்கள், அரசியல் நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றோடு, அரசுகளுக்கிடையேயான உறவுமுறைகள் பற்றியதாகவும் மட்டுமே இருந்தது.19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் அரசியல் பாடத்தின் பார்வையானது சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டிற்கும் இடையோன பிரச்சனைகளைச் சுற்றியே இருந்து வந்தது. 21ஆம் நூற்றாண்டில் அரசியல் பாடத்தின் மையக்கரு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையேயான மோதல்கள் பற்றியதாகவே இருந்து வருகிறது. இது தவிர மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பாலின சமத்துவம், பன்னாட்டு அமைதி மற்றும் ஒத்துழைப்பு போன்றவை அரசியலின் முக்கியமாகக் கருதப்படாத பிற மையக் கருக்களாக இருந்தன.


வரலாற்றுக்காலம் முதலே அரசியலின் மையக்கருத்து பற்றி அரசியல் தத்துவஞானிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துக்களே நிலவி வந்தது. அரசியல் அறிவியலின் தந்தை அரிஸ்டாட்டில் அரசியல் பற்றிய உண்மைகள் மற்றும் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு முறைகளையும் முறைப்படி படித்து அறிந்துகொள்வதே அரசியல் பாடத்தின் முக்கிமான பணி என்கிறார். அவர் மேலும் பல்வேறு அரசியல் முறைமைகளைப் பற்றி வகைப்படுத்தி விளக்குகிறார். அரசியல் பாடத்தின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்கு பிளாட்டோவும், அரிஸ்டாட்டிலும் பெரும் பங்களிப்பாற்றியுள்ளனர். அரிஸ்டாட்டில் தனது குருவான பிளாட்டோவின் அரசியல் வகைப்பாட்டினை மேலும் வரலாற்று ரீதியாக பகுப்பாய்வு செய்து விளக்கியுள்ளார். இவர்கள் இருவரும் பல்வேறு வகையான அரசாங்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதனை புரிந்து கொள்ள முயற்சி செய்தனர்.

இடைக்காலத்தில் புனித ரோமானிய பேரரசின் காலத்தில் அரசியல் அதிகாரம் முழுவதும் பேராலயங்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அரசியல் பற்றி பேசும் இடமாக பேராலயம் இருந்தது. புனித அகஸ்டினின் நூலான ‘கடவுளின் நகரம்' (The City of God) எனும் படைப்பில், அரசியல் தத்துவம் என்பது மதத்தின் ஒரு அங்கமாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது. இடைக்கால ஐரோப்பிய தத்துவஞானிகள் மற்றும் கிரேக்க சிந்தனையாளர்கள் அனைவருமே அரசியல் என்பதனை அரசின் ஒரு அங்கமாகக் கருதாமல் மதம் மற்றும் பக்தி சார்ந்ததாகவும், சமூகம் சார்ந்ததாகவும் மட்டுமே பார்த்து வந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்ததாகும்.

இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் போது நிக்காலோ மாக்கியவல்லி, (Niccolo Machiavelli) செயலறிவிலான கூர்நோக்குதல் மற்றும் பட்டறிவின் (empiricism) அடிப்படையில் அரசியல் அமைப்புகள் மற்றும் அரசியல் நடத்தைகள் பற்றிய தனது மதச்சார்பற்ற அணுகுமுறையின் மூலம் நவீன அரசியல் அறிவியல் பாடத்திற்கு அடிகோலினார் என்று கூறலாம். அமெரிக்க அரசியல் அறிவியல் அறிஞர் ஹெரால்ட் லாஸ்வெல் (Harold Lasswell) என்பாரின் கூற்றுப்படி அரசியல் அறிவியல் என்பது "யார், எப்போது, எதனை, எப்படி அடைகிறார்கள்?" என்பது பற்றியதாகும். "எல்லா சமூகங்களும் வேறுபட்ட தங்களின் விருப்பங்களையும், தேடல்களையும் அடைவதற்கு முயற்சிப்பதும், இந்த வேறுபட்ட தேடல்களின் விளைவாக எழும் மோதல்களை ஒழுங்குபடுத்த உருவானதே அரசியல்" என்றும் கூறுகிறார். மேலும், தற்கால சமூகங்களில் காணப்படும் பற்றாக்குறை மூலவளங்களை அதிகமான தேவைகளுக்கு முறையாக மற்றும் திறமையாக பகிர்ந்து அளிப்பதே அரசியல் எந்திரம் என்பதும் உணரப்பட வேண்டிய செய்தியாகும். காரல் மார்க்சின் (KarlMarx) கூற்றுப்படி "அரசியல் என்பது அரசியல் அதிகாரம் மற்றும் வகுப்பு மோதல்கள்" பற்றியதாகும். இதனையே டேவிட் ஈஸ்டன் (David Easton) "விழுமியங்களை அதிகாரப் பூர்வமாக ஒதுக்கீடு செய்தல்" (Authoritative Allocation of Values) என்று கூறுகிறார்.

அரசியல் அறிஞர்கள் பலரும் அரசியல் என்பதனை அதிகாரம், முறையான ஒழுங்கமைவு, மற்றும் நீதி ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே விவரித்துள்ளனர். விதிமுறைகளை உருவாக்கி, நடைமுறைப்படுத்தவும் அதன் மூலம் மனிதர்களின் செயல்பாடுகளை நடத்தையை ஆட்கொள்ள வல்ல ஆற்றல் எதுவோ அதுவே அதிகாரம் எனப்படும்.


உங்களுக்குத் தெரியுமா?

மகிழ்ச்சி பற்றிய அரிஸ்டாட்டிலின் கருத்து 

மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சம் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்தாகும். ஒரு மனிதன் தற்காலிக இன்பத்தை தேடுவதில் நேரத்தை செலவிடுவதைக் காட்டிலும், நிரந்தரமான மகிழ்ச்சியை தேடுவதே சிறந்தது என்பது அரிஸ்டாட்டிலின் கருத்தாகும். ஒருவனின் மகிழ்ச்சி என்பது பொருள் அடிப்படையிலானவற்றில் இல்லை என்பதும் அவனுடைய முழுமையான திறமை மற்றும் உண்மையான தன்மையை அறிந்துகொள்வதில்தான் இருக்கிறது என்பதும் அரிஸ்டாட்டிலின் கருத்தாகும். சுருங்கக் கூறின் மகிழ்ச்சி என்பது ஒருவனின் உள்ளேயே இருக்கிறதே தவிர வெளியில் இல்லை என்பது அவரின் கருத்து. அரிஸ்டாட்டிலின் புகழ்பெற்ற கருத்தாக்கம் ஒன்று பின்வருமாறு "மனிதனின் உயிர்வாழ்தலின் நோக்கம் மற்றும் பொருளே மகிழ்ச்சியை தேடுவதேயாகும்"

அதிகாரம் சட்டப்படியோ அல்லது சட்டப்படி இல்லாமலோ கூட  இருக்கலாம். இங்கே அதிகாரம் மற்றும் அதிகாரத்துவம் என்ற இரண்டு கருத்தாக்கங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். சட்ட அங்கீகாரம் இல்லாமல் வெறும் ஒப்புதலை மட்டுமே பெற்றதனை “அதிகாரம்” (Power) என்றும், சட்ட அங்கீகாரம் பெற்ற செயல்பாட்டினை “அதிகாரத்துவம்” (Authority) எனலாம். அதிகாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தப்படும்போது மக்கள் அதனை ஏற்றுக்கொள்கின்றனர்.

அரசியல் என்பது அரசியல் அமைப்பை உருவாக்கும் கட்டமைப்பு, விதிமுறைகள், வழிமுறைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றியதாகும். பெரும்பான்மையான மக்கள் ஒரு சிலரால் ஆளப்படும்போது அத்தகைய அரசு இயந்திரம் நியாயமானதாக அமைந்திருக்க வேண்டியது அவசியமானதாகும். எனவே அதிகாரத்தினை செயல்படுத்தும்போது அது நீதியின் மீது கட்டமைக்கப்பட்டதாக இருக்க வேண்டியது முக்கியமாகும். இவ்வாறாக அதிகாரம், முறையான ஒழுங்கமைவு, மற்றும் நீதி ஆகியவை அரசியல் பாடத்தின் அடிப்படை கருத்தாக்கங்கள் ஆகும்.19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து அரசியல் குறித்த கல்விப்புல படிப்பு அரசியல் அறிவியல் என அழைக்கப்படலாயிற்று. 

மாணவர்: அய்யா! நமது கலந்துரையாடலில் அரசியலைப்பற்றி குறிப்பிடும்போதெல்லாம் கிரேக்க சிந்தனையாளர்களான பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டிலைப் பற்றி குறிப்பிடுகிறீர்களே! இந்திய அளவில் முதல் அரசியல் சிந்தனையாளர் என யாரைக் குறிப்பிடலாம் அய்யா !


ஆசிரியர்: இந்திய அளவில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை நாம் முதல் அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவர் எனக் கருத முடியும் 

மாணவர்: அய்யா! பழந்தமிழ் இலக்கியம் ஒன்று இந்தியாவின் முதல் அரசியல் நூலாக கருதப்படுவதனைக் கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. 

ஆசிரியர்: பொ.ஆ.மு. 300-இல் கௌடில்யரால் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் என்ற நூல் மிகவும் பழமையான நூலாக இருந்தாலும் அது 'அரசியல் பொருளாதாரம்' என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறது. ஆனால் திருவள்ளுவரின் திருக்குறள் அதிகமாக அரசியல் ஆளுகையைப் பற்றி பேசுகிறது. 

மாணவர்: ஓ! அப்படிங்களா அய்யா! கௌடில்யரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அய்யா ! 

ஆசிரியர்: மகிழ்ச்சி ! பொ .ஆ.மு.300 - இல் 'வட இந்தியாவை  ஆண்ட சந்திர குப்த மௌரியர் என்பவரின் முதலமைச்சராக இருந்தவர்தான்  கௌடில்யர். அவர் எழுதிய நூலின் பெயர்தான் அர்த்த சாஸ்திரம். சமஸ்கிருதத்தில் அர்த்தம் என்றால் 'பொருள்' சாஸ்திரம் என்றால் 'அறிவு' சுருக்கமாக கூறினால் அர்த்தசாஸ்திரம் என்பது ஒரு அரசியல் பொருளாதார நூல் ஆகும். 


மாணவர்: அய்யா! அப்படியெனில் அரசியல் அறிவியலுக்கு திருவள்ளுவரின் பங்களிப்பு என்னவென்று கூறுங்கள்! 

ஆசிரியர்: திருக்குறளில் இருந்து நாம், அரசின் கூறுகள், இலட்சிய அரசின் தன்மைகள், நல்ல அரசரின் குணக்கூறுகள், அமைச்சர்களுக்கான தகுதிகள், அரசு அலுவலர்களை தேர்ந்தெடுக்கத் தேவையான தகுதிகள், அதிகார ஒப்படைப்பு போன்ற பலவற்றினை அறிய முடிகிறது. திருக்குறளில் அரசு, மற்றும் அரசன் ஆகியோரின் தன்மைகள் மற்றும் பண்பு நலன்கள் பற்றி இறைமாட்சி என்ற ஓர் அதிகாரம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது. 

"படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் 

உடையான் அரசருள் ஏறு" (குறள்-381)

என்று கூறுகிறார். அதாவது ஒரு அரசன் சிறந்து விளங்குவதற்கு ஆறு அடிப்படைக் கூறுகள் அமைந்திருக்க வேண்டுமென திருவள்ளுவர் கூறுகிறார். 

(1) சிறந்த படை 

(2) நல்ல குடிமக்கள் 

(3) நல்ல மூலவளங்கள் 

(4) அறிவார்ந்த அமைச்சர்கள் 

(5) சிறந்த பாதுகாப்பு மிக்க அரண்கள் 

(6) நட்பு நாடுகளின் ஆதரவு ஆகிய ஆறும் சிறந்த அரசனுக்கு வேண்டுமெனக் கூறுகிறார்.

அதே போல அரசராக இருக்க வேண்டுபவர் என்னென்ன குணநலன்களைப் பெற்றிருக்க வேண்டுமென திருவள்ளுவர் கூறுகிறாறெனில்,

 "அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 

எஞ்சாமை வேந்தர்க்கியல்பு". (குறள்-382)

ஓர் அரசன் என்பவன், 

(1) துணிவு (2) ஈகைக்குணம் (3) பொது அறிவு

(4) செயலூக்கம், அவசியம் என்று கூறுகிறார் 

 "தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவர்க்கு" (குறள்-383) 

நிலத்தை ஆளும் அரசனுக்கு 

(1) காலம் தாழ்த்தாத தன்மை 

(2) கல்வியுடைமை 

(3) நல்ல காரியங்களை செய்வதற்கான துணிவுடமை ஆகிய மூன்றும் அவசியமான குணம் என்கிறார் திருவள்ளுவர்.

இதுபோலவே ஒரு நாடு சிறந்த நாடாக விளங்குவதற்கு என்னென்ன தன்மைகள் அமைந்திருக்க வேண்டுமென்பதனை,

"உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் 

சேராதியல்வது நாடு" (குறள் -734)

என்ற குறளில் உண்ண உணவில்லாத பஞ்சநிலை, தீராத பல நோய்கள், எப்போதும் தாக்குவதற்கு தயாராக இருக்கும் பகைநாடுகள் ஆகிய மூன்றும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். 

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 

வகுத்தலும் வல்லது அரசு" (குறள்-385)

என்ற குறளில் வருவாயை அடையாளம் காணுதலும், அதனை திறமையாக திரட்டுவதும், திரட்டிய வருவாயை அரசுக்கருவூலத்தில் பாதுகாத்து வைப்பதும், அவ்வாறு பாதுகாத்த செல்வத்தை மக்களுக்கு முறையாக வழங்குதலும் செய்ய வல்லது தான் சிறந்த அரசு என்று வள்ளுவர் கூறுகிறார். 

மாணவர்: இந்தியாவின் பழம்பெரும் அரசியல் அறிவியல் நூல்கள் குறித்து தங்களிடமிருந்து தெரிந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அய்யா. 


அதிகாரம் என்பது.......



எல்லா சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான அதிகாரம் இருக்கிறது. அது ஒரேநேரத்தில் ஒருவராலோ அல்லது ஒரு குழுவினாலோ கையாளப்படுகிறது. - காரல் மார்க்ஸ்


அதிகாரம் என்பது ஒரு குழு மற்றொரு குழுவின் செயல்பாடுகள் மற்றும் போக்குகளைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கும் உறவுமுறையே ஆகும். -டேவிட் ஈஸ்டன் 


அதிகாரம் மேலும் அதிகாரங்களை உருவாக்கி கொள்கிறது. அதிகாரமே உயர்குடியினவாதத்தின் மைய கோட்பாடாகும். - ராபர்ட் மிச்செல்ஸ்


அரசியல் அறிவியல்

தற்காலத்தில் 'அரசியல்' என்ற பாடம் 'அரசியல் அறிவியல்' என்ற பெயரில் புதியதொரு தனித்து இயங்கும் பாடமாக மாறியுள்ளது. பண்டைய கிரேக்கத்தின் சிறிய நகர அரசுகளின் விவகாரங்களைக் குறிப்பது அரசியல் என்ற சொல்லாகும். ஆனால் இப்போது அரசியல் என்ற சொல் "அரசாங்கங்களின் தற்கால பிரச்சனைகளைப் பற்றியது" என ஆடம் கில்கிறிஸ்ட் (Adam Gilchrist) என்ற அறிஞர் கூறுகிறார். ஒருவன் தனக்கு அரசியலின்மீது ஆர்வம் உள்ளது என்று அவன் அரசியல் பிரச்சனைகள், சட்டமியற்றல், தொழிலாளர் பிரச்சனைகள், கட்சி நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீதும் ஆர்வமாக இருக்கிறான் என்பதே பொருளாகும். ஆனால் அரசியல் கல்வி என்பது தற்கால அரசியல் நிகழ்வுகளிலிந்து வேறுபட்டதாகும் மேலும் ஒரு நாட்டின் அரசியல் என்பது மற்றொரு நாட்டின் அரசியலிருந்து வேறுபட்டதாகும். இந்தியாவில் அரசியலைப்பற்றி நாம் புரிந்துகொண்டிருப்பது மாதிரியே உலகின் எல்லா நாடுகளிலும் அரசியல் இருப்பதில்லை . அது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆனால் 'அரசியல் அறிவியல்' என்பது உலகம் முழுவதும் ஒரே பொருளில் அறியப்படுகிறது. அதனால்தான் இப்பாடத்தினை அரசியல் என்று அழைப்பதைக்காட்டிலும் அரசியல் அறிவியல் என்று அழைப்பதே சிறப்பானது ஆகும். 1948-ல் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் கூடிய அரசியல் அறிஞர்கள் இப்பாடத்தினை அரசியல் அறிவியல் என்று மட்டுமே அழைப்பது என்பதில் ஏற்புடைய கருத்தினைக் கொண்டிருந்தனர். எனவே ஒரே பாடத்தினை 'அரசியல்' என்றும் 'அரசியல் அறிவியல்' என்றும் இரண்டு பெயர்களில் அழைக்காமல் இனி அரசியல் அறிவியல் என்று அழைப்பதே சரியானதாகும்.

இப்பாடத்தினை ஒரு தனித்தியங்கும் துறை சார்ந்த பாடமாக மாற்றியமைத்த பெருமை அமெரிக்க ஐக்கிய நாட்டையே சாரும். அதுவரையிலும் இப்பாடம் தத்துவம், வரலாறு, சட்டம், பொருளியல் போன்ற பாடங்களில் ஒரு துணைப்பாடமாகக்தான் இருந்து வந்தது. 1880-ல் ஜான் W. பர்ஜெஸ் (John W Burgess) என்பவர் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்திற்கென தனியாக ஒரு துறையை உருவாக்கிய போதுதான் இப்பாடம் தன்னாட்சியான துறையாக உருவானது என்று கூறலாம். அதன் பின்பு படிப்படியாக வளர்ச்சி பெற்று 1920-களில் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இப்பாடத்திற்கென தனியான துறைகள் ஏற்படுத்தப்பட்டன. தத்துவம், சட்டம், வரலாறு போன்ற பாடங்களின் கீழ் இயங்கிவந்த அரசியல் பாடத்தினை தனிப்பெரும் பாடமாக மாற்றியமைத்த பெருமை முழுவதும் அமெரிக்க அரசியல் அறிஞர்களையே சேரும். இப்பாடம் அதன் பிறகும், இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலம் வரையிலும் கூட மிகவும் முறைசார்ந்ததாகவும் நிறுவனம் சார்ந்த அணுகுமுறையிலும் மட்டுமே இருந்தது.

நிலையான நிறுவனங்கள் சார்ந்த படிப்பாக மட்டுமே இருந்த அரசியல் பாடத்தினை சமுதாயப் பிரச்சனைகளைப் பற்றி படிக்கும் பாடமாக மாற்றியமைக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி - உட்ரோ வில்சன் (Woodrow Wilson) என்ற அறிஞரும், பிரான்க் குட்னவ் (Frank Goodnow) என்ற அறிஞரும் பெரும் முயற்சிகளை எடுத்துக்கொண்டனர். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆர்தர் பென்ட்லி (Arthur Bentley) என்ற அறிஞர் இப்பாடத்தை விழுமியங்கள் நீக்கிய நடுநிலையான அரசியல் பகுப்பாய்வு செய்யும் ஆற்றல் பெற்றதாக (value-free analysis of politics) மாற்றியமைக்க பெரும்பாடு பட்டவர் ஆவார். மேலும் சார்லஸ் ஈ. மெர்ரியம் (Charles E.Merriam) என்ற அறிஞர் இப்பாடத்தை செயலறிவிலான கூர்நோக்குதல் மற்றும் அளவீடுகளை உள்ளடக்கியதாகவும் மாற்றியமைக்க பெரும் முயற்சிகளை எடுத்துக்கொண்டார். இம்முயற்சியில் சார்லஸ் ஈ. மெர்ரியத்தின் (Charles E. Merriam) "அரசியல் அதிகாரம்" என்ற நூலும், ஹெரால்ட் லாஸ்வெல் என்பாரின் "அரசியல்: யார், எப்போது, எதனை, எப்படி அடைகிறார்கள்?" (Politics: Who Gets What, When, How?) என்ற நூலும அரசியலின் மையக் கருத்தாக அதிகாரம் என்னும் அம்சத்தினை உருவாக்கின.

1920-களிலும் 1930-களிலும் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் நிலவிய முற்றதிகார ஆட்சிகள் மற்றும் இரண்டாம் உலகப்போரின் விளைவாக இந்த அரசியல் அறிவியல் பாடம் தனது அமைப்புகள் மற்றும் நடைமுறைகளின் மீதான கவனத்திலிருந்து மாறி அரசியல் கட்சிகள், அழுத்தக்குழுக்கள், உயர்குடியினர் நடத்தை, தேர்தல் விருப்ப நடத்தைகள், வாக்காளர் நடத்தை என ஒரு நடத்தையியல் (Behavioralism) பாடமாக மாறியது. இதன் விளைவாக ‘நடத்தையியல்' (Behavioralism) என்ற ஒரு புதிய பாடம் பிறந்தது. நடத்தையியல்' என்ற இந்த சொல் உளவியல் பாடத்திலிருந்து பெறப்பட்டதாகும். அதன் பிறகு 1960- களில் ‘பின்தோன்றிய நடத்தையியல்' (Post- Behavioralism) என்ற புதிய பாடமும் பிறந்தது. நடத்தையியல் என்பது அளவுக்கு அதிகமான பழமைவாத அணுகுமுறைகளை உருவாக்கியதாலேயே இந்த புதிய முறையான "பின்தோன்றிய நடத்தையியல்" உருவானது. இதில் ஒரு விந்தை என்னவெனில் இப்புதிய போக்கினை மேம்படுத்தி உருவாக்கிய டேவிட் ஈஸ்டன் (David Easton) என்பவரே நடத்தையியல் புரட்சியினை தொடக்கி வைத்தார். டேவிட் ஈஸ்டனின் கருத்துப்படி நடத்தையியல் என்பது யதார்த்தம் மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றுக்கு எதிரானதாக மாறிவிட்டதாக கருதப்பட்டது. ஆகவே பின்தோன்றிய நடத்தையியல் என்பது ஆய்வுகள், விழுமியங்களை மட்டுமே முழுமையாக சார்ந்திருக்காமல் துல்லியத்தன்மையையும் சார்ந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவ்வாறாக அரசியல் அறிவியலின் அறிவுசார் புரட்சி என்பது சமூகவியல், மானுடவியல் மற்றும் உளவியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது. மேலும் இந்த அறிவுசார் புரட்சியாளர்கள் பழமைவாத கருத்துக்களையும், குறுகிய நோக்கம் கொண்ட அணுகுமுறைகளையும் தீவிரமாக எதிர்த்தனர். முற்கால அரசியல் அறிஞர்கள் அரசு, அரசின் கூறுகள், அரசின் நிறுவனங்கள், அவைகளின் முறையான கட்டமைப்புகள் போன்றவற்றை படித்தனரே தவிர மனிதர்களின் அரசியல் நடத்தையையும் அவர்களுக்குள் உள்ள உறவுமுறைகைள் குறித்தும் படிக்கவில்லை. எனவே தான் தற்கால அரசியல் பகுப்பாய்வாளர்கள்


செயல்பாடு

❖ அரிஸ்டாட்டில் (Aristotle) ஒரு மாபெரும் சிந்தனையாளராக கருதப்படுவதற்கான காரணம் என்ன? விவாதிக்கவும். 

❖ பிளாட்டோவும், அரிஸ்டாட்டிலும் (Plato and Aristotle) கிரேக்கத்தின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுவது ஏன்? விவாதிக்கவும். 

❖ சார்லஸ் ஈ மெர்ரியம் (Charles E. Merriam), உட்ரோ வில்சன் (Woodrow Wilson) மற்றும் ஆர்தர் பென்ட்லி (Arthur Bentley) ஆகியோரைப்பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப்பற்றியும் படித்து அறிந்துகொள்க.

பின்வரும் நான்கு அடிப்படைக் கூறுகளில் கவனம் செலுத்தினர். 

❖ பல்முனைப் பரப்பெல்லையை உள்ளடக்குவதற்கான ஒரு தேடல் 

❖ யதார்த்தத்திற்கான தேடல் 

❖ தெளிவும் சுருக்கமும் பெறுவதற்கான தேடல் 

❖ அறிவுப்பூர்வ வரிசைமுறைக்கான தேடல் 


கலந்துரையாடல்


மாணவர் -1 : என்ன? அரிஸ்டாட்டில் மக்களாட்சியை மோசமான அரசாங்க முறை என்றாரா? 

மாணவர் -2 : ஆமாம்! இருப்பினும் மக்களாட்சியை அரிஸ்டாட்டில் கும்பலாட்சி என்ற பொருளில் புரிந்து கொண்டார். தூய அரசியல் அமைப்பு என்பது இதை விட மிகவும் சிறந்த மற்றும் நிலையான அரசாங்க முறை என நினைத்திருப்பார். 

மாணவர் -1 : அப்புறம்........ தூய அரசியல் அமைப்பு (Polity) என்றால் என்ன? 

மாணவர் -2 : தூய அரசியல் அமைப்பில் மேலான அதிகாரம் என்பது பெருவாரியாக மக்களிடம் இருப்பதுடன் அது பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறது. 

மாணவர் -1 : ஓ! அப்படியா...!.!


அரசியல் அறிவியலின் வரையறை

அரசியல் அறிவியல் பற்றி பல்வேறு அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களை அளித்துள்ளனர். கார்னர் (Garner) இதனை ‘அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் ஒரு பாடம்' என்கிறார், 'லீகாக்'கும் 'சீலே'வும் (Leacock) (Seeley) இப்பாடம் 'அரசாங்கத்தினைப் பற்றி படிக்கும் பாடம் என்கின்றனர். ராப்சன் (Robson) மற்றும் லாஸ்வெல் (Lasswell) ஆகிய இருவரும் இப்பாடம் ‘அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவைகளைப் பற்றிய படிப்பு' என்கின்றனர். சில அறிஞர்கள் இதனை ஒருங்கிணைக்கப்பட்ட மனித சமூகத்தின் அரசியல் அம்சங்களைப் படிக்கும் பாடம் என்கின்றனர். இவ்வாறாக இப்பாடத்தின் பரப்பெல்லையானது பலமுனைகளிலும் வளர்ந்துகொண்டே வருகிறது. அரசியல் அறிவியல் என்பது வரலாற்றுப்பூர்வமாக அரசு, அதன் அமைப்புகள், சட்டங்கள், அதன் செயலாக்கங்கள் பற்றிய படிப்பாகவே அறியப்பட்டது. நடத்தைசார் புரட்சிக்குப் பின்னர் தனிமனிதர்கள் மற்றும் குழுக்களின் அரசியல் நடத்தைகளும் இதன் அங்கமாகிவிட்டன. அரசியல் அறிவியல் பாடத்தில் அண்மைக்காலத்தில் சேர்ந்துகொண்ட கருத்தாக்கம் 'ஆளுகை' (Governance) என்பதாகும்.

அரசியல் அறிவியல் என்பது அரசின் தோற்றம், மேம்பாடு, நோக்கம் மற்றும் அதன் பல்வேறு அரசியல் பிரச்சனைகளைப் பற்றி அறிந்து கொள்வதாகும். - கேரிஸ் (Garris) 

அரசியலைக் கற்றல் என்பது ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அரசுடன் மக்களின் வாழ்க்கைக்கு உள்ள தொடர்பினை படிப்பதாகும். - ஹெரால்ட் லாஸ்கி (Harold Laski) 

அரசியல் அறிவியல் என்பது அரசாங்கம் மற்றும் அரசியல் பொருளாதாரம் என்பவைகளை வளம், உயிரியல் வாழ்க்கை , இயற்கணிதம், வரைகணிதம், விண்வெளி போன்றவற்றோடு தொடர்புபடுத்தி படிப்பதாகும். - சீலே (Seeley) 

அதிகாரம் வடிவமைத்து பங்கிடப்படுவதை அனுபவ விசாரணை செய்வதே அரசியல் அறிவியல் ஆகும். - ஹெரால்ட் லாஸ்வெல் (Harold Lasswell)

அரசியல் அறிவியல் என்பது கடந்த காலத்தை வரலாற்று ரீதியாகவும், நிகழ் காலத்தினை பகுப்பாய்வு ரீதியாகவும், எதிர்காலத்தினை நன்னெறி ரீதியாகவும் படிக்க உதவும் ஒரு பாடமாகும். - கெட்டல் (Gettel) 

ஒரு சமுதாயத்தின் எல்லைக்குள் ஒரு நகரத்திற்கோ, ஒரு அரசுக்கோ, ஒரு தேசத்திற்கோ அந்த சமுதாயத்தில் நிலவும் பற்றாக்குறையான மனிதவளம், பொருளியல் வளம் போன்றவற்றினை மனித தேவைகளுக்கும், மனித விருப்பங்களுக்கும் ஏற்ப முறைப்படுத்தி வழங்கும் செயல்முறையே அரசியல் ஆகும். - டேவிட் ஈஸ்டன் (David Easton)


11th Political Science : Chapter 1 : Introduction of Political Science : Meaning, Definition and Origin of Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம் : அரசியல் அறிவியலின் பொருள், வரையறை மற்றும் தோற்றம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்