சுற்றுச்சூழல் இடர்பாடுகள் - ஒலி மாசுபாடு | 12th Zoology : Chapter 13 : Environmental Issues

   Posted On :  24.03.2022 10:41 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 13 : சுற்றுச்சூழல் இடர்பாடுகள்

ஒலி மாசுபாடு

தேவையற்ற மற்றும் விரும்பத்தகாத அல்லது ஒன்றின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் ஒலி, இரைச்சல் எனப்படும். சுற்றுச்சூழலில் அதிக இரைச்சல் இருக்குமேயானால் அது 'ஒலி மாசுபாடு' எனப்படும்.

ஒலி மாசுபாடு (Noise pollution)

தேவையற்ற மற்றும் விரும்பத்தகாத அல்லது ஒன்றின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் ஒலி, இரைச்சல் எனப்படும். சுற்றுச்சூழலில் அதிக இரைச்சல் இருக்குமேயானால் அது 'ஒலி மாசுபாடு' எனப்படும். ஒலியின் செறிவு டெசிபல் (dB) எனும் அலகு கொண்டு அளக்கப்படுகிறது. 


1. ஒலி மாசுபாட்டின் மூலாதாரங்கள்

வாகன எஞ்சின்கள், காற்று ஒலிப்பான்கள், ஒலி - ஒளி அமைப்புகள், தொடர் வண்டிகள், தாழ பறக்கும் வானூர்திகள், தொழிற்சாலை இயந்திரங்கள், அபாயச் சங்குகள், விசைப்பொறிகள், துளைப்பான்கள், நொறுக்கிகள், அழுத்த இயந்திரங்கள், பட்டாசுகள், வெடிபொருட்கள், நவீன அதிவேகப் போக்குவரத்து போன்றவை ஒலி மாசுபாட்டின் மூலாதாரங்கள் ஆகும்.

ஒலி மாசுபாட்டின் தொடக்க நிலை அளவு 120 டெசிபல் ஆகும். இரைச்சலானது மனித நல்வாழ்விற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முக்கிய காரணி என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.


2. ஒலி மாசுபாட்டின் விளைவுகள்

* அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (USEPA-United States Environmental Protection Agency) படி, இரைச்சலும், உடல் நலமும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்புடையதாகும். இதய நோய், உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் (stress) தொடர்பான நோய்கள் , தூக்க இடையூறுகள், காது கேளாமை மற்றும் ஆக்கத்திறன் குறைதல் போன்றவை ஒலி மாசுபாடு தொடர்பான பிரச்சினைகள் ஆகும்.

• மன அழுத்தம், பதற்றம் அதிகரிப்பு, நரம்பு தளர்ச்சி, எரிச்சல், கவலை, மனச்சோர்வு மற்றும் பெரும் அச்சம் ஆகியவை ஏற்படுதல்.

• வயிற்றுப் புண், தீவிர தலைவலி, நினைவாற்றல் குறைதல் ஆகியவை.

• கடற்கரை மற்றும் துறைமுக செயல்பாடுகளினால் ஏற்படும் ஒலி மாசுபாடு கடல் வாழ் விலங்குகளைப் பாதிக்கின்றது.

• பட்டாசுகள் விலங்குகளை மிரளச் செய்கின்றன. அதிகப்படியான வானூர்திகளால் பறவைகள் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகின்றன.


3. கட்டுப்பாடு

• இரைச்சல் அதிகமாக உள்ள இடத்திலும் மற்றும் அதனைச் சுற்றிலும் மரங்களை நடுதல் நல்ல தீர்வாகும். ஏனெனில், தாவரங்கள் ஒலியினை உறிஞ்சி, ஒலியின் அளவைக் குறைக்கின்றன.

• வாகனங்களின் எஞ்சின்களை தொடர் பராமரிப்பு மற்றும் சீராக்கம் செய்வதன் மூலம் அவற்றால் ஏற்படும் இரைச்சல் மாசுபாட்டினை குறைக்கலாம்.

• அதிக ஒலி உற்பத்தியாகும் இடத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு காது செருகிகள் (ear plugs) மற்றும் காது அடைப்பான்களை (ear muffs) வழங்க வேண்டும்.

• இயந்திரங்களுக்கு உயவிடல் மற்றும் வழக்கமான பராமரிப்பு, செய்வதால் ஒலி அளவு குறைக்கப்படுகிறது.

• மக்கள் நிறைந்த இடங்கள் மற்றும் பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


4. சட்டப் பாதுகாப்பு

இந்திய அரசியலமைப்பின் பிரிவு - 48 A மற்றும் 51 - A, ஒலி மாசுபாடு (நெறிப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 2000, மற்றும் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கை 2017 போன்றவை, ஒலி மாசுபாட்டிலிருந்து விடுபடுவதற்கான சட்டங்களில் சிலவாகும்.

ஒலி மாசுபாடு (நெறிப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000 - த்தின் படி அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு பகல் நேரங்களில் 65 டெசிபல் (dB) எனவும், இரவு நேரங்களில் 55 டெசிபல் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.


Tags : Environmental Issues சுற்றுச்சூழல் இடர்பாடுகள்.
12th Zoology : Chapter 13 : Environmental Issues : Noise Pollution Environmental Issues in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 13 : சுற்றுச்சூழல் இடர்பாடுகள் : ஒலி மாசுபாடு - சுற்றுச்சூழல் இடர்பாடுகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 13 : சுற்றுச்சூழல் இடர்பாடுகள்