Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு - பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி | 12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics

   Posted On :  09.07.2022 07:50 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

அ) இந்துமத மறுமலர்ச்சி ஆ) முஸ்லிம் உணர்வின் எழுச்சி இ) பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை ஈ) காங்கிரஸ் நடவடிக்கைகள் உ) சையது அகமது கானின் பங்கு ஊ) உள்ளாட்சி தேர்தல்களில் வகுப்புவாதம் எ) காங்கிரசின் பலவீன கொள்கை

பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

 

அ) இந்துமத மறுமலர்ச்சி

ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என்று நம்பினர். சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல 1875இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஆரிய சமாஜம் இந்து மதத்தின் உயரியத் தன்மைகளை உறுதியுடன் முன்வைத்தது. இந்து தேசியவாதிகளில் ஒருவராகத் தன்னை அடையாளம் கண்டுகொண்ட அன்னிபெசண்ட் அம்மையார் தனது கருத்துகளைப் பின்வருமாறு குறிப்பிட்டார்:

"பண்டைய மதங்களைப் புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி, உயர்த்துவதே இந்தியர்களின் முதற்பணி ஆகும். இது கடந்த காலப் பெருமையுடன், ஒரு புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், ஒரு தவிர்க்க இயலாத விளைவாகவும், தேச/நாட்டுப்பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும், நாட்டைப் புனரமைப்பதற்கானத் தொடக்கமாகவும் உருவாக்கப்பட வேண்டும்

ஆ) முஸ்லிம் உணர்வின் எழுச்சி

சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல, மறுபுறம் இஸ்லாம் அலிகார் இயக்கத்தின் வழியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பிரிட்டிஷார் அலிகார் கல்லூரியை ஏற்படுத்த சையது அகமதுகானுக்கு ஆதரவளித்ததும் முஸ்லிம் தேசியக் கட்சி தோன்றவும், முஸ்லிம் அரசியல் கருத்தியல் தோன்றவும் உதவியது. வாஹாபிகள் இஸ்லாமை அதனுடைய ஆதித்தூய்மைக்கு அழைத்துச் செல்லவும், அதன் உயிரை உருக்குலைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதிய சில மூடப்பழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்பினர். வாஹாபிகளில் தொடங்கி கிலாபத்காரர்கள் வரையானோர் அடிமட்டச் செயல்பாடுகளில் காட்டிய செயற்முனைப்பு முஸ்லிம்களை அரசியல் மயமாக்குவதில் முக்கியப் பங்காற்றியது.

வேறுபலகாரணங்களாலும் முஸ்லிம் உணர்வு மேலோங்கத் தொடங்கியது. 1870களில் வங்காள அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் உருதுக்குப் பதில் இந்தி மொழியை அறிமுகப்படுத்தியதும், பாரசீக அரேபிய எழுத்து வடிவத்திற்குப் பதில் நாகரி எழுத்து வடிவத்தைக் கொண்டு வந்தது, முஸ்லிம் தொழில்வல்லுநர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இ) பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை

கூட்டு இந்திய அடையாளம் ஒன்று உருவாவதைத் தடுப்பதே பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்ததால், இந்தியர்களின் ஒருங்கிணைப்பு முயற்சிகளை முறியடிக்கத் தொடங்கினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டது. பம்பாய் ஆளுநர் எல்பின்ஸ்டோன், பழைய

ரோமானிய இலட்சியமான 'Divide et Impera' (பிரித்தாளுதல்) என்பது நமதாக வேண்டும் என்று எழுதினார்தினார். வகுப்புவாதக் கலவரங்கள் நாட்டின் ஆளுகைக்குச் சவாலாக இருக்கும் என்று தெரிந்திருந்தபோதிலும் பிரிட்டிஷ் அரசாங்கம், வகுப்புவாதக் கருத்தியல் சார்ந்த அரசியலுக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வழங்கியது.


ஈ) காங்கிரஸ் நடவடிக்கைகள்

ஆரிய சமாஜம் போன்ற இந்து அமைப்புகளில் நிறைய காங்கிரஸ்காரர்கள் ஈடுபட்ட போதிலும், காங்கிரஸ் தலைமை சமயச்சார்பற்றதாகவே இருந்தது. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது கூட்டத்தில் பசுவதையைக் குற்றமென அறிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என சில காங்கிரஸ்காரர்கள் முயற்சி செய்த போதிலும், காங்கிரஸ் தலைமை அத்தீர்மானத்தை ஏற்கவில்லை. காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை அல்லது இனத்தைப் பாதிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும் போது, அந்த வகுப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் எதிர்த்தால், எதிர்க்கும் உறுப்பினர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அத்தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருந்தது.

உ) சையது அகமது கானின் பங்கு

அலிகார் இயக்கத்தின் நிறுவனரான சர் சையது காங்கிரசின் ஆதரவாளராக இருந்தார். பின்னர், அவர் சிந்தனை வேறுவிதமாக மாறத் தொடங்கியது. இந்துக்களால் ஆளப்படும் நாட்டில், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தக்க உதவிகள் கிடைக்காது என்று எண்ணினார். ஆனால், முஸ்லிம் தலைவர்களான பத்ருதீன் தியாப்ஜி, பம்பாயைச் சார்ந்த ரஹமதுல்லா சயானி, சென்னையைச் சேர்ந்த நவாப் சையது முகமது பகதூர், வங்காளத்தைச் சேர்ந்த ஏரசூல் ஆகியோர் காங்கிரசை ஆதரித்தனர். ஆனால், வடஇந்தியாவில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் சையது அகமதுகானின் வழியைப் பின்பற்றி பிரிட்டிஷாரை ஆதரிக்கத் தொடங்கினர். பிரதிநிதித்துவ அமைப்புகளின் அறிமுகம், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் போன்றவை முஸ்லிம்களின் பயத்தை அதிகரிக்கத் தொடங்கியதால் சையது அகமது கானும், அவரைப் பின்பற்றியவர்களும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படத் தொடங்கினர். அரசாங்கத்தோடு இணக்கமாக செயல்படுவதன் மூலம் தனது இனத்திற்கு அரசாங்கத்திடமிருந்து பெரும்பங்கினை பெற்றுத்தர இயலும் என்றும், அப்படியில்லாத பட்சத்தில் தம் இனத்தவர்கள் சிறுபான்மையினர் என்பதால் எண்ணிக்கை அல்லது தகுதி அடிப்படையில் வழங்கப்படும் குறைவான அரசு வெகுமதியே கிடைக்கும் என்று எண்ணினார்.

இந்து-முஸ்லிம் விரிசலைக் குறைத்து அனைத்து வகுப்பினரின் உண்மையான குறைகளையும், தேவைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் எடுத்துச்செல்லும் முயற்சியாகவே 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது. ஆனால், சர் சையது அகமது கான் இலண்டன் பிரிவி கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரான சையது அமீர் அலி போன்ற முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ், இந்துக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்று வாதிட்டனர். காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற 72 பிரதிநிதிகளில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். மேலும், முஸ்லிம் தலைவர்கள் காங்கிரசில் முஸ்லிம்கள் பங்கேற்றால் அது ஆட்சியாளர்களிடையே அவர்கள் இனத்திற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் காங்கிரசை முழுமையாக எதிர்த்தனர்.


ஊ) உள்ளாட்சி தேர்தல்களில் வகுப்புவாதம்

வகுப்புவாத உணர்வுகள் வளர்க்கப்பட்டதனால் ஏற்பட்ட எதிர்பாராத விளைவுகளை, மக்களாட்சி அரசியலில் சந்திக்க நேர்ந்தது. 1880களில் உள்ளாட்சி அமைப்புகள் வகுப்புவாத அரசியல் வளர்வதற்கு உதவின. நகராட்சி உறுப்பினர்கள் அதிக அதிகாரங்களைப் பெற்று தங்கள் அரசியல் நிலையை வலுப்படுத்திக் கொண்டார்கள். முஸ்லிம்கள் தலைமையேற்ற நகராட்சி வாரியங்களை இந்துக்களும், இந்துக்கள் தலைமையேற்ற நகராட்சி வாரியங்களை முஸ்லிம்களும் வலிந்து ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவானது.


பஞ்சாப் இந்து சபையின் முதன்மைத் தகவல் தொடர்பாளராகவும், பின்னர் ஆரிய சமாஜத்தின் தலைவர்களுள் ஒருவருமாக இருந்த லால் சந்த் சில நகராட்சிகள் வகுப்புவாத அடிப்படையில் அமைக்கப்பட்டதை விளக்கியுள்ளார். நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சித் தலைவரது நாற்காலியின் வலது மற்றும் இடது புறங்களில் இரு வரிசைகளாக அமர்ந்திருந்தனர். வலதுபுற வரிசையில் ஆரியவர்கத்தைச் சார்ந்த பழைய ரிஷிகளின் வம்சாவளியினரும், இடதுபுற வரிசையில் இஸ்லாமின் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர். இவ்வாறு அமர்ந்திருந்ததன் மூலம் அவர்கள் நகராட்சியின் உறுப்பினர்களாக மட்டுமின்றி முகமதியர்களாகவும், இந்துக்களாகவும் இருப்பதையும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர்.

எ) காங்கிரசின் பலவீன கொள்கை

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்தில் சுதேசி இயக்கம் (1905-06) தொடங்கப்பட்டபோது, அதை ஆதரித்த முஸ்லிம்கள் காங்கிரஸின் தரகர்கள் என்ற கண்டனத்திற்கு உள்ளாயினர். காங்கிரஸ் இத்தகைய வாதங்களை மறுத்து தக்க எதிர்வினை ஆற்றாமல் மௌனம் காத்ததால், வகுப்புவாத அரசியல் சக்திகள் மேலும் தூண்டப்பட்டன. அதே நேரத்தில், தேசியவாத முஸ்லிம்கள் தங்கள் ஊக்கத்தையும், நம்பிக்கையும் இழந்தனர்.

"இந்து-முஸ்லிம் வகுப்புவாதம், நடுத்தர வகுப்புகளுக்கிடையே நடந்த மோதல்களின் விளைவே ஆகும். மனசாட்சியுள்ள இந்து மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் இத்தகைய வகுப்புவாதத்திலிருந்து முற்றிலும் விலகியே இருந்தனர்." - ஜவஹர்லால் நேரு

இருபதாம் நூற்றாண்டின் முதல் பதிற்றாண்டில் அரசியல் தீவிரவாதம் சமய பழமைவாதத்துடன் கைகோர்த்துக் கொண்டபோது மோசமான நிலைக்கு மாறத்தொடங்கியது. திலகர், அரவிந்த கோஷ் மற்றும் லாலா லஜபதி ராய் ஆகியோர் சமய அடையாளங்கள், திருவிழாக்கள் ஆகிய தளங்களை பயன்படுத்தி காலனித்துவ எதிர்ப்பு உணர்வை ஊட்டினர். கணபதி விழா மூலம் இந்துக்களை திரட்டுவதற்கு திலகர் மேற்கொண்ட முயற்சி மேலும் தீவிரப்படுத்திய மற்றொரு காரணியாகும். முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் கொள்கையை, இந்திய தேசிய காங்கிரஸ் பின்பற்றியதற்கு லால் சந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Tags : Communalism in Nationalist Politics | History தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு.
12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics : Origin and Growth of Communalism in British India Communalism in Nationalist Politics | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் : பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்