Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பிராமணர் அல்லாதோர் இயக்கமும் காங்கிரசிற்கு சவாலும்

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - பிராமணர் அல்லாதோர் இயக்கமும் காங்கிரசிற்கு சவாலும் | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu

   Posted On :  27.07.2022 05:06 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

பிராமணர் அல்லாதோர் இயக்கமும் காங்கிரசிற்கு சவாலும்

(அ) தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (ஆ) அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள்: ரௌலட் சட்டம் (இ) கிலாபத் இயக்கம்

பிராமணர் அல்லாதோர் இயக்கமும் காங்கிரசிற்கு சவாலும் 

 

(அ) தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்

பிராமணரல்லாதோர் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்களை ஒரு அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக் கொண்டனர். 1912 இல் சென்னை திராவிடர் கழகம் (Madras Dravidian Association) உருவாக்கப் பெற்றது. அதன் செயலராக C. நடேசனார் செயலூக்கமிக்க வகையில் பங்காற்றினார். 1916 ஜூன் மாதத்தில் அவர் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக திராவிடர் சங்க தங்கும் விடுதியை நிறுவினார். 1916 நவம்பர் 20இல் P. தியாகராயர், டாக்டர் T.M. நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையில் சுமார் முப்பது பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் கூடினர். பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தென்னிந்திய நலவுரிமைச் சங்க ம் (South Indian Liberal Federation - SILF) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

நீதிக்கட்சி அமைச்சரவை

1920இல் நடத்தப்பட்ட தேர்தல்களைக் காங்கிரஸ் புறக்கணித்தது. சட்டமன்றத்தில் மொத்தமிருந்த 98 இடங்களில் 63இல் நீதிக்கட்சி வெற்றிபெற்றது. நீதிக்கட்சியின் A. சுப்பராயலு முதலாவது முதலமைச்சரானார். 1923இல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக் கட்சியைச் சேர்ந்த பனகல் அரசர் அமைச்சரவையை அமைத்தார்.


 

(ஆ) அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள்: ரௌலட் சட்டம்

ஆங்கில அரசு 1919இல் கொடூரமான குழப்பவாத புரட்சிக் குற்றச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தைப் பரிந்துரை செய்த குழுவினுடைய தலைவரின் பெயர் சர் சிட்னி ரௌலட் ஆவார். எனவே இச்சட்டம் பரவலாக ரௌலட் சட்டம் என அறியப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் முறையான நீதித்துறை சார்ந்த விசாரணைகள் இல்லாமலேயே யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டி அரசு சிறையில் அடைக்கலாம். இதைக் கண்டு இந்தியர்கள் திகிலடைந்தனர். மக்களின் கோபத்திற்குக் குரல் கொடுத்த காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் தான் பயன்படுத்திய போராட்ட வடிவமான சத்தியாகிரகத்தை மேற்கொண்டார்.

ரௌலட் சத்தியாகிரகம்

1919 மார்ச் 18இல் மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார். 1919 ஏப்ரல் 6இல் கருப்புச் சட்டத்தை எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பும் வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்து தொடங்கிய ஊர்வலங்கள் மெரினா கடற்கரையில் ஒன்றிணைந்து பெரும் மக்கள் கூட்டமானது. அந்நாள் முழுவதும் உண்ணாவிரதமும் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன. சென்னை சத்தியாகிரக சபை என்ற அமைப்பும் நிறுவப்பட்டது. ராஜாஜி, கஸ்தூரிரங்கர், S. சத்தியமூர்த்தி, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் கூட்டத்தில் உரை நிகழ்த்தினர். தொழிலாளர்களுக்கென தனியாக நடத்தப்பட்ட கூட்டமொன்றில் V. கல்யாணசுந்தரம் (திரு.வி.க), B.P. வாடியா, வ.உ.சி ஆகியோர் உரையாற்றினர். தொழிலாளர்களும், மாணவர்களும், பெண்களும் பெருவாரியான எண்ணிக்கையில் பங்கேற்றதே இவ்வியக்கத்தின் முக்கிய அம்சமாகும்.

ஜார்ஜ் ஜோசப் : வழக்கறிஞரும் நன்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்தவருமான ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதிலும், அதன் நோக்கத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதிலும் முக்கியப்பங்குவகித்தார். செங்கண்ணூரில் (இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம்) பிறந்திருந்தாலும் மதுரையில் வசிப்பதையே விரும்பி மக்களின் வழக்கறிஞராகப் - பணி செய்தார். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆற்றிய சேவையின் காரணமாக மதுரை மக்கள் இவரை ரோசாப்பு துரை என அன்புடன் அழைத்தனர்.


 

(இ) கிலாபத் இயக்கம்

ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து அதற்குக் காரணமான ஜெனரல் டயர் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுக்கப்பட்டதோடல்லாமல் அவருக்குப் பரிசுகளும் வெகுமதியும் வழங்கப்பட்டன. முதல் உலகப் போருக்குப் பின்னர் துருக்கியின் கலீபா அவமரியாதை செய்யப்பட்டதுடன் அவரது அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டன. கலீபா பதவியை மீட்பதற்காக கிலாபத் இயக்கம் தொடங்கப் பெற்றது. பெரும்பாலும் தேசிய இயக்கத்திலிருந்து ஒதுங்கி இருந்த முஸ்லிம்கள் தற்போது பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கத் தொடங்கினர். தமிழ்நாட்டில் 1920 ஏப்ரல் 17இல் மௌலானா செளகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதைப்போன்ற ஒரு மாநாடு ஈரோட்டிலும் நடத்தப்பட்டது. வாணியம்பாடி, கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.


Tags : Freedom Struggle in Tamil Nadu தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்.
10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu : Non-Brahmin Movement and the Challenge to Congress Freedom Struggle in Tamil Nadu in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : பிராமணர் அல்லாதோர் இயக்கமும் காங்கிரசிற்கு சவாலும் - தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்