Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

மூன்றாம் பருவம் அலகு -1 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் | 7th Social Science : History : Term 3 Unit 1 : New Religious Ideas and Movements

   Posted On :  19.04.2022 01:34 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -1 : புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

கற்றலின் நோக்கங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்த அறிவினைப் பெறுதல் • ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோரின் பக்தி இயக்கம் • ஆதிசங்கரரின் அத்வைத தத்துவம், இராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவம் • வட இந்திய பக்திக் கோட்பாடுகளும் அவற்றை முன்மொழிந்த ஆளுமைகளும் • இந்து இஸ்லாம் சமயங்களுக்கு இடையிலான உறவு ஊடாட்டங்களும் அது குறிப்பாக சூபியிசம் (இஸ்லாமிய மறைமெய்ஞானம்) போன்ற புதிய கோட்பாடுகள் உருவாவதற்கு இட்டுச் சென்றமையும் • கபீர், குருநானக் ஆகியோரின் போதனைகள் • பக்தி இயக்கத்தின் தாக்கம்

வரலாறு

அலகு -1

புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்



கற்றலின்  நோக்கங்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்த அறிவினைப் பெறுதல் 

ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோரின் பக்தி இயக்கம் 

ஆதிசங்கரரின் அத்வைத தத்துவம், இராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவம்

வட இந்திய பக்திக் கோட்பாடுகளும் அவற்றை முன்மொழிந்த ஆளுமைகளும் 

இந்து இஸ்லாம் சமயங்களுக்கு இடையிலான உறவு ஊடாட்டங்களும் அது குறிப்பாக சூபியிசம் (இஸ்லாமிய மறைமெய்ஞானம்) போன்ற புதிய கோட்பாடுகள் உருவாவதற்கு இட்டுச் சென்றமையும் 

கபீர், குருநானக் ஆகியோரின் போதனைகள் 

பக்தி இயக்கத்தின் தாக்கம்


அறிமுகம்

இடைக்கால இந்தியாவில் வியப்பை ஏற்படுத்தும் அளவில் பக்திக் கவிதைகள்/ செய்யுள்கள் இயற்றப்பட்டன. அவை ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்ததாக இல்லாமல் பல்வேறு சமய இயக்கங்களினால் தூண்டப்பெற்றன. கடவுளின் மீதான முழுமையான பக்தியே மனிதனை வாழ்வின் இடர்ப்பாடுகளிலிருந்து காத்து முக்தியை அருளுமென இவ்வியக்கங்களை நிறுவியவர்கள் கருதினர். மேலும் இறைவன் எங்கும் நிறைந்து இருப்பதினாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறைந்திருக்கின்றார் என்பதாலும் ஒருவர் கோவிலுக்குச் செல்ல வேண்டியதோ, சடங்குகள் செய்ய வேண்டியதோ அவசியமில்லை. எனவும் நம்பப்பட்டது. அறிவின் வழிப்பட ஞானமார்க்கம், சடங்குகள், நற்செயல்கள் ஆகியவற்றின் வழிப்பட கர்மா மார்க்கம் ஆகிய இவை இரண்டைக் காட்டிலும் பக்தி மார்க்கமே சிறந்தது என பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது. இது பக்திக் கோட்பாடுகளை முன்மொழிந்தவர்களை ஊக்குவிப்பதாய் அமைந்தது.


பக்தி இயக்கம் : தொடக்கங்கள்

பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தமிழகத்தில் கி.பி. (பொ.ஆ.) ஏழாம் நூற்றாண்டை ஒட்டித் தொடங்கிற்று. அப்புத்தெழுச்சி ஆண், பெண் கடவுளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஓதுதல். கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல், மதச் சின்னங்களை அணிந்து கொள்வது அல்லது அடையாளச் சின்னங்களைச் சுமந்து செல்வது, கடவுளுடன் தொடர்புடைய புனிதத்தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வது என்பனவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. தனக்குச் சொந்தமான கடவுளை வழிபடும் பக்தனுக்கும் அக்கடவுளுக்கும் இடையிலான பரஸ்பர உணர்வு ரீதியிலான பற்றுதலுக்கும் அன்பிற்கும் பக்தி இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தது. சூபி தத்துவமும் இதே போன்ற கருத்தையே போதித்தது. தொடக்ககால இஸ்லாம் சமயத்தின் உலகப்பற்றுதலுக்கு எதிராகத் தோன்றியதே சூபி தத்துவமாகும். தீவிர உணர்ச்சிவயப்பட்ட பக்தி, ஆழமான தியானம் ஆகியவற்றின் மூலமே கடவுளை உணரமுடியுமென சூபி கோட்பாடு நம்பியது. இவ்வகையிலான தியானங்களே ஒரு பக்தனுக்குக் கடவுளின் உண்மையான இயல்பைப் புரிந்துகொள்ள உதவுமென சூபிக்கள் நம்பினர். இவ்வாறு செய்தால் மட்டுமே உலகப் பிணைப்புகளிலிருந்து ஒரு பக்தன் விடுபட முடியுமென்றும் அதுவே அவர் கடவுளுடன் இரண்டறக்கலக்க உதவுமென்றும் சூபிக்கள் வாதிட்டனர். இந்து, இஸ்லாம் ஆகிய இரு சமயங்களிலும் அறிவுநிலை கடந்த சமய இயக்கங்கள் செயல்பட்டன. தங்களுடைய போதனைகளில் வெவ்வேறு சமயங்கள் சார்ந்த கூறுகளையும் சேர்த்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை . "இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே" என ஹரிதாசர் கூறியுள்ளார்.


1. தமிழகத்தில் பக்தி இயக்கம் 

(ஆழ்வார்களும் நாயன்மார்களும்)

பக்தி இயக்கத்தைத் தொடங்கிவைத்த வைணவ பக்தி அடியார்களான ஆழ்வார்களும் சிவனை வழிபடும் சைவர்களான நாயன்மார்களும் தமிழ்மொழியில் பக்திப்பாடல்களை இயற்றி தங்கள் கடவுளர்களுக்குச் சமர்ப்பித்தனர். சிவபக்தியானது இவ்வுலகில் நடைபெற்ற சிவபெருமானின் திருவிளையாடல்களோடு தொடர்புடையதாகும். சிவன், விஷ்ணு குறிப்பாக கிருஷ்ணர் குறித்த பாடல்கள் தமிழிலும் ஏனைய தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இயற்றப்பட்டன. பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களின் கடுமையான தாக்குதல்களைத் திறம்பட எதிர்கொள்வதற்காக, புலவர்களாகவும் ஞானிகளாகவும் இருந்த இவர்கள் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலைகளைச் சாடியதோடு அல்லாமல் ஆண், பெண் சமத்துவத்தையும் முன்னிறுத்தினர்.

விஷ்ணு பக்தி அல்லது வைணவம் விஷ்ணுவின் அவதாரங்களைக் குறிப்பாக இராம, கிருஷ்ண அவதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். பன்னிரு தமிழ் ஆழ்வார்கள் அவர்கள் இயற்றிய அழிவில்லாப் பாடல்களுக்காகவே நன்கறியப்பட்டவர்கள் ஆவர். பக்தி இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தாங்கள் செய்த பங்களிப்பின் காரணமாய் இரண்டு ஆழ்வார்கள் தனித்துவம் மிகுந்து காணப்படுகின்றனர். நம்மாழ்வார் அவர் இயற்றிய 1,102 பத்திகளைக் கொண்ட திருவாய்மொழியால் புகழ்பெற்றார். நம்மாழ்வாரின் 4000 பாடல்களை நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் எனும் பெயரில் நாதமுனி தொகுத்துள்ளார். ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண்பால் ஆழ்வாராவார். 

பெரியாழ்வார் தொடக்கத்தில் விஷ்ணு சித்தர் என அறியப்பட்டார். தாய் யசோதையின் இடத்தில் தன்னை இருத்தி குழந்தை கிருஷ்ணனைப் பற்றி பல பாடல்களைப் புனைந்துள்ளார். திருவில்லிபுத்தூர் கோவில் துளசித் தோட்டத்தில் பெரியாழ்வார் ஆண்டாளைக் குழந்தையாகக் கண்டெடுத்து, தனது குழந்தையாக ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கோவில் நகரமான திருவில்லிபுத்தூரில் வளர்ந்த அவர் ஆண்டாள் (ஆட்சி புரிபவள்) என அழைக்கப்பட்டார். திருப்பாவை (கிருஷ்ணனை அடையும் வழி) நாச்சியார் திருமொழி (பெண்ணின் புனிதப் பாடல்கள்) ஆகிய இரண்டும் ஆண்டாளின் புகழ்பெற்ற கவிதை நூல்களாகும். திருவரங்கம் கோவிலிலுள்ள விஷ்ணுவின் அவதாரமான அரங்கநாதனின் மீதான காதலை ஆண்டாள் தனது பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் வைணவத் திருமண விழாக்களின்போது இப்பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.


வைணவ அடியார்கள் (12 ஆழ்வார்கள்)


முதல் மூன்று ஆழ்வார்கள்: பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

ஏனைய ஆழ்வார்கள்: திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், திருப்பண் ஆழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், ஆண்டாள்.

சைவ அடியார்கள் (63 நாயன்மார்கள்)


மரபுவழிக் கதையின்படி நாயன்மார்கள் 63 பேராவர். அவர்களில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் (மும்மூர்த்திகள் என அழைக்கப்படுபவர்கள்) ஆகியோர் தென்னிந்தியக் கோவில்களில் சிலைவழிபாடு செய்யப்படுகின்றனர். நாயன்மார்களின் பாடல்கள் அனைத்தையும் நம்பி ஆண்டார் நம்பி (கி.பி.1000) என்பார் தொகுத்ததாகக் கூறப்படுகிறது. அதுவே சைவப்புனித நூல்களான திருமுறையின் அடிப்படையாக உள்ளது. திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது. அவற்றில் 11 நூல்கள் நம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டவையாகும் சேக்கிழாரின் பெரியபுராணம் 12வது நூலாகும். -


அ. ஆதிசங்கரர்


ஆதிசங்கரர் அல்லது சங்கராச்சாரியார் (ஏறத்தாழ கி.பி. 700-750) அத்வைதம் எனும் தத்துவத்தைப் போதித்தவராவார். ஞானத்தைப் பெறுவதன் வழியாக ஜீவாத்மா பரமாத்மாவுடன் (பிரம்மா) இணையும் என்பதே இத்தத்துவத்தின் சாரமாகும் அவர் பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவினார். அவை கற்றுக்கொள்வதற்கான, வழிபாடு செய்வதற்கான மையங்களாகத் திகழ்ந்தன. இவ்விடங்கள் இன்றும் முக்கியமான புனிதத்தலங்களாக விளங்குகின்றன. தன்காலத்து பக்தி இயக்கத்தின் மீது கவனம் கொள்ளாத சங்கரர் வேதமரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார். பிரம்ம சூத்திரம் எனும் நூலுக்கு அவர் எழுதிய உரையே அவர் ஆற்றிய பணிகளில் சாலச் சிறந்ததாகும். பிரம்ம சூத்திரம் வேதாந்தப் பள்ளியின் அடிப்படை நூலாகும்.முதன்மையான உபநிடதங்களுக்கு அவர் எழுதிய உரைகளும் முக்கியமானவையாகவேக் கருதப்படுகின்றன.


ஆ. இராமானுஜர்


பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவத் திருத்தொண்டரான ராமானுஜர் மிகவும் செல்வாக்கு பெற்ற  வைணவச் சிந்தனையாளர் ஆவார். அவர் முன்வைத்தத் தத்துவம் விசிஷ்டாத்வைதம் ஆகும். ஆத்மாவானது பிரம்மத்துடன் கலந்த பின்னரும் தனக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது என இத்தத்துவம் அறிவித்தது. நீண்ட நெடிய ஆன்மீகப் பயணங்களுக்குப் பின்னர் அவர் ஸ்ரீரங்கத்தில் குடியேறினார். சமூக, சமத்துவக் கருத்துக்களை பரப்பிய அவர் கோவில்களில் நுழைவதற்கான சாதியக் கட்டுப்பாடுகளைக் கண்டனம் செய்தார். விஷ்ணுவின் மீதும் அவரின் இணையான லட்சுமியின் மீதும் அவர் கொண்டிருந்த பக்தி நெறி ஸ்ரீவைஷ்ணவம் என்றழைக்கப்படுகிறது. அந்நெறியைப் பரப்புவதற்காக அவர் பல மையங்களை நிறுவினார்.

16, 17 ஆம் நூற்றாண்டுகளில் வைணவ சமயம் இந்தியா நெடுகிலும் பரவியது. புகழ்பெற்ற சமஸ்கிருதக் கல்வி மையமாக விளங்கிய காஞ்சிபுரத்தில் வடகலை வைணவம் செழித்தோங்கியது. தென்கலை வைணவம் திருவரங்கத்தை மையமாகக் கொண்டிருந்தது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேத நூல்களே முக்கியமானவை எனவடகலையினர் கருதினர். தமிழ் மொழியில் பன்னிரு ஆழ்வார்களால் எழுதப்பட்ட திவ்விய பிரபந்தத்திற்கு தென்கலையினர் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.


2. வட இந்தியாவில் பக்தி இயக்கம்

பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் நடைபெற்ற சமய இயக்கங்களைப் பற்றி அறிய விரும்புவோர், இக்கால இந்துசமயத் தலைவர்கள் இஸ்லாம் குறித்து மிகவும் வேறுபட்ட இரு அணுகுமுறைகளைக் கொண்டிருந்தனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு குழுவினர் இஸ்லாமில் எது சிறந்ததோ அதை ஏற்றுக்கொண்டனர். ஏனையோர் இஸ்லாம் மதத்திற்கு சமயம் மாறிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு சில வழிமுறைகளைக் கையாண்டனர் இரு பிரிவினருமே இஸ்லாமை எதிர்கொண்டு செயலாற்றினர். ஆனால் ஒரு பிரிவினர் இஸ்லாமை பரிவோடு அணுகினர். மற்றொரு பிரிவினரோ பகைமை பாராட்டினர். புதிய சமயப்பிரிவுகளை நிறுவிய கபீர், குருநானக் மற்றும் பிறர் முதல் குழுவைச் சேர்ந்தோராவர். அதே சமயம் வங்காளத்தில் உருவான சைதன்ய தேவா அல்லது சைதன்ய மகாபிரபுவுடன் தொடர்புடைய இயக்கம் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட குணநலனைக் கொண்டிருந்தது.


அ) பக்தி இயக்கச் சான்றோர்கள்

வடஇந்தியாவில் பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் இராமாநந்தர் ஆவார். தெலுங்கு தத்துவஞானியான வல்லபாச்சாரியார், மதுராவுக்கு அருகே கோவர்தன் குன்றுகளில் கிருஷ்ணபகவானுக்கு ஒரு கோவிலை அமைத்தார். கவிஞரும் இசைக்கலைஞரும், பார்வைத்திறன் அற்றவருமான சூர்தாஸ் இக்கோவிலோடும் ஆக்ராவிலுள்ள கோவிலோடும் தொடர்புடையவராவார். அவருடைய புகழ் பெற்ற கவிதைகளின் தொகுப்பு சூர்சாகர் என்றழைக்கப்படுகிறது. மேவார் நாட்டின் பட்டத்து இளவரசரின் மனைவியான மீராபாய் கிருஷ்ணபகவானின் தீவிர பக்தையாவார். அவ்வம்மையார் ரவிதாஸ் என்பவரின் சீடராவார். மீராபாய் அவருடைய பஜன் (பஜனை) பாடல்கள் மூலம் பிரபலமானார். சைதன்ய தேவர் தனது பரவசமூட்டும் பாடல்கள், களிப்பூட்டும் நடனங்கள் மூலம் கிருஷ்ண வழிபாட்டைப் பிரபலமாக்கினார். இது வங்கத்தில் வைணவ சமயத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பதினாறாம் நூற்றாண்டில் துளசிதாசர் இந்தி மொழியில் எழுதிய இராமனின் கதையை மீண்டும் சொல்லும் இராமசரிதமானஸ் எனும் நூல் நட்பு, விசுவாசம் ஆகிய உணர்வுகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்தது. அப்பாடல்களில் பல இரவு முழுவதுமாக நடைபெறும் விழாக்களில் இன்றளவும் தொடர்ந்து பாடப்படுகின்றன.


பதினேழாம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த துக்காராம் கவிஞரும் திருத்தொண்டருமாவார். -விஷ்ணுவின் அவதாரமான விதோபா குறித்து அவர் இயற்றிய ஆன்மீகப் பாடல்களுக்காகவே (அபங்கா அல்லது கீர்த்தனைகள்) அவர் நன்கு அறியப்பட்டிருந்தார். மகாராஷ்டிராவில் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள பந்தர்பூர் அல்லது பண்டரிபுரத்தில் விதோபா/பாண்டு ரங்கா கோவில் உள்ளது. வங்காளத்திற்கு சைதன்ய தேவா எவ்விதமோ அதைப்போன்றே மகாராஷ்டிராவுக்கு துக்காராம் விளங்குகிறார்.



3. இந்தியாவில் சூபியிஸம் (Sufism)

சிந்துவை அராபியர் கைப்பற்றிய காலத்தில் சூபியிஸம் இந்தியாவிற்குள் பாதம் பதித்தது. பத்து, பதினொன்று நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தான்களின் ஆட்சியின்போது அது முக்கியத்துவம் பெற்றது. யோகப்பயிற்சி தோற்ற அமைவுகள், இந்திய இசை, நடனம் ஆகியவற்றையும் சூபியிஸம் கைக்கொண்டது. சூபியிஸத்தை பின்பற்றியோர் இஸ்லாம், இந்து ஆகிய இரு சமயங்களையும் சேர்ந்தவர்ளாக இருந்தனர்.

சூபியிஸம் சூபி எனும் சொல் 'சுப்' எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். அதன் பொருள் கம்பளி ஆகும். சூபிக்கள் சொர சொரப்பான முரட்டுக் கம்பளியாலான உடைகளை அணிந்ததால் சூபிக்கள் என அழைக்கப்பட்டனர். சூபியிஸம் அடிப்படையில் இஸ்லாமியத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மீது இந்து, பௌத்த (மகாயான) சமயக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தது. உலேமாக்களின் கடுமையான ஒழுக்க விதிகளை சூபியிஸம் மறுத்தது. மடாலய வாழ்க்கையை ஒத்த துறவு வாழ்வை மேற்கொண்ட சூபிக்கள் சமுதாயத்திற்கு வெளியே செயல்பட்டனர்.


இடைக்கால இந்தியாவைச் சேர்ந்த சூபிக்கள் மூன்று முக்கிய அமைப்பினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். அவை சிஸ்டி, சுரவார்டி, பிர்தௌசி என்பனவாகும். மொய்னுதீன் சிஸ்டி, சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கினார். அவர் ஆஜ்மீரில் இயற்கை எய்தினார் (1236). அவருடைய நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆஜ்மீரில் ஷரிப் தர்கா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார். டெல்லியின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எண்ணற்ற நபர்கள் அவரைப் பின்பற்றினர். இதனைப் பின்பற்றிய புகழ்பெற்ற பலருள் கவிஞர் அமீர் குஸ்ருவும் ஒருவர். சுரவார்டி அமைப்பைத் தோற்றுவித்தவர் ஈரானைச் சேர்ந்த சூபியான அப்துல்-வகித் அபு நஜிப் என்பவராவார். பிர்தௌசி அமைப்பு சுரவார்டியின் ஒரு கிளைப் பிரிவாகும். அது பீகாரில் மட்டுமே செயல்பட்டது.


4. அ. கபீர்


கபீர் ஓர் இஸ்லாமியராக இருந்தபோதிலும் வாராணாசியை இருப்பிடமாகக் கொண்ட இராமாநந்தரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார். சில இந்து சமயக் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் இந்து இஸ்லாம் சமயங்களிடையே ஒத்திசைவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார். இருந்தபோதிலும் அவரின் கருத்துக்கள் இந்து சமூகத்தில் குறிப்பாக கீழ்நிலை சாதிகளைச் சேர்ந்தோர்க்கு ஏற்புடையதாய் அமைந்தன. பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தாலும் கடவுள் ஒருவரே என்றும், வடிவமற்றவர் என்றும் கபீர் நம்பினார். சமயம், சாதி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் கண்டனம் செய்தார். பொருளற்ற சடங்கு முறைகளையும் அவர் கண்டனம் செய்தார். கபீரின் பாடல்கள் போஜ்புரி மொழியோடு உருது மொழி கலந்து எழுதப்பட்டவையாகும் கபீரின் கிரந்தவளி, பைஜக் ஆகிய நூல்கள் அவருடைய கவிதைகளின் தொகுப்புகளாகும்.


ஆ. குருநானக்

தொடக்ககால வாழ்க்கை : 1469 இல் லாகூருக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்த குருநானக் குழந்தைப் பருவத்திலேயே ஏனைய சான்றோர்களிடம் சமயம் தொடர்பான கலந்துரையாடல்கள் செய்வதில் ஆர்வம் காட்டினார். அவருடைய பெற்றோர்கள் அவரை இயல்பான உலகவாழ்க்கையில் ஈடுபடுத்துவதில் அக்கறை கொண்டனர். ஆனால் அவரோ ஆன்மீகத்தின் மீது மனச்சாய்வு கொண்டிருந்தார். பல புனிதத்தலங்களுக்குச் சென்று வந்த அவர் இறுதியில் லாகூருக்கருகே கர்தார்பூரில் குடியேறினார். அங்கேயே அவர் 1539 இல் இயற்கை எய்தினார். அவருடைய 550வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு நடைபாதை ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறது. அந்நடைபாதை குர்தாஸ்பூரிலுள்ள நானக் கோவில், பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப் இரண்டையும் இணைக்கும் வகையில் அமையவுள்ளது.


குருநானக்கின் போதனைகள்: கடவுள் வடிவமற்றவர் என குருநானக் போதித்தார். தன்னைப் பின்பற்றுவோர் அமைதிக்காகவும், வீடுபேற்றிற்காகவும் கடவுளை நினைந்து தியானம் செய்யும்படி கூறினார். அவர் சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார். வேதச்சடங்குகள் சாதிப்பாகுபாடுகள் ஆகியவை மீது அவர் பெரும் வெறுப்புக் கொண்டிருந்தார். குருநானக்கின் போதனைகளே பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட சீக்கிய மதத்தின் மூலக்கோட்பாடாக அமைந்தது. குருநானக், அவருக்குப் பின்வந்தோர் ஆகியோரின் போதனைகள் தொகுக்கப்பட்டு குரு கிரந்சாகிப் என்றழைக்கப்பட்டது. அதுவே சீக்கியர்களின் புனித நூலாகும். கீர்த்தன் எனப்படும் பாடல்கள் பாடும் இசைக்குழுக்கள் மூலமாக குருநானக்கின் போதனைகள் பரப்புரை செய்யப்பட்டன. இவருடைய பக்தர்கள் தர்மசாலைகள் எனப்படும் ஓய்வு விடுதிகளில் ஒன்று கூடினர். இவைகளே காலப்போக்கில் குருத்வாராக்கள் ஆயின.

குருநானக் லேனா என்ற தனது சீடரைத் தனக்குப் பின்னரான குருவாக நியமித்தார். இந்த முன் உதாரணத்தைப் பின்பற்றி ஒவ்வொரு சீக்கிய குருவும் தங்களுக்கு அடுத்த குருவை நியமித்தனர். குரு கோவிந் சிங் காலத்தில் பாகல் எனப்படும் திருமுழுக்கு (குறுவாளால் கிளறப்பட்ட இனிப்பான நீரைக் கொடுத்தல்) செய்யும்முறை அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறு திருமுழுக்கு பெற்றவர்கள் கால்சா (தூய்மை) எனப்பட்ட முறைப்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினராயினர். இவர்களுக்கு சிங் (சிங்கம்) என்ற பட்டமும் வழங்கப்பட்டது. கால்சாவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஐந்து தனித்தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவை கேஷ் (வெட்டப்படாத முடி), கன்கா (சிகைக்கோல்), கிர்பான் (குறுவாள்), கடா (இரும்புக் காப்பு), கச்சேரா (உடலின் கீழ்ப்பகுதியில் அணியும் உள்ளாடை) ஆகியனவாகும். குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது. அதன் கருத்துக்களை கால்சா அமைப்பு பரப்பியது. 


5. சமயங்களின் / பக்தி இயக்கத்தின் தாக்கம்

* இந்து சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டப்பட்டது. அதனால் அது இஸ்லாமின் தாக்குதல்களிலிருந்து காக்கப்பட்டது.

* இஸ்லாமியத் தத்துவக்கூறுகளான கடவுள் ஒருமைப்பாடு, உலக சகோதரத்துவம் போன்றவை பக்தி இயக்கச் சான்றோர்களால் வலியுறுத்தப்பட்டு அமைதியும், இணக்கமும் வளர்ந்தன.

* பக்தி இயக்கம் சாமானிய மக்களின் இயக்கமாகும். அவ்வியக்கம் தனது பக்தி இலக்கியங்களை எழுத அம்மக்களின் மொழியையேப் பயன்படுத்தியது.

* இந்திய மொழிகள் வளர்வதற்கான இடத்தை பக்தி இயக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. பிராந்திய மொழிகளில் இலக்கியச் செயல்பாடுகளுக்கு அது உந்து சக்தியால் அமைந்தது. 

* சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த சமஸ்கிருத மொழி இந்து அரசர்களின் அரசர்கள் நல்கிய ஆதரவால் தக்க வைக்கப்பட்டது. 

* இக்காலப் பகுதியில் உயிர் துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி தமிழ் மட்டுமே. ஆனால் தமிழ் இலக்கியத்தின் பொதுப்பண்பு இடைக்காலத்தில் மாறிவிட்டது. செவ்வியல் காலத்தில் அன்றாட வாழ்க்கையையும் அதன் இன்ப துன்பங்களையும் தமிழ் இலக்கியம் சித்தரித்து வந்தது. ஆனால் பக்தி இயக்கக் கோட்பாடுகளின் தாக்கத்தின் விளைவாய் அது சமயங்களுக்கும் சமய இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. 

* சாதி முறையும் சமூக ஏற்றதாழ்வுகளும் விமர்சனங்களுக்கு உள்ளாயின.


சுருக்கம் 

பக்தி இயக்கம் விளக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆழ்வார்களும் அவர்களைத் தொடர்ந்து நாயன்மார்களும் மேற்கொண்ட முன்னெடுப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. 

ஆதிசங்கரரின் அத்வைத தத்துவமும் இராமானுஜரின் விசிஷ்டாத்வைதமும் விளக்கப்பட்டுள்ளன. 

திருத்தொண்டர்களின் பக்திப் பாதைகள் பற்றி, குறிப்பாக வட இந்தியாவில் துளசிதாசர், மீராபாய் வங்காளத்தில் சைதன்ய தேவா ஆகியோரின் பக்தி மார்க்கங்கள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. 

இஸ்லாம், இந்துமதம் ஆகிய இரண்டும் ஒன்றின் மேல் மற்றொன்று ஏற்படுத்திய தாக்கமும் சூபியிஸம், சீக்கியமதம், அறிவுநிலை கடந்த இந்துமதம் ஆகியனவும் சுருக்கமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 

முற்போக்குத்தன்மை கொண்ட பக்தி இயக்கம்: கபீர், குருநானக் ஆகியோரின் பங்களிப்பு விவரிக்கப்பட்டுள்ளது

பக்தி இயக்கத்தின் இன்றியமையாதத் தனிச்சிறப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இடைக்கால இந்தியச் சமூகத்தின் மீது பக்தி இயக்கம் கொண்டிருந்த தாக்கம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 


மூலாதார நூல்கள் 

1. R. Champakalakshmi, Religion, Tradition and Ideology in Pre-Colonial South India, Oxford University Press, 2011. 

2. Burton Stein, A History of India, Oxford University Press, 2004. 

3. Abraham Eraly, Emperors of the Peacock Throne, Penguin, 1997. 

4. https://www.britannica.com.


கலைச்சொற்கள்

1. நிவர்த்தி, விமோசனம் – salvation - a way of being saved from danger, loss or harm 

2. எங்கும் நிறைந்திருக்கின்ற - omnipresent - present everywhere at the same time 

3. அவதாரம் – incarnation - a living being embodying a deity or spirit 

4. விரோதமாக, பகைமையுள்ள - hostile - showing enmity or dislike, unfriendly 

5. முக்கியத்துவம் - prominence - importance 

6. ஆதரவாளர், பின்பற்றுபவர் - adherent - supporter (of a person, cause or belief) 

7. கடுமையான, கெடுபிடியான - stringent - severe, harsh 

8. இஸ்லாமியப் பேரறிஞர் - ulema - Islamic scholar trained in Islamic law

9. ஆசிரமம், துறவி வாழிடம் - hermitage - the dwelling of persons living in seclusion 

10. ஒத்த இயல்புடைய - akin - similar 

11. குத்துவாள், குறுவாள் - dagger - short, pointed knife that is sharp on both sides

12. சித்தரிக்கும், விவரமாக விளக்கும் – depicting - showing, portraying

13. வேறுபாடு, சமமற்ற - disparity - a great difference, the state of being unequal


Tags : Term 3 Unit 1 | History | 7th Social Science மூன்றாம் பருவம் அலகு -1 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 3 Unit 1 : New Religious Ideas and Movements : New Religious Ideas and Movements Term 3 Unit 1 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -1 : புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் : புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் - மூன்றாம் பருவம் அலகு -1 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -1 : புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்