Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல்

பொருளாதாரம் - தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல் | 12th Economics : Chapter 2 : National Income

   Posted On :  14.03.2022 10:32 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய்

தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல்

சமூகக் கணக்கிடுதல் மூலமாகவும் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.

தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல் (National Income And Social Accounting)

சமூகக் கணக்கிடுதல் மூலமாகவும் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது. சமூகக் கணக்கிடுதல் முறையில் நிறுவனங்கள், குடும்பங்கள், அரசு மற்றும் இதுபோன்ற அமைப்புகளின் பரிமாற்றங்கள் பதியப்பட்டு இவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளும் கண்டறியப்படுகின்றன.சமூகக் கணக்கிடுதலை தயாரிப்பது பொருளியல் அறிஞர்களுக்கு கொள்கைகளை உருவாக்க பயன் உள்ளதாக இருக்கும். ஏனெனில் இது பொருளாதார அமைப்பின் பல்வேறு துறைகளுக்கு இடையே உள்ள புள்ளியியல் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு இடையேயுள்ள தொடர்புகளை விளக்குகிறது. மேலும் எதிர்கால பொருளாதார நிலையை துல்லியமாக கணிப்பதற்கும் உதவுகிறது.



1. சமூக கணக்கிடுதல் மற்றும் துறைகள் (Social Accounting and Sector)

இம்முறையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளாக பிரிக்கப்படுகிறது. தனிநபர்கள் உள்ளடக்கிய ஒரு குழு அல்லது பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழு போன்றவைகளுக்கு இடையே நடைபெறும் பொருளாதாரப் பரிமாற்றங்களை ஒரு துறை என்கிறோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கீழ்கண்ட துறைகளாக பிரிக்கப்படுகிறது.

i. நிறுவனங்கள் 

ii. குடும்பங்கள் 

iii. அரசு 

iv. வெளிநாட்டு வாணிபம் 

v. மூலதன துறை

i. நிறுவனங்கள்

நிறுவனங்கள் உற்பத்திக் காரணிகளைப்பணியில் அமர்த்தி பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்கின்றன.

ii. குடும்பங்கள்

குடும்பங்கள் தங்கள் உழைப்பினை அளித்து கூலியை பெற்று, அதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளைப் வாங்குகின்றன. அதாவது ஊதியத்தினைப் பெற்று பொருட்களை வாங்குகின்றது. நிறுவனங்கள் குடும்பங்களின் பணியை பெற்று கூலியை தருகின்றன. குடும்பங்கள் கூலியை பெற்று நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் பணிகளை வாங்குகின்றன.

iii. அரசு

அரசுத் துறையில் பல நிலைகள் உள்ளன. கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், மத்திய அரசு என பல நிலைகள் உள்ளன. எடி மற்றும் பீகாக் (Edey and Peacock) கூற்றுப்படி, அரசு என்பது "ஒன்று சேர்க்கப்பட்ட நபர்கள்" எனக் குறிப்பிடுகின்றனர். வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் மூலமாக அரசு நிதியைத் திரட்டி பண்டங்களையும் பணிகளையும் வாங்குகிறது. பாதுகாப்பு, பொது சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதுதான் அரசின் முக்கிய பணி ஆகும். பொதுநிறுவனங்களான அஞ்சல் அலுவலகம் மற்றும் இரயில்வே துறைகள் அரசுத்துறையாக சேர்க்கப்படாமல் நிறுவனங்களாக கருதப்படுகின்றன.

iv. வெளிநாட்டு வாணிபம்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வருமானம், வெளிநாட்டு கடன்கள், வெளிநாட்டு மூலதன வருமானம் மற்றும் செலுத்துதல்கள் போன்றவை வெளிநாட்டுத் துறையாகக் கருதப்படுகிறது.

v. மூலதன துறை

மூலதனத்துறை சேமிப்பையும் முதலீட்டையும் உள்ளடக்கியது. காப்பீட்டு நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பண பரிமாற்றங்கள் இதில் அடங்கும். மூலதனத்துறை, நிறுவனங்களாக கருதப்படுவது இல்லை . மாறாக தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றன.

GDP யில் துறைகளின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு நாட்டின் பொருளாதாரம் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் துறை என பிரிக்கப்படுகிறது.



2. தேசிய வருவாயும் பொது நலனும் (National Income and Welfare)

ஒரு நாட்டின் வளர்ச்சியும் பொருளாதார அந்தஸ்தும் அந்நாட்டின் தேசிய வருவாயைப் பொறுத்தே அமைகிறது. GDPயில் தலைவீத வருமானம் மற்றும் அதன் ஆண்டு வளர்ச்சி வீதம் அடிப்படையில் நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் அளவிடப்படுகிறது. அதிக தலைவீத வருமானம் உடைய நாடு, நல்ல வாழ்க்கைத்தரத்துடன் அதிக பொருளாதார நலனையும் பெற்றதாக இருக்கும்.

ஆனால் GDP அல்லது தலைவீத வருமானம் அதிகரித்தால் பொருளாதார நலனும் அதிகரிக்க வேண்டும் என்பது இல்லை. பொருளாதார நலன் குறியீட்டெண்ணாக தலைவீத வருமானம் உள்ள போதிலும் கீழ்க்கண்ட குறைகளை கொண்டுள்ளது.

1. பொருட்கள் மற்றும் பணிகளின் அளிப்பை பொது நலன் சார்ந்து உள்ளது. நுகர்வு பொருட்களை காட்டிலும் மூலதன பொருட்கள் அதிகமாக இருந்தால், பொருளாதார நலனின் முன்னேற்ற குறைவாக இருக்கும். அதே போன்று ஆடம்பர பொருட்களின் உற்பத்தி பணக்காரர்களுக்காக மட்டுமே இருக்கும்.

2. இயற்கை வளங்களான காற்று, நீர் மற்றும் மண் போன்றவற்றை மாசுபடுத்தி அதிகமான GDPயை பெற்றால் பொருளாதார நலன் குறையும்.

3. இராணுவ தளவாடங்கள் உற்பத்தி அதிகரிப்பதினால் தேசிய உற்பத்தி அதிகரித்தாலும் பொருளாதார நலன் குறையும்.

4. பெண்களுக்கு வேலைவாய்ப்பை தருதல் மற்றும் உழைப்பாளர்களை அதிக நேரம் வேலை செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலமாக தலைவீத வருமானத்தை அதிகரிக்கலாம். ஆனால் பொருளாதார நலனில் முன்னேற்றம் இருக்காது.

ஆகவே PQLI என்பது பொருளாதார நலனை கணக்கிடுவதில் முக்கிய குறியிட்டெண்ணாக உள்ளது. மக்களின் வாழ்க்கை தரம், வாழும் காலம் மற்றும் கல்வியறிவு போன்றவை PQLI (Physical Quality of Life Index) உள்ள டங்கி இருக்கிறது.



3. தேசிய வருவாய் மற்றும் நாட்டின் செல்வம் அரிக்கப்படுதல் (National Income & Erosion of national Wealth)

அதிகமான GDP யை அடைய வேண்டும் என்பதற்காக நாட்டின் இயற்கை வளங்கள் அதிக அளவில் அரிக்கப்படுகின்றன அல்லது சேதப்படுத்தப்படுகின்றன. இதனால் எதிர்கால வளர்ச்சி குறைகிறது. ஆகையால் தேசிய வருவாயை கணக்கிடும் போது, இயற்கை வளங்களின் இழப்பை தேசிய வருவாயிலிருந்து கழிக்க வேண்டும்.



4. US$ அடிப்படையில் தேசிய வருமானம் (National income in terms of US$)

தேசிய வருவாயைக் குறிப்பிடும் பணத்தின் மதிப்பை வைத்தும் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை அறியலாம். உதாரணத்திற்கு இந்திய தேசிய வருவாயை அமெரிக்க பணமான டாலரில் சொல்ல வேண்டும். இதன் விளைவாக இந்திய தேசிய வருமானம் மிகக் குறைவாகத் தோன்றலாம். ஆனால் வாங்கும் சக்தியின் அடிப்படையில் அளவிட்டால் இந்தியத் தேசிய வருமானம் அதிகமாகத் தோன்றும்.



5. சமூக மற்றும் சுற்றுச்சூழல் செலவு (Social and Environmental Cost)

பொருளாதார நுகர்வு பண்டங்களை உற்பத்தி செய்யும் போது, பல சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயக் கேடுகள் உருவாக்கப்படுகின்றன. தேசிய வருவாய் கணக்கிடும் போது இவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.





தொகுப்புரை

ஒரு நாட்டின் பொருளாதார செயல்திறன் அல்லது உற்பத்தி செயல்திறனை தேசிய வருவாய் விளக்குகிறது. பொருளாதார வல்லுநர்கள், திட்டமிடுபவர்கள், அரசு, வியாபாரிகள் மற்றும் IMF, உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய வருவாய் பற்றிய புள்ளி விவரத்தை பயன்படுத்துகின்றன. நாட்டின் பல்வேறு நோக்கங்களுக்காக இந்த புள்ளி விபரங்களை பகுத்தாய்வு செய்கின்றன. மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிய தேசிய வருவாய் உதவுகிறது. மேலும் பிற நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கவும் தேசிய வருவாய் பற்றிய புள்ளி விவரம் பயன்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவை கணக்கிட தேசிய வருவாய் பயன்படுத்தப்படுகின்றது.





அருஞ்சொற்பொருள் 



* மொத்த தேசிய உற்பத்தி (GNP): ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் பணமதிப்பு. இது தேய்மானத்தையும் நிகர ஏற்றுமதியையும் உள்ளடக்கியது

* நிகர தேசிய உற்பத்தி (NNP): ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் பண மதிப்பு இதில் தேய்மானத்தை கழித்து நிகர ஏற்றுமதியை கூட்ட வேண்டும்

* காரணிச் செலவில் NNP ( NNP at Factor cost): எல்லா உற்பத்திக் காரணிகளுக்கும் கிடைத்த மொத்த வருமானம்

* தனிநபர் வருமானம் (Personal Income): ஒரு நாட்டின் உள்ள தனி நபர்கள் நேர்முகவரி செலுத்துவதற்கு முன்பாக பெற்ற மொத்த வருமானம்

* செலவிடக்கூடிய வருமானம் (Disposable Income): நேர்முகவரி செலுத்திய பிறகு, தனி நபர்களின் நுகர்வு மற்றும் சேமிப்பை கூட்டி மொத்தமாக பெறுவது ஆகும். 

* தலைவீத வருமானம் (Per capita Income): தனிநபரின் ஆண்டு சராசரி வருமானம்

* சமூகக் கணக்கீடு (Social Accounts): பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதால் ஏற்படுகிற சமூகச் செலவுகளின் அடிப்படையில் தேசிய வருமானம் கணக்கிடல்

* பணம் கொடுக்கப்படாத சேவைகள் (Unpaid services): பணம் பெறாமல் அளிக்கக்கூடிய பொருளாதார பலன்கொண்டிருக்கும் சேவைகள் (உதாரணம் உடல் நலக்குறைவான மனைவியை கணவன் கவனித்துக் கொள்ளுதல், சமையல் செய்தல், துணிதுவைத்தல், நண்பர்களுக்கு உதவுதல்)

* மூலதனத் துறை(Capital sector): இது சேமிப்பையும் முதலீட்டையும் உள்ளடக்கியது

* மாற்றுச் செலுத்துதல் (Transfer payments): வேலையற்றோருக்கு அரசு அளிக்கும் உதவித்தொகை, வயோதிகர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்றவை

Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 2 : National Income : National Income and Social Accounting Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய் : தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய்