பருவம் 1 இயல் 8 | 3 ஆம் வகுப்பு தமிழ் - நூலகம் | 3rd Tamil : Term 1 Chapter 8 : Nulagam

   Posted On :  29.06.2022 02:39 am

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 8 : நூலகம்

நூலகம்

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 8 : நூலகம்

8. நூலகம்



மாமா!.....மாமா! என அழைத்தபடி தேனருவி வீட்டிற்குள் வந்தாள். 

மாமா:    என்னம்மா! தேனருவி ஏன் இப்படி ஓடி வருகிறாய்? 

தேனருவி: நான் வழக்கமாகப் பள்ளிக்கூடம் போகும் வழியில் உள்ள ஒரு கட்டடத்தைத் தோரணம் கட்டி அழகுபடுத்தியிருந்தார்கள். அதில் நூலகம் என்று எழுதியிருக்கு அப்படின்னா… என்ன மாமா....? 

மாமா:    அதுவா! நூல்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம்தான் நூலகம். அது ஒரு பொது இடம். அங்கு அனைவரும் வந்து புத்தகம் படிப்பாங்க! இன்று "நூலக தினம்" அதைக் கொண்டாடுவதற்காக நூலகத்தை அழகுபடுத்தியிருப்பார்கள்.

கேட்கும் செய்திகளைப் புரிந்துகொண்டு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துதல்



தேனருவி: அப்படியா? நாமும் சென்று நூலக தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வோமா?. 

மாமா: சரி தேனருவி! வா போகலாம். 

தேனருவி: நூலகத்தைப் பற்றி எனக்கு விளக்கமாகச் சொல்லுங்க... மாமா. 

மாமா: சொல்கிறேன் கேள், 'நூல் + அகம் = நூலகம்'. பல்வேறு துறை சார்ந்த நூல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடமே நூலகம் ஆகும். நூல் நிலையம், புத்தகச் சாலை என்பன நூலகத்தின் வேறு பெயர்களாகும். 

தேனருவி: மாமா இங்கு என்னென்ன நூல்கள் இருக்கும்? 

மாமா: நூலகத்தில் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், தமிழ், ஆங்கிலம், மற்றும் வேறு பல மொழிகளைச் சார்ந்த இலக்கிய நூல்கள், அறிவியல் நூல்கள், தத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள், பூகோள நூல்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும். 

நூல்கள் மட்டுமின்றி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் இதழ்கள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.



தேனருவி: அடேங்கப்பா! நூலகத்தில் இவ்வளவு வகை நூல்களா? அது சரி மாமா நூலகத்தினால் நமக்கு என்ன பயன்? 

மாமா: ம்............ என் செல்லக் குட்டி கேட்டால் சொல்லாமல் இருப்பேனா? இங்கு வந்து நமக்குத் தேவையான அல்லது பிடித்த நூல்களை எடுத்துப் படிக்கலாம். நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் நூல்களை வீட்டிற்கே கொண்டு சென்றும் படிக்கலாம் ஆனால் குறிப்பிட்ட நாளில் மீண்டும் புத்தகங்களைத் திருப்பி அளித்து விடவேண்டும். இதனால், 

நம் அறிவு வளர்கிறது. 

நம்முடைய நேரம் பயனுள்ள முறையில் அமைகிறது. 

வேலைவாய்ப்புத் தொடர்பான நூல்களைப் படிப்பதால் நல்ல வேலையில் சேரவும் முடிகிறது. 

மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.

தன்னம்பிக்கை ஏற்படுகிறது. 

தேனருவி: மாமா! நூலகம் பற்றி நிறைய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். 

மாமா: தேனருவி குழந்தைகளுக்கான சிறப்பம்சம் நூலகத்தில் உள்ளது. அது என்ன தெரியுமா?

இங்கே குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.

நூலகத்தில் உள்ள "வாசகர் வட்டம்" மூலமாக "நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன. 

போட்டிகளில் கலந்து கொள்வோருக்காகவும், போட்டித் தேர்வினை எழுதுவோருக்காகவும் தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

ஒவ்வொரு குழந்தையும் அவரவர் வீட்டில் நூலகம் அமைக்க வேண்டும் அதில் நிறைய புத்தகங்களைச் சேமித்து வைத்து புத்தகம் படிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தேனருவி: நன்றி மாமா!.......... நான் நம் வீட்டில் ஒரு "சிறிய நூலகத்தை " அமைப்பேன். 

அதில் நிறைய நூல்களைச் சேமித்து வைத்துப் படிப்பேன்

அறிந்துகொள்வோம்

• படிப்புதான் ஒருவன் உயர வழி

- காமராசர் 

• புத்தகங்கள் படிப்பதையே வழக்கமாக்குங்கள்.

-அப்துல்கலாம்


நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்திப் படிப்போமா?



நூலகத்திற்கு நீ சென்றுள்ளாயா? அங்குப் பலவகையான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறுகதைப் புத்தகங்கள், புதினங்கள், வரலாற்று நூல்கள், இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள் என வரிசைப்படுத்தி வைத்திருப்பர். சிறுவர் இதழ்கள் செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் போன்ற இதழ்களும் உண்டு. ஆஹா! அங்குச் சென்று படிக்கத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது. நூலகத்தின் பொறுப்பாளர் நூலகர் ஆவார். நூலகத்தில் அமைதி காத்திடல் வேண்டும்.


த்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் பூமலர். விளையாடுவதற்காகத் தன் தோழி மாலதி வீட்டிற்குச் சென்றாள் வழியில் இரண்டு சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர். பூமலர் அவர்களிடம், ஓணானை அடிக்காதீர்கள், உங்களை அடித்தால் உங்களுக்கு வலிக்கும் அல்லவா? அது போல அதற்கும் வலிக்கும் எனவே உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றாள். சிறிது யோசித்த அச்சிறுவர்கள் கற்களைக் கீழே போட்டுவிட்டுத் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

1.  பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?

பூமலர் தன் தோழி மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்.

2. சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? 

சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு  குறிபார்த்துக்  கொண்டிருந்தனர்.

3. உயிர்களைத்  துன்புறுத்தக்  கூடாது  என்று  கூறியவர்  யார்?

வள்ளுவர், வள்ளலார், புத்தர்.

4. இப்பத்தியில் இருந்து நீ அறிந்து கொண்டது என்ன?

எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது.


Tags : Term 1 Chapter 8 | 3rd Tamil பருவம் 1 இயல் 8 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 1 Chapter 8 : Nulagam : Nulagam Term 1 Chapter 8 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 8 : நூலகம் : நூலகம் - பருவம் 1 இயல் 8 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 8 : நூலகம்