Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் கிளர்ச்சிகள்

ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் - விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் கிளர்ச்சிகள் | 11th History : Chapter 18 : Early Resistance to British Rule

   Posted On :  15.03.2022 09:52 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்

விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் கிளர்ச்சிகள்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கம்பெனி அரசாங்கத்தின் நில உரிமையும் வருவாய் ஈட்டும் முறையும் இந்தியக் கிராமியச் சமூகத்தை மிகக் கடுமையாகப் பாதித்தன.

விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் கிளர்ச்சிகள்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கம்பெனி அரசாங்கத்தின் நில உரிமையும் வருவாய் ஈட்டும் முறையும் இந்தியக் கிராமியச் சமூகத்தை மிகக் கடுமையாகப் பாதித்தன. விவசாயிகளை அதற்கு முன்னில்லாத அளவுக்கு வருத்தியது. வருவாய் ஈட்டும் வேளாண்முறையின் தொடக்க காலத்தில் விவசாயிகள் அவர்களுக்கு அதிகளவிலான வருவாய் இலக்கை நிர்ணயித்து, அநியாயமாக அதை வசூலித்த ஒப்பந்ததாரர்களாலும் கம்பெனி அதிகாரிகளாலும் நசுக்கப்பட்டனர். இதற்குத் தீர்வு காணும்படி விவசாயிகள் தொடக்கத்தில் கம்பெனி அரசாங்கத்துக்குப் புகார் அனுப்பினார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் போன போது, அவர்கள் அணி திரண்டு, நேரடி நடவடிக்கையில் இறங்கினர். விவசாயிகள் உள்ளூர் கச்சேரி (வருவாய் வசூலிக்கும் அலுவலகம்) களைத் தாக்கினார்கள்; தானியச் சேகரிப்புக்கிடங்குகளைக் கொள்ளையடித்தார்கள்; வரியைச் செலுத்த மறுத்தார்கள்.

1840களிலும் 1850களிலும் செயல்பட்ட விவசாயிகள் இயக்கம் மலபார் கிளர்ச்சியாக வெளிப்பட்டது. இப்பகுதியில் குடியேறி, மலபார் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களின் சந்ததியினர் (மாப்பிள்ளைகள்) ஆவர். படிப்படியாக மாப்பிள்ளைமார்கள் விவசாயத்தைச் சார்ந்தவர்களாகி, நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்வோராகவும் நிலமற்ற உழைப்பாளர்களாகவும் சில்லறை வணிகர்களாகவும் மீனவர்களாகவும் மாறினர். 1792இல் ஆங்கிலேயர் மலபாரைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தபோது, அவர்கள் நில உடைமை விவகாரங்களைச் சீரமைக்க முடிவெடுத்தார்கள். நிலத்துக்கான தனிநபர் உரிமையாளர் முறையை உருவாக்குவது அவர்கள் கொண்டுவந்த மாற்றமாகும். முன்பிருந்த மரபுமுறை, நிலத்திலிருந்து கிடைக்கும் மொத்த விளைச்சலை ஜன்மி (ஜன்மம் என்ற உரிமை பெற்றவர்), கனம்தார் (கனம் என்ற உரிமை பெற்றவர்), விவசாயி ஆகியோர் சரிசமமாகப் பகிர்வதற்கு வாய்ப்பளித்தது. ஆங்கிலேயர் கொண்டுவந்த புதிய முறை ஜன்மிகளை நிலத்தின் முழு உரிமையாளர்களாக்கி, குத்தகை விவசாயிகளை வெளியேற்றும் அதிகாரத்தையும் கொடுத்தது. இந்த நடைமுறை அதற்கு முன்பு இல்லாததாகும். இது விவசாயிகளை மிகவும் பாதித்தது. இவற்றுடன், மிகையாக மதிப்பிடுதல், சட்டத்துக்குப் புறம்பான வரிகளைச் சுமத்துவது, நீதிமன்றமும் காவல்துறையும் நில உரிமையாளருக்கு மட்டுமே ஆதரவாக நடந்துகொள்வது ஆகியவை விவசாயிகளை வறுமையின் உச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளியது.

தாங்கள் நசுக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாத விவசாயிகள் எதிர்வினை புரிந்த நிகழ்வுகள் மலபாரில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுதும் நடந்தன. அவற்றில் 1849 ஆகஸ்ட் மாதத்தில் மஞ்சேரியிலும், 1851 ஆகஸ்ட் மாதத்தில் குளத்தூரிலும் (இந்த இரு இடங்களும் தெற்கு மலபாரில் உள்ளவை) 1852 ஜனவரி மாதத்தில் வடக்கில் உள்ள மட்டனூரிலும் நிகழ்ந்த கிளர்ச்சிகள் மிகவும் தீவிரமானவையாகும். ஆங்கிலேய ஆயுதப்படைகள் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டன. இங்கெல்லாம் அமைதியை ஏற்படுத்த ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் இருபது ஆண்டுகளுக்கு மேல் நீடித்தன. ஆனால் மாப்பிள்ளைகள் 1870இல் மீண்டும் எழுச்சி பெற்றனர். மீண்டும் கிளர்ச்சிகள் நடந்தன.

1857க்கு முந்தைய இந்தியாவில் நடை பெற்றவற்றில் சில கிளர்ச்சிகள் பழங்குடியினரால் நடத்தப்பட்டன. உள்ளூர் வளங்கள் மீதான அவர்களின் தன்னாட்சியும் கட்டுப்பாடும் ஆங்கிலேய ஆட்சியாலும் பழங்குடி அல்லாதவரின் வருகையாலும் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும். இப்பழங்குடிகள் இந்தியாவின் பெரும்பகுதிக்குப் பரவி, 19ஆம் நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான தீவிர மோதல்களையும் கிளர்ச்சிகளையும் ஏற்படுத்தினார்கள்.

கோல்களின் கிளர்ச்சி (1831-32)

கோல் (Kol) என்ற பழங்குடி இனத்தினர் பீகாரிலும் ஒரிசாவிலும் சோட்டா நாக்பூர், சிங்பும் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தனர். சோட்டா நாக்பூர் ராஜா பல கிராமங்களைப் பழங்குடி அல்லாதோருக்குக் குத்தகைக்கு விட்டதே கோல்களின் கிளர்ச்சிக்கு உடனடிக்காரணமாகும். சோன்பூர், தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் திக்காடர்களுக்கு (வரி வசூலிப்போர்) எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர். வெளியாருடைய சொத்துக்களைத் தாக்குவதை இவர்களின் கிளர்ச்சி உள்ளடக்கியிருந்தது. கோல்கள் உயிர்ச்சேதம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. கொள்ளையடிப்பதும் சொத்துக்களுக்குத் தீவைப்பதும் அவர்களது கிளர்ச்சியில் முக்கிய வழிமுறைகளாக இருந்தன. 1831 டிசம்பர் 20ஆம் நாளில் சோட்டா நாக்பூரில் உள்ள சோனிப்பூர் பர்கானா எழுநூறு கிளர்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. 1832 ஜனவரி 26க்குள் கோல்கள் சோட்டா நாக்பூர் முழுவதையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். இவர்களின் கிளர்ச்சி ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போருடன் முடிவுக்கு வந்தது. மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கோல் கிளர்ச்சியின் தலைவரான புத்த பகத் கொல்லப்பட்டார். துண்டிக்கப்பட்ட அவரது தலையை ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்ததற்காக அதிகாரிகள், இராணுவ வீரர்கள் ஆகியோருக்கு ஓராயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டது. கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்த பிந்த்ராய் மன்கி 1832 மார்ச் 19ஆம் நாள் சரணடைந்ததும், கோல்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவுக்கு வந்தது.

சந்தால் கிளர்ச்சி (1855-56)

பழங்குடிகளான சந்தால்கள் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு காட்டுப்பகுதிகளில் அங்கங்கே பரவியிருந்தபடி வாழ்ந்தார்கள். மஞ்சி என்றும் அவர்கள் அறியப்பட்டார்கள். தங்களின் தாய் மண்ணிலிருந்து துரத்தப்பட்ட சந்தால்கள் ராஜ்மகல் குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதியைத் திருத்தி, அதை டாமின்--கோ (சந்தால்களின் நிலம்) என்று அழைத்தார்கள். பழங்குடி நிலங்கள் சந்தால் அல்லாத ஜமீன்தார்களுக்கும் வட்டிக்கடைக்காரர்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டதால், சந்தால்கள் படிப்படியாகக் கையறு நிலையில் வாழ வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். இத்துடன், உள்ளூர் காவல்துறையினராலும் அப்பகுதிகளில் தொடர்வண்டிப்பாதை அமைப்பதில் ஈடுபட்ட ஐரோப்பிய அதிகாரிகளாலும் அடக்குமுறைக்குள்ளானார்கள். டிக்குகளின் (வெளியிலிருந்து வந்தோர்) இத்தகைய ஊடுருவல் சந்தால் சமூகத்தை நிலை தடுமாறச் செய்தது. இது அவர்கள் இழந்த பகுதியை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வைத்தது.


1855 ஜூலையில் சந்தால்கள் ஜமீன்தார்களுக்கும் அரசாங்கத்துக்கும் விடுத்த இறுதி எச்சரிக்கை செவிமடுக்காமல் போனவுடன், ஆயிரக்கணக்கிலான சந்தால்கள் வில்லும் அம்பும் ஏந்திக்கொண்டு வெளிப்படையான கிளர்ச்சியைத் துவக்கினார்கள். தமது கிளர்ச்சி தம்மை ஒடுக்குபவர்களான ஜமீன்தார்கள், வட்டிக்கடைக்கரார்கள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரின் புனிதமற்ற கூட்டுக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். மகேஷ்பூர் போரில் மஞ்சிகளில் பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற உடையை அணிந்திருந்தார்கள். பின்னாட்களில் இது அதிகாரத்துக்கு உரிமை கோரும் அடையாளத்துக்கான ஆடை ஆனது. கிளர்ச்சியின் முதல் வாரத்தில் பத்து பேர் அடங்கிய ஒரு குழு மோங்கபர்ரா என்னும் கிராமத்தைத் தாக்கித் தீக்கிரையாக்கியது. கிளர்ச்சியாளர்களில் பெண்களும் இருந்தார்கள்.

தொடக்கத்தில் சித்தோ சந்தால்களின் தலைவராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் கானுகிளர்ச்சியை நடத்தினார். கிளர்ச்சியின் பிற்பகுதியில் விவசாயிகளும் சேர்ந்துகொண்டார்கள். ஆயிரக்கணக்கான விவசாயிகள் சார்லஸ் மசேக் அவுரித் தொழிற்சாலையைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள். இதன் விளைவாக, கிளர்ச்சியை ஒடுக்க ஆங்கிலேயர் தரப்பிலிருந்து மிருகத்தனமான நடவடிக்கைகள் தொடங்கின. இராணுவம் குவிக்கப்பட்டு, சந்தால் கிராமங்கள் பழிக்குப் பழியாக ஒன்றன் பின் ஒன்றாகத் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கணக்கீட்டின்படி, கிளர்ச்சி இறுதியாக ஒடுக்கப்படும் முன்பு, 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையான கிளர்ச்சியாளர்களில் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டார்கள் எனத் தெரிகிறது.

முண்டா கிளர்ச்சி

பிர்சா முண்டா வழிநடத்திய முண்டாக்களின் கிளர்ச்சி (உல்குலன்) 1899-1900 காலகட்டத்தில் நடைபெற்றது. முண்டாக்கள் பீகார் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர். ஆங்கிலேயரின் ஆட்சியில் அவர்களின் பொதுநில உரிமை முறை அழிக்கப்பட்டது. முண்டாக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஜாகீர்தார்களும் திக்காடர்களும் (பெரும் விவசாயி) வட்டிக்கடைக்காரர்களும் பறித்துக்கொண்டனர். பிர்சா முண்டா குத்தகைக்குப் பயிரிடும் விவசாயிகளின் குடும்பத்தில் 1874இல் பிறந்தார். ஆங்கிலேயரை விரட்டிவிட்டு, முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனிதத் தூதர் என அவர் தன்னை அழைத்துக்கொண்டார். பழங்குடிகளின் நிலங்களைப் பழங்குடி அல்லாதோர் ஆக்கிரமிப்பதை இவரது தலைமையில் முண்டாக்கள் எதிர்த்தார்கள். முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என பிர்சா முண்டா வலியுறுத்தினார்.

பிர்சா முண்டா சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார். சாயில் ரகப் என்னுமிடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள். சாயில் ரகப் படுகொலை பிர்சா ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன், அவரைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகவும் அறிவித்தார்கள். இத்தனைக்குப் பிறகும் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்வதைக் காண முடிகிறது. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1900ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாளில் தியாகி ஆனார். அவருடைய பெயர் தொடர்ந்து அப்பகுதியின் மலைவாழ் மக்களை ஈர்ப்பதாக உள்ளது.


Tags : Early Resistance to British Rule ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்.
11th History : Chapter 18 : Early Resistance to British Rule : Peasant and Tribal Revolts Early Resistance to British Rule in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் : விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் கிளர்ச்சிகள் - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 18 : ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்