Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்தியத் திட்ட ஆணையம்

திட்ட ஆணைய பணிகள், நிறுவனமும் அமைப்பும் - இந்தியத் திட்ட ஆணையம் | 12th Political Science : Chapter 8 : Planning and Development Politics

   Posted On :  04.04.2022 12:08 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்

இந்தியத் திட்ட ஆணையம்

இந்திய அரசு தீர்மானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட இந்தியதிட்ட ஆணையம் 'நாட்டின் வளங்களை மிகுந்த திறனுடனும் சமநிலையுடனும்' பயன்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டிருந்தது.

இந்தியத் திட்ட ஆணையம்

இந்தியத் திட்ட ஆணையம் 1950ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு தலைமையில் இது உருவாக்கப்பட்டது. இந்திய அரசு தீர்மானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட இந்தியதிட்ட ஆணையம் 'நாட்டின் வளங்களை மிகுந்த திறனுடனும் சமநிலையுடனும்' பயன்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டிருந்தது. திட்டங்களை உருவாக்குவது தொடர்பான ஒரு ஆலோசகர் என்ற பங்களிப்பினை திட்ட ஆணையம் ஆற்றுகிறது. அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

செயல்பாடு

கடந்த 12 ஐந்தாண்டு திட்டங்கள் ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்தி அதன் குறிப்பிட்ட இலக்குகள், சாதனைகளைப் பட்டியலிடுக. 


திட்ட ஆணைய பணிகள்

நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான மூலவளங்களை மதிப்பீடு செய்வது திட்ட ஆணைய பணியாகும். மனித வளங்கள், மூலதனம், கச்சா பொருள்கள் ஆகியனவும் இதில் அடங்கும். மூலவளங்களை மிகுந்த திறனுடனும் சமநிலைத் தவறாமலும் பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது ஆணையத்தின் முதன்மை பணியாகும். முன்னுரிமை அடிப்படையில் துறைகள் கண்டறியப்பட்டு மூலவளங்களை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேலும், திட்டங்களை ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்றி முழுமைப்படுத்துவதிலும் ஆணையத்தின் பொறுப்பாகும். எனவே, வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் சூழ்நிலைகளை அடையாளம் காண வேண்டியது ஆணையத்தின் பொறுப்பு ஆகும்.

செயல்பாடு

சிந்திக்கவும் இணைக்கவும் பகிரவும்

தலைப்பு 1: சமூக வளர்ச்சியின் அடிப்படை மானுட வளர்ச்சி

தலைப்பு 2: பணத்தால் அனைத்தையும் வாங்க முடியாது, சேவை மனப்பான்மை வளர வேண்டும்.

நாட்டில் அவ்வப்போது நிலவும் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு திட்டங்களை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளையும் திட்ட ஆணையம் ஆராய்கிறது. ஒரு திட்டத்தின் பல்வேறு கட்டங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய இலக்குகளை ஆணையம் வரையறை செய்கிறது. எனவே, திட்டச் செயல்பாடுகள் உரிய கால இடைவேளைகளில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இதன்மூலம் உரிய செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறைகளில் உரிய செயல்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வகுக்கும் வகையில் ஆலோசகராக திட்ட ஆணையம் இயங்குகிறது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைகள் எழும்போது அதனை ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதும் திட்ட ஆணையப் பணியாகும். மேலும், ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட காலத்தில் எட்ட வேண்டிய இலக்குகளை வகுத்து, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வரையறை செய்வதும் ஆணையத்தின் பணி ஆகும்.


நிறுவனமும் அமைப்பும்

பிரதமர், நான்கு முழு நேர உறுப்பினர்கள், கேபினட் அமைச்சர் நிலையிலுள்ள நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் ஆகியோரை திட்ட ஆணையம் கொண்டுள்ளது. முழுநேர ஊழியர்களை பொருத்தமட்டில் தொழில்நுட்பத்துறை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியத் துறைகளில் வல்லமைமிக்கவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். திட்ட ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை பிரதமர் ஏற்று, ஆணையப் பணிகள் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்கிறார்.

