Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | தமிழகத்தில் பெருங்கற்கால அகழ்வாய்விடங்கள்

வரலாறு - தமிழகத்தில் பெருங்கற்கால அகழ்வாய்விடங்கள் | 11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures

   Posted On :  14.05.2022 05:53 am

11 வது வகுப்பு : அலகு 2 : பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

தமிழகத்தில் பெருங்கற்கால அகழ்வாய்விடங்கள்

ஆதிச்சநல்லூர் திருநெல்வேலியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் பெருங்கற்கால அகழ்வாய்விடங்கள்

 

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர் திருநெல்வேலியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1876ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த இயற்கை வியலாளரும், இன வரைவியலாளருமான ஆண்டிரு ஜாகர் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை மேற்கொண்டார். அங்கிருந்து சுடப்பட்ட மட்பாண்டங்கள் பல அளவுகளிலும் வடிவங்களிலுமான பாத்திரங்கள் ஆகியவற்றின் மாதிரிகளையும் கணிசமான எண்ணிக்கையில் இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், பெருமளவிலான எலும்புகள், மண்டையோடுகள் ஆகியவற்றையும் தன்னோடு எடுத்துச் சென்றார். தற்போது அவையனைத்தும் பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளன.


இதனைத் தொடர்ந்து, அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான .ஜே. ஸ்டூவர்ட், புகழ்பெற்ற மொழியியல் அறிஞரான ராபர்ட் கால்டுவெல் ஆகிய இருவரும் ஆதிச்சநல்லூர் சென்றனர். அப்பகுதியில் படிகக் கற்கள் நிறைந்திருப்பதைக் கண்டனர். உடனடியாக, கற்களை வெட்டியெடுப்பது அங்கு தடை செய்யப்பட்டு, அலெக்ஸாண்டர் ரீ என்பாரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின. தன்னுடைய கண்டுபிடிப்புகள் தொடர்பாக புகைப்படங்களோடு கூடிய விரிவான அறிக்கையைத் தயார் செய்து, இந்திய தொல்லியல் துறையின் (ASI) 1902-03 ஆண்டறிக்கையில் வெளியிட்டார். சற்றேறக் குறைய நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியத் தொல்லியல் துறை மேலும் ஒரு அகழ்வாய்வை இங்கு நடத்தியது. பல புதிய செய்திகள் கண்டறியப்பட்டன. அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆதிச்சநல்லூரிலுள்ள புதை மேட்டிலிருந்து கிடைத்தவை

அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் பல்வகைப்பட்ட தாழிகளும் மட்பாண்டங்களும்

ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்புக் கருவிகள் (கத்தி, வாள், ஈட்டி, அம்பு), சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள்

வெண்கலத்தால் செய்யப்பட்ட வீட்டு விலங்குகளான எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல், காட்டு விலங்குகளான புலி, மிளா (மான் வகை), யானை ஆகியன

துணி, மரப் பொருள்களின் எச்சங்கள்

வெண்கலப் பொருள்களின் மீதும் அணிகலன்களின் மீதும் விலங்கு உருவங்களைப் பொறிப்பது பழங்கால கைவினைத் தொழில் நுட்பத்தைக் குறிப்பதாகும். (கால்டுவெல் இவ்விடத்திற்கு வந்திருந்தபோது செம்பிலான வளையல் ஒன்றையும் கண்டெடுத்தார்.) மட்பாண்டங்கள் செய்வதிலும் பித்தளையை உருக்குவதிலும், நெசவு, கல், மர வேலைப்பாடுகளிலும் ஆதிச்சநல்லூர் மக்கள் சிறந்து விளங்கினர். நெல் மற்றும் பிற தானியங்களின் உமியும் கண்டெடுக்கப்பட்டது. இத்தானியங்கள் அக்காலத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டதை இது குறிக்கின்றது. போர்களிலும் விலங்குகளை பலி கொடுக்கும்போதும் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன. இது ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் வேத மதங்களைப் பின்பற்றியவர்கள் அல்ல என கால்டுவெல்லை எண்ண வைத்தது.

பையம்பள்ளி

பையம்பள்ளி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவைச் சேர்ந்த கிராமமாகும். 1960களில் இந்தியத் தொல்லியல் துறை பெருங்கற்காலத்தோடு தொடர்புடைய இவ்விடத்தில் அகழ்வாய்வை நடத்தி கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக் கொணர்ந்தது. மேலும் இப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான ஈமத் தாழிகளும் கண்டறியப்பட்டன. இப்பண்பாட்டின் காலம்ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ..மு 1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொடுமணல்

ஈரோட்டிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில், காவிரியாற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது கொடுமணல். 1980களிலும் 1990களிலும் தொடர்ந்து இங்கு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அண்மை அகழ்வாய்வு 2012 இல் நடைபெற்றது. பழங்கால மக்கள் வாழ்விடங்களிலும், பெருங்கற்காலப் புதை மேடுகளிலும் மட்பாண்டங்கள், ஆயுதங்கள், கருவிகள், அணிகலன்கள், மணிகள் குறிப்பாக மொகஞ்சதாரோ அகழ்வாய்வில் கண்டறியப்பட்டதைப் போன்ற செம்மணிக்கற்கள் ஆகியவை அகழ்ந்தெடுக்கப்பட்டன. செம்மணிக் கற்கள் இப்பகுதியைச் சார்ந்தவை அல்ல என்பதால் தற்போது கொடுமணலில் கண்டெடுக்கப்பட்டுள்ள செம்மணிக்கற்கள் வேறு பகுதிகளிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

சங்க நூலான பதிற்றுப்பத்தில் சேர அரசனுக்குச் சொந்தமான கொடுமணம் என்ற ஊர் அங்கு கிடைக்கும் விலை மதிப்புமிக்க கற்களுக்காகப் புகழப்படுகிறது. சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம் தான் இன்றைய கொடுமணல் எனச் சில தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இங்கு ரோமானிய நாணயக் குவியல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால். ரோமப் பேரரசிற்கு விலை மதிப்புமிக்க கற்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இவை இப்பகுதியை வந்தடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சூளைச் சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புகளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் போன்றவை இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட ஏனைய பொருள்களாகும். ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்படுக்கைப் புதைப்பு எனப் பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் கொடுமணலில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் சில மனிதர்களின் பெயர்கள் பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்ததைச் சுட்டுகின்றன. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் வண்ணக் கலைகள் மக்களைக் குறித்தும் அவர்தம் நடவடிக்கைகள் குறித்தும் பல தகவல்களை தருகின்றன. ஒரு புதைகுழி அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்தவை சங்கத் தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும் (பொ..மு. இரண்டாம் நூற்றாண்டு - பொ.. இரண்டாம் நூற்றாண்டு) என .சுப்பராயலு கூறுகிறார்.


Tags : Early India | History வரலாறு.
11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures : Megalithic Sites in Tamilnadu Early India | History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு : அலகு 2 : பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் : தமிழகத்தில் பெருங்கற்கால அகழ்வாய்விடங்கள் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு : அலகு 2 : பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்