Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | வட அமெரிக்கா - கண்டங்களை ஆராய்தல்

மூன்றாம் பருவம் அலகு -1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வட அமெரிக்கா - கண்டங்களை ஆராய்தல் | 7th Social Science : Geography : Term 3 Unit 1 : Exploring Continents -North America and South America

   Posted On :  19.04.2022 06:12 pm

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

வட அமெரிக்கா - கண்டங்களை ஆராய்தல்

பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் "புதிய உலகு" என அழைக்கப்படுகிறன.

வட அமெரிக்கா

பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் "புதிய உலகு" என அழைக்கப்படுகிறன. இந்தியாவிற்கான புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்,1492 ஆம் ஆண்டு வட அமெரிக்காவை கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடித்தார். இத்தாலிய ஆய்வுப்பயணி அமெரிக்கோ வெஸ்புகி இங்கு வந்ததை அடுத்து1507 ஆம் ஆண்டு இந்நிலப்பகுதி அமெரிக்கா என பெயரிடப்பட்டது. அமெரிக்காவின் அமைவிடம், எல்லைகள், நிலதோற்றம், ஆறுகள், காலநிலை, இயற்கை தாவரங்கள், கனிம வளங்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றைப் பற்றி இப்பாடத்தில் நாம் காணலாம்.


அமைவிடம் மற்றும் நிலப்பரப்பு

வட அமெரிக்கா 7° வடக்கு முதல் 84° வடக்கு வரையிலான அட்சக்கோடுகளுக்கு இடையில் முழுவதுமாக வட அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. கடகரேகை(231/2°வ)மெக்சிகோ வழியாகவும் ஆர்க்டிக் வளையம் (661/2°வ) கனடாவின் வடக்கு பகுதிகள் வழியாகவும் கடந்து செல்கின்றன. 53° மே மற்றும் 180° மே தீர்க்கரேகைகளுக்கு இடையில் வட அமெரிக்கா மேற்கு கோளத்தில் முழுவதுமாக அமைந்துள்ளது. தீர்க்கரேகைகளின் அடிப்படையில் மிக அதிகமான பரப்பளவை கொண்டிருப்பதால் ஏழு நேர மண்டலங்களை உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்காவில் மொத்த நிலப்பரப்பு 24,709,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இவை உலகின் மொத்த நிலப்பரப்பில் 16.50 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளது.


எல்லைகள்

வட அமெரிக்கா மேற்கில் பசிபிக் பெருங்கடலையும், கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலையும், தெற்கில் தென் அமெரிக்காவையும் எல்லைகளாக கொண்டுள்ளது. பனாமா நிலச்சந்தி வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கிறது. பேரிங் நீர்ச்சந்தி வட அமெரிக்காவை ஆசியாவில் இருந்து பிரிக்கிறது


அரசியல் பிரிவுகள்

ஆசியா, ஆப்பிரிக்காவிற்கு அடுத்த படியாக மூன்றாவது பெரிய கண்டமாக வடஅமெரிக்கா திகழ்கிறது. வடஅமெரிக்கா மூன்று பெரிய நாடுகளையும் பல சிறிய நாடுகளையும் உள்ளடக்கியது. வட அமெரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய நாடாக கனடாவும் அதனைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்க நாடுகளும் மெக்ஸிகோவும் இரண்டாம் மூன்றாம் இடத்தில் உள்ளன. மெக்ஸிகோவிற்கு தென்பகுதியில் அமைந்துள்ள நிகாராகுவா, ஹாண்டுராஸ், குவாதமாலா , பனாமா , கோஸ்டாரிக்கா, எல்சால்வடார் மற்றும் பெலிஸ் ஆகிய நாடுகள் கொண்ட பகுதி மத்திய அமெரிக்கா என அழைக்கப்படுகிறது.

நிலச்சந்தி : இரண்டு மிகப் பெரிய நிலப் பகுதிகளை இணைக்கும் சிறிய துண்டு.

நீர்ச்சந்தி : இரண்டு பெரிய நீர் பரப்புகளை இணைக்கும் சிறிய நீர் பரப்பு.



இயற்கை அமைப்பு

இயற்கை அமைப்பு பிரிவுகளில் மிகப்பெரிய பன்முகத் தன்மையை கொண்ட கண்டம் வட அமெரிக்கா, மெக்கென்லீ சிகரம் கடல் மட்டத்திலிருந்து 6194 மீட்டர் உயரத்தோடு வட அமெரிக்காவின் உயரமான சிகரமாக திகழ்கிறது. மரண பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இது வட அமெரிக்கக் கண்டத்தின் மிக ஆழமான பகுதியாக கருதப்படுகிறது. பூமியின் மிகவும் பழமையான மற்றும் இளமையான பாறைகள் இங்குள்ளன.

இயற்கை அமைப்பு பிரிவுகளின் அடிப்படையில் வட அமெரிக்கா கீழ்கண்ட நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. ராக்கி மலைகள் 

2. பெரும் சமவெளிகள் 

3. அப்பலேஷியன் உயர் நிலம்

4. கடற்கரை சமவெளிகள் 


1. ராக்கி மலைகள்

வட அமெரிக்கா கண்டத்தின் மேற்குப் பகுதியில் இளம் மடிப்பு மலைகளை நீண்ட மலைத்தொடர்களாக கொண்டது ராக்கி மலைகள்.


இது உயர் பீடபூமிகள், குறுகிய பள்ளத்தாக்குகள் மற்றும் அகன்ற ஆற்றுப் படுகைகளை ஆங்காங்கே கொண்டுள்ளது. வடக்கில் அலாஸ்காவில் இருந்து தெற்கில் பனாமா நிலச்சந்தி வரை சுமார் 4,800 கிலோ மீட்டர் நீளத்திற்கு இம்மலைத்தொடர் நீண்டுள்ளது. இதன் அகலம் 110 கிலோ மீட்டர் முதல் 480 கிலோமீட்டர் வரை வேறுபடுகிறது. ராக்கி மலைத்தொடர் இரண்டு இணை மலைத் தொடர்களை கொண்டுள்ளது. கிழக்கில் இருக்கும் மலைத்தொடரை ராக்கி எனவும் மேற்கில் இருக்கும் மலைத்தொடரை கடற்கரை மலைத்தொடர் எனவும் குறிப்பிடுகின்றனர். சியார் நிவாரா மலைத்தொடர் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் மத்திய கலிபோர்னியா பள்ளத்தாக்கிற்கும் பெரும் வடிநில பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் இதனை சியாரர் மாட்ரே என அழைக்கின்றனர். ராக்கி மலைத்தொடரும்

பல இயங்கும் எரிமலைகளை கொண்டுள்ளதால் கார்டில் லெராஸ், பசிபிக் நெருப்பு வளையத்தின் - ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதி நில அதிர்வுகளையும் அடிக்கடி எதிர் கொள்கிறது.

கண்டங்களும் அதன் 'உயரமான சிகரங்களும் ஆசியா : எவரஸ்ட் சிகரம் (8848 மீ) தென் அமெரிக்கா : அகான்காகுவா (6961 மீ.) வட அமெரிக்கா : மெக்கென்லீ சிகரம் (6194 மீ.) ஆப்பிரிக்கா : கிளிமஞ்சாரோ (5895 மீ.) ஐரோப்பா: எல்பரஸ் சிகரம் (5642 மீ.) அண்டார்டிகா : வின்சன் மாசிப் சிகரம் (4892 மீ.) ஆஸ்திரேலியா : காஸ்கியூஸ்கோ சிகரம் (2228 மீ.)

கடற்கரை மலைத்தொடரும் மேற்கத்திய கார்டில்லெராஸ் என அழைக்கப்படுகின்றன. இம்மலைத் தொடர்களுக்கு இடையில் பல உயரமான மலையிடை பீடபூமிகள் உள்ளன. இவற்றில் மெக்ஸிகன் பீடபூமி, கொலரடோ பீடபூமி மற்றும் கொலம்பியா பீடபூமி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


2. பெரும் சமவெளிகள்

ராக்கி மலைகளின் கிழக்கிலும் அப்பலேஷியன் மலைகளின் மேற்கிலும் வட அமெரிக்காவின் பெரும் சமவெளி பரவியுள்ளது.

இச்சமவெளி வடக்கில் ஆர்டிக் பெருங்கடல் முதல் தெற்கில் மெக்ஸிகோ வளைகுடா வரை வடஅமெரிக்க கண்டத்தின் ஐந்தில் மூன்று பகுதி நிலப்பரப்பில் பரவியுள்ளது. கிழக்கு மேற்காக அப்பலேஷியன் உயர் நிலங்கள் முதல் ராக்கி மலைகள் வரையும் இது பரவி காணப்படுகிறது. ராக்கி மலைத்தொடர்களின் மலை அடிவாரத்தில் காணப்படும் பெரும் சமவெளியின் மேற்குப் பகுதி உயர் சமவெளிகள் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் பாயும் பெரும்பாலுமான நதிகள் மேற்கு உயர்நிலப்பகுதியில் இருந்தே தோன்றுகின்றன. இச்சமவெளி கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி மென் சரிவை கொண்டுள்ளது. இங்கு மிஸிஸிப்பி, மிஸ்சௌரி போன்ற ஆறுகள் பாய்கின்றன.


3. அப்பலேஷியன் உயர்நிலங்கள்

ராக்கி என அழைக்கப்படும் மேற்கு உயர்நிலங்கள் போன்று அப்பலேஷியன் உயர்நிலங்கள் தொடர்ச்சியானவையல்ல. அப்பலேஷியன் உயர் நிலம் உயரம் குறைந்தும் அகன்றும் காணப்படுகின்றது. 1800மீட்டருக்கு மேல் உயரமான மிகச் சில சிகரங்களே உள்ளன. கிரீன்லாந்திலுள்ள உயர் பீட பூமிகள், கனடாவில் உள்ள லாப்ரடார் அல்லது லாரன்ஷியன் பீடபூமி மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள அப்பலேஷியன் மலைகள் ஆகியவற்றை அப்பலேஷியன் உயர்நிலம் உள்ளடக்கியுள்ளது. வானிலை சிதைவு காரணமாக மடிப்பு மலைகள் சிதைந்து, மேற்கு உயர் நிலங்களை விட உயரம் குறைந்து காணப்படுகின்றன. நிலக்கரி, இரும்பு, தாமிரம் போன்ற கனிம வளங்கள் நிறைந்து, வட அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்ற கூடிய பகுதியாக அப்பலேஷியன் உயர்நில பகுதிகள் விளங்குகின்றன.


4. கடற்கரை சமவெளிகள்

அமெரிக்காவின் கடற்கரை சமவெளிகள் உலகில் மிகவும் இன்றியமையானவையாக கருதப்படுகின்றன. அட்லாண்டிக் கடற்கரை சமவெளி தற்போது பெரும்பாலும் நீருக்கடியில் மூழ்கியுள்ளது. இவை மிகவும் உயரம் குறைந்து விவசாயத்திற்கு பயன்படாத மணற்பாங்கான நிலப்பகுதி ஆகும். இங்கு சதுப்பு நிலப் பகுதிகள் அதிகமாக காணப்படுகின்றன. ஆறுகளின் முகத்துவாரங்கள், வளைகுடாக்கள் கடற்கரை சமவெளியில் அமைந்து முக்கிய துறைமுகங்களாக செயல்படுகின்றன.


ஆறுகள்

வட அமெரிக்க கண்டத்தில் பல ஆறுகள் ஓடுகின்றன.அவற்றில் சில பனியாறுகளிலிருந்து உருவாகி இந்நிலப்பரப்பில் பயணிக்கின்றன. மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி ஆறுகள் வட அமெரிக்காவின் மிகநீளமான ஆறுகளாகும். இவை இரண்டும் இணைந்து நோன் பேனாவிலிருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை 614 கிலோ மீட்டர் நீளம் பாய்ந்து உலகின் நான்காவது மிகப்பெரிய நதி அமைப்பாக உள்ளது. உருவாகும் இடத்திலிருந்து 3700 கிலோமீட்டர்களுக்கு பிறகு மிஸிஸிப்பி ஆற்றுடன் கலக்கிறது. வட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய ஆற்றுப்படுகையாக இருப்பது மெக்கன்ஸி ஆறு. இது கிரேட் ஸ்லேவ் ஏரியில் ஆரம்பித்து ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

ஒன்டேரியோ ஏரியில் தன் பயணத்தை துவங்கி வடகிழக்காக பயணித்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது புனித லாரன்ஸ் ஆறு. மேற்கு பீடபூமியில் ஓடும் கொலம்பியா ஆறும் அதன் கிளை ஆறுகளும் மிக ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. கிராண்ட் கேன்யான் எனப்படும் உலகப் புகழ்வாய்ந்த மிகப்பெரிய பள்ளத்தாக்கினை கொலராடோ ஆறு கொலம்பியா பீடபூமியில் உருவாக்கியுள்ளது. இவ்வாறுகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வகையில் இல்லை என்றாலும் அவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு நீர்ப்பாசனத்திற்கும் மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கு மலைத்தொடர் பகுதியின் வடமேற்கிலிருந்து உருவாகும் யூகான் ஆறு ஆண்டின் எட்டு மாதங்களுக்கு உறைந்த நிலையிலேயே காணப்படுகிறது. மெக்ஸிக்கோ வளைகுடாவில் கலக்கும் ரியோ கிரேன்டி நதி அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் எல்லையாக அமைந்துள்ளது.

கிராண்ட் கேன்யான் (Grand Canyon) என்பது) அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கொலராடோ ஆற்றினால் உருவாக்கப்பட்ட செங்குத்தான பக்கங்களைக் கொண்ட மிக ஆழமான பள்ளத்தாக்கு ஆகும்

இக்கண்டத்தின் பனி உறைந்த, குறிப்பாக வடக்கு மின்னசொட்டா பகுதியில் பல ஏரிகள் காணப்படுகின்றன. இவ்வேரிகள் மிகச்சிறியதாக இருப்பதால் பொழுதுபோக்கு அம்சங்களாக பயன்படுத்தப்படுகின்றன. கிரேட் ஏரிகள் (Great Lakes) எனப்படும். கிரேட் ஏரிகள் கண்டத்தின் மேற்கு கிழக்காக பரவலாக காணப்படுகின்றன. இதன் முக்கிய தொகுப்பு ஐந்து முக்கிய ஏரிகளை கொண்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஏரியானது சுப்பீரியர் ஏரி 172) ஆகும். இது உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி ஆகும். வின்னிபெக் ஏரி, கிரேட் பேர் ஏரி (Great Bear Lake) மற்றும் அதபாஸ்கா ஏரி ஆகியவை கனடாவில் காணப்படும் பிற ஏரிகள் ஆகும்.


"பெரிய சேற்று ஆறு" என்ற புனைப் பெயருடன் மிஸிஸிப்பி ஆறு அழைக்கப்படுகிறது. இது மலைகளின் கீழே பாய்ந்து வரும் போது மண்ணையும் சேற்றையும் தன்னோடு இழுத்து வருவதால் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.


காலநிலை 

அட்சக்கோடுகளின் அடிப்படையில் வெப்பமண்டல பகுதி முதல் தூந்திர பகுதி வரை பரவியுள்ள வட அமெரிக்கக் கண்டத்தில் ஆசியாவை போலவே பல தரப்பட்ட காலநிலைகள் காணப்படுகின்றன. இந்தியாவின் இமயமலைகள் போலில்லாமல் ராக்கி மலைத்தொடர் வடக்கு தெற்காக அமைந்திருப்பதால், இது ஆர்டிக் பகுதியில் இருந்து வீசும் கடுங்குளிர் காற்றினை தடுக்கும் அரணாக செயல்படவில்லை . மத்திய சமவெளிகளில் ஊடுருவும் குளிர் காற்றினால் வட அமெரிக்காவில் நீண்ட கடுங் குளிர்காலமும் குறுகிய வெப்பமான கோடைக் காலமும் காணப்படுகிறது. சூறாவளி புயல்களினால் இங்கு மழைப்பொழிவு உண்டாகிறது. ஆர்டிக் பகுதி குளிர்ந்தும் வறண்டும் காணப்படுகிறது. இங்கும் குளிர் காலங்கள் நீண்டு கடும் குளிரோடும் கோடை காலங்கள் குறுகி இருக்கின்றன. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லச்செல்ல கோடைகாலம் வெப்பமானதாகவும், குளிர்காலம் மிகுந்த குளிரோடும் காணப்படுகின்றன. மத்திய சமவெளிகளில் உறைபனியோடு கூடிய குளிர்காலமும் வெப்ப மண்டலம் போன்ற அதிக வெப்பமுடைய கோடை காலமும் காணப்படுகின்றது.

வட அமெரிக்கக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி ஆறுகளின் முகத்துவார பகுதிகளும் வளைகுடா கடற்கரை பகுதிகளும் கோடை காலங்களில் வீசும் வடகிழக்கு பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன. சூடான ஈரப்பதம் மிகுந்த தென்மேற்குப் பருவக் காற்றுகள் வட அமெரிக்காவின் வட மேற்குப் பகுதிகளுக்கு மழை பொழிவை தருவதோடு இல்லாமல் அப்பகுதி வெப்பமாக இருக்கவும் உதவுகிறது. வடமேற்கு கடற்கரை பகுதியில் நகரும் அலாஸ்கா வெப்ப நீரோட்டம் அப்பகுதியில் பனி உறையாமல் இருப்பதற்கு காரணமாகிறது. ஈரப்பதம் மிக்க குளிர் காலத்தையும் வறண்ட கோடை காலத்தையும் உள்ளடக்கிய மத்திய தரைக்கடல் காலநிலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காணப்படுகிறது.

மேற்கத்திய காற்றுகள் அல்லது பந்து எதிர் வர்த்தக காற்றுகள் 30° பனிகர் முதல் 60° வரையிலான மத்திய அட்சகோட்டுப் பகுதியில் மேற்கிலிருந்து கிழக்காக வீசும் நிலையான காற்றுகள் ஆகும்.


வட அமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் காடுகளின் வகைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள்




இயற்கை தாவரங்கள்

வட அமெரிக்கா மாறுபட்ட விரிவான வனப்பகுதியை கொண்டுள்ளது. மொத்த நிலப்பரப்பில் சுமார் 30 சதவீத நிலப்பரப்பு காடுகளால் நிறைந்துள்ளது. மரம் வெட்டும் தொழில் இங்கு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. குறிப்பாக கனடா மற்றும் வட அமெரிக்காவில் மரக்கட்டை, மரப்பலகை, மரக்கூழ் மற்றும் காகிதம் ஆகியவற்றை பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. மரக்கட்டை உற்பத்தியில் உலகின் மொத்த உற்பத்தியில் சுமார் 20% வட அமெரிக்காவில் இருந்து வருகிறது. பல்வேறு அட்ச ரேகைகள், உயர வேறுபாடுகள், மண், மழைப் பொழிவின் மாற்றம் ஆகியவை வட அமெரிக்காவின் இயற்கை தாவரத்தில் உள்ள பல்வேறுபட்ட வேறுபாடுகளுக்கு முதன்மை காரணமாக விளங்குகிறன.



வேளாண்மை

வேளாண்மைத் தொழிலில் பணிபுரிய கூடியவர்களில் மிகக் குறைந்த விகிதத்தினர் ஈடுபட்டு இருந்தாலும், அமெரிக்கா அதிகமான உற்பத்தியை தரக்கூடிய அளவில் உள்ளது. விரிவான வேளாண்மை முறை அமெரிக்காவிலும் கனடாவிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. கோதுமை உற்பத்தியில் கனடாவும் அமெரிக்காவும் உலகின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக விளங்குகின்றன. கோதுமை, மக்காசோளம், ஓட்ஸ், சோயாபீன்ஸ், பார்லி மற்றும் இன்னும் பிற உணவு தானியங்கள் வட அமெரிக்காவின் பரந்து விரிந்த சமவெளிகளில் விளைவிக்கப்படுகின்றன.


கோதுமை

கோதுமைப் பயிர் ஐரோப்பிய குடியேற்றங்களால் வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. வட அமெரிக்காவின் பிரய்ரி புல்வெளி நிலங்களில் கோதுமை பெருமளவில் விளைவிக்கப்படுகிறது உலகின் முதல் கோதுமை ஏற்றுமதியாளராக வட அமெரிக்கா விளங்குகிறது. கோதுமை விளையும் பெரும் பரப்புகளை கோதுமை பகுதி என அழைக்கின்றனர்.


சோளம்

வட அமெரிக்காவின் பூர்வீக மக்களின் முக்கிய உணவுப் பயிர் சோளமாகும். மெக்ஸிகோவின் முக்கிய உணவுப் பயிரும் இதுவே. தெற்கு புல்வெளிப் (Prairies) பகுதியில் சோளம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. உலகின் மொத்த சோள உற்பத்தியில் பாதிக்கும் மேல் வட அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.


பார்லி மற்றும் ஓட்ஸ்

பார்லி மற்றும் ஓட்ஸ் இரண்டும் மித வெப்ப மண்டலப் பயிர்கள் ஆகும். இவை அதிகமான குளிரை எதிர்கொண்டு குறைவான நீர் தேவையில் வளரக்கூடியவை. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பார்லி விளைவிக்கப்படுகிறது. மினசோட்டா, வட டகோட்டா மற்றும் வாஷிங்டனிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. விலங்குகளுக்கு பார்லியும் ஓட்ஸும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.


பருத்தி

வட அமெரிக்காவில் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பருத்தி நன்கு விளைகிறது. மேலும் டெக்சாஸ், கலிபோர்னியா, மிஸிஸிப்பி, தெற்கு புல்வெளி மற்றும் மெக்ஸிகோவில் அதிகமாக விளைகிறது. மழையுடன் கூடிய வெப்பமான கோடைக் காலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழலாக உள்ளன.


கரும்பு

மெக்ஸிகோ வளைகுடா பகுதியிலும் மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளிலும், மேற்கிந்திய தீவுகளிலும், கரும்பு விளைவிக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளின் முக்கிய பணப் பயிராக கரும்பு விளங்குகிறது. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என கியூபா அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளர் ஆகும்.

 


சோயா பீன்ஸ்

சோளம் விளையும் அதே பகுதிகளில் சோயாபீன்ஸ் விளைவிக்கப்படுகிறது. சமையல் எண்ணை தயாரிக்க சோயாபீன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. 


உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு

உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரய்ரி, வட டகோட்டா மற்றும் மினசோட்டா பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரை வள்ளிக் கிழங்கு சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது. உருளைக்கிழங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கும் கால்நடை மற்றும் பன்றிகளுக்கும் உணவாக பயன்படுத்தப்படுகிறது. 


பழங்கள்

டெக்சாஸ் கலிபோர்னியா கிரேட் ஏரி பகுதிகள் மற்றும் லாரன்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன. வட அமெரிக்காவில் கிரான்பெரீஸ், ப்ளூபெர்ரி, கான்கார்ட் திராட்சைகள், ஸ்ட்ராபெரி, நெல்லிக்கனி மற்றும் பிற பழவகைகள், முக்கிய பழங்களாக விளைவிக்கப்படுகின்றன.



கால்நடை பராமரித்தல்

வட அமெரிக்காவின் தென்மேற்கில் உள்ள பிரய்ரியின் வறண்ட பகுதிகளில் கால்நடை பராமரித்தல் வர்த்தக ரீதியில் செயல்படுத்தபடுகிறது. பெரிய அளவிலான கால்நடை மந்தைகளும், செம்மறி ஆடுகளும், மிகப்பெரிய பண்ணைகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. செழுமையான மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளுக்காகவும் செழுமையற்ற மேய்ச்சல் நிலங்கள் செம்மறி ஆடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. வட அமெரிக்கா உலகின் மொத்த கறி உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு அளவு உற்பத்தி செய்து, உலகின் அதிகமான உற்பத்தியாளர் என்ற மதிப்பினை பெறுகிறது. 


பால்பண்ணை பராமரிப்பு

பால் உற்பத்திக்காக கால்நடைகளை பராமரிப்பது, பண்ணை பராமரிப்பு என அழைக்கப்படுகிறது. இது அமெரிக்கா மற்றும் கனடாவின் முக்கியமான தொழில் ஆகும். குளிர்ந்த மற்றும் ஈரப்பதம் மிகுந்த பிரெய்ரி, பெரும் ஏரிகள் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையின் வடகிழக்குப் பகுதிகளில் பண்ணை பராமரிப்பு தொழில் அதிகமாக உள்ளது. உலகின் மொத்த பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் 25 சதவிகிதத்தை வட அமெரிக்கா கொண்டுள்ளது.


மீன்பிடித் தொழில்

மீன் பிடித் தொழில் வட அமெரிக்க கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் முக்கியமான உள்நாட்டு தொழிலாகும். கனடாவின் நியுபவுண்ட்லாந்து தீவுக்கு அருகில் அமைந்துள்ள கிராண்ட் பேங்க் உலகின் மிகச்சிறந்த மீன்பிடி தளமாகும். இங்கு கல்ப் வெப்ப நீரோட்டமும் லாபரடார் குளிர் நீரோட்டமும் சந்தித்து கொள்வதால், மீன்கள் வளர்வதற்கான ஏற்ற சூழலை உருவாக்குகிறது. மீன்களுக்கு உணவாகும் பிளாங்டன்கள் எனப்படும் கடல் பாசிகளை லாபரடார் குளிர் நீரோட்டம் இப்பகுதிக்கு அதிக அளவில் எடுத்து வருகிறது. காட், ஹெர்ரிங், மெக்கிரல், சால்மோன் மற்றும் ஹாலிபட் ஆகியவை வட அமெரிக்காவில் காணப்படும் முக்கிய மீன் வகைகள் ஆகும்.

கிராண்ட் பேங்க் 

உலகின் முக்கிய பெரிய  மற்றும் வளமான இயற்கை வளங்களை கொண்டது கிராண்ட் பேங்க். இங்கு மீன் மற்றும் பெட்ரோலிய படிவுகள் காணப்படுகின்றன.


கனிம வளம்

வட அமெரிக்கா மிகுந்த கனிம வளம் கொண்ட கண்டமாக திகழ்கிறது. வட அமெரிக்கா, இரும்பு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, தாமிரம், வெள்ளி, சல்ஃபர், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உற்பத்தியில் உலகில் முன்னணியில் உள்ளது. மேலும் ஈயம் மற்றும் யுரேனியம் பிற முக்கிய கனிமங்கள் ஆகும். வட அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு படிவுகள் பரவலாக காணப்படுகின்றன. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர்களாக திகழ்கின்றன.



வட அமெரிக்காவின் முக்கிய கனிமங்கள்

கனிமம் |  கிடைக்கும் இடம் 

இரும்புத் தாது - கனடியன் ஷீல்ட், கிரேட் ஏரி பகுதி, அப்பலேஷியன் உயர் நிலங்கள், மத்திய அலபாமா மற்றும் மினசோட்டா

தாமிரம் - கிரேட் ஏரி பகுதி, அரிசோனா, உதா , புதிய மெக்ஸிகோ , நிவடா,மோன்டானா, ராக்கி மலைகள், ஒன்டாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா.

வெள்ளி - நிவடா, உதா , பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் .

தங்கம் - கனடா- ஒன்டாரியோ கியூபெக் அமெரிக்கா- கலிபோர்னியா, கொலராடோ , உதா , நிவடா

நிலக்கரி - அப்பலேஷியன், பென்சில்வேனியா, ஓஹியோ , அலபாமா , அல்பர்டா மற்றும் கொலம்பியா.

பெட்ரோலியம்  - அமெரிக்கா – அலாஸ்காவிலிருந்து டெக்சாஸ் வரை கனடா மற்றும் மெக்ஸிககோ

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு -  மத்திய தாழ் நிலங்கள், வளைகுட கடற்கரை பகுதிகள், ராக்கி மலைகள், அப்பலே ஷியன் மற்றும் அலாஸ்கா




தொழிற்சாலைகள்

வட அமெரிக்கா வளங்கள் நிறைந்த கண்டமாகும். கண்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிலக்கரி, இரும்புத்தாது போன்ற கனிம வளங்கள் அதிகமாகவும், சாலை, இரயில் மற்றும் நீர்ப் போக்குவரத்து வசதிகள் நிறைந்த பகுதியாகவும் விளங்குகின்றது. கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் தொழிற்சாலைகள் அடர்த்தியாக காணப்படுகின்றன. தொழில் மயமான நாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஒன்றாகும். மொத்த நாட்டு உற்பத்தியில் தொழிற்சாலைகளின் பங்களிப்பு 25% ஆகும். இரும்பு, எஃகு தொழிலில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னிலை வகிக்கிறது. நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் தங்களது தொழிற்சாலைகளை முன்னேற்றி வருகின்றனர். 


வட அமெரிக்காவின் முக்கிய தொழிற்சாலைகள் 

1. இரும்பு எஃகு தொழிற்சாலை

வட அமெரிக்கக் கண்டம் இரும்பு எஃகு தொழிலில் உலகின் முக்கிய மையமாக உள்ளது. இரும்புத்தாது, நிலக்கரி மற்றும் நவீனப் போக்குவரத்து ஆகியவை இரும்பு எஃகு தொழிற்சாலைகளின் முக்கிய தேவைகளாகும். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க், சிக்காகோ மற்றும் பிர்மின்ஹாம் நகரங்களும் கனடாவின் ஹமில்டன் நகரமும் வட அமெரிக்காவின் முக்கிய இரும்பு எஃகு தொழிற்சாலை நகரங்களாகும்.


2. கனரக பொறியியல் தொழிற் சாலைகள்

கனமான மற்றும் பருமனான மூலப்பொருட்களைக் கொண்டு பெருமளவிலான எரிபொருள், மூலதனம் மற்றும் போக்குவரத்து செலவினங்களை பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை கனரக பொறியியல் தொழிற் சாலைகள் என அழைக்கப்படுகின்றன. இவை இரும்பு எஃகு தொழிற்சாலைகளை சார்ந்துள்ளன.

ஆட்டோமொபைல் தொழிற்சாலை, வான் ஊர்தி தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை, இரயில்பெட்டி தொழிற்சாலை மற்றும் விவசாய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியவை முக்கிய கனரக தொழிற்சாலைகள் ஆகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆட்டோமொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது. வட அமெரிக்காவின் டெட்ராய்ட், சிக்காகோ, பஃபலோ, இண்டியானாபோலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், செயின்ட் லூயிஸ், பிலடெல்பியா, நியூயார்க், பால்டிமோர் மற்றும் அட்லாண்டா ஆகியவையும், கனடாவின் வின்ஸரும் முக்கிய கனரக தொழில் மையங்களாக திகழ்கின்றன.


3. மரக்கூழ் மற்றும் காகிதத் தொழிற்சாலை

உலகின் மொத்த மரக்கூழ் மற்றும் செய்தித்தாள் உற்பத்தியில் 50% வடஅமெரிக்காவில் உற்பத்திச் செய்யப்படுகின்றன. உலகின் அனைத்து வகையான காகிதங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கனடா முன்னிலை வகிக்கிறது. கனடாவிலுள்ள ஒன்டாரியோவில் காகிதத் தொழிற்சாலைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.


4. ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள்

ஆடை உற்பத்தி என்பது பருத்தி, கம்பளி மற்றும் செயற்கை இழை போன்ற மூலப் பொருள் உற்பத்தியை உள்ளடக்கியதாகும். அமெரிக்கா பருத்தி ஆடை உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. டெக்ஸாஸ், கலிபோர்னியா, அரிசோனா, மிஸிஸிப்பி, அர்கண்சஸ் மற்றும் லூசியானாவில் முக்கிய ஆடை தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. டொரன்டோ, கான்வெல் மற்றும் கிங்ஸ்டன் ஆகியவை கனடாவின் முக்கிய ஆடைத் தொழில் நகரங்கள் ஆகும். இப்பகுதிகளில் காணப்படும் குளிர்ந்த ஈரப்பதம் மிக்க காலநிலை நூல் அறுந்து போகாமல் காப்பதால் நூல் நூற்கும் மற்றும் நெசவு தொழில்களுக்கு இங்கு பொருத்தமாக காலநிலை காணப்படுகிறது. கம்பளி ஆடை தொழிற்சாலைகள் அலெக்ஹனி பீடபூமிக்கு கிழக்கில் அமைந்துள்ளன. புதிய இங்கிலாந்து பகுதியில் 70 சதவீத கம்பளி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. செயற்கை இழை தயாரிப்பில் வட அமெரிக்கா உலகின் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ரேயான் மற்றும் இதர செயற்கை இழைகள் மரக்கூழிலிருந்து கிடைக்கும் செல்லுலோஸ் மூலம் தயாரிக்கப்படுகிறது.


5. இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை

வடஅமெரிக்காவில் புல்வெளி (Prairies) பகுதிகளில் கால்நடை பராமரிப்பு மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கனடா மற்றும் அமெரிக்காவின் மிக முக்கிய தொழில்களில் இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் தொழிலும் ஒன்றாகும். வட அமெரிக்காவிலுள்ள சிக்காகோ, புனித லூயிஸ் மற்றும் கனடாவிலுள்ள கல்கேரி, வின்னிபெக் ஆகிய நகரங்கள் முக்கிய இறைச்சி பதப்படுத்தும் மையங்களாகும்.


மக்கள் தொகை

வட அமெரிக்காவின் பெரும்பான்மையான மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்களின் வாரிசுகளே ஆவர். குடியேறியவர்களில் முதன்மையானவர்கள் பதினாறாம் நூற்றாண்டில் குடியேறிய ஐரோப்பியர்கள் ஆவர். மத்தியில் தற்போது சிறிய எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் அமெரிக்காவின் பூர்வீக குடிமக்கள் இன்றும் அவர்களுக்கு உரிய பகுதிகளில், அவர்களுக்கு உரிய வழக்கமான வாழ்க்கைமுறையோடு இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.


மக்கள் தொகை பரவல்

2018ம் ஆண்டு , வட அமெரிக்காவின் மக்கள் தொகை 364,446,736. உலக மக்கள் தொகையில் 4.77 சதவீதத்தை வடஅமெரிக்கா கொண்டுள்ளது. நிலப்பரப்பின் அடிப்படையில் மிகப்பெரிய நாடு கனடாவாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் மெக்ஸிகோ நகரம். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 20 நபர் என்ற அளவில் காணப்படுகிறது. 


வட அமெரிக்காவின் மக்கள் தொகை மற்றும் அடர்த்தி 


அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள்:  வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகள், கிரேட் ஏரி பகுதி, மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி அதிகமாக காணப்படுகிறது

மிதமான மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள்: வட அமெரிக்காவின் மத்தியப் பகுதிகள், மத்திய உயர்நிலங்கள், மெக்ஸிகோ உயர் நிலங்கள், கனடாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் மிதமான மக்களடர்த்தி காணப்படுகிறது.

குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள்: வடக்கு கனடா, அலாஸ்கா ராக்கி மலைகள் மற்றும் பாலைவனப்பகுதிகளில் மிகக் குறைவான மக்கள் அடர்த்தி காணப்படுகிறது.

மொழிகள் மற்றும் சமயங்கள்: வட அமெரிக்காவில் பெரும்பான்மையான மக்கள் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிரஞ்ச் மொழிகள் பேசுகின்றனர். அவர்களது கலாச்சாரம் தத்துவம் மற்றும் சட்டத்தில் பல்வேறு சமய நம்பிக்கைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவர்களில் 80 சதவீதம் மக்கள் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றுகின்றனர். ஐக்கிய அமெரிக்க நாடுகள் "உருகும் பானை" என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு நூற்றுக்கணக்கான பல கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, கலந்து புதிய கலாச்சாரத்தை உருவாக்குகின்றன.

எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும் வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் எங்கு மீன்கள் அதிகம் கிடைக்கிறதோ, அங்கு வாழ்கிறார்கள். விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்தி இஃலூக்களில் வாழ்கிறார்கள்.


சுற்றுச்சூழலை பெரிதும் மாற்றி அமைக்க இயலாத நிலையில் இவர்கள் எளிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். பனிக்கட்டிகளை கொண்டு இவர்கள் கட்டும் வீடுகளுக்கு இஃக்லூ என்று பெயர்.


போக்குவரத்து

வட அமெரிக்கா சாலை வழி, இரயில் வழி, நீர் வழி மற்றும் வான்வழி போக்குவரத்துகளைக் கொண்டு மிகச் சிறந்த போக்குவரத்து வலைப்பின்னலை உருவாக்கி உள்ளது. 

அ) சாலை வழி போக்குவரத்து

வட அமெரிக்காவில் குறிப்பாக அமெரிக்காவிலும் கனடாவிலும் உலகின் தலைசிறந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லாவித காலநிலையிலும் பயன்படுத்த கூடிய அஸ்பால்ட் மற்றும் கான்கிரீட்களால் ஆன சாலைகள் இங்கு போடப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட (Superways) அல்லது தடையில்லா சாலைகள் (Freeways) பயணத்தை இலகுவாகவும் வேகமாகவும் மாற்றியுள்ளன. பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை வடமேற்கில் அலாஸ்காவையும் தெற்கில் பனாமாவையும் இணைக்கிறது.

ஆ) இரயில் போக்குவரத்து

வட அமெரிக்கா நன்கு விரிவடைந்த சிறப்பான இரயில் போக்குவரத்தினால் இணைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ் கான்டினென்டல் மற்றும் டிரான்ஸ் கனடியன் இரயில் பாதைகள் மேற்கு, கிழக்கு கடற்கரைகளிலுள்ள அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கின்றன. உலகின் மிகப்பெரிய இரயில்வே முனையம் சிக்காகோவில் உள்ளது. நியூயார்க் ரயில் நிலையம் உலகில் பரபரப்பான இரயில் நிலையங்களுள் ஒன்று.

பனாமா கால்வாய் படிக்க

1914ல் பனாமா நிலச்சந்தியின் குறுக்கே 80 கிலோமீட்டர் நீளத்திற்கு அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலலையும் இணைக்கும் விதமாக பனாமா கால்வாய் வெட்டப்பட்டது. 


பனாமா கால்வாய் 


இக்கால்வாய் ஐரோப்பா மற்றும் வட தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு இடையிலான தூரத்தை வெகுவாக குறைக்கின்றது.

இ) நீர்வழி போக்குவரத்து

கிரேட் ஏரி (Great Lakes) பகுதிகளும் லாரன்ஸ் மற்றும் மிஸிஸிப்பி ஆறுகள், வட அமெரிக்காவின் முக்கியமான உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து தடங்களாகும். கியூபெக் நகரம், மான்ட்ரியல், பாஸ்டன், நியூயார்க், பிலடெல்பியா, சார்லஸ்டன் மற்றும் நியூ ஆர்லியன்ஸ் ஆகியவை  சிலமுக்கியமான உள்நாட்டு துறைமுகங்களாகும். கிழக்குக் கடற்கரையில் நியூயார்க்கும், மேற்கு கடற்கரையில் வான்கூவர், சான்பிரான்சிஸ்கோ ஆகியவை முக்கிய துறைமுகங்கள் ஆகும்.

ஈ) வான்வழி போக்குவரத்து

வான்வழி போக்குவரத்து மதிப்புமிக்க வழிகளை வழங்குகிறது. வட அமெரிக்காவில் உள்ள அனைத்து நகரங்களும், தொழில்துறை மையங்களும், விமான வழிகளால் இணைக்கப்பட்டுள்ளன. நியூ யார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, டொராண்டோ, மாண்ட்ரீல் மற்றும் மெக்ஸிகோ நகரம் ஆகியவை வட அமெரிக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.


வர்த்தகம்

வட அமெரிக்கா விவசாயம் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கின்றன. தொழில்துறை இயந்திரங்கள், ஆட்டோமொபைல், காகிதம், மீன், கோதுமை, வாழைப்பழங்கள், இறைச்சி, விமானம், தொலைத்தொடர்பு உபகரணங்கள், இரசாயன, பிளாஸ்டிக், உரங்கள், மரக்கூழ், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, அலுமினியம், நிக்கல் மற்றும் ஈயம் ஆகியவை முக்கிய ஏற்றுமதி பொருட்களாகும். வட அமெரிக்கா இறக்குமதி பொருட்களாவன காபி, கோகோ, சர்க்கரை, ஜவுளி, இரும்பு தாது மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அடங்கும். ஐரோப்பா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் வட அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நாடுகளாகும்.


Tags : Term 3 Unit 1 | Geography | 7th Social Science மூன்றாம் பருவம் அலகு -1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Geography : Term 3 Unit 1 : Exploring Continents -North America and South America : North America - Exploring Continents Term 3 Unit 1 | Geography | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா : வட அமெரிக்கா - கண்டங்களை ஆராய்தல் - மூன்றாம் பருவம் அலகு -1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா