Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | நிலைத் திசுக்கள்

வகைகள், அமைப்புகள் - நிலைத் திசுக்கள் | 11th Botany : Chapter 9 : Tissue and Tissue System

   Posted On :  06.07.2022 09:30 am

11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு

நிலைத் திசுக்கள்

1. எளிய நிலைத் திசுக்கள் (Simple permanent tissues) 2. கூட்டு நிலைத்திசுக்கள் (Complex permanent tissues)

நிலைத் திசுக்கள் (Permanent tissues)


நுனி ஆக்குத் திசுவிலிருந்து நிலைத் திசுக்கள் தோன்றுகின்றன. இவை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ செல்பகுப்பு பண்பினை இழந்துவிடுகின்றன. இது இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.

1. எளிய நிலைத் திசுக்கள் (Simple permanent tissues)

2. கூட்டு நிலைத்திசுக்கள் (Complex permanent tissues)

 

எளிய நிலைத் திசுக்கள்:


ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு எளியத்திசு எனப்படும். இச்செல்கள் அமைப்பு மற்றும் செயலால் ஒன்றுபட்டவை. இவை மூன்று வகைப்படும். அவை,

1. பாரங்கைமா ( Parenchyma)

2. கோலங்கைமா (Collenchyma)

3. ஸ்கிலிரங்கைமா (Sclerenchyma)

 

1. பாரங்கைமா (Parenchyma Gk: Para-beside; enehein - to pour)


பாரங்கைமா தாவரத்தின் அனைத்துப் பாகங்களிலும் காணப்படுகின்றது. இது தாவரத்தின் அடிப்படை திசுவினை உண்டாக்குகிறது. பாரங்கைமா செல்கள் உயிருள்ளவை, மெல்லிய செல் சுவர் உடையவை. இதன் செல் சுவர் செல்லுலோஸினால் ஆனது. பாரங்கைமா செல்கள், முட்டை, பலகோணம், உருளை, ஒழுங்கற்ற, நீண்ட அல்லது கை வடிவமுடையது. பாரங்கைமா செல்களுக்கிடையே தெளிவான செல்லிடை வெளிப்பகுதிகாணப்படுகிறது. பாரங்கைமா செல்கள் நீர், காற்று, கழிவுப்பொருட்கள் போன்ற பொருட்களைச் சேமிக்கின்றன. செல்கள் பொதுவாக நிறமற்றவை. உப்பிய பாரங்கைமா செல்கள் தாவர உடலத்தை விறைப்பாக வைக்க உதவுகிறது. பகுதி நீர் கடத்தும் பணி, பராமரித்தல் பணி பாரங்கைமா செல்கள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. 


சில பாரங்கைமா செல்கள் பிசின்கள், டேனின்கள், கால்சியம் கார்பானேட் படிகங்கள், கால்சியம் ஆக்ஸலேட் போன்றவற்றைச் சேமித்து வைக்கின்றன. இவை இடியோபிளாஸ்ட்கள் எனப்படுகின்றன. பாரங்கைமா செல்கள் பல வகைப்படும். அவைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



 

2. கோலங்கைமா (Collenchyma. Gk. Colla-glue; enchyma - an infusion)


கோலங்கைமா எளிய, உயிருள்ள உறுதியளிக்கும் திசு . கோலங்கைமா பொதுவாக இரு விதையிலை தாவரத் தண்டின் புறத்தோலடித்தோல் பகுதியில் காணப்படுகிறது. இத்திசு வேர்களில் காணப்படுவதில்லை. ஆனால் இலைக்காம்புகள், பூக் காம்புகளில் காணப்படுகிறது. இச்செல்கள் நீண்ட அமைப்புடைவை. குறுக்குவெட்டுத் தோற்றத்தில், பலகோண வடிவமுடையன. இதன் செல் சுவர் சீரற்ற தடிப்புக்களைக் கொண்டுள்ளது. இச்செல்கள் செல்லுலோஸுடன் அதிகளவில் ஹெமி செல்லுலோசும் பெக்டினும் கொண்டுள்ளன. இது வளரும் தாவரபகுதிகளுக்கு தாங்கு திறனையும், மீள் தன்மையையும் அளிக்கிறது. கோலங்கைமா குறுகிய செல்களால் ஆனது. இது குறைந்த எண்ணிக்கையில் பசுங்கணிகங்களை கொண்டோ (அ) இல்லாமலோ காணப்படும். கோலங்கைமாவில் டேனின் இருக்கலாம். செல் சுவரிலுள்ள பெக்டின் படிந்திருப்பதின் அடிப்படையில் கோலங்கைமா மூன்று வகைப்படும். அவை: 

அ. கோண கோலங்கைமா (Angular Collenchyma):

இது பொதுவான கோலங்கைமா வகையாகும். இங்கு செல்கள் ஒழுங்கற்று அமைந்திருக்கும். இதில் செல்கள் இணையும் கோணத்தில் அல்லது விளிம்பில் தடிப்புகள் காணப்படும். எடுத்துக்காட்டு: டாட்டூரா, நிக்கோட்டியானா வின் புறத்தோலடித்தோல்

ஆ. இடைவெளி கோலங்கைமா (Lacunar Collenchyma):

இவ்வகை கோலங்கைமாவில் செல்கள் ஒழுங்கற்று அமைந்திருக்கும். செல்லிடை வெளிப்பகுதியை சூழ்ந்துள்ள சுவர்பகுதி மட்டும் தடிப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: ஐப்போமியாவின் புறத்தோலடித்தோல்.

இ. அடுக்கு கோலங்கைமா (Lamellar Collenchyma):

இவ்வகை கோலங்கைமா செல்கள் நெருக்கமாக அடுக்குகளாக அல்லது வரிசையாக அமைந்துள்ளன. இச்செல்களில் பரிதி இணைப்போக்கு சுவர்கள் (Tangential walls) தடிப்புற்று அடுத்தடுத்து அடுக்குகளாக காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஹீலியாந்தஸ் புறத்தோலடித்தோல்




3. ஸ்கிலிரங்கைமா (Sclerenchyma. Gk. Sclerous - hard: enchyma-an infusion)


ஸ்கிலிரங்கைமா செல்கள் புரோட்டோ பிளாசமற்ற இறந்த செல்களாகும். இச்செல்கள் நீண்டோ அல்லது குட்டையாகவோ லிக்ளினால் ஆன இரண்டாம் நிலைசுவர்களைக்கொண்டு காணப்படும். ஸ்கிலிரங்கைமா செல்கள் இரண்டு வகைப்படும்.

1. ஸ்கிலிரைடுகள்

2. நார்கள் 


ஸ்கிலிரைடுகள் (கல் செல்கள்) (Sclereids)

ஸ்கிலிரைடுகள் இறந்த செல்களாகும். பொதுவாக இச்செல்கள் ஒத்த விட்டம் கொண்டவை சில நீண்ட வடிவமாக காணப்படும். செல்சுவர் லிக்னின் கொண்டுள்ளதால் மிகவும் தடிப்பாகக் காணப்படுகிறது. இதன் செல் உள்வெளி மிகவும் குறுகலானது. எளிய மற்றும் கிளைத்த குழிகளைக் கொண்டது. ஸ்கிலிரைடுகள் தாங்கு திறனை அளிக்கிறது. இவை விதை உறை, எண்டோஸ்பெர்ம் போன்றவைகளுக்குத் கடினத்தன்மையைக் கொடுக்கின்றன. கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.

வளையக் கோலங்கைமா (Annular collenchyma ):

டுசேன் (1955) மற்றொரு வகையான வளையக் கோலன்கைமாவை அரளி (Nerium) தாவர இலைக்காம்பில் கண்டறிந்தார். இதன் செல் உள்வெளி ஏறக்குறைய வளைய வடிவமானது. 

 

ஸ்கிலிரைடுகளின் வகைகள்

அ. பிரேக்கி ஸ்கிலிரைடுகள் அல்லது கல் செல்கள் (Brachyalerids or Stone cells)

இவை ஒத்த விட்டம் கொண்ட ஸ்கிலிரைடுகள். கடினமான செல் சுவர்களைக் கொண்டுள்ளன. இச்செல்கள் தாவரங்களின் பட்டைகள், பித், புறணி, கடின கருவூண் திசு மற்றும் சில கனிகளின் தசைப் பகுதிகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: பேரிக்காயின் தளத்திசு (pulp of Pyrus)

ஆ. மேக்ரோஸ்கிலிரைடுகள் (Macrosclereids):

இவை சிறு கழிகள் போன்ற நீண்ட செல்களாகும். இவை லெகூம் தாவர விதை வெளிஉறைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: குரோட்டலேரியா, பைசம்.

இ. ஆஸ்டியோ ஸ்கிலிரைடுகள் (Osteosclereids):

இவை விரிவடைந்த நுனிப் பாகங்களுடன் கூடிய நீண்ட செல்கள். இவை இலைகள், விதை உறைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: பைசம் மற்றும் ஹேகியா (Hakea) விதை உறைகள்

ஈ. ஆஸ்டிரோ ஸ்கிலிரைடுகள் (Astrosclereids):

இவை கிளைத்த பிரிவுகளைக் கொண்ட நட்சத்திர வடிவ ஸ்கிலிரைடுகள் ஆகும். இவை இலைகள், இலைக்காம்பு ஆகியவற்றில் காணப்படுகின்றன.எடுத்துக்காட்டு: தேயிலை, நிம்பையா, ட்ரைகோடென்ட்ரான்

உ. டிரைக்கோ ஸ்கிலிரைடுகள் (Trichosclereids):

இவை மெல்லிய சுவர்கொண்ட மயிரிழைகள் போன்ற ஸ்கிலிரைடுகள் ஆகும். எண்ணற்ற கோண நுனிப்பிளவுற்ற படிகங்கள் செல் சுவரில் படிந்திருக்கும். இவை நீர் தாவரங்களின் தண்டு மற்றும் இலைகளில் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு: நிம்பையா இலைகள், மான்ஸ்டீரா காற்று வேர்கள்.

 

நூல் போன்ற ஸ்கிலிரைடுகள் (Filiform sclereids): 

இவை ஒலியா யுரோப்பியா இலைத்தாளில் காணப்படும் ஸ்கிலிரைடுகள். இவை 1மி.மீ நீளமுள்ள நீண்ட நார்களைப் போன்றவை.




ஸ்கிலிரங்கைமா காணப்படும் சில கனிகள்



நார்கள் (Fibres)

நீண்ட, கூர்முனைகளைக் கொண்ட ஸ்கிலிரங்கைமா செல்கள் நார்கள் எனப்படும். நார்கள் குறுகிய செல் அறைகள், லிக்னின் செல் சுவர் ஆகியவை கொண்ட உயிரற்ற செல்களாகும். இவை எளிய குழிகளைக் கொண்டது. இவை தாங்கு திறனை அளிப்பதால் வலிமையான காற்றின் தாக்கத்திலிருந்து தாங்குகிறது. எனவே நார்கள் தாங்கு திசுக்கள் எனப்படும். நார்களானது குடிசை மற்றும் நெசவுத்தொழிலில் வணிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



உங்களுக்குத் தெரியுமா?

தாவரசெல்களில் மிக நீண்டது நார்கள். மிக நீண்ட நார்கள் போமிரியா ரேமி நார்கள் ஆகும். இது 55 செ.மீ நீளமுடையது


நார்கள் ஐந்து வகைப்படும். அவை, 

1. சைலம் நார்கள் அல்லது கட்டை நார்கள் :

இரண்டாம் நிலை சைலத்துடன் இணைந்து காணப்படுகின்ற நார்கள் ஆகும். இவை சைலம் இணைந்த நார்கள் எனவும் அழைக்கப்படுன்றன. இவ்வகை நார்கள் வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உருவாகின்றன. இவை இரண்டு வகைப்படும்.

அ) லிப்ரிபார்ம் நார்கள் (Libriform fibres)

ஆ) நார் டிரக்கீடுகள் (Fibre tracheids) 

2. பாஸ்ட் நார்கள் அல்லது சைலத்திற்கு வெளியே அமைந்த நார்கள் (Bast fibres or extra xylary fibres)

இவ்வகை நார்கள் ஃபுளோயத்தில் காணப்படுகின்றன. இயற்கையான பாஸ்ட் நார்கள் வலிமையானவை. செல்லுலோஸினால் ஆனவை. சணல், புளிச்சகீரை , ஆளிவிதைத்தாவரம், சணப்பை போன்ற தாவரங்களில் ஃபுளோயம் அல்லது வெளிப்புறப் பட்டையிலிருந்து கிடைக்கிறது. இந்த ஃபுளோயம் நார்கள் தான் பெரிசைகிள் நார்கள் என்று முதன் முதலில் தவறாக அழைக்கப்பட்டவையாகும்.

3. மேற்புறப்பரப்பு நார்கள் (Surface fibres):

இவ்வகை நார்கள் தாவரப் பகுதியின் மேற்புறப் பரப்பிலிருந்து தோன்றுகிறது. பருத்தி மற்றும் இலவம் பஞ்சு எடுத்துக்காட்டுகளாகும். இவ்வகை நார்கள் மேற்புற விதை உறையிலிருந்து கிடைக்கின்றன.

4. கனி நடு உறை நார்கள் (Mesocarp fibres):

இவ்வகை நார்கள் ட்ருப் கனிகளான தேங்காய் கனியின் நடு உறையிலிருந்து கிடைக்கின்றன.

5. இலை நார்கள் (Leaf fibres) :

இவ்வகை நார்கள் மீயூஸா, அகேவ் மற்றும் சென்சுவேரியா தாவர இலைகளிலிருந்து கிடைக்கின்றன.

 

அன்றாட வாழ்வில் நார்கள்

பொருளாதார பயன்பாட்டின்படி நார்கள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றது.

1. நூற்பு நார்கள் (textile fibres): துணிகளை நெய்ய, வலைகள் பின்ன, கயிறு தயாரிக்க இவ்வகை நார்கள் பயன்படுகின்றன.

மேற்புறபரப்பு நார்கள் : எடுத்துக்காட்டு - பருத்தி

மிருதுவான நார்கள் : எடுத்துக்காட்டு - சணல், ரேமி

கடினமான நார்கள் : எடுத்துக்காட்டு - தேங்காய், அன்னாசி, அபாக்கா மற்றும் பல

2. தூரிகை நார்கள் (brush fibres): தூரிகை மற்றும் துடைப்பம் உற்பத்தி செய்யப்பயன்படும் நார்கள் ஆகும்.

3. கடுமையான நூற்பு நார்கள் (Rough weaving fibres):

கூடைகள், சேர்கள், பாய்கள் போன்றவை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன.

4. எழுது தாள் உற்பத்தி நார்கள் (Paper making fibres): இவை சைல கட்டை நார்களில் இருந்து எடுக்கப்பட்டு எழுதுதாள் உற்பத்தியில் பயன்படுகிறது.

5. நிரப்ப உதவும் நார்கள் (Filling fibres): இவ்வகை நார்கள் குஷன், மெத்தை தலையணைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டு: பாம்பாக்ஸ், இலவம் பஞ்சு.

 

கூட்டுத்திசுக்கள் (Complex tissues):

ஒரு குறிப்பிட்ட பணியினை மேற்கொள்ளப் பல்வேறு வகையான செல்களின் ஒரு கூட்டமைப்பே கூட்டுத்திசு எனப்படும். இது இரு வகைப்படும். அவை சைலம் மற்றும் ஃபுளோயம்.

 

சைலம் (அ) ஹேட்ரோம் (Xylem or Hadrome)


வாஸ்குலத் தாவரங்களில் நீரைக் கடத்துகின்ற முதன்மையான திசு சைலம் ஆகும். சைலம் என்ற சொல்லை C. நகேலி (1858) அறிமுகப்படுத்தினார். இது 'சைலோஸ் = கட்டை' (Gk. Xylos - wood) என்ற கிரேக்கச் சொல் ஆகும். புரோகேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் முதலாம் நிலை சைலம் என்றும் வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் இரண்டாம் நிலை சைலம் என்றும் அழைக்கப்படுகின்றன. முதன் நிலை உடலில் முதலில் உருவாகும் சைலக்கூறுகள் புரோட்டோ சைலம் என்றும் பின்னர் உருவாகும் சைலக் கூறுகள் மெட்டாசைலம் என்றும் அழைக்கப்படும்.

புரோட்டோசைலக் கூறுகள் வெளிப்புறத்தை நோக்கியும், மெட்டா சைலக்கூறுகள் உள் நோக்கியும் அமைந்திருப்பது வெளி நோக்கு சைலம் எனப்படும். இது பொதுவாக வேர்களில் காணப்படும். 

புரோட்டோசைல கூறுகள் உள்நோக்கியும் மெட்டாசைலக் கூறுகள் வெளிநோக்கியும் அமைந்திருப்பது உள் நோக்கு சைலம் எனப்படும். இது தண்டு பகுதியில் காணப்படுகிறது. 

புரோட்டோசைல கூறுகள் உள்ளேயும் அதைச் சுற்றி மெட்டாசைலக் கூறுகள் சூழ்ந்து அமைந்திருப்பது மையமை சைலம் எனப்படும். இவ்வகையில் ஒரே ஒரு வாஸ்குலக்கற்றை உருவாகிறது. எடுத்துக்காட்டு: செலாஜினெல்லா சிற்றினம்.

 

செயல்பாடு  

செல் ஆய்வகம்:

மாணவர்கள் நழுவங்களை தயார்செய்து பல வகையான திசுக்களைக் கண்டறிதல்

புரோட்டோசைல கூறுகள் உள்ளேயும் இருபுறங்களில் மட்டும் மெட்டாசைலக்கூறுகள் சூழ்ந்து காணப்படுவது இடைநிலை சைலம் எனப்படும். இவ்வகையில் பல வாஸ்குலக்கற்றைகள் உருவாகிறது. எடுத்துக்காட்டு: ஒஃபியோகுளாசம் சிற்றினம்.


சைலம் நான்கு வகையான செல்களைக் கொண்டது அவை

1. டிரக்கீடுகள்  

2. சைலக்குழாய்கள் (அ) டிரக்கியா

3. சைலம் நார்கள்  

4. சைலம் பாரங்கைமா

 

டிரக்கீடுகள் (Tracheids)

டிரக்கீடுகள் நீண்ட கூர் முனைகளை உடைய லிக்னினை கொண்ட உயிரற்ற செல்களாகும். இதன் செல் அறையானது நார்களைக் காட்டிலும் அகலமானது. இது குறுக்கு வெட்டில் பல கோண வடிவமானது.

பல்வேறு விதமான செல் சுவர் தடிப்புகள் இரண்டாம் நிலை சுவர்படிம பொருட்களால் ஆனது. அவை வளையத் தடிப்பு, சுருள் தடிப்பு, ஏணித் தடிப்பு, வலை பின்னல் தடிப்பு, குழித்தடிப்பு (குழிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் சீராக தடித்த சுவருடையவை) ஆகியவை . டிரக்கீடுகளின் நுனிகளில் திறவுகள் காணப்படுவதில்லை , ஆனால் பக்கச் சுவர்களில் வரம்புடைய குழிகள் காணப்படுகின்றன. ஜிம்னோஸ்பெர்ம்கள் இதன் வழியாக நீர் கடத்துவதை மேற்கொள்கிறது. இவைகள் ஒன்றன் மீது ஒன்றாக அமைந்துள்ளன.

ஜிம்னோஸ்பெர்ம், டெரிடோஃபைட்டு தாவரங்களில் நீரைக் கடத்தும் முக்கியக் கூறுகளாக டிரக்கீடுகள் விளங்குகின்றன. இது மேலும் தாவரங்களுக்குத் தாங்கும் வலிமையத் தருகிறது.


 

சைலக்குழாய்கள் அல்லது டிரக்கியா (Vessels or Trachea)

சைலக்குழாய்கள் நீண்ட குழாய் போன்ற அமைப்புகள் ஆகும். இவை உயிரற்ற செல்களாகும். இவை ஒன்றன் மீது ஒன்றாக அமைந்துள்ள வரிசையான செல்களைக் கொண்டவை. இவற்றின் முனைச் சுவரில் திறவுகள் உள்ளன. இதன் செல் அறை டிரக்கீடுகளை விட அகலமானது. நுனிகளில் காணப்படும் துளைத்திறவுத்தட்டு முழுமையாகக் கரைந்து ஒரு துளையினை உண்டாக்குகிறது. இது ஒற்றைத்துளைத்தட்டு எனப்படும். எடுத்துக்காட்டு: மாஞ்சிபெரா. துளைத்திறவுத்தட்டு பல துளைகளைக் கொண்டு காணப்பட்டால் இது பல துளைத்தட்டு எனப்படும். எடுத்துக்காட்டு: லிரியோடெண்ட்ரான்.

டிரக்கீடுகளை போலவே இரண்டாம் சுவர் தடிப்புகளான வளையத் தடிப்பு, சுருள் தடிப்பு, ஏணித்தடிப்பு, வலைப்பின்னல் தடிப்பு அல்லது குழி தடிப்புகளைக் கொண்டுள்ளது. ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரை கடத்தும் முதன்மையானதிசு இதுவாகும். டெரிடோஃபைட்டு, ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் சைலக் குழாய்கள் காணப்படுவதில்லை. சைலக் குழாய்கள் ஜிம்னோஸ்பெர்ம் தாவரமான நீட்டத்தில் காணப்படுகிறது. சைலக் குழாய்களின் முக்கியப் பணி நீர் கனிம உப்புகள் போன்றவற்றைக் கடத்துதல் மேலும் தாங்கு திறன் அளித்தல் ஆகும். 

உங்களுக்குத் தெரியுமா?

எஃபிட்ரா , நீட்டம், வெல்வெட்ஷியா போன்ற ஜிம்னோஸ்பெர்ம்களில் சைலக் குழாய்கள் காணப்படுகின்றன.

வின்டரேஸி, டெட்ராசெண்ட்ரேஸி, ட்ரோகோடெண்ட்ரேஸி போன்ற ஆஞ்சியோஸ்பெர்ம் குடும்பங்களில் சைலக்குழாய்கள் காணப்படுவதில்லை. 

சைலம் நார்கள் (Xylem fibre)

சைலத்துடன் இணைந்து காணப்படுகின்ற ஸ்கிலிரன்கைமா நார்கள், சைலம் நார்கள் எனப்படும். சைலம் நார்களின் செல் சுவர் லிக்னினால் ஆனது. இவை குறுகிய செல் அறையினைக் கொண்ட, உயிரற்ற செல்களாகும். இவை நீரைக் கடத்துவதில்லை. ஆனால் தாங்கு திறனை அளிக்கின்றன. இவை முதலாம், இரண்டாம் நிலை சைலங்களில் காணப்படுகின்றன. சைலம் நார்கள் லிப்ரிஃபார்ம் நார்கள் எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான தாவரங்களில் நார்கள் அதிகளவில் காணப்படுகின்றன இவை திட்டுகளாகவோ, தொடர்ச்சியான பட்டைகளாகவோ, சில நேரங்களில் செல்களிடையே தனிச்செல்களாகவோ காணப்படுகின்றன. சாதாரண டிரக்கீடுகளுக்கும், நார்களுக்கும் இடைப்பட்ட இடைநிலை வடிவங்கள், அதாவது டிரக்கீடு ஒத்த நார்கள் எனப்படுகின்றன. இந்த இடைநிலை வடிவங்கள் நார் - டிரக்கீடுகள் எனப்படுகின்றன. நார் டிரக்கீடுகளில் காணப்படுகின்ற குழிகள் சைலக் குழாய்கள் டிரக்கீடுகளில் உள்ளதைக் காட்டிலும் சிறியவை.

 

சைலம் பாரங்கைமா (Xylem Parenchyma)

சைலக்கூறுகளோடு சேர்ந்து காணப்படுகின்ற பாரங்கைமா செல்கள் சைலம் பாரங்கைமா எனப்படுகின்றன. இவை மட்டும் தான் சைலத் திசுவில் காணப்படும் உயிருள்ள செல் ஆகும். இதன் செல் சுவர் மெல்லியது. செல்லுலோஸினால் ஆனது. பாரங்கைமா செல்கள் நீள்போக்காக அச்சிற்கு இணையாகக் காணப்படுவது அச்சு பாரங்கைமா எனப்படும். ஆரப்போக்காக அமைந்துள்ள பாரங்கைமா கதிர் பாரங்கைமா எனப்படும். இரண்டாம் நிலை சைலம் அச்சு மற்றும் கதிர் பாரங்கைமாவினை கொண்டுள்ளது. பாரங்கைமா உணவுப் பொருட்களைச் சேமிப்பதிலும், நீரினைக் கடத்துவதிலும் துணைபுரிகிறது.


ஃபுளோயம் (அ) ஃபுளோயம் (Phloem or leptome)


வாஸ்குல தாவரங்களில் உணவுப் பொருட்களைக் கடத்துகின்ற கூட்டுத் திசு ஃபுளோயம் ஆகும். ஃபுளோயம் என்ற சொல்லை C. நகேலி (1858) அறிமுகப்படுத்தினார். புரோ கேம்பியத்திலிருந்து உண்டாகும் ஃபுளோயம் முதலாம் நிலை ஃபுளோயம் எனப்படும். வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உண்டாகும் ஃபுளோயம் இரண்டாம் நிலை ஃபுளோயம் எனப்படும். முதன்நிலை உறுப்பில் முதலில் உண்டாகும் ஃபுளோயக் கூறுகள் புரோட்டோ ஃபுளோயம் எனவும் பின்னர் உண்டாகும் ஃபுளோயக் கூறுகள் மெட்டா ஃபுளோயம் எனவும் அழைக்கப்படும். புரோட்டோ ஃபுளோயம் குறுகிய வாழ்நாள் கொண்டது. இது மெட்டாஃபுளோய வளர்ச்சியினால் நசுக்கப்படுகிறது. 

 

ஃபுளோயம் நான்கு வகையான செல்களைக் கொண்டது. அவை

1. சல்லடைக் குழாய் கூறுகள் 

2. துணை செல்கள்

3. ஃபுளோயம் பாரங்கைமா   

4. ஃபுளோயம் நார்கள்

 

சல்லடைக் குழாய் கூறுகள் (Sieve Elements):

சல்லடைக் குழாய் கூறுகள் ஃபுளோயத்தின் கடத்தும் கூறுகளாகும். இவை இருவகைப்படும். இவை சல்லடைச் செல்கள், சல்லடை குழாய்கள். 

சல்லடைச்செல்கள் (Sieve cells):

இவை டெரிடோஃபைட் மற்றும் ஜிம்னோஸ் பெர்ம் தாவரங்களில் உணவு கடத்தும் தொடக்கநிலை செல்களாகும். சல்லடைச் செல்களின் பக்கச் சுவர்களில் சல்லடை பகுதிகள் காணப்படுகின்றன. துணைச் செல்கள் இச்செல்களுடன் சேர்ந்து காணப்படுவதில்லை.

சல்லடைக்குழாய்கள் (Sieve tubes):

சல்லடைக் குழாய்கள் நீண்ட குழாய்களைப் போன்ற ஃபுளோயத்தின் கடத்துக் கூறுகளாகும். இவை வரிசையாக அமைந்த சல்லடைக் குழாய் கூறுகளின் முனைகள் ஒன்றன் மீது ஒன்று அமைந்து உண்டாக்கப்படுகிறது. இதனுடைய முனை சுவரில் சல்லடை போன்ற துளைகள் காணப்படுகின்றன. இது சல்லடை துளைத்தட்டு எனப்படும். சல்லடைக் குழாய் கூறுகளின் பக்கச்சுவர்களில் பளபளப்பான தடிப்புகள் காணப்படுகின்றன. இவை எளிய அல்லது கூட்டு சல்லடைத்தட்டுகளை கொண்டுள்ளன. சல்லடைக் குழாய்களின் பணிகள் துணைச் செல்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன என நம்பப்படுகிறது.

முதிர்ந்த சல்லடை குழாய்களில் உட்கரு காணப்படுவதில்லை. ஆனால் சுவரை ஒட்டிய சைட்டோபிளாசம் காணப்படுகிறது. இதில் சிறப்பு வகை புரதம் (பு. புரதம் = ஃபுளோயம் புரதம்) எனப்படும் ஸ்லைம் உடலங்கள் காணப்படுகின்றன. முதிர்ந்த சல்லடைக் குழாய்களில், சல்லடை தட்டுகளில் உள்ள துளைகள் கேலோஸ் எனப்படும் பொருளால் (callose plug). அடைப்பட்டுள்ளது உணவுப்பொருட்கள் சைட்டோபிளாச இழைகள் மூலமாகக் கடத்தப்படுகிறது. சல்லடைக் குழாய்கள் ஆஞ்சியோஸ் பெர்ம்களில் மட்டும் காணப்படுகிறது.


 

துணைசெல்கள் (Companion Cells)

சைலக் குழாய்களுடன் இணைந்து காணப்படுகின்ற மெல்லிய சுவருடைய நீண்ட சிறப்பு வகையான பாரங்கைமா செல்கள் துணைச் செல்கள் எனப்படும். இச்செல்கள் உயிருள்ளவை சைட்டோபிளாசத்தையும் தெளிவான உட்கருவையும் கொண்டுள்ளன. இவை சல்லடை குழாய்களின் பக்கசுவரில் உள்ள குழிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழிகள் மூலம் இவ்விரண்டிற்கும் இடைய சைட்டோபிளாச இணைப்புகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன. இந்தச் செல்கள் சல்லடை குழாய்களுக்குள் அழுத்த சரிவுவாட்டத்தினை சரிசெய்யத் துணைபுரிகின்றன. சல்லடைக் குழாய்களில் உட்கரு இல்லாததால் துணைசெல் உட்கரு அதன் பணியினை மேற்கொள்கிறது. துணைசெல்கள் ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மட்டும் காணப்படுகின்றன. இவை டெரிடோஃபைட் ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படுவதில்லை. இவை சல்லடைக் குழாய்கள் இவை உணவு கடத்தலில் துணைபுரிகின்றன.


ஃபுளோயம் பாரங்கைமா (Phloem Parenchyma)

ஃபுளோயத்துடன் இணைந்து காணப்படுகின்ற பாரங்கைமா ஃபுளோயம் பாரங்கைமா எனப்படும். இவை உயிருள்ள செல்களாகும். இவை தரசம், கொழுப்பு போன்றவற்றைச் சேமிக்கின்றன. சில தாவரங்களில் இச் செல்கள் டேனின், பிசின் போன்றவற்றைக் கொண்டுள்ளன. முதல் நிலை ஃபுளோயத்தில் அச்சு பாரங்கைமாவும், இரண்டாம் நிலை ஃபுளோயத்தில் அச்சு , கதிர் பாரங்கைமா இரண்டும் காணப்படுகிறது ஃபுளோயம் பாரங்கைமா டெரிடோஃபைட்கள், ஜிம்னோஸ்பெர்ம்கள், இருவிதையிலை தாவரங்கள் போன்றவற்றில் காணப்படுகிறது.

 

ஃபுளோயம் நார்கள் அல்லது பாஸ்ட் நார்கள் (Phloem Fibres (or) Bast fibres)

ஃபுளோயத்துடன் இணைந்து காணப்படுகின்ற ஸ்கிலிரங்கைமா நார்கள் ஃபுளோயம் நார்கள் அல்லது பாஸ்ட் நார்கள் எனப்படும். இவை தடித்த சுவர்களையுடைய சிறிய செல் அறையினைக் கொண்ட குறுகிய, நீண்ட செங்குத்தான செல்களாகும். ஃபுளோயத்தில் காணப்படுகின்ற நான்கு கூறுகளில் ஃபுளோயம் நார்கள் மட்டுமே உயிரற்ற திசுவாகும். இவை உறுதி மற்றும் ஆதாரசெல்களாக செயல்படுகின்றன.


கருத்து வரைபடம்



ஆக்குத் திசுக்கள் நிலைத்திசுக்களுக்கிடையேயான வேறுபாடுகள்


 

கோலங்கைமா, ஸ்கிலிரங்கைமா இடையேயான வேறுபாடுகள்




Tags : Types, Diagramatic structures, Concept Map, Difference Between வகைகள், அமைப்புகள்.
11th Botany : Chapter 9 : Tissue and Tissue System : Permanent Tissues Types, Diagramatic structures, Concept Map, Difference Between in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு : நிலைத் திசுக்கள் - வகைகள், அமைப்புகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு