Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | முகலாயர்காலச் சமுதாயம்

முகலாயப் பேரரசு - முகலாயர்காலச் சமுதாயம் | 11th History : Chapter 14 : The Mughal Empire

   Posted On :  18.05.2022 05:48 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு

முகலாயர்காலச் சமுதாயம்

இந்திய மக்கள் தொகை 16ஆம் நூற்றாண்டில் 15 கோடியாகவும் 18ஆம் நூற்றாண்டில் 20 கோடியாகவும் இருந்திருக்கலாமென மதிப்பீடு செய்யப்படுகிறது.

முகலாயர்காலச் சமுதாயம்

இந்திய மக்கள் தொகை 16ஆம் நூற்றாண்டில் 15 கோடியாகவும் 18ஆம் நூற்றாண்டில் 20 கோடியாகவும் இருந்திருக்கலாமென மதிப்பீடு செய்யப்படுகிறது. நிலப்பரப்பின் பெரும்பகுதி காடுகளாக இருந்ததால் வேளாண்மை நிலங்கள் அளவில் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். சமூகத்தின் மிக முக்கியத் தொழில் வேளாண்மை என்பதால், சமூக அமைப்பில் கிராமச் சமூகமே முதன்மை நிறுவனமாகும். கிராமத்தின் இயல்புகள், உட்கூறுகள், ஆட்சி முறைகள் ஆகியவற்றில் இடத்திற்கிடம் வேறுபாடுகள் இருந்தபோதிலும் கிராம நிர்வாகத்தில் சில பொதுத்தன்மைகள் இருந்தன. முக்காடம் என்றழைக்கப்பட்டக் கிராமத் தலைவர்கள் கிராமத்தின் நிர்வாக உறுப்பான பஞ்ச் (பஞ்சாயத்து) என்ற அமைப்பினை உருவாக்கினர். கிராம அளவில் வரிகளை வசூலிப்பதும் அவை தொடர்பான கணக்குகளைப் பராமரிப்பதும் இப்பஞ்சாயத்தின் பொறுப்பாகும். பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாத நிலங்களைக் கிராமக் கைவினைஞர்கள், கடைநிலை ஊழியர்கள், சேவை செய்வோர் ஆகியோருக்கு அவர்கள் செய்யும் சேவைகளுக்குக் கைமாறாக இப்பஞ்சாயத்து வழங்கியது.

சமூகத்தின் நடுத்தர வர்க்கமானது சிறிய மன்சப்தார்கள், சிறு கடைகள் வைத்திருப்போர், ஹக்கீம் (மருத்துவர்கள்), இசைக் கலைஞர்கள், ஏனைய கலைஞர்கள், முகலாய நிர்வாகத்தின் கீழ்நிலை அலுவலர்கள் ஆகியோரைக் கொண்டிருந்தது. ஊதியம் பெறும் ஒரு வர்க்கமும் இருந்தது. இவர்கள்மதாத்--மாஷ்எனப்பட்ட மானியத்தை முகலாயப் பேரரசரிடமிருந்தும், உள்ளூர் ஆட்சியாளர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரிடமிருந்தும் பெற்றனர். இவர்கள் கிராமத்து மேன்மக்களின் ஒரு பகுதியாக மாறி கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கின்ற கண்ணிகளாய் இருந்தனர். தில்லி, ஆக்ரா, பதேப்பூர் சிக்ரி, லாகூர், அகமதுநகர், டாக்கா, முல்தான் ஆகியன பேரரசின் முக்கியமான நகரங்களாகும். அவை சமகால ஐரோப்பிய நகரங்களான லண்டன், பாரிஸ் போன்றவற்றிற்கு இணையாகக் கருதத்தக்க நிலையிலிருந்தன.

 

சிறப்பு உரிமைகளையும் தனிச் சலுகைகளையும் பெற்றிருந்த வர்க்கத்தாருக்கும் அவற்றைப் பெற்றிராத வர்க்கத்தாருக்கும் இடையே வாழ்க்கைத் தரத்திலிருந்த சமத்துவமின்மை தெளிவாகத் தெரிந்தது. சமுகத்தின் அடிமட்டத்திலிருந்த மக்களில் ஆண்கள்லங்கோடுஎனப்பட்ட கோவணத்தையும் பெண்கள் சேலையையும் அணிந்தனர். ஏழை மக்கள் மண் வீடுகளில் வசித்தனர். அவர்களுடைய உணவு கோதுமை சப்பாத்தி, பருப்புகள், காய்கறி ஆகியன. முகலாய சமூகத்தில் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றிருந்த ஜமீன்தார்களையும், பிரபுக்களையும் கொண்டிருந்த வர்க்கம் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தனர். மன்சப்தாரிகளான பிரபுக்கள் ஜாகீர்களை (நிலமானியங்களை) தங்கள் தகுதிக்கேற்ற ஊதியமாகப் பெற்றிருந்தனர். இவர்கள் அடக்குமுறை, சுரண்டும் இயல்புகளைக் கொண்டிருந்தனர். பிரபுக்கள் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களையும் குதிரைகளையும் யானைகளையும் மற்றவற்றையும் பெற்றிருந்தனர். அவர்கள் கனிமரங்களைக் கொண்ட தோட்டங்களையும், நீரோடைகளையும் கொண்டிருந்த அழகிய வீடுகளிலும் வசித்தனர். நேர்த்தியான ஆடைகளை அணிந்தனர்.

ஆதிக்க இனங்களையும் சாதிகளையும் சேர்ந்த ஜமீன்தார்கள் ஆயுதம் ஏந்திய படைகளோடு நிலத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சலுகைகளைப் பெற்றவர்களாய் விளங்கினர். அபுல் பாசல் தன்னுடைய அய்னி அக்பரியில் ஜமீன்தார்கள் ஆவதற்கானத் தகுதிகளையுடைய சாதிகளைப் பட்டியலிடுகிறார். பெரும்பாலும் இந்து மேல் சாதிகளைச் சேர்ந்தோரும் ரஜபுத்திரர்களும் ஜமீன்தார்களாக இருந்தனர். சில பகுதிகளில் முஸ்லீம்களும் ஜமீன்தார்களாக இருந்துள்ளனர். ஜமீன்தார்கள் குத்தகைப் பணத்தை முறையாகச் செலுத்தத் தவறிய விவசாயிகளை நிலத்தைவிட்டு வெளியேற்றும் உரிமையைப் பெற்றிருந்தனர்.

முகலாயச் சமூகக் கட்டமைப்பில் பிரபுக்களாக அங்கம் வகித்தவர்களில் பெரும்பாலோர் மத்திய ஆசியா மற்றும் ஈரானிலிருந்து வந்தவர்களாவர். ஆப்கானியர், இந்திய முஸ்லீம்கள் (ஷேயிக்சதாஸ் என்றழைக்கப்பட்டனர்), ரஜபுத்திரர்கள், மராத்தியர் ஆகியோரும் பிரபுக்கள் என்னும் சமூக மேன்மைநிலையைப் பெற்றிருந்தனர். அக்பருடைய ஆட்சிக் காலத்தில் 15 விழுக்காடுக்கும் மேற்பட்ட பிரபுக்கள் ரஜபுத்திரர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ராஜா தோடர்மால், ராஜா மான்சிங், ராஜா பீர்பால் ஆகியோர் அக்பர் காலத்தில் புகழ்பெற்ற பிரபுக்களாவர். ரஜபுத்திரர்கள் அரசு நிர்வாகத்திலிருந்த பல்வேறு பணியிடங்களுக்குக் காயஸ்தர், கத்ரி சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமித்தனர். ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் ஆகியோர் மராத்தியரைப் பிரபுக்களாக நியமித்தனர். எடுத்துக்காட்டாக சிவாஜியின் தந்தை ஷாஜி சில காலம் ஷாஜகானிடம் பணியாற்றினார்.


வாழ்க்கையில் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் அதிகம் இருந்ததால் மத்திய ஆசியாவிலிருந்து தொடர்ந்து புலம்பெயர்தல் நடைபெற்றது. இப்புலம் பெயர்தல் பல்வகைப்பட்டக் கூறுகள் ஒருங்கிணைவதற்கு வழிவகுத்துப் பண்பாட்டிற்குச் செழுமை சேர்த்தது. பிரபுக்கள் இன அடிப்படையில் பிரிந்திருந்தாலும் அவர்கள் கூட்டிணைந்த வர்க்கமாக, பாரசீக இந்திய ஓவியர்களையும் இசைக்கலைஞர்களையும் ஆதரித்ததன் மூலம் ஒரு சமரசம் சார்ந்த பண்பாட்டை முன்னெடுத்தனர்.

சாதிமுறை ஒரு மேலாதிக்க நிறுவனமாக இருந்தது. கீழ்நிலைச் சாதிகள் அதிகமான ஒடுக்குமுறைக்கு உள்ளாயினர். சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராகப் பக்தி இயக்கம் புரட்சிக் கொடியை உயர்த்தினாலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வறுமையில் வாடிய, நிலமற்ற விவசாயிகள் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

மரபு வழிச் சொத்துக்களில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்ச உரிமையே பெண்களுக்கு இருந்தது. உயர் சாதிப் பெண்களிடையில் விதவை மறுமணம் தடை செய்யப்பட்டிருந்தது. அன்றாட வீட்டு வேலைகளோடு பெண்கள் நூல் நூற்றனர். வேளாண் பணிகளிலும் உதவி செய்தனர். முகலாய நிர்வாகம் மேல்சாதிச் சமூகங்களிடையே நிலவிய உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டது. முஸ்லீம் மணப்பெண்கள் திருமணத்தின்போது மகர் எனும் பணப்பரிசை (மணமகன் மணமகளுக்குக் கட்டாயம் தர வேண்டிய பணம்) பெறுவதற்கு உரிமை பெற்றிருந்தனர். மேலும் பரம்பரைச் சொத்துக்களில் குடும்பத்திலுள்ள ஆண்களுக்குச் சமமமாக இல்லாவிட்டாலும் பெண்களும் ஓரளவு பங்குபெறும் உரிமையைப் பெற்றிருந்தனர்.

Tags : The Mughal Empire முகலாயப் பேரரசு.
11th History : Chapter 14 : The Mughal Empire : Mughal Society The Mughal Empire in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு : முகலாயர்காலச் சமுதாயம் - முகலாயப் பேரரசு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு