Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | தண்டின் உருமாற்றம்

தரைமேல், தரை ஒட்டிய, தரைகீழ்த் தண்டின் உருமாற்றம், தண்டு கிளைத்தல் - தண்டின் உருமாற்றம் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

   Posted On :  05.07.2022 11:58 pm

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

தண்டின் உருமாற்றம்

I. தரைமேல் தண்டின் உருமாற்றம். II. தரை ஒட்டிய தண்டின் உருமாற்றம். III. தரைகீழ்த் தண்டின் உருமாற்றம்

தண்டின் உருமாற்றம் (Stem modification)




I. தரைமேல் தண்டின் உருமாற்றம் (Aerial modification of stem)


1. படர்செடிகள் (Creepers)

தரையை ஒட்டிக் கிடைமட்டமாகப் படர்ந்து வளர்ந்து ஒவ்வொரு கணுவிலும் வேற்றிட வேரினை உண்டாக்கும் செடிகளுக்குப் படர் செடிகள் என்று பெயர். எடுத்துக்காட்டு: சைனோடான்டாக்டைலான் (அருகம்புல்), சென்டெல்லா (வல்லாரை). 

2. தரைதவழ்தண்டுச் செடிகள் (Trailers or Stragglers)

வலுவற்ற தண்டினைக் கொண்ட இவை தரையை ஒட்டியே படர்ந்து வளரும் செடிகளாகும். ஆனால் இவ்வகை செடிகள் கணுக்களில் வேர்களைத் தோற்றுவிக்காது. இவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

i. தரைபடர் அல்லது நிலம் படர் செடிகள் (Prostrate or Procumbent): இவ்வகை தாவரங்களில் முழுத் தண்டும் தரையை ஒட்டியே படர்ந்து வளர்வதால் இவற்றிற்குத் தரைபடர் அல்லது நிலம் படர் செடிகள் என்று பெயர். எடுத்துக்காட்டு: இண்டிகோஃபெரா புராஸ்ட்ரேட்டா

ii. நுனி நிமிர் படர் தாவரங்கள் (Decumbent): இவ்வகை தாவரங்களில் தண்டானது சிறிது தூரம் தரையுடன் படர்ந்து வளர்ந்து பின் இனப்பெருக்கத்தின் போது நுனியில் செங்குத்தாக நிமிர்ந்து வளர்கின்றது. எடுத்துக்காட்டு டிரைடாக்ஸ் (வெட்டுக்காயப்பூண்டு).

iii. கிளைபரவு தண்டு தாவரங்கள் (Diffuse): இவை படரும் கிளைகளைக் கொண்ட படர் தாவரங்களாகும். எடுத்துக்காட்டு: போஹர்ஹேவியா டிஃயூசா (மூக்கிரட்டை),

3. ஏறுகொடிகள் (Climbers)

இவை பெரிய, நலிந்த தண்டுகளைக் கொண்ட தாவரங்களாகும். ஏறுகொடிகள் ஆதாரத்தைப் பற்றி ஏறசில சிறப்புத் தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்தத் தகவமைப்புகள் இலையை சூரிய ஒளிபடுமாறு செய்யவும், மகரந்தச் சேர்க்கைக்கு மலர்களை வெளிப்படுத்திக் காட்டவும் உதவுகின்றன.

i. வேர் ஏறுகொடிகள் (Root climbers): இவ்வகை தாவரங்கள் கணுக்களிலிருந்து தோன்றும் வேற்றிட வேர்களின் மூலம் ஆதாரத்தைப் பற்றி ஏறுகின்றன. எடுத்துக்காட்டு: பைப்பர் பீடல், பைப்பர் நைக்ரம், போதாஸ்.

ii. தண்டு சுழல் கொடி அல்லது பின்னு கொடிகள் (Stem climbers/twiners): இவ்வகை தாவரங்களில் ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கான சிறப்புத் தகவமைப்புகள் கிடையாது. எனவே தண்டுப் பகுதியே ஆதாரத்தைச் சுற்றி பின்னி வளர்கின்றது. எடுத்துக்காட்டு: ஐபோமியா, கிளைடோரியா, குவிஸ்குவாலிஸ்.

தண்டு ஏறுகொடிகள் ஆதாரத்தை வலம்புரியாகவோ அல்லது இடம்புரியாகவோ சுழன்று வளர்கின்றன. வலம்புரியாகச் சுழன்று வளரும் சுழல் கொடிகளுக்கு வலம்புரிச் சுழல் கொடிகள் (Dextrose) என்று பெயர். எடுத்துக்காட்டு: பயாஸ்கோரியா அலாட்டா. இடம்புரியாகச் சுழன்று வளரும் சுழல்கொடிகளுக்கு இடம்புரிச் சுழல் கொடிகள் (Sinistrose) என்று பெயர். எடுத்துக்காட்டு: டயாஸ்கோரியா பல்பிஃபெரா (காய்வள்ளிக்கொடி). 

iii. கொக்கி ஏறுகொடிகள் (Hook climbers): இவ்வகை தாவரங்கள் ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கு ஏதுவாகச் சில சிறப்பான கொக்கி போன்ற அமைப்புகளைத் தோற்றுவிக்கின்றன. இந்தக் கொக்கி போன்ற அமைப்புகள் தாவரத்தின் பல்வேறு உறுப்புகளின் உருமாற்றமாகும்.

ஆர்டாபாட்ரிஸ் (மனோரஞ்சிதம்) தாவரத்தில் மஞ்சரியின் அச்சு (பூக்காம்பு) கொக்கியாக உருமாறியுள்ளது. கலாமஸ் (பிரம்பு) தாவரத்தில் இலை நுனி வளைந்த கொக்கியாக உருமாறியுள்ளது. பிக்னோனியா உங்கிஸ்கேட்டி தாவரத்தில் சிற்றிலைகள் வளைந்த கொக்கியாக உருமாறியுள்ளது. ஹுகோனியா தாவரத்தில் கோண மொட்டுகளானது கொக்கியாக உருமாறியுள்ளன. 

iv. முள் ஏறுகொடிகள் (Thorn climbers): இவ்வகைத் தாவரங்கள் முட்களின் உதவியால் ஆதாரத்தைப் பற்றி ஏறுகின்றன. எடுத்துக்காட்டு: போகன்வில்லா, காரிசா.

v. வன்கொடிகள் (Lianas / Woody stem climbers): வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் தடித்த, கட்டைத்தன்மையுடைய பல்லாண்டு வாழும் கொடிகளுக்கு வன்கொடிகள் என்று பெயர். இவ்வகை கட்டைத்தன்மையுடைய தண்டுகள் தானாகவே கயிறு போல் சுழன்று காடுகளிலுள்ள மிக உயர்ந்த மரங்களைச் சுற்றிச் சூரிய ஒளி படுவதற்கு ஏதுவாக வளர்கின்றன. எடுத்துக்காட்டு: ஹிப்டேஜ் பெங்காலென்சிஸ் (குருக்கத்தி), பாஹீனியா வாலி (மந்தாரை), 

vi. பற்றுக்கம்பிக் கொடிகள் (Tendril climbers): பற்றுக்கம்பிகள் சுருண்ட நூல் போன்று காணப்படும் அமைப்புகளாகும். தாவரங்கள் ஆதாரத்தைப் பற்றி ஏற இப்பற்றுக்கம்பிகள் உதவுகின்றன. தாவரத்தின் பல உறுப்புகள் பற்றுக்கம்பிகளாக உருமாறுகின்றன. வைடிஸ், மற்றும் சிஸ்சஸ் குவாட்ராங்குலாரிஸ் (பிரண்டை) போன்ற தாவரங்களில் தண்டும், ஆன்ட்டிகோனான் தாவரத்தில் மஞ்சரி அச்சும், லத்தைரஸ் தாவரத்தில் இலையும், பைசம் சட்டைவம் (பட்டாணி) தாவரத்தில் சிற்றிலையும், கிளிமாடிஸ் (பெருங்குறும்பை) தாவரத்தில் இலைக்காம்பும், குளோரியோசா தாவரத்தில் இலை நுனியும் ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் இரு இலையடிச் செதிலும் பற்றுக்கம்பியாக உருமாறியுள்ளன.

குடுவைத் தாவரத்தில் (நெப்பந்தஸ்) இலையின் நடு நரம்பானது சில சமயங்களில் பற்றுக்கம்பி போல் சுருண்டு குடுவைப் பகுதியை நேராக நிறுத்த உதவுகிறது.

4. இலைத்தொழில் தண்டு (Phylloclade)

இவை பசுமை நிற, தட்டையான, உருண்ட அல்லது கோணங்களுடன் கூடிய தண்டாகும். பல கணுக்களையும், கணுவிடைப் பகுதிகளையும், குறுகிய அல்லது நீண்ட இடைவெளியில் கொண்ட கிளையாகும். இலைத்தொழில் தண்டு வறண்ட நிலத் தாவரங்களின் ஒரு சிறப்பு தகவமைப்பாகும். இத்தாவரங்களில் நீராவிப்போக்கைக் கட்டுப்படுத்த இலைகள் பெரும்பாலும் விரைந்து உதிர்பவையாகவோ, முட்களாகவோ அல்லது செதில்களாகவோ உருமாறுகின்றன. எனவே இலைத்தொழில் தண்டு இலைகளின் வேலையான ஒளிச்சேர்க்கையைச் செய்கிறது. இலைத் தொழில் தண்டினைக் கிளை இலை (Cladophyll) என்றும் அழைப்பர்.

தட்டையான ஃபில்லோகிளாடிற்கு எடுத்துக்காட்டு: ஒபன்சியா,  ஃபில்லோகாக்டஸ், முகலன்பெக்கியா. உருளையான ஃபில்லோகிளாடிற்கு எடுத்துக்காட்டு: கேசுரைனா, யுஃபோர்பியா திருக்கள்ளி, யூஃபோர்பியா ஆண்ட்டிகோரம் (சதுரக்கள்ளி). 


5. குறு இலைத்தொழில் தண்டு (Cladode) (சதுரக்கள்ளி)

இவை இலைத்தொழில் தண்டைப் போன்றே தட்டையான அல்லது உருண்ட தண்டாகும். ஆனால் இவை ஒன்று அல்லது இரண்டு கணுவிடைப் பகுதிகளை மட்டுமே கொண்டிருக்கும். இவற்றின் தண்டின் தன்மையை மொட்டுகள், செதில் இலைகள், மலர் போன்றவற்றைப் பெற்றிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டு: உருளை வடிவக் குறு இலைத்தொழில் தண்டு - அஸ்பராகஸ், தட்டையான குறு இலைத்தொழில் தண்டு- ரஸ்கஸ்.

6. முட்கள் (Thorns)

முட்கள் கட்டையான, கூர்மையான உருமாறிய தண்டாகும். கக்கமொட்டோ அல்லது நுனி மொட்டோ முள்ளாக உருமாற்றம் அடைகிறது. காரிசா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக உருமாறியுள்ளது. சிட்ரஸ் மற்றும் அடலான்சியா (காட்டுக் கிச்சலி) தாவரங்களில் கக்க மொட்டு முட்களாக உருமாற்றம் பெறுகிறது.


II. தரை ஒட்டியதண்டின் உருமாற்றம் (Sub aerial stem modification)


மெல்லிய தண்டுடைய தாவரங்களின் தரைமேல் படரும் தண்டிலிருந்து பலகிளைகள் கிடைமட்டமாக வளரும். இக்கிளைகள் உடல இனப்பெருக்கத்திற்கானவை. இவை தரை ஒட்டியோ பகுதி புதைந்தோ காணப்படும்.

1. ஓடுதண்டு (Runner)

இவைமெல்லிய, கணுக்களில் வேர்விடும் கிடைமட்டக் கிளைகளாகும். எடுத்துக்காட்டு: சென்டெல்லா, சைனோடான் டாக்டைலான்.


2. ஸ்டோலன் (Stolon)

இதுவும் மெல்லிய, பக்கவாட்டுக் கிளையாகத் தண்டின் அடிப்பகுதியிலிருந்து தோன்றுகிறது. முதலில் இது சாய்வாக மேல்நோக்கி வளர்ந்து பின்னர் வளைந்து, தரையை நோக்கி வளர்கிறது. தரையைத் தொட்டவுடன் வேர்களைத் தோற்றுவித்து தனித்த சிறு தாவரமாக உருவாகிறது. எடுத்துக்காட்டு: மென்தா பைபெரிடா (புதினா),

ஃபிரகேரியா இண்டிகா (காட்டு ஸ்ட்ராபெர்ரி)

3. தரைகீழ் உந்து தண்டு (Sucker)

இது தரைகீழ்த் தண்டிலிருந்து தோன்றி சாய்வாக மேல்நோக்கி வளர்ந்து, தனித்த சிறு தாவரமாக உருவாகிறது. எடுத்துக்காட்டு: கிரைசாந்திமம் (சாமந்தி), பாம்புசா (மூங்கில்).

4. நீர் ஓடுதண்டு (Offset)

இவை ஓடுதண்டைப் போன்றவையே. ஆனால் இத்தகைய தண்டு நீர்வாழ் தாவரங்களில், குறிப்பாக வட்ட அடுக்கு இலைகளைக் கொண்ட தாவரங்களில் காணப்படுகின்ற அமைப்பாகும். இது கீழ் கக்கத்திலிருந்து தோன்றும் சிறிய, தடித்த இலைகளற்று சிறிது தூரம் கிடைமட்டமாக வளரும் தண்டாகும். பின்னர் இத்தண்டின் கணுவிலிருந்து வட்ட அடுக்கு இலைகளும், வேர்களும் உருவாகும். எடுத்துக்காட்டு : ஐக்கோர்னியா (வெங்காயத் தாமரை), பிஸ்டியா (ஆகாயத் தாமரை).


 

III. தரைகீழ்த் தண்டின் உருமாற்றம் (Underground stem modifications)


பல்பருவ அல்லது இருபருவச் செடிகள் தரைகீழ் தண்டுகளைப் பெற்றிருக்கும். இவற்றை வேர் முனைத் தண்டு என்று அழைப்பர். வேர்முனைத் தண்டானது சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உறுப்பாகச் செயல்படுகிறது. இத்தண்டு சாதகமற்ற சூழ்நிலைகளில் பூமியின் கீழ் உயிருடன் இருக்கும். பின் சாதகமான சூழ்நிலைகளில் மீண்டும் வளரும். தரைகீழ் தண்டுகள் கணுக்கள், கணுவிடைப் பகுதிகள், செதில் இலைகள் மற்றும் மொட்டுகளைக் கொண்டிருப்பதால் இவை வேர்கள் அல்ல. வேர்முனைத் தண்டில் வேர் மூடியும், வேர்த் தூவியும் இல்லாமல் நுனி மொட்டுகளைப் பெற்றிருப்பத்தால் அவை தண்டாகவே கருதப்படும்.

1. குமிழம் (Bulb)

இவை சதைப்பற்றுள்ள செதில் இலைகளால் சூழப்பட்ட குறுக்கப்பட்ட கூம்பு அல்லது குவிந்த வடிவமுடைய தரைகீழ் தண்டாகும். இவை இரண்டு வகைப்படும்.

i. உறையுடை குமிழ்தண்டு (Tunicated (coated) bulb); இவ்வகையில் தண்டானது மிகவும் குறுகியும், வளையம் போன்ற பல அடுக்குகளாலான செதில் இலைகளாலும் சூழப்பட்டிருக்கும். இவை இரண்டு வகைப்படும்.

அ) சாதாரண உறையுடைய குமிழம் எடுத்துக்காட்டு:

அலியம் சீபா (வெங்காயம்).

ஆ) கூட்டு உறையுடைய குமிழம். எடுத்துக்காட்டு: அலியம் சட்டைவம் (பூண்டு).

2. கந்தம் (Corm)

இவை நேராக வளரும் நுனியைக் கொண்ட சதைப்பற்றுள்ள தரைகீழ் தண்டாகும். கந்தமானது செதில் இலைகளால் சூழப்பட்டு, கணுக்களையும் கணுவிடைப் பகுதிகளையும் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டு: அமார்ஃபோஃபேலஸ், கொலகேசியா, கால்சிகம்.

 

3. மட்டநிலத்தண்டு (Rhizome)

இவை கிடைமட்டமாக வளரும் பல பக்கவாட்டு வளர் நுனிகளைக் கொண்ட தரைகீழ் தண்டாகும். இவை செதில் இலைகளால் சூழப்பட்ட மிகத் தெளிவாகத் தெரியும் கணுக்களையும், கணுவிடைப் பகுதிகளையும் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டு: ஜிஞ்ஜிஃபெர் அஃபிசினாலே, கேனா, குர்குமா லாங்கா, மியூஸா.

4. கிழங்கு (Tuber)

இவை சதைப்பற்றுடைய கோள அல்லது உருளை வடிவம் கொண்ட தரைகீழ் தண்டாகும். இவற்றில் பல கோண மொட்டுகள் அமிழ்ந்து காணப்படுகின்றன. இக்கோண மொட்டுகளுக்கு ‘கண்கள்’ என்று பெயர். எடுத்துக்காட்டு: சொலானம் டியூபரோசம் (உருளைக்கிழங்கு), ஹீலியாந்தஸ் டியூபரோசஸ்.


IV. தண்டு கிளைத்தல் (Stem branching)


தண்டில் கிளைகள் அமைந்திருக்கும் முறைக்கு கிளைத்தல் என்று பெயர். நுனி ஆக்குத்திசுக்களே கிளைத்தலை நிர்ணயிக்கின்றன. வளரும் முறையைப் பொறுத்துத் தண்டானது வரம்பற்ற கிளைத்தலையும் வரம்புடைய கிளைத்தலையும் கொண்டுள்ளது

1. வரம்பற்ற கிளைத்தல்/ஒருபாதக் கிளைத்தல் (Indeterminate / Monopodial branching):

இவற்றில் நுனி மொட்டானது தடையின்றி தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்று பல பக்கவாட்டுக் கிளைகளை உருவாக்குகிறது. இவ்வகை கிளைத்தலுக்கு வரம்பற்ற கிளைத்தல் என்று பெயர். எடுத்துக்காட்டு: பாலியால்தியா, ஸ்வைடீனியா (மகோகனி), ஆன்ட்டியாரிஸ். 

2. வரம்புடைய கிளைத்தல்/பல பாதக் கிளைத்தல் (Determinate/ Sympodial branching):

இவற்றில் நுனி மொட்டானது சிலகால வளர்ச்சிக்குப் பிறகு நின்றுவிடுகிறது. பின்னர் தாவரத்தின் வளர்ச்சியானது பக்க ஆக்குத்திசுக்களின் மூலமாகவோ மொட்டுகளின் மூலமாகவோ மேற்கொள்ளப்படுகிறது. இவ்வகை கிளைத்தலுக்கு வரம்புடைய கிளைத்தல் என்று பெயர். எடுத்துக்காட்டு: சைகஸ்.


Tags : Aerial, Sub aerial, Underground, Stem Branching தரைமேல், தரை ஒட்டிய, தரைகீழ்த் தண்டின் உருமாற்றம், தண்டு கிளைத்தல்.
11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm : Modification of Stem Aerial, Sub aerial, Underground, Stem Branching in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல் : தண்டின் உருமாற்றம் - தரைமேல், தரை ஒட்டிய, தரைகீழ்த் தண்டின் உருமாற்றம், தண்டு கிளைத்தல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்