Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | தேசிய வருவாயை அளவிடும் முறைகள்

பொருளாதாரம் - தேசிய வருவாயை அளவிடும் முறைகள் | 12th Economics : Chapter 2 : National Income

   Posted On :  14.03.2022 10:10 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய்

தேசிய வருவாயை அளவிடும் முறைகள்

1. உற்பத்தி அல்லது மதிப்புக் கூடுதல் (Value added) முறை 2. வருமானம் அல்லது காரணிகளின் ஊதிய முறை மற்றும் 3. செலவு முறை

தேசிய வருவாயை அளவிடும் முறைகள்


ஓர் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பை கணக்கிட்டு, அதனை பணமதிப்பில் மதிப்பிடப்படவேண்டும். அதாவது நமது சுய நுகர்வுக்காவோ அல்லது சேமிப்பிற்காகவோ பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதன் பண மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கவேண்டும்.

தேசிய வருவாயை மூன்று முறைகளை பயன்படுத்தி அளவிடலாம். அவை: உற்பத்தி முறை, வருவாய் முறை மற்றும் செலவு முறை இவற்றை :

1. உற்பத்தி அல்லது மதிப்புக் கூடுதல் (Value added) முறை

2. வருமானம் அல்லது காரணிகளின் ஊதிய முறை மற்றும்

3. செலவு முறை

இம்மூன்று முறைகளை சரியாக பயன்படுத்தி கணக்கிட்டால் உற்பத்தி , வருமானம், செலவு இம்மூன்றின் மதிப்பும் சமமாக இருக்கும்.

உற்பத்தி = வருமானம் = செலவு


ஏனென்றால் இம்மூன்று முறைகளும் இயல்பாகவே ஒரு சுழற்சியாக இருக்கும். நுகர்வை பூர்த்தி செய்ய உற்பத்தி தொடங்கப்படுகிறது. உற்பத்தி செய்ய உற்பத்திகாரணிகளை வேலைக்கு அமர்த்தி உற்பத்தி முடிந்த பிறகு வருமானம் பெருகும். பிறகு உற்பத்தி காரணிகளுக்கு ஊதியத்தை அளித்து அதன் மூலம் நுகர்வு செலவு செய்யப்படும்.


மொத்த உள்நாட்டு உற்பத்தி செலவுகள், காரணி வருவாய், உற்பத்தி கூட்டு முறை




1. உற்பத்தி முறை (Product Method)

• உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை கணக்கிடுவது ஆகும். இம்முறை சரக்கு முறை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயம், தொழில், வணிகம் போன்ற துறைகளின் உற்பத்தியின் மொத்தமே தேசிய உற்பத்தி ஆகும். ஒரு துறையின் வெளியீடு (Output) மற்றொரு துறையின் உள்ளீடு (Input) ஆகச் செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இரு முறை அல்லது பல முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு இருமுறை கணக்கிடல் என்று பெயர். இதனை தவிர்க்க இறுதி பொருட்களின் மதிப்பையோ அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலையோ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பண்ணை உற்பத்தியின் மொத்த மதிப்பு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.

i) 64 வகை விவசாயப் பொருள்களின் மொத்த உற்பத்தி மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பயிரின் அதன் ஒரு ஹெக்டேருக்கான சராசரி (Per acre) உற்பத்தியை கணக்கிட்டு அந்தந்தப் பயிர்கள் பயிரடப்பட்ட மொத்த நிலப்பரப்பால் பெருக்கி பயிரின் உற்பத்தி கணக்கிடப்படுகிறது.

ii) ஒவ்வொரு பொருளின் மொத்த உற்பத்தியும் சந்தை விலையால் மதிப்பிடப்படுகிறது.

iii) இந்த 64 வகை பயிர்களின் மொத்த உற்பத்தி மதிப்பை எடுத்துக் கொண்டு விவசாயத் துறையின் மொத்த உற்பத்தியின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

iv) விவசாய உற்பத்தியின் நிகர மதிப்பு கணக்கிடுவதற்கு, மொத்த விவசாய உற்பத்தி மதிப்பிலிருந்து விதை, உரம், அங்காடி கட்டணம், சரிசெய்தல் மற்றும் தேய்மானம் போன்ற செலவுகள் கழிக்கப்படுகின்றன.

இதுபோல, மற்ற துறைகளுக்கும் (உதாரணம் கால்நடை, காடுகள், மீன், சுரங்கம், தொழிற்சாலை) மொத்த உற்பத்தி மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் சந்தை விலையால் பெருக்கி உற்பத்தியின் மொத்த மதிப்பு பெறப்படுகிறது. மேற்குறிப்பிட்ட விவசாயம் சார்ந்த பிற துறைகளின் மொத்த மதிப்பில் இருந்து இடு பொருட்களின் செலவு, தேய்மானம் ஆகியவற்றைக் கழித்து நிகர மதிப்பு கணக்கிடப்படுகிறது.

இவ்வாறுதான், பிற துறைகளின் உற்பத்தி நிகர பங்களிப்பின் மதிப்பு தேசிய வருவாயில் எவ்வளவு இருக்கிறது என கணக்கிடப்படுகிறது.


முன்னெச்சரிக்கைகள்


பின்தங்கிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் உற்பத்தி கையாளப்படுகிறது. இதில் பிழைகள் அதிகம் வர வாய்ப்புண்டு. இந்தியாவில் இம்முறை விவசாயம், சுரங்கம், தயாரிப்பு மற்றும் கைவினைப் பொருள்கள் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

1. ஒரே பொருள் பல இடங்களில் மதிப்பிடப்படும் வாய்ப்பு இம்முறையில் இருக்கிறது. இறுதி உற்பத்திக்கு எந்த ஒரு பொருள் மூலப் பொருளாகவோ அல்லது இடைநிலைப் பொருளாகவோ இருந்தால் அப்பொருளின் உற்பத்தியை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. உதாரணத்திற்கு, ஜவுளியின் விலைக்குள் துணியின் விலையும், துணியின் விலைக்குள் நூலின் விலையும், நூலின் விலைக்குள் பஞ்சின் விலையும் உள்ளது. எனவே, பஞ்சு, நூல், துணி ஆடைகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பினைக் கூட்டுவது "பல முறை கணக்கில் சேர்த்தல்" என்ற பிழைக்கு வழிவகுக்கும்.

2. சொந்த நுகர்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு விவசாயிகள் தாம் உற்பத்தி செய்த பலவற்றை சந்தைப்படுத்தாமல் தனிப்பட்ட சொந்த நுகர்வுக்காக வைத்துக்கொள்ளலாம். அவற்றின் அளவையும் சந்தை விலையுடன் பெருக்கி மதிப்பைக் கண்டு தேசிய வருவாய் கணக்கில் சேர்க்க வேண்டும்.

3. இரண்டாம் முறையாக கைமாற்றப்பட்ட நீடித்த (Durable) பொருள்களின் வாங்குதல் மற்றும் விற்றல் ஆகியவற்றின் பணமதிப்பை தேசிய வருவாயில் சேர்க்கக் கூடாது. உதாரணம். கைப்பேசி, கார், போன்ற பொருட்கள் இருமுறைகள் அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன.



2. வருமான முறை (Income Method)


வருமான முறை என்பது தேசிய வருவாய் கணக்கிடல் பகிர்வு பகுதியிலிருந்து அணுகப்படுகிறது. உற்பத்தி நிலைகளில் உற்பத்திக் காரணிகள் பெற்ற அனைத்து வித ஊதியங்களையும் கூட்டி தேசிய வருமானத்தைக் கணக்கிடலாம். வருமான முறை, காரணிகள் சம்பாதிக்கும் முறை என்றும் அழைக்கப்படுகிறது.



கணக்கிடுவதன் நிலைகள்

1. மொத்த நிறுவனங்களும் வெவ்வேறு தொழில் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன.

2. காரணிகளின் வருவாய் மூன்று வகையான இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது உழைப்பாளர் வருமானம், மூலதன வருமானம் மற்றும் கலப்பு வருமானம்.

i) உழைப்பாளர் வருமானம் - கூலி மற்றும் சம்பளம், சமூக பாதுகாப்புக்கு முதலாளியின் பங்கு, உற்பத்தி திறன் ஊக்கு (Fringe) ஊதியங்கள்.

ii) மூலதன வருமானம் - இலாபம், வட்டி, இலாப ஈவு மற்றும் இராயல்டி.

iii) கலப்பு வருமானம் - விவசாயம் மற்றும் பண்ணை சிறு தொழில் செய்வோர் மற்றும் பிற வேலைகளிலிருந்து கிடைக்கும் வருமானம்

3. உள்நாட்டு காரணி வருவாய்களுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நிகர வருவாயை கூட்டுவதன் மூலம் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.

Y = W + r + i +  π  + (R-P)

இதில்

W= கூலி, r = வாடகை, i = வட்டி,  = இலாபம் R = ஏற்றுமதி P = இறக்குமதி

மொத்த தேசிய வருவாய் கணக்கிடுவதில் பிற துறைகளான சிறு நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீடு, வாணிபம் மற்றும் போக்குவரத்து, கலை, வீட்டுவேலை செய்பவர்கள், பொது நிறுவனங்கள், வீட்டுச் சொத்து வருமானம் மற்றும் அயல்நாட்டு வாணிப பரிமாற்றம் போன்றவைகளின் வருமானம் மதிப்பிடப்படுகிறது.

செலுத்துநிலைக் கணக்கில் (Balance of Payments), வெளிநாடுகளில் இருந்து வந்த அல்லது வெளிநாடுகளுக்குச் சென்ற தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் பெறப்படுகின்றன.



முன்னெச்சரிக்கைகள்

பின்தங்கிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் உற்பத்தி கையாளப்படுகிறது. இதில் பிழைகள் அதிகம் வர வாய்ப்புண்டு. இந்தியாவில் இம்முறை விவசாயம், சுரங்கம், தயாரிப்பு மற்றும் கைவினைப் பொருள்கள் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

1. இறுதி உற்பத்திக்கு எந்த ஒரு பொருள் மூலப் பொருளாகவோ அல்லது இடைநிலைப் பொருளாகவோ இருந்தால் அப்பொருளின் உற்பத்தியை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

2. ஒரே பொருள் பல இடங்களில் மதிப்பிடப்படும் வாய்ப்பு இம்முறையில் இருக்கிறது. உதாரணத்திற்கு , ஜவுளியின் விலைக்குள் துணியின் விலையும், துணியின் விலைக்குள் நூலின் விலையும், நூலின் விலைக்குள் பஞ்சின் விலையும் உள்ளது. எனவே, பஞ்சு, நூல், துணி ஆடைகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பினைக் கூட்டுவது "பல முறை கணக்கில் சேர்த்தல்" என்ற பிழைக்கு வழிவகுக்கும்.

3. சொந்த நுகர்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பையும் தேசிய வருவாய் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு விவசாயிகள் தாம் உற்பத்தி செய்த பலவற்றை சந்தைப்படுத்தாமல் தனிப்பட்ட சொந்த நுகர்வுக்காக வைத்துக்கொள்ளலாம். அவற்றின் அளவையும் சந்தை விலையுடன் பெருக்கி மதிப்பைக் கண்டு தேசிய வருவாய் கணக்கில் சேர்க்க வேண்டும்.

4. இரண்டாம் முறையாக கைமாற்றப்பட்ட நீடித்த (Durable) பொருள்களின் வாங்குதல் மற்றும் விற்றல் ஆகியவற்றின் பணமதிப்பை தேசிய வருவாயில் சேர்க்கக் கூடாது. உதாரணம். கைப்பேசி, கார், போன்ற பொருட்கள் இருமுறைகள் அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன.



3. செலவு முறை (Expenditure or outlay method):


இம்முறையில், ஓர் ஆண்டில் சமுதாயத்தில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் மொத்த செலவுகள் அனைத்தையும் கூட்டி தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது. தனிநபர் சுய நுகர்வு செலவுகள், நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டு பொருள் வாங்கும் செலவு மற்றும் நிகர ஏற்றுமதி போன்ற அனைத்து செலவுகளையும் கூட்டி செலவு முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.

மொத்தச் செலவும் கீழ்க்கண்ட முறையில் சமன்பாட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.

GNP = C + I + G + (X-M)

C - தனியார் நுகர்வுச் செலவு 

| - தனியார் முதலீட்டு செலவு 

G - அரசின் கொள்முதல் செலவு 

X - M = நிகர ஏற்றுமதி.



முன்னெச்சரிக்கைகள்

1. ஏற்கனவே வாங்கிய பொருளை மீண்டும் வாங்குதல் : ஏற்கனவே வாங்கப்பட்ட கார், இருசக்கர வாகனம், கைபேசி மற்றும் இயந்திரம் போன்ற பொருள்களை இரண்டாம் முறை வாங்கும் போது மேற்கொள்ளப்படும் செலவுகளை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக் கூடாது.

2. பங்கு மற்றும் பத்திரங்கள் வாங்குதல் : பழைய பங்கு, பத்திரங்களை இரண்டாம் நிலை அங்காடிகளில் வாங்கும் போது ஏற்படும் செலவுகளை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக் கூடாது.

3. மாற்று செலுத்துநிலை: அரசாங்கம் செய்யும் மாற்றுச் செலுத்துதல்களான முதியோர் ஓய்வூதியம் போன்றவற்றிற்கு செய்யும் செலவுகளை சேர்க்கக்கூடாது.

4. இடைநிலை பொருள்களுக்கு செய்யும் செலவுகள்: விவசாயிகள் விதை மற்றும் உரம் வாங்க செய்யும் செலவுகள், துணி தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பருத்தி மற்றும் நூல்களுக்கு செய்யும் செலவுகள் போன்றவற்றை தேசிய வருவாய் கணக்கிடலில் சேர்க்கக் கூடாது. முடிவடைந்த பொருட்களின் செலவுகளை மட்டுமே சேர்க்க வேண்டும்.


காரணி செலவு (FC)

* பொருள்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் துறைகளில் பலவகையான உள்ளீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உள்ளீடுகள் உற்பத்தி காரணிகள் என அழைக்கப்படுகிறது. அவையாவன. நிலம், உழைப்பு, முதல் மற்றும் தொழில் முனைவு.

* உற்பத்தியாளர்கள் மேற்கூறிய உற்பத்தி காரணிகளுக்கு, பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்ய செலவு செய்கின்றன. இந்த செலவுகள் பொருளின் விலையில் சேர்க்கப்படுகிறது.

* காரணி செலவு என்பது ஒரு நிறுவனம் பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் போது உற்பத்தி காரணிகளுக்கு செய்யும் செலவை குறிப்பது ஆகும்.

* இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தல், நிலம் மற்றும் இயந்திரம் வாங்குதல், கூலி மற்றும் சம்பளம் கொடுத்தல், மூலதனத்தை பெற செய்யும் செலவு (வட்டி) மற்றும் தொழில் முனைவோருக்கு கிடைக்கும் இலாபம் போன்றவை உற்பத்தி செலவிற்கான உதாரணங்கள் ஆகும். 

* அரசிற்கு செலுத்தும் வரிகள் உற்பத்தி செலவில் சேர்ப்பது இல்லை. ஏனெனில் வரிகள் நேரடியாக உற்பத்தி நடவடிக்கைகளில் பங்கு பெறுவது இல்லை.

* உற்பத்தியில் உதவித்தொகைகள் (Subsidies) நேரடியான விளைவை ஏற்படுத்துவதால், இத்தொகைகள் காரணி செலவில் சேர்க்கப்படுகின்றன.


சந்தை விலை (Market Price (MP)

* உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகள் சந்தையில் விலைக்கு விற்க்கப்படுவதை குறிக்கிறது.

* சந்தை விலை என்பது நுகர்வோர்கள் பொருளுக்கான விலையை விற்பனையாளர்களிடம் செலுத்தி பொருளை பெறுவது ஆகும்

* சந்தை விலை நிர்ணயிக்கின்றபோது, காரணி விலையில் (Factor price) அரசு விதித்த வரி சேர்க்கப்படுகிறது. மாறாக அரசு வழங்கிய உதவித் தொகைகள் காரணிவிலையில் குறைக்கப்படுகிறது.

* அரசு விதிக்கும் வரிகள் உற்பத்தியாளர்களுக்கு செலவாக இருப்பதால், அவைகள் விலையில் சேர்க்கப்படுகின்றன. மாறாக, அரசு செலுத்திய உதவி தொகைகள் ஏற்கனவே காரணிச் செலவில் சேர்க்கப்பட்டுள்ளதால் , இத்தொகைகள் விலையில் சேர்க்கப்படுவது இல்லை.

* ஆகவே சந்தை விலை (MP) = காரணி செலவு (FC) - உதவித்தொகைகள்

* அல்லது காரணி செலவு = சந்தை விலை (MP) - மறைமுகவரி + உதவித்தொகைகள்


தேசிய வருவாய் (NNPfc) = ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து உற்பத்தி துறைகளும் உற்பத்தி செய்த மொத்த மதிப்பு - தேய்மானம் - நிகர மறைமுகவரி + நிகர வெளிநாட்டு காரணிகளின் வருமானம். 

இங்கு ,

நிகர மறைமுகவரிகள் = மறைமுகவரி - உதவித்தொகைகள் மொத்த மதிப்பு கூட்டல் = உற்பத்தியின் மதிப்பு - இடைநிலை நுகர்வு உற்பத்தியின் மதிப்பு = விற்பனை + இருப்பில் மாற்றம் 

இருப்பில் மாற்றம் = முடியும் இருப்பு (Closing Stock) - தொடக்க இருப்பு (opening Stock) 

குறிப்பு: ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பொருள்களும் விற்க்கப்பட்டால், மொத்த உற்பத்தி, விற்பனைக்கு சமமாக இருக்கும்.

உற்பத்தியின் மதிப்பு = விலை X விற்பனை அளவு 

GDPMP = தனியார் இறுதி நுகர்வு செலவு + அரசின் இறுதி நுகர்வு செலவு + மொத்த உள்நாட்டு மூலதன ஆக்கம் + நிகர ஏற்றுமதி (ஏற்றுமதி - இறக்குமதி)

Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 2 : National Income : Methods of Measuring National Income Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய் : தேசிய வருவாயை அளவிடும் முறைகள் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய்