Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இயற்கைப் பேரிடர்கள்

தமிழ்நாடு | புவியியல் - இயற்கைப் பேரிடர்கள் | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu

   Posted On :  27.07.2022 07:32 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 6 : தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

இயற்கைப் பேரிடர்கள்

உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுதான் பேரிடர் எனப்படுகிறது.

இயற்கைப் பேரிடர்கள்

உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுதான் பேரிடர் எனப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அபாய நேர்வு குறைப்பு அமைப்பின் (UNDRR), கூற்றுப்படி அபாய குறைப்பு (Disaster Risk Reduction) என்பது பேரிடருக்கான காரணங்களை முறையாக கண்டறிந்து பேரிடரின் போது அதன் தாக்கங்களைக் குறைப்பதாகும். இது இடர் உண்டாகும் இடங்களைத் தவிர்த்தல், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதிப்பினைக் குறைப்பது, நில மேலாண்மை, சூழ்நிலை மேலாண்மை, எதிர் விளைவுகள் குறித்தத் தயார்நிலை மற்றும் எச்சரிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது.

தமிழ்நாட்டில் நிகழும் பல்வேறு பேரிடர்கள் பற்றியும், பேரிடரின் போது மற்றும் பேரிடருக்கு முன்னும் பின்னும் தேவையான நடவடிக்கைகள் பற்றி காண்போம்.

நிலச்சரிவு

மலைகள் அல்லது குன்றுகளின் ஒரு பகுதியோ அல்லது பாறைகளோ சரிந்து வீழ்தல் நிலச்சரிவு எனப்படுகிறது. நீரானது, நிலச்சரிவுக்கு ஒரு முக்கிய காரணியாகும். தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதி நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகவும், பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் பகுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் நிலச்சரிவுக்கு உள்ளாகும் மற்ற பகுதிகளாகும்.

அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் நிலச்சரிவுக்கு முன்

விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எச்சரிக்கை மற்றும் தயார் நிலையில் இருத்தல், அன்றாட செய்திகளை கவனித்தல், வெளியேறுவதற்கான திட்டம், வழக்கத்திற்கு மாறான சிதைந்த பொருட்கள், உடைந்த மரங்கள் மற்றும் கூழாங்கற்களின் நகர்வுகளைக் கவனித்தல் ஆகியன முக்கிய செயல்பாடுகள் ஆகும். நிலச்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் அப்பகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுதல் வேண்டும்.

நிலச்சரிவுக்குப் பின்

நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு அப்பால் இருத்தல் வேண்டும். உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் அன்றைய செய்திகளைக் கேட்டல், நிலச்சரிவுக்கு பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வெள்ளம், கழிவுகளின் நகர்வு ஆகியவற்றைக் கவனித்தல், நேரடியாக நிலச்சரிவு பகுதியினுள் செல்லாமல் காயம்பட்ட மற்றும் சரிவில் சிக்கியவர்களை மீட்டல் ஆகியன நிலச்சரிவுக்குப் பின் கடைபிடிக்க வேண்டிய செயல்களாகும்.


வெள்ளப்பெருக்கு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவக்காற்று காலங்களில் வெள்ளப்பெருக்கு என்பது பொதுவாக காணப்படும் ஒரு நிகழ்வாகும்.

அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் வெள்ளப்பெருக்கிற்கு முன்

சேவை மையங்கள் மற்றும் வெளியேறும் வழிகளைத் தெரிந்து வைத்திருத்தல், அவசரகால தொலைபேசி எண்களையும், செய்திகளையும் தெரிந்து வைத்திருத்தல், முக்கிய பொருட்களை மடித்தும் சுருட்டியும் உயரமான பகுதிகளில் வைத்தல்.

வெள்ளப்பெருக்கின் போது

குழந்தைகள் மற்றும் வயதானவர்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும், வீடுகளிலிருந்து உயரமான பகுதிகளுக்கு வெளியேற்றுவதை உறுதி செய்தல், அனைத்து மின்சார சாதனங்கள் மற்றும் எரிவாயு சாதனங்களை அணைத்து வைத்தல், தாமதமின்றி வெளியேறுதல், நீரின் வழியாக வாகனங்களைச் செலுத்தாமலும், மின் கம்பிகள், மின் திறன் செலுத்தும் மின் வடக்கம்பிகள், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து தொலைவில் இருக்க வேண்டும்.

வெள்ளப்பெருக்கிற்குப் பின்

மீண்டும் வீடுகளுக்குச் செல்வதை உறுதி செய்தல், வீட்டிற்குள் நுழையும் முன் அனைத்து மின்சார உபகரணங்களையும் அணைத்து, மீண்டும் அவற்றை உபயோகப்படுத்தும் முன் சரியாக உள்ளனவா? என உறுதி செய்ய வேண்டும். பழுதுபட்ட பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு முன் அதற்கேற்ற உடையினை அணிவது அவசியம் ஆகும்.


புயல்கள்

வடகிழக்கு பருவக்காற்று காலங்களில் வங்கக்கடலில் உருவாகும் வெப்பமண்டல சூறாவளிகள் தமிழக கடற்கரையைத் தாக்குகின்றன. வெள்ளப்பெருக்கு, உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஆகியவை மாநிலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வாகும். புயல் தாக்கும் தீவிரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மிக அதிக, அதிக, மிதமான மற்றும் குறைந்த புயல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் புயலுக்கு முன்

வதந்திகளை நம்பாமல் அமைதியாகவும் பதற்றமடையாமலும் இருத்தல், அலைபேசிகள் மின்னூட்டம் செய்யப்பட்டதை உறுதி செய்து, குறுஞ்செய்திகளைப் பெறுதல், வானொலி மற்றும் காணொளி பெட்டிகள் மூலம் அவ்வப்போதைய வானிலை நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளல், முக்கிய மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா கொள்கலன்களில் பாதுகாப்பாக வைத்திருத்தல், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அவசரகால மூட்டைத்தொகுப்பை தயார் நிலையில் வைத்திருத்தல், குடியிருப்பு பாதுகாப்பாக இருப்பதையும், சரி செய்வதையும் உறுதி செய்தல், கூர்மையானப் பொருட்கள் வெளிப்பகுதிகளில் இல்லாமல், கால்நடைகள் செல்ல மற்றும் கால்நடை பாதுகாப்பிற்காக அவற்றை அவிழ்த்து விடுதல் வேண்டும். மீனவர்கள் கூடுதலான மின்சாதனங்களுடன் (பேட்டரிகள்) ஒரு வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும். இக்காலங்களில் கடலுக்குச் செல்வதை தவிர்த்து, படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

புயலின் போது

வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தல், அனைத்து மின் சாதன பொருட்களையும் மின் இணைப்பிலிருந்து துண்டித்தல், காலியான அறைகளில் தங்குதல், நகரக் கூடிய பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், அருகில் வசிப்பவர்களுக்கு உதவி செய்தல் ஆகியன புயலின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாகும்.

புயலுக்குப் பின்னர்

புயல் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டால் மறு அறிவுரைகள் வரும் வரை அங்கேயே தங்கி இருத்தல் வேண்டும். புயலுக்குப்பின் மின்சார கம்பிகளைத் தொடுவதையும், மின்சாரத்தை பயன்படுத்துவதையும் அறவே தவிர்த்தல் வேண்டும். புயலுக்குப்பின் பாம்பு, பூச்சிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். கட்டடங்களுக்கு அருகில் உள்ள கழிவுகளையும், விலங்குகளின் இறந்த உடல்களையும், அப்புறப்படுத்த வேண்டும். இழப்பின் உண்மையான மதிப்பினையும், அளவினையும் உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.

வறட்சி

தமிழ்நாடு ஒரு நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும். இது குறிப்பிட்ட பருவத்தில் அல்லது நிரந்தரமாக காணப்படும் ஒன்று. நமது மாநிலம் நீர் தேவைக்குப் பருவ மழையையே பெரிதும் நம்பியுள்ளது. இப்பருவமழை பொய்ப்பு வறட்சியின் பேரழிவிற்கு வழிவகுக்கிறது.

நீர் பற்றாக்குறையைக் கையாளுவதற்கு அல்லது சரி செய்வதற்கு மழை நீர் சேகரிப்பு, நீர்வளப் பாதுகாப்பு முறைகளைத் தீவிர முறையில் பின்பற்ற வேண்டும்.


நீர் சேகரிப்பதற்கான சில வழிமுறைகள்

நீர் மாசுபடுதலைத் தடுத்தல், நீர் மறுசுழற்சி, சிக்கனமான நிலத்தடி நீர் பயன்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, மரபுவழி நீர்வளங்களைப் புதுப்பித்தல், நவீன நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்தல், காடுகளின் பரப்பளவை அதிகரித்தல், பயிரிடும் முறைகளை மாற்றுதல், வெள்ளப்பெருக்கு மேலாண்மை, புவி வெப்ப நீர் பயன்பாடு ஆகியன நீர்வளத்தை பாதுகாக்கும் சில வழிமுறைகள் ஆகும்.

தீ விபத்து

தமிழ்நாடு ஒரு வெப்ப மண்டலத்தில் உள்ள மாநிலம். கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகளில் அவ்வப்பொழுது காட்டுத் தீ ஏற்படுகிறது.


அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் தீ விபத்திற்கு முன்

எளிதில் தீப்பற்றக்கூடிய தாவரங்கள் மற்றும் பொருட்களிலிருந்து போதுமான இடைவெளி விட்டு (30 அடி தூரம்) குடியிருப்புகளை ஏற்படுத்துதல், உள்ளூர் கட்டட மற்றும் தீ விதிமுறைகளைப் பின்பற்றுதல், மரங்கள் மற்றும் செடிகளின் உயரத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருத்தல், தீப்பிடிக்காத தர நிர்ணயம் செய்து அனுமதிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துதல், குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் பல்வேறு வழிமுறைகளைத் திட்டமிடல் ஆகியன முக்கியமாக மேற்கொள்ள வேண்டியவையாகும்.

தீ விபத்தின் போது

வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களின் மூலம் அவ்வப்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுதல், வாளிகளில் போதுமான நீரை நிரப்பி வைத்திருத்தல், புகைமூட்டம் இருக்கும் பட்சத்தில் அறையில் வெளிச்சத்தை ஏற்படுத்துதல், எரிவாயு இணைப்பினை துண்டித்தல் மற்றும் மின் சாதனங்களை மின் துண்டிப்பு செய்தல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அவ்விடத்தில் இருந்து வெளியேற வழிவகை செய்தல் போன்றவையாகும்.

தீ விபத்திற்குப் பின்

மீண்டும் குடியிருப்புகளுக்கு திரும்பும் முன் தீயணைப்பு அதிகாரிகளின் உதவியோடு சரிபார்த்துக் கொள்ளுதல், தீயினால் எரிந்த பகுதிகளில் மீண்டும் தீ ஜுவாலைகள் தோன்ற வாய்ப்பு உள்ளதால், அப்பகுதிகளில் நுழையும் முன் போதுமான எச்சரிக்கைகளைக் கையாளுதல், அறைகளில் தீ உள்ள பகுதிகள், கூரைப் பகுதிகள், அதன் விளிம்பு பகுதிகள் மற்றும் வெளிப்பகுதிகள் ஆகியவற்றில் தீப்பொறிகள் உள்ளனவா எனச் சோதித்து அறிதல் வேண்டும்.

சுனாமி

இந்தியாவில் சுனாமி என்பது பொதுவானதாக இல்லை என்றாலும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வு இந்தியாவையும், தமிழ்நாட்டையும் எச்சரித்திருக்கிறது.

                சுனாமி

அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் சுனாமிக்கு முன்

கடல் பகுதிகளுக்கு அருகாமையில் வசித்தால் சுனாமி அலையின் தாக்கங்களையும், உள்ளூர் எச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகளையும் தெரிந்து வைத்திருத்தல், அவசர குடியிருப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுத்தல், அருகாமையில் உள்ள உயரமான நிலப்பகுதி மற்றும் அதனை எவ்வாறு அடைவது என்பதை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.

சுனாமியின் போது

தயாராக வைத்திருக்கும் உடமைகளுடன் உடனடியாக வெளியேறுதல், ஆபத்தான பகுதிகளுக்குச் செல்லாமல் இருத்தல், உடனடியாக அருகில் உள்ள உயரமான பகுதிக்குச் செல்லுதல், கட்டடங்களின் உயரமான மாடிகளில் அல்லது உயரமான மரங்களில் ஏறிக் கொள்ளுதல், மற்றும் மிதக்கும் பொருட்களைப் பற்றிக்கொள்ளுதல். மேலும் கடலோர பகுதிகளுக்கு சென்று சுனாமி அலைகளைப் பார்வையிடுவதைத் தவிர்த்தல், மற்றும் உள்ளூர் வானொலியின் அவசர கால நடவடிக்கைகள் பற்றிய செய்திகளைக் கேட்டறிதல் போன்றவை சுனாமியின் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளாகும்.

சுனாமிக்குப் பின்

தொடர்ந்து வானொலி செய்திகளைக் கேட்டல், உரிய அதிகாரிகளிடம் இருந்து அவ்விடத்திலிருந்து செல்வதற்கான அறிவிப்பு வரும்வரை வெளியேற்றப்பட்ட இடங்களுக்கு செல்லாதிருத்தல், காயங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து முதல் உதவி பெறுதல் மற்றும் மற்றவர்களுக்கு உதவி செய்தல் ஆகியன சுனாமிக்குப் பின் பின்பற்றப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளாகும்.

நில அதிர்வு

இந்திய நாடு ஒரு பரந்து விரிந்த நாடு. பொதுவாக வட இந்திய மற்றும் மத்திய இந்தியப்பகுதி அதிக அபாய தன்மை உள்ள மண்டலமாக உள்ளது. மிதமான அபாய தன்மை உள்ள மண்டலமாக தமிழ்நாடு உள்ளது.

அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள் நில அதிர்வின் போது

நில அதிர்வு முழுவதும் முடியும் வரை, கனமான மேசை அல்லது மரத்தாலான பலகைகளினால் ஆன பொருட்களின் கால்களைப் பிடித்துக்கொண்டு அதற்கு அடியில் அமர்ந்திருக்க வேண்டும்.

நில அதிர்விற்குப் பின்

நில அதிர்வு நின்றவுடன் மிக எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். நில அதிர்வினால் பாலங்கள், பாதைகள் போன்றவை பாதிப்படைந்திருக்க வாய்ப்பு உள்ளதால் அவற்றை கடப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.


மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் கீழ்கண்ட மீட்புப் படைகள் மற்றும் அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.

மாநில / யூனியன் பிரதேச அமைப்புகள்

1. மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (தலைவர் - முதலமைச்சர்)

2. நிவாரண / பேரிடர் மேலாண்மை துறை

3. காவல்துறை

4. வனத்துறை

5. தீ மற்றும் குடிமையியல் பாதுகாப்பு சேவைகள்

6. சுகாதார சேவைகள்

7. போக்குவரத்துத்துறை

8. பொதுப்பணித்துறை

9. கால்நடைத்துறை

10. உணவு மற்றும் வட்ட வழங்கல் துறை

மாவட்ட அமைப்புகள் கீழ்க்கண்டவாறு

1. மாவட்ட நீதிபதி (தலைவர் - மாவட்ட ஆட்சியர்)

2. வருவாய்த்துறை

3. குடிமை பணி நிர்வாகம்

4. உள்ளூர் காவல்துறை

5. குடிமை பாதுகாப்பு

6. தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள்

7. ஊர்க் காவல் படை (உள்ளூர், சமூகம், அரசு சாரா அமைப்பு, தன்னார்வ நிறுவனங்கள்)


Tags : Geography தமிழ்நாடு | புவியியல்.
10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu : Natural Disasters in Tamil Nadu Geography in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 6 : தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் : இயற்கைப் பேரிடர்கள் - தமிழ்நாடு | புவியியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 6 : தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்