நிர்வாக சீர்திருத்த ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை ஏற்று திட்ட ஆணையம் மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி, பிரதமர் தலைவராக இருந்து கூட்டங்களை தலைமை ஏற்று நடத்துவார். ஆணைய துணைத் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்படும் ஒருவர் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராக செயல்படுவார். திட்ட வரைவுகளை தயாரித்து மத்திய அமைச்சகம், செயலகம், நான்கு முழு நேர உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்களாக உள்ள சம்மந்தப்பட்ட கேபினட் அமைச்சர்கள் ஆணையத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களான நிதி அமைச்சர், திட்ட அமைச்சர், உறுப்பினர் மற்றும் செயலர் (இவர் பொதுவாக இ.ஆ.ப அலுவலர் ஆவர்) ஆகியோருக்கு அனுப்ப வேண்டியது திட்டக்குழு உதவித் தலைவரின் பொறுப்பாகும். ஆணையத்தின் நிர்வாகச் செயல்பாடுகள் கூடுதல் செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

திட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பில் துறைச் செயலாளர்கள், கீழ்நிலைச் செயலாளர்கள், நிலையிலான உயர் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். திட்ட ஆணைய நிர்வாகத்தில் மாநில அரசுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை . இது முழுவதும் மத்திய அரசு அமைப்பாகும்.

கூட்டுப் பொறுப்பு எனும் நெறியின் கீழ் திட்ட ஆணையம் இயங்குகிறது. பொதுப் பிரிவு, பொருள் பிரிவு, நிர்வாகப் பிரிவு என மூன்று பிரிவுகளாக ஆணையம் பிரிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்பான அனைத்து பணிகளையும் இப்பிரிவு மேற்கொள்கிறது. குறிப்பிட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த திட்டங்கள் உதாரணமாக, உணவு, வேளாண்மை, மின்சாரம், நீர்பாசனம், போக்குவரத்து போன்ற தனிப்பட்ட துறைகளுக்கான திட்டங்கள் பொருள் பிரிவின் கீழ் வருகின்றன. நிர்வாகப் பணிகள் நிர்வாகப் பிரிவின் கீழ் வருகின்றன.

இதைத் தவிர, வேறு சில பிரிவுகளும் திட்டங்கள் உருவாக்கம் மற்றும் அமலாக்கம் தொடர்பாக இயங்குகின்றன. அவை பின்வருமாறு,

1. தேசிய திட்டக்குழு

4-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் 1965இல் தேசிய திட்டக்குழு அமைக்கப்பட்டது. அறிவியல், பொறியியல், பொருளாதாரம் ஆகிய துறை வல்லுநரைக் கொண்டு உருவாக்கப்படும் இக்குழு வேளாண்மை, நிலச்சீர்திருத்தம், நீர்பாசனம், கல்வி, வேலைவாய்ப்பு , தொழிற்துறை, வர்த்தகம், மேலாண்மை, குடும்பக்கட்டுப்பாடு, சமூக நலம், இயற்கை வளங்கள், போக்குவரத்து, பன்னாட்டு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுகிறது. இந்த ஒவ்வொரு துறையிலும் தேவைகள் குறித்து விரிவான ஆய்வு செய்து திட்ட ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டியது இக்குழுவின் கடமையாகும்.

2. தேசிய வளர்ச்சிக் குழு

பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுவில் அனைத்து முதலமைச்சர்களும் உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவில் மாநிலங்கள் இணைக்கப்பட்டதன் மூலம் ஒவ்வொரு மாநிலங்களிலும் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகிறது.தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களில் மத்திய அரசின் கேபினட் அமைச்சர்கள் சில நேரங்களில் பங்கேற்பதில்லை. திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை அவ்வப்போது சீராய்வு செய்வதும் மாநில வளர்ச்சி குறித்த பல்வேறு பிரச்சனைகளை விவாதிப்பதும் இக்குழுவின் பங்காகும். திட்டங்களை திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை உருவாக்குவதும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதும் இக்குழுவின் பணிகளாகும். எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான மூலவளங்களை கருத்தில் கொண்டு, நிர்வாகப் பணிகளை திறம்பட செயல்படுத்தும் வகையில் இக்குழு பணியாற்றுகிறது.


