Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்ப்பு

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்ப்பு | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism

   Posted On :  27.07.2022 06:08 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்ப்பு

பல்வேறு சமூக - சமயசீர்திருத்த இயக்கங்களில் ஈடுபட்டு மேற்கத்திய நவீன கருத்துகள் மற்றும் பகுத்தறிவுவாதம் ஆகியவை குறித்து இந்தியாவின் நகர்ப்புற உயர்குடி மக்கள் முனைப்பாக இருந்த காலகட்டத்தில் ஊரகப்பகுதிகளில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகமிக வலுவுடைய மற்றும் தீவிரமான போக்கு நிலவியது.

விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்ப்பு

பல்வேறு சமூக - சமயசீர்திருத்த இயக்கங்களில் ஈடுபட்டு மேற்கத்திய நவீன கருத்துகள் மற்றும் பகுத்தறிவுவாதம் ஆகியவை குறித்து இந்தியாவின் நகர்ப்புற உயர்குடி மக்கள் முனைப்பாக இருந்த காலகட்டத்தில் ஊரகப்பகுதிகளில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகமிக வலுவுடைய மற்றும் தீவிரமான போக்கு நிலவியது. பாரம்பரியமான உயர்குடி மக்களும் விவசாயிகளும் பழங்குடியின மக்களுடன் இணைந்து கிளர்ச்சி செய்தனர். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதை அவர்கள் கோராமல் காலனியாதிக்கத்திற்கு முன்னிருந்த நிலையை மீண்டும் நிலைநிறுத்துவதை வலியுறுத்தினார்கள்.

ஆங்கிலேய ஆட்சியில் கிட்டத்தட்ட ஒரு நூறுக்கும் குறையாத எண்ணிக்கையில் விவசாயிகளின் கிளர்ச்சிகள் நடந்தன. அவற்றைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்:

அ) மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள் - இந்த வகையான போராட்டம் பழைய முறைமைகள் மற்றும் பழைய சமூக உறவுகளை நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடர்புடையவை ஆகும்.

ஆ) சமய இயக்கங்கள் - இத்தகைய இயக்கங்களுக்கு தலைமையேற்ற சமயத்தலைவர்கள் சமயச் சிந்தனைகளின் அடிப்படையில் சமூகத்தை சீரமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.

இ) சமூகக் கொள்ளை - இத்தகைய இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய உயர்குடியினராலும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர்.ஆனால் அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் அவர்களைத் தங்களுடைய மேம்பாட்டுக்காக உழைத்த நாயகர்களாகவும், சாதனையாளர்களாகவும் கண்டனர்.

ஈ) மக்களின் கிளர்ச்சி - பொதுவாக இவை தலைவர்கள் இல்லாமலும் திடீரெனவும் எழுந்த புரட்சி இயக்கங்களாகும்.

வருவாய் முறையில் மாற்றங்கள்

இந்தியா முழுவதிலும் செயல்பாட்டில் இருந்த முகலாய வருவாய் அமைப்பை கிழக்கிந்திய கம்பெனி மறுசீரமைத்ததையடுத்து விவசாயிகளின் நிதிச்சுமைகள் பெரிதும் அதிகரித்தன. ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியாவில் தனிச்சொத்துரிமை பற்றிய எந்த விரிவான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நிலத்தைக் கீழ்க்குத்தகைக்கு விடுவது

நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும் கீழ்க்குத்தகைக்கு (subletting) விடுவதும் விவசாய உறவுகளைப் பெரிதும் சிக்கலாக்கியது. ஜமீன்தாரர் தன்னிடம் இருந்த நிலத்தைப் பெரும்பாலும் தன்னைச் சார்ந்திருந்த நிலப்பிரபுக்களுக்கு கீழ்க்குத்தகைக்கு விட்டார். பதிலுக்கு நிலப்பிரபு, விவசாயிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்துக் கொடுப்பார். இதனால் விவசாயிகள் மீதான வரிச்சுமை அதிகரித்தது.


(அ) விவசாயிகளின் கிளர்ச்சி

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெடிக்கத் தொடங்கிய விவசாயிகளின் கிளர்ச்சிகள் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிமுடிவுக்கு வரும்வரை தொடர்ந்தன.

ஃபராசி இயக்கம்

ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் 1818ஆம் ஆண்டு ஃபராசி இயக்கம் தொடங்கப்பட்டது. 1839 இல் ஷரியத்துல்லா மறைந்த பிறகு இந்த கிளர்ச்சிக்கு அவரது மகன் டுடு மியான் தலைமை ஏற்றார். அவர் வரி செலுத்த வேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் நிலத்தையும் அனைத்து வளத்தையும் சரிசமமாக அனுபவிக்கவேண்டும் என்ற எளிய கொள்கையில் இந்த அறிவிப்பு பிரபலமடைந்தது. சமத்துவ இயல்பிலான மதம் குறித்து வலியுறுத்திய டுடு மியான், ‘நிலம் கடவுளுக்குச் சொந்தமானது என்று அறிவித்தார். எனவே வாடகை வசூலிப்பது அல்லது வரி விதிப்பது ஆகியன இறைச்சட்டத்துக்கு எதிரானது என்றார். கிராம அமைப்புகளின் கட்டமைப்பு மூலமாக பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் ஒன்று திரட்டப்பட்டனர். 1862 இல் டுடு மியான் மறைந்த பிறகு 1870களில் நோவா மியான் என்பவரால் இந்த இயக்கம் மீண்டும் உயிர் பெற்றது.

.

பரசத்தில் வஹாபி கிளர்ச்சி

வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டதாகும். வங்காளத்தில் பரசத் பகுதியில் 1827 வாக்கில் தோன்றியது. வஹாபி போதனைகளால் பெரிதும் ஆழமாக ஈர்க்கப்பட்டவராக திகழ்ந்த இசுலாமிய மதபோதகர் டிடு மீர் என்பவர் இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமையேற்றார். ஜமீன்தாரி முறையால் ஒடுக்கப்பட்ட குறிப்பாக இசுலாமிய விவசாயிகள் மத்தியில் அவர் செல்வாக்குமிக்க நபராகத் திகழ்ந்தார்.



(ஆ) பழங்குடியினர் கிளர்ச்சி

காலனி ஆட்சியின் கீழ் இந்திய வரலாற்றில் முதன்முறையாக அரசு வனங்கள் குறித்த நேரடித் தனியுரிமை வேண்டும் என்று கோரியது. வனங்களை வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆங்கிலேய ஆட்சியில் ஊக்கம் கிடைத்ததன் காரணமாகப் பாரம்பரிய பழங்குடியின நடைமுறை தனது கட்டுக்கோப்பை இழந்தது. இதனால் பழங்குடியினப் பகுதிகளில் பழங்குடியினரல்லாதோரான வட்டிக்குப்பணம் கொடுப்போர், வர்த்தகர்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் போன்றோர் ஊடுருவுவதற்கு அது ஊக்கம் தந்தது. இதனால் ஆதிவாசி நிலத்தின் பெரும்பகுதி இழக்கப்பட்டு அவர்கள் தாங்கள் பாரம்பரியமாகக் குடியிருந்து வந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வாழ நேர்ந்தது.

எனவே அமைதியான பழங்குடியினர் வாழ்க்கையில் மாற்றங்களை அறிமுகம் செய்தோர் அல்லது பழங்குடியின மக்களின் அப்பாவித்தனத்தைத் தேவையின்றி தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியோருக்கு எதிரானதொரு பதில் நடவடிக்கையே பழங்குடியினக் கிளர்ச்சியாகும்.

(i) கோல் கிளர்ச்சி

ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்கம் ஆகிய இடங்களில் 1831-32 ஆம் ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பழங்குடியின கிளர்ச்சி கோல் கிளர்ச்சியாகும். இது பிந்த்ராய் மற்றும் சிங்ராய் தலைமையில் நடந்தது. சோட்டா நாக்பூர் பகுதியின் அரசர் வருவாய் வசூலிக்கும் பணியை வட்டிக்குப் பணம் கொடுப்போரிடம் குத்தகைக்கு விட்டிருந்தார். அதிக வட்டிக்கு கடன் கொடுத்தல் மற்றும் பழங்குடியினரைக் கட்டாயப்படுத்தி அவர்களின் பகுதிகளிலிருந்து வெளியேற்றுதல் போன்றவை கோல் இனத்தவரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. வெளியாட்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்துதல், கொள்ளையடித்தல், கலவரம் செய்தல் ஆகிய வழிகளில் கோல்களின் தொடக்ககாலப் போராட்டம் மற்றும் எதிர்ப்புகள் அமைந்தன. அதனை அடுத்து வட்டிக்குப் பணம் கொடுப்போர் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேளங்களை முழங்கியும் அம்புகளை எய்தும் வெளியாட்களை வெளியேறச் செய்யும் எச்சரிக்கைகளை செய்தும் பல வகைகளில் பழங்குடியினத் தலைவர்கள் தங்கள் கிளர்ச்சி பற்றிய செய்தியைப் பரப்பினர். ஆங்கிலேய அரசு பெரிய அளவிலான வன்முறை மூலம் இந்தக் கிளர்ச்சியை அடக்கியது.

(ii) சாந்தலர்களின் கிளர்ச்சி

இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வந்த சாந்தலர்கள் நிரந்தர குடியிருப்புகளின் கீழ் ஜமீன்களை உருவாக்குவதற்காக தங்கள் பூர்வீக இடத்தை விட்டு இடம்பெயரவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதால் ராஜ்மஹால் மலையைச் சுற்றிலும் இருந்த வனப்பகுதியைவிட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். ரயில்வே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவலர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டனர். வெளியாட்களால் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட சாந்தலர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வட்டிக்குப்பணம் கொடுப்போரைச் சார்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். விரைவில் கடன் மற்றும் பணம்பறித்தல் ஆகிய தீய வலையில் அவர்கள் சிக்கத்தொடங்கினர். மேலும், ஊழல் கறைபடிந்த ஆங்கிலேய நிர்வாகத்தின் கீழ் தங்களின் நியாயமான குறைகளுக்கு நீதி கிடைக்க முடியாத சூழலில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சாந்தலர்கள் உணர்ந்தனர்.

வெளிப்பாடு

1854ஆம் ஆண்டு வாக்கில் பல இடங்களில் சமூகக் கொள்ளை நடவடிக்கைகள் பீர் சிங் என்பவரின் தலைமையில் நடந்தன. மகாஜன்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராகக் குறிவைத்து இவை நடந்தன.

 

1855 இல் சித்து மற்றும் கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்த வேண்டி தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தனர்.

1855ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிளர்ச்சியானது மகாஜன்கள், ஜமீன்தாரர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையானகிளர்ச்சியாக உருவெடுத்தது. வில் மற்றும் விஷம் தடவிய அம்புகளை ஏந்தியவாறும், கோடரிகள், கத்திகள் ஆகியவற்றுடனும் ராஜ்மகால் மற்றும் பாகல்பூர் நோக்கி கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டப்போவதாக முழக்கமிட்டபடி பேரணியாகச் சென்றனர். இதனையடுத்து கிராமங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த ஆங்கிலேயர் சொத்துக்களைச் சூறையாடினார்கள். இறுதியாக கிளர்ச்சி முழுமையாக ஒடுக்கப்பட்டது. 1855இல் சாந்தலர்கள் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனி மண்டலத்தை உருவாக்கும் வகையில் இந்தச் சட்டம் நிறைவேறியது.


(இ) முண்டா கிளர்ச்சி

ராஞ்சியில் இக்காலகட்டத்தில் நடைபெற்ற உலுகுலன் கிளர்ச்சி (பெரிய கலகம்) பழங்குடியினக் கிளர்ச்சிகளில் மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. கூட்டாக நிலத்தை வைத்துக்கொண்டு குண்டக்கட்டி (கூட்டுச்சொத்து) என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டா மக்கள் பெயர்பெற்றவர்கள். நிலத்துக்கான தனிச்சொத்துரிமையின் அறிமுகமும் வர்த்தகர்கள் மற்றும் வட்டிக்குப்பணம் கொடுப்போரின் ஊடுருவல்ஆ கியவற்றின் காரணமாக இந்த நடைமுறை முற்றிலும் சிதைந்தது. தோட்டங்களில் வேலை செய்ய முண்டா இனமக்கள் கொத்தடிமைகளாக வலுக்கட்டாயமாக பணியில் அமர்த்தப்பட்டனர். 1890களில் பழங்குடியின மக்களை அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து இடம்பெயரச் செய்வது மற்றும் அவர்களைக் கட்டாய உழைப்பிற்கு உட்படுத்துவது ஆகியவற்றை பழங்குடியினத் தலைவர்கள் எதிர்த்தனர்.

பிர்சா முண்டா தம்மை கடவுளின் தூதர் என்று அறிவித்த உடன் இந்த இயக்கத்துக்கு ஊக்கம் கிடைத்தது. தமக்கு இறைத் தொடர்பு இருப்பதாகக் கூறிய பிர்சா குறி சொல்வதின் மூலமாக முண்டா இன மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்போவதாகவும் மக்களின் அரசை நிறுவப்போவதாகவும் பிர்சா உறுதியளித்தார். பிர்சா முண்டாவின் பிரபலத்தைப் பயன்படுத்தி மேலும் அதிக எண்ணிக்கையில் பிர்சா இன மக்களை இந்த நோக்கத்துக்காக ஒன்றிணைக்க முண்டா தலைவர்கள் முயன்றனர். இரவுக் கூட்டங்கள் பல நடத்தப்பட்டு கிளர்ச்சி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டது. 1889ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் அவர்கள் வன்முறையை கையில் எடுத்தனர். கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிறித்தவ தூதுக்குழுக்கள் மற்றும் கிறித்தவர்களாக மதம் மாறிய முண்டாக்கள் மீது அம்பு எறிந்து தாக்குதல்கள் நடந்தன. அதன் பின் காவல் நிலையங்களும் தாக்கப்பட்டன, அரசு அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களுக்கு இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இறுதியாக இந்த கிளர்ச்சி முடக்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட பிர்சா முண்டா பின்னர் சிறையில் உயிர்நீத்தார். பழங்குடியினரின் தலைவராக அறியப்பட்ட பிர்சா முண்டா இன்றளவும் பல நாட்டுப்புறப் பாடல்களில் போற்றப்படுகிறார். இந்த முண்டா கிளர்ச்சியை அடுத்து ஆங்கிலேய அரசு பழங்குடியின நிலம் பற்றிய கொள்கையை வகுக்க முனைந்தது. 1908இல் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினரல்லாதோர் நுழைவது தடுக்கப்பட்டது.


Tags : Anti-Colonial Movements and the Birth of Nationalism | India காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்.
10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism : Peasant and Tribal Resistance Anti-Colonial Movements and the Birth of Nationalism | India in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் : விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்ப்பு - காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்