Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒத்துழையாமை இயக்கம்

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - ஒத்துழையாமை இயக்கம் | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu

   Posted On :  27.07.2022 05:07 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

ஒத்துழையாமை இயக்கம்

ஒத்துழையாமை இயக்கத்தின் போது தமிழ்நாடு செயல்துடிப்புடன் விளங்கியது. C. ராஜாஜியும் ஈ.வெ. ராமசாமியும் (ஈ.வெ.ரா பின்னர் பெரியார் என அழைக்கப்பட்டார்) தலைமையேற்று நடத்தினர். முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை நிறுவிய யாகுப் ஹசன் என்பாருடன் இராஜாஜி நெருக்கமாகச் செயல்பட்டார்.

ஒத்துழையாமை இயக்கம் 

ஒத்துழையாமை இயக்கத்தின் போது தமிழ்நாடு செயல்துடிப்புடன் விளங்கியது. C. ராஜாஜியும் ஈ.வெ. ராமசாமியும் (ஈ.வெ.ரா பின்னர் பெரியார் என அழைக்கப்பட்டார்) தலைமையேற்று நடத்தினர். முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை நிறுவிய யாகுப் ஹசன் என்பாருடன் இராஜாஜி நெருக்கமாகச் செயல்பட்டார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தின் போது இந்துக்களும் இஸ்லாமியரும் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டனர்.



(அ) வரிகொடா இயக்கமும் கள்ளுக்கடை மறியல் இயக்கமும்

ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக, பல இடங்களில் விவசாயிகள் வரிகொடுக்க மறுத்தனர். தஞ்சாவூரில் வரிகொடா இயக்கம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றங்கள், பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. அந்நியப்பொருட்கள் புறக்கணிக்கப்பட்டன. பல பகுதிகளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன அவற்றில் பல தேசியத் தலைவர்களால் வழிநடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது கள்ளுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களே. 1921 நவம்பரில் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டது. ராஜாஜி, சுப்பிரமணிய சாஸ்திரி, ஈ.வெ.ரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 1922 ஜனவரி 13இல் வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது. காவல்துறையின் அடக்குமுறையில் இருவர் கொல்லப்பட்டனர் பலர் காயமுற்றனர். 1922இல் சௌரி சௌரா நிகழ்வில் 22 காவலர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

 

(ஆ) சுயராஜ்ஜிய கட்சியினர் – நீதிக்கட்சியினர் இடையேயான போட்டி

ஒத்துழையாமை இயக்கம் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் மாற்றத்தை விரும்பாதோர்”, “மாற்றத்தை விரும்புவோர்" எனப் பிரிந்தது. மாற்றத்தை விரும்பாதோர் சட்டமன்றப் புறக்கணிப்பைத் தொடர விரும்பினர். மாற்றத்தை விரும்பியோர் தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்றத்தினுள் செல்ல விரும்பினர். ராஜாஜியுடன் காந்தியத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் வேறு சிலர் இணைந்து சட்டமன்றத்திற்குச் செல்வதை எதிர்த்தனர். கஸ்தூரிரங்கர், M.A. அன்சாரி ஆகியோருடன் சேர்ந்து கொண்ட ராஜாஜி சட்டமன்றத்தைப் புறக்கணிப்பது எனும் கருத்தை முன்வைத்தார். இக்கருத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு காங்கிரசுக்குள்ளேயே சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோரால் சுயராஜ்ஜியக் கட்சி உருவாக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. தமிழ்நாட்டில் S. சீனிவாசனார், S. சத்தியமூர்த்தி ஆகியோர் சுயராஜ்ஜியக் கட்சியினருக்குத் தலைமை ஏற்றனர்.

 

(இ) சுப்பராயன் அமைச்சரவை

1926இல் நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் சுயராஜ்ஜியக் கட்சியினர் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றனர். இருந்தபோதிலும் காங்கிரசின் கொள்கைக்கு இணங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்கமறுத்தது.மாறாக அவர்கள் சுயேட்சை வேட்பாளரான P. சுப்பராயனுக்கு அமைச்சரவை அமைக்க உதவினர். 1930இல் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் போட்டியிடாததால் நீதிக்கட்சி எளிதாக வெற்றி பெற்றது. அக்கட்சி தொடர்ந்து 1937 வரை ஆட்சி செய்தது.



(ஈ) சைமன் குழுவைப் புறக்கணித்தல்

1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்து சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்ய 1927இல் இந்திய சட்டப்பூர்வ ஆணையம் ஒன்று சர் ஜான் சைமனின் தலைமையில் அமைக்கப் பெற்றது. ஆனால் வெள்ளையர்களை மட்டுமே கொண்டிருந்த இக்குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறாதது இந்தியர்களுக்கு மிகப்பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. ஆகையால் காங்கிரஸ் சைமன் குழுவைப் புறக்கணித்தது. சென்னையில் S. சத்தியமூர்த்தி தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரக் குழுவொன்று உருவாக்கப்பட்டது. 1929 பிப்ரவரி 18இல் சைமன் குழு சென்னைக்கு வந்த போது குழுவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.

நீல் சிலை அகற்றும் போராட்டம் (1927)

ஜேம்ஸ் நீல், மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர். 1857 பேரெழுச்சியின்போது நடைபெற்ற கான்பூர் படுகொலை என்றழைக்கப்படும் சம்பவத்தில் பல ஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் நீல் கொடூரமாக நடந்து கொண்டார், பின்னர் நீல் இந்திய வீரர் ஒருவரால் கொல்லப்பட்டார். சென்னை மௌண்ட் ரோட்டில் ஆங்கிலேயர் அவருக்கு ஒரு சிலை வைத்தனர். இதை, இந்தியர்களின் உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமரியாதை எனக் கருதிய தேசியவாதிகள் சென்னையில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். 1937இல் ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தபோது இச்சிலை அகற்றப்பட்டு சென்னை அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


Tags : Freedom Struggle in Tamil Nadu தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்.
10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu : Non-Cooperation Movement Freedom Struggle in Tamil Nadu in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : ஒத்துழையாமை இயக்கம் - தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்