தேசிய வளர்ச்சிக் குழு : நோக்கங்கள், பணிகள்.



வறுமை ஒழிப்பை நோக்கி

இந்தியாவின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று வறுமையாகும். நாட்டில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதையும் திட்ட ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பொது மக்களின் வாழ்க்கைத்தரம் அவரது பொருளாதார நிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற கருத்து புரிந்து கொள்ளத்தக்கது. அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம் வழங்குவதுடன் அவர்கள் ஒரு நாகரிகமான வாழ்ககையை நடத்துவதற்கான தேவையை கல்வி, சுகாதாரம் ஆகியவற்றையும் பெரும் வகையில் தரமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவது அரசின் முக்கியமான கடமையாக உணரப்பட்டுள்ளது. ஆனாலும், பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு என்பது இன்னமும் சவாலாகவே நீடிக்கிறது. எனவே, 4-வது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து அரசு இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி வருகிறது. 1970-களின் தொடக்கத்தில் 'வறுமையை ஒழிப்போம்' என்ற முழக்கத்தின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டது.

வறுமை ஒழிப்புக்கான வழிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வேலையின்மை மற்றும் முழுமையான வேலையின்மை காரணமாக ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அனைத்து ஐந்தாண்டு திட்டங்களும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளித்தன. 


சமூக நீதியினை உறுதிப்படுத்துதல்

அரசமைப்பின் 38(2)-வது உறுப்பு இவ்வாறு கூறியது: "அரசு குறிப்பாக, வருமானத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பிரிவினர் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மக்கள் குழுக்கள் மற்றும் தனிநபரிடையிலும் தகுதி, வசதி, வாய்ப்புகள் ஆகியவற்றில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதையும் நோக்கமாகக் கொள்ள வேண்டும்." திட்டங்களை வகுப்போர் இப்பிரிவினை மனதில் கொண்டு திட்டங்களை வகுக்கின்றனர்.

மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் நிலை


மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் நிலைத் தொடர்வது அரசமைப்பில் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது என்றும் எனவே இதுபோன்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுவோருக்கு உரியப் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவது தொடர்புடைய அரசுகள், நிறுவனங்களின் கடமை என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2011ஆம் ஆண்டே முக்கியத் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இன்றும்கூட இந்தியாவின் பல நகரங்களில் இந்நிலை நீடிக்கிறது.

சமூக நீதியை உறுதிப்படுத்துதல் என்பது பொருளாதாரத்தை திட்டமிடும் நிலையிலேயே இணைந்து உள்ளது. வளர்ச்சிக்கான வழிமுறைகளை வகுக்கும்போது கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக அனைவருக்கும் சமவாய்ப்புகளை உருவாக்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சமூக மயப்படுத்தப்பட்ட சமுதாயங்களில் உருவாக்குவதன் மூலம் செல்வங்கள் ஒரு சிலர் கைகளில் மட்டுமே குவிவது தடுக்கப்படுவதுடன் சுரண்டல், ஒடுக்குமுறை ஆகிய கொடுமைகளுக்கு முடிவு கட்ட இயலும்.

வரலாற்று பூர்வமாகவே இந்திய சமுதாயம் என்பது சமூகத்தின் ஒரு பிரிவால் மற்ற பிரிவு ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வந்திருக்கிறது. எனவே தான், இத்தகைய பழைமை வாய்ந்த சக்திகள் மற்றும் சமூகத் தீமைகளை தடுக்கும் வழிகளை காண்பது அரசமைப்பை உருவாக்கியவர்களுக்கு சவாலாகவே அமைந்தது. அடிப்படை உரிமைகள் குறித்து பேசும் அரசமைப்பின் பிரிவு III-ன் கீழ் ஒருவர் முழுமையாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் ஆகும். பிரிவு IV அரசு கொள்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் மக்களின் வருமானத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை குறைத்து ஒரு சமத்துவ சமுதாயம் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசின் பணிகள் அமைய வேண்டும் என்று கூறுகிறது.

திட்ட ஆணையம் கவனம் செலுத்த வேண்டியுள்ள மற்றொரு முக்கிய பகுதி கிராம நகர்ப்புற ஏற்றத்தாழ்வாகும். பொருளாதார வளர்ச்சி,தொழில்மயமாக்கல், நகர்மயமாக்கல் ஆகியவற்றிற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும்போது, இந்திய சமூகத்திலும் பொருளாதாரத்திலும் அதன் பாதிப்பு ஏற்படுகிறது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மக்களின் வளர்ச்சியில் காணப்படும் ஏற்றத்தாழ்வு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள கொள்கை நெறிக்கு எதிராக சமத்துவமின்மையை ஊக்குவிக்கிறது. எனவே, இந்த ஏற்றத்தாழ்வினை அகற்றி சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் கிராம பொருளாதாரத்தினை முன்னேற்றுவதற்கான பல திட்டங்களை திட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

உலகளாவிய பலபரிமாண வறுமை பட்டியல் 2018(MPI)


பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து வறுமைகளை ஒழிப்பதற்காக பலபரிமாண அணுகுமுறைகளின் முக்கியத்துவம் வளம் குன்றா வளர்ச்சிக்கானச் செயல்திட்டம் 2030இல் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. வளம் குன்றா வளர்ச்சி இலக்கு-1 வறுமையை அனைத்து வடிவங்களிலும் முடிவுக்கு கொண்டுவருமாறு அறைக்கூவல் விடுக்கிறது. இதற்கான சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான முயற்சிகளில் உலகளாவிய பலபரிமாண வறுமை பட்டியல் 2011இல் இறங்கியது. இதையொட்டி வறுமையை அனைத்து வடிவங்களிலும் ஒழிப்பற்கான புதிய சாளரம் திறக்கப்பட்டது. 2018இல் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி 105 நாடுகளில் வறுமை பல்வேறு பரிமாணங்களில் இருப்பதை உலகளாவிய பலபரிமாண வறுமை பட்டியலை மதிப்பீடு செய்தது. உலக மக்கள் தொகையில் 77 விழுக்காடு மக்கள் இவ்வாறே வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

2018 உலகளாவிய பலபரிமாண வறுமை பட்டியல்: பரிமாணங்கள், சுட்டி, ஏற்றத் தாழ்வு குறைப்பு, எடை

மக்கள் எவ்வாறு பல்வேறு காரணங்களால் பல்வேறு சூழல்களில் வறுமைக்கு ஆளாகின்றனர் என்பதை பொருளாதார காரணங்கள் தாண்டியும் உலகளாவிய பலபரிமாண வறுமை பட்டியலை ஆய்வு செய்தது. அப்போது மூன்று முக்கிய பரிமாணங்களான சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் மக்கள் பின்தங்கியிருப்பது அடையாளம் காணப்பட்டது. இவற்றின் தரம் 10 சுட்டிகளாக அளவிடப்பட்டது. வறுமையில் வாடும் மக்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதி மக்களாவது கீழ்க்காணும் அட்டவணையில் மிகவும் கீழ்நிலையில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது.


மக்களாட்சி சமதர்மம்

இந்தியா விடுதலைப் பெற்ற தருணத்தில் தேசத்தை எவ்வாறு ஆள்வது எவ்வாறு திட்டமிடுவது என்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. இவற்றில் ஒன்று நீண்டக்கால வளர்ச்சிக்கான சிறந்த செயல்திட்டம் எது என்பதை கண்டுபிடிப்பதாகும். இந்திய வளர்ச்கிக்கான திட்டமிடுதலின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆவார். அவரை பொறுத்தவரை சோவியத் யூனியன் பின்பற்றிய திட்டமிடல் முறையில் மட்டுமல்லாமல் முதலாளித்துவம் பின்பற்றிய தாராளவாத கொள்கைகளாலும் கவரப்பட்டிருந்தார். இந்த இரண்டு கோட்பாடுகளும் இணைந்து இந்தியாவில் பின்பற்றபடவேண்டும் என்று அவர் விரும்பினார். இதுவே மக்களாட்சி சமதர்மம் என்று அழைக்கப்படுகிறது. 


கலப்புப் பொருளாதாரம்

தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் தாராளவாத கொள்கைகளை, சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை ஊக்கப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியதே கலப்புப் பொருளாதாரக் கொள்கை. இதன்மூலம் உற்பத்தி அமைப்புகள் சமூக மயப்படுத்தப்படுவதுடன் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா பின்பற்றி வரும் இந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கை உலகில் பல நாடுகளை கவர்ந்துள்ளது. 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழிற்கொள்கை தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரக் கொள்கையின் வழிக்காட்டுதலாக இது பின்பற்றப்படுகிறது. இத்தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஐந்தாண்டுத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சமதர்ம சமுதாயத்தை எட்டும் வகையில் அரசு நிர்வாகத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தொழிற்துறை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, முழுவதும் அரசுடைமை ஆக்கப்பட்ட தொழில்களாகும். இரண்டாவது பிரிவு, அரசுடைமை ஆக்கப்பட்டபோதிலும் பொதுத்துறை நிறுவனங்களையும் உள்ளடக்கும் வாய்ப்புகளை கொண்ட தொழில்களாகும். மூன்றாவது பிரிவு, தனியார் தொழில் நிறுவனங்களாகும். அனைத்து தொழில் பிரிவுகளையும் அரசு கட்டுப்படுத்துகிறது. மூன்றாவது பிரிவான தனியார் தொழில்கள் இலாபம் அல்லது சுயநலனை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் ஒட்டு மொத்த சமூகத்தின் நலனும் பாதுகாக்கும் வகையில்  ஒழுங்குபடுத்தப்படுகிறது. சமுதாய நலனே உச்ச முன்னுரிமையாகும்.

ஒரு கலப்புப் பொருளாதாரத்திற்கான முன் நிபந்தனையாக திட்டமிடல் கருதப்படுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளின் பயன்கள் சமுதாய நலனுடன் இணைக்கப்பட வேண்டும். இதையொட்டி ஐந்தாண்டு திட்டமிடல் உருவாக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியையும் சமூக நீதியையும் எட்டும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உரிய முறையில் வளர்ச்சியை கொண்டு வருவதற்கான உரிய திட்டங்களை உருவாக்குவது மற்றும் அதற்கான உரிய செயல்திட்டங்களை தகவமைப்பது ஆகிய பொறுப்புகளும் அரசை சார்ந்ததாகும்.


P.V . நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசு அமைந்ததை தொடர்ந்து 1991இல் ஜுலையில் பொருளாதார சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய பொருளாதாரத்தின் மீது நிலவிய அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாடுகளை குறைத்து இந்தியப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கும் வகையில் தாராளமயப்படுத்துவதை இது நோக்கமாக கொண்டிருந்தது. இதன்படி, உருவாக்கப்பட்ட சீர்திருத்தங்கள், தொழிற்துறை உரிமம் வழங்குதல், அந்நிய முதலீடு அனுமதி, அந்நிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொதுத்துறை கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தியது. ஏழாவது ஐந்தாண்டு திட்டம் 1990இல் நிறைவேறியது. அன்றைய நாட்டின் பொருளாதார நிலையை கருதி அடுத்த எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தவில்லை . அடுத்து வந்த 1990-91, 1991-92 ஆகிய இரு ஆண்டுகளில் ஆண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. எட்டாவது ஐந்தாண்டு திட்டம் 1992இல் கொண்டு வரப்பட்டது.


நிதி ஆயோக்


திட்டமிடல் அணுகுமுறையில் இந்திய அரசு 2015ஆம் ஆண்டு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. திட்ட ஆணையத்திற்கு பதிலாகநிதி ஆயோக்(மாறும் இந்தியாவிற்கான தேசிய நிறுவனம் ) எனும் புதிய ஆணையத்தினை அறிமுகப்படுத்தியது. ஒட்டுமொத்த திட்டமிடல் செயல்முறைகளையும் மேலும் அதிகார பரவலாக்கம் செய்யும் நோக்குடன் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகள் சிறப்பான முறையில் பங்கேற்க முடியும். மாநிலங்கள் விரிவான அளவில் பங்களிக்கும் வகையில் கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பு உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அது, தேவை அடிப்படையிலான திட்டங்களுக்கு கவனம் செலுத்துவதுடன் ஒட்டுமொத்த செயல்களிலும் மக்கள் தொகையில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கி வளர்ச்சி செயல்முறையில் ஒரு பகுதியாக பங்கேற்க செய்கிறது. ஆனால் மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்காமல் போதிய ஆதாரங்களை அளிக்காமல் இந்த மாநில அரசுகள் திட்டமிடலில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கமுடியும் என்று கூறுவது பலனளிக்காது. மேலும் திட்ட ஆணையத்தை கலைத்ததன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் இதுவரை அரசுக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களின் கைகளில் விடப்பட்டது. இருப்பினும், தற்போதைய உலக நிலவரங்கள் மற்றும் பொருளாதார அம்சங்களை உற்று நோக்கும்போது 'சந்தை அடிப்படையிலான பொருளாதாரம்' தவிர்க்க முடியாத ஒன்றாகும்.


அரசின் சிந்தனை பிரிவாக மட்டுமே நிதி ஆயோக் செயல்படுகிறது. அது, அரசுக் கொள்கை உருவாக்கத்தில் பொருத்தமான தொழில்நுட்ப அறிவுரைகளை மட்டுமே மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. தேசிய மற்றும் சர்வ தேசிய முக்கியத்துவம் கொண்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அது அறிவுரை வழங்கி தமது நாட்டுக்கும் உலகில் பிற நாடுகளுக்கும் எவை சிறந்த நடைமுறைகளாக இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்து கூறுகிறது. 2015, ஜனவரி 1 அன்று மத்திய அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசு திட்ட ஆணையம் கலைக்கப்பட்டு நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.


அமைப்பு

நிதி ஆயோக் தலைவராக பிரதமர் செயல்படுவார். அவர் ஒரு துறைத் தலைவரை நியமனம் செய்வார். ஐந்து முழுநேர மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் இருப்பர். அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஒன்றிய பகுதிகளின் துணை நிலை ஆளுநர்களைக் கொண்ட ஆளுநர் குழுவை கொண்டிருக்கும். மாநிலங்கள் அல்லது மண்டலங்களின் குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பாக விவாதிக்க மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறிப்பிட்ட கால வரம்பிற்குள் செயல்படும். குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், வல்லுநர்கள், துறை வல்லுநர்கள் போன்றோரை சிறப்பு அதிகாரிகளாக அழைக்கும் உரிமை பிரதமருக்கு உண்டு. பகுதி நேர உறுப்பினர்களாக முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். அலுவல் சாரா உறுப்பினர்களாக மத்திய அமைச்சரவையிலிருந்து நான்கு மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர். ஒரு தலைமை செயல் அதிகாரியையும் நிதி ஆயோக் கொண்டிருக்கும்.

திட்ட ஆணையத்திருக்கு பதிலாக நிதி ஆயோக் கொண்டு வரப்பட்டதன் காரணங்கள்: 

1. ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கி அதன் பொருளாதார இலக்குகளை எட்டும் வகையில் ஆதாரங்களை திட்ட ஒதுக்கீடு செய்ததற்கு மாறாக, மாறும் இந்தியாவுக்கான தேசிய நிறுவனம் என்ற புதிய அமைப்பு ஒரு சிந்தனைக் குழுவாகச் செயல்படும். 

2. நிதி ஆயோக் அமைப்பு இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 9 ஒன்றிய பகுதிகளில் தலைவர்களை உள்ளடக்கியது. அதன் முழு நேர நிர்வாகிகளான துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிபுணர்கள் நிதி ஆயோக் தலைவர் பிரதமருக்கு நேரடியாக பதில் சொல்வர். இது திட்ட ஆணைய நடைமுறைக்கு மாறுபாடானதாகும். 

3. திட்டமிடல் தொடர்பான முக்கிய வேறுபாடு என்னவென்றால் நிதி ஆயோக் திட்டமிடலில் பெரும் ஆர்வம் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு வாய்ப்புகள் அளிக்கும். மாறாக, திட்ட ஆணையத்தின் அணுகுமுறையோ அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவினைக் கொண்டதாக இருக்கும். 

4. திட்ட ஆணைய பங்களிப்பு என்பது விரிந்த திட்டங்களை உருவாக்குவது என்றாலும் அதன் தகுதி ஆலோசனை வழங்குதல் என்ற அளவிலேயே இருந்தது. நிதி ஆயோக் மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆதாரங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களைக் கொண்டு இருக்கிறது. 

5. திட்டமிடல் கொள்கை வகிப்பதில் மாநில அரசுகளுக்கு அறிய வாய்ப்புகள் அளிப்பதில்லை . இதுவே திட்ட ஆணையத்தின் அணுகுமுறையாக இருந்தது. மாநிலங்கள் நேரடியாக இல்லாமல் தங்கள் தேசிய வளர்ச்சி குழுவின் மூலம் மட்டுமே தங்கள் கருத்துக்களை கூற முடியும். நிதி ஆயோக்கில் இது தொடராது.

இந்தியா பன்மைத்துவமும் மாறுபாடுகளும் கொண்ட நாடு என்பதை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலங்கள் அல்லது ஒன்றியப் பகுதியின் இயல்பு வேறுபாடு கொண்டவை. மக்களின் தேவைகளும் வேறுபாடு கொண்டவை. ஒவ்வொரு பகுதியில் புவியியல் நிலைமைகளும் பொருளாதார நிலைமைகளும் வேறுபாடு கொண்டவை. சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட அதிக வளர்ச்சி அடைந்தவை. எனவே, ஒருங்கிணைந்த சீரான திட்டத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட முடியாது என்பதையும் நல்ல பயன்களைக் கொடுக்காது என்பதையும் இந்திய அரசு உணர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலம் அல்லது மண்டலத்தின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் நிதி ஆயோக் அமைக்கப்பட்டது. ஒரு வளரும் நாடு என்ற நிலையிலிருந்து எழுச்சிபெற்ற உலக நாடு என்ற நிலைக்கு இந்தியா மாறியுள்ளது என்று அமைச்சரவை தீர்மானம் தெரிவிக்கிறது. ஆனாலும் வறுமை ஒழிப்பு என்பது இன்னமும் மிகப் பெரிய சவாலாக நீடிக்கிறது.



நிதி ஆயோக்கின் நோக்கங்கள்

முன்னுரிமை திட்டங்களை அடையாளம் காண்பதில் மாநில அரசுகளையும் மத்திய அரசு இணைத்துக் கொள்வதன் மூலம் திட்டமிடல் செயல்முறையின் மாநிலங்களின் இணைக்கப்படுகின்றன. திட்டமிடல் செயல் முறையில் மாநிலங்களின் பங்களிக்க உள்ளதால் இது கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பாக செயல்படும். கிராமங்கள் அளவிலான நம்பகமானத் திட்டங்களை உருவாக்கி அவை வளர்ச்சியோடு ஒருங்கிணைக்கப்படும். பொருளாதார செயல்திட்டத்துடன் தேசப்பாதுகாப்பு இணைக்கப்படுவது உறுதி செய்யப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முறைகேடுகளை தடுப்பதற்கு தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். பொருளாதார வளர்ச்சியின் அனைத்து பிரிவு மக்களும் பயனடