Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | திட்டமிடல்:பொருள், பரிணாமம் மற்றும் நோக்கங்கள்

திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் | அரசியல் அறிவியல் - திட்டமிடல்:பொருள், பரிணாமம் மற்றும் நோக்கங்கள் | 12th Political Science : Chapter 8 : Planning and Development Politics

   Posted On :  03.04.2022 11:49 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்

திட்டமிடல்:பொருள், பரிணாமம் மற்றும் நோக்கங்கள்

அனைத்துப் பொருளாதாரங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்திலும் ஏதோ ஒரு வடிவத்தில் திட்டமிடும்முறை நிலவத்தான் செய்கிறது.

திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்


கற்றலின் நோக்கங்கள்

* திட்டமிடலில் பொருள், பரிணாமம் மற்றும் நோக்கங்களைப் புரிதல். 

* இந்தியாவில் திட்ட ஆணையம் உருவான வரலாறு அறிதல் மற்றும் திட்ட ஆணையம் அமைப்பு மற்றும் செயல்பாடுகளைக் கற்றல்.

* இந்திய அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள உன்னதமான கோட்பாடுகளை எட்டுவதில் திட்ட ஆணையத்தின் பங்கு குறித்து ஆராய்தல். 

* நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விவாதித்தல். 

* இந்தியாவில் தொழில்மயமாக்கல் செயல்பாடுகள் மற்றும் தொழிற்துறை வளர்ச்சி, ஒழுங்குபடுத்தலில் அரசின் பங்கு குறித்து ஆராய்தல். 

* இந்தியாவில் நிலச்சீர்திருத்தம் குறித்து ஆராய்தல். 

* இந்தியாவில் பசுமைப் புரட்சி அறிமுகம், இந்தியப் பொருளாதாரத்தின் தாக்கம் குறித்து கற்றல். 

* இந்தியாவில் வெண்மைப் புரட்சி மற்றும் அதன் சாதனைகள் குறித்து விவாதித்தல்.



திட்டமிடல்:பொருள், பரிணாமம் மற்றும் நோக்கங்கள் 

விடுதலைக்கு முன்பு திட்டமிடல் முறை

அனைத்துப் பொருளாதாரங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்திலும் ஏதோ ஒரு வடிவத்தில் திட்டமிடும்முறை நிலவத்தான் செய்கிறது. திட்டமிடல் அமைப்பின் நோக்கம் என்பது, ஓர் அரசின் மூலவளங்களை நீண்டக்காலத்திற்கு பயன்படுத்தும் வகையில் ஒரு முறைபடுத்தப்பட்ட பயன்பாட்டு முறைகளை உருவாக்குவதாகும். உற்பத்தி அதிகரிப்பு, தேசியப் பங்கீடு, அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, மட்டுமல்லாமல் மக்கள் சமூக நலன்கள் அதிகரிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அரசு இச்செயல்முறைகளைக் கொண்டுள்ளது. ஒரு அரசின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் கீழ் அனைத்துத் தொழில் உற்பத்தி அமைப்புகளும் தங்கள் மூலவளங்களைப் பயன்படுத்துகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் விலக்குகளும் இதில் அடங்கும். ஒரு அரசின் அனைத்து தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசே ஒழுங்குபடுத்தி கண்காணிக்கிறது. ஒரு அரசின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் நாட்டின் முன்னேற்றம் மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

நவீன அரசு என்பது மக்கள் நல செயல்பாடுகளை நோக்கமாகக் கொண்டது. முந்தையக் காலங்கள் போல தற்கால நவீன அரசுகள் காவல் அரசுகளாக மட்டுமே செயல்பட முடியாது. முந்தையக் காலங்களில் மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு மட்டுமே அரசின் செயல்பாடாக கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்கால மக்கள் நல அரசுகளில் பங்களிப்பு மிகவும் விரிவானதாகும். அது நல்ல ஆட்சியை தருவது மட்டுமல்லாமல் மக்களின் சமூக-பொருளாதார நீதியையும் உறுதிப்படுத்துகிறது. நவீன அரசின் இலக்காக மக்கள் நல அரசு என்ற நிலையை எட்டுவதற்கான வாய்ப்புகளை ஒரு மக்களாட்சி வடிவிலான அரசே வழங்குகிறது. ஒரு நாடு தமது பின்னடைந்த நிலையிலிருந்து விடுபட்டு முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கான சமூகபொருளாதாரச் சீர்திருத்தங்களை அரசே முன்மொழிந்து நடை முறைப்படுத்துகிறது.

இந்தியாவில், தற்காலம் மட்டுமல்லாமல் எதிர்கால வளர்ச்சிக்குமான தேவைகளை எட்டும் வகையில் நாட்டின் மூலவளங்களை உரிய வகையில் பயன்படுத்தி மக்களின் பொது நலன்களைக் காட்டிலும் செயல்திட்டங்களை உருவாக்குவதற்காக திட்ட ஆணையம் நிறைவேற்றப்பட்டது.

செயல்பாடு

குழு விவாதம்

வகுப்பில் உள்ள மாணாக்கர்கள் ஐந்து முதல் ஆறு பேர் கொண்ட ஐந்து குழுக்களைக் கொண்டு கீழ்க்காணும் பொருள்கள் குறித்து விவாதிக்கவும். 

ஒருவருக்கு வளர்ச்சியாக தெரிவது மற்றவருக்கு வளர்ச்சியாக தெரியாது. ஏன்? விவாதி. 

உதாரணம்: 1 அதிக ஊதியம் தொழிலாளரின் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் அது தொழில் உரிமையாளருக்கு எதிராக அமையும்.

உதாரணம்: 2 ஒரு பணக்கார விவசாயி அல்லது வர்த்தகர், தமது உணவுப் பொருட்களை அதிக

விலையில் விற்க விரும்புகிறார். ஆனால், ஒரு ஏழைத் தொழிலாளி அதை குறைந்த விலைக்கு வாங்க விரும்புகிறார். 

உதாரணம்: 3 ஒரு புதிய அணைக்கட்டுவதால் அதிக மின்சார உற்பத்தி, குறைந்த செலவில் நடைபெறுகிறது. ஆனால், புதிய அணையால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கின்றனர். 

உதாரணம்: 4 மின்சாரம் அதிகமாக தேவைப்படுவதால் தொழிலதிபர் அதிக அணைகள் வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், புதிய அணைகள் கட்டுவதால் ஏராளமான விவசாய நிலங்கள் மூழ்கடிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கைப் பாதிக்கப்படுகிறது. இந்த விவாதத்தில் வளம் குன்றா வளர்ச்சி என்ற கோட்பாடு கருத்தில் கொள்ளப்படுகிறது.


இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாகவே பொருளாதாரத் திட்டமிடலில் தேவைக் குறித்து அறிந்திருந்தது. 1936இல் எம். விஸ்வேசுவரய்யா இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம்' என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் இந்தியாவுக்கான ஒரு பத்தாண்டு திட்டத்தினை முன்மொழிந்திருந்தார். அவரே, இந்தியாவுக்கான பொருளாதாரத் திட்டமிடலின் முன்னோடி என்று கருதப்படுகிறார். 1938இல் நடைபெற்ற அனைத்து இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முயற்சியால் தேசியத் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்திய நாடு எதிர்கொள்ள உள்ள பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு விடைக் காணும் வகையில் ஒரு நாடு தழுவிய பொருளாதாரத் திட்டத்தினை தயாரிப்பதே இதன் நோக்கமாகும். உடனடியாக, இரண்டாம் உலகப்போர் வெடித்ததாலும் அதனைத் தொடர்ந்து தேசியத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதனாலும் இக்குழுவால் அத்திட்டத்தினை உருவாக்க முடியவில்லை. 1944இல் இந்திய தொழிலதிபர்களால் ஒரு பொருளாதார வளர்ச்சித்திட்டம் உருவாக்கப்பட்டது. இது பம்பாய் திட்டம் என்று அழைக்கப்பட்டது.

மக்கள் திட்டம் என்று அழைக்கத்தக்க இத்திட்டத்தினை எம்.என். ராய் முன்மொழிந்தார். இத்திட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கும், சிறுதொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 1944இல் ஸ்ரீமன் நாராயண அகர்வால், காந்தியத் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். பின்னர், 1950இல் முன்மொழிந்த திட்டம் சர்வோதயத்திட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்த அனைத்து திட்டங்களுமே இந்தியப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தன.



விடுதலைக்கு பின்பான திட்டமிடல்

விடுதலைக்கு பின்னர் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அனைத்து மக்களுக்கும் சமூக-பொருளாதார நீதியை உறுதிப்படுத்தும் வண்ணம், அரசமைப்பு பிரிவு IV இல் அரசு கொள்கைக்கான வழிகாட்டு கொள்கை நெறிமுறைகள் இணைக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி உறுதி அளிக்கப்படுவதும் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அரசமைப்பை உருவாக்கியவர்கள் நன்கு புரிந்திருந்தனர். இதனால், திட்டமிடல் நீண்டக் கால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதினர். இதன்படி, பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கான கருவியாக திட்டமிடுதலை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. நாட்டின் வருவாயும் தனிநபர் வருவாயும் உயரும் பொருட்டு அதிகரிக்கும் வகையில் உற்பத்தியை பெருக்குவதை நோக்கமாகக் கொண்டே இந்திய திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது. வேலைவாய்ப்பு உத்திரவாதம், பணக்காரர் ஏழைகளுக்கிடையே பொருளாதார இடைவெளியைக் குறைப்பது ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. நாட்டில் சமத்துவத்தை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சமூகபொருளாதார நீதியை உறுதிப்படுத்த முடியும் என்றும், பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் எதிர்பார்த்தது. 


Tags : Planning and Development Politics | Political Science திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 8 : Planning and Development Politics : Planning: Meaning, Evolution and Objectives Planning and Development Politics | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் : திட்டமிடல்:பொருள், பரிணாமம் மற்றும் நோக்கங்கள் - திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்