Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலை

பொருளியல் - ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலை | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition

   Posted On :  27.07.2022 05:38 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலை

உணவு பாதுகாப்பில் ஊட்டச்சத்தும் பாதுகாப்பும் அடங்கும் என்பதை நாம் முன்னரே குறிப்பிட்டோம். நமது நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தாலும், மக்களின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றங்களை அடையவில்லை.

ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலை

ஊட்டச்சத்தின் நிலை

உணவு பாதுகாப்பில் ஊட்டச்சத்தும் பாதுகாப்பும் அடங்கும் என்பதை நாம் முன்னரே குறிப்பிட்டோம். நமது நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தாலும், மக்களின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றங்களை அடையவில்லை. 2015-2016 ஆம் ஆண்டில், 27% கிராமப்புறப் பெண்களும் மற்றும் 16% நகர்ப்புற பெண்களும் (15-49 வயதுக்குட்பட்டவர்கள்) ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் அல்லது நீண்டகால ஆற்றல் குறைபாடு உடையவர்கள் என தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டது.


இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற (15-49 வயது) வயதுக்குழுவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் இரத்த சோகைக்கு ஆளானார்கள். 2015-2016 ஆம் ஆண்டில் குழந்தைகளைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் 60% மற்றும் நகர்ப்புற குழந்தைகள் (6-59 மாதங்கள்) 56% இரத்த சோகை உடையவர்கள் எனக் கருதப்பட்டனர். கிராமப்புறங்களில் சுமார் 41% மற்றும் நகர்ப்புற 31% குழந்தைகள் வளர்ச்சி குன்றியிருக்கின்றனர். அதாவது அவர்களின் வயதுக்கு ஏற்ப தேவையான உயரத்தை கொண்டிருக்கவில்லை. ஊட்டச்சத்தின் குறைபாட்டினால் மற்றொருக் குறியீடாக குழந்தைகளிடையே வயது தொடர்பான எடையை விட எடை குறைவாக உள்ளனர். இந்தியாவில் 2015-2016 ஆம் ஆண்டில் சுமார் 20% குழந்தைகள் (6-59 மாத வயதுக்குட்பட்டவர்கள்) எடை குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


            ICDS திட்டம்

தமிழ் நாட்டில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தின் நிலை

மனித ஆரோக்கியத்திலும், நலவாழ்விலும் ஊட்டச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. தேசிய அளவில் அதிக பொருளதார வளர்ச்சி இருந்த போதிலும், ஊட்டச்சத்து அளவுகள் போன்ற மனித வளர்ச்சி குறிகாட்டிகளில் மேம்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மெதுவாகவே உள்ளன. ஏராளமான இந்திய குழந்தைகள் வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள். கணிசமான எண்ணிக்கையிலான இந்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் எடை குறைவாகவும், இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளாலும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைகளை நீக்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சுகாதார மற்றும் ஊட்டச்சத்துத் திட்டங்களான ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services), மதிய உணவுத் திட்டம், குழந்தைகள் சுகாதார திட்டங்கள் (Reproductive and Child Health Programmes), மற்றும் தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி (National Rural Health Mission) போன்ற பல திட்டங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. எவ்வாறாயினும், நாட்டின் ஊட்டச்சத்து குறைவான நிகழ்வுகளைத் தணிக்க இந்த முயற்சிகளைத் திறம்பட செயல்படுவது அவசியமாகும்.

ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இளம் பருவப் பெண்கள் ஆகியோரின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருவதில் தமிழகம் ஒரு முன்னோடி பங்கைக் கொண்டுள்ளது. ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான தமிழக அரசின் அடுத்தடுத்த வரவுசெலவுத்திட்ட செலவினங்கள் நாட்டிலேயே மிக அதிகமாகும். ICDS திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் ஆகியவற்றின் செயல்திறன் நாட்டின் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.

ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத தமிழ்நாடு' என்ற தமிழ்நாட்டின் கொள்கை, ஊட்டச்சத்துக் குறைபாட்டை அகற்றுவதற்காக மாநிலத்தின் நீண்டகால பல துறைக் கொள்கைகளை செயல்படுத்துகிறது. தமிழ்நாட்டில் அனைத்து, 434 குழந்தைகள் மேம்பாட்டுத் தொகுதிகளில் (385 கிராமப்புற, 47 நகர்ப்புற மற்றும் 2 பழங்குடியினர்) 54,439 குழந்தை மையங்கள் (49,499 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 4,940 சிறு அங்கன்வாடி மையங்கள்) மூலம் ICDS செயல்படுத்தப்படுகிறது.

அணுகப்படாத பகுதிகளுக்கு நிலையான விரிவாக்கம், ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் பாதுகாப்பு, மேம்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் சேவைகளின் விரிவாக்கம் ஆகியவற்றுடன், ICDS இப்போது உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், தொடக்கப்பள்ளி சேர்க்கையை அதிகரிப்பதற்கும், இடைநிற்றல் விகிதங்களைக் குறைப்பதற்கும் நாட்டின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமாகக் கருதப்படுகிறது. நாட்டின் பிற மாநிலங்கள், தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளின் படி மதிய உணவுத் திட்டங்களை வடிவமைத்துள்ளன.

தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள்

1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் (Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) கீழ், ஏழை கர்பிணிப் பெண்களுக்கு ₹12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது.

2. முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) 2011-12 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைவருக்கும் உடல் நலம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்குவதாகும்

3. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் (Tamil Nadu Health Systems Projects) இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை).

4. ‘பள்ளி சுகாதார திட்டம் (School Health Programme) விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.

5. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் (National Leprosy Eradication Programme) மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது.


பள்ளி சுகாதார திட்டம்

தமிழ்நாட்டில் சில ஊட்டச்சத்து திட்டங்கள்

1. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்.

2. ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.

3. பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (General ICDS Projects and World Bank Assisted Integrated Child Development Services).

4. பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்.

5. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.

6. மதிய உணவுத் திட்டம்.



Tags : Economics பொருளியல்.
10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition : Nutrition and Health Status Economics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து : ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலை - பொருளியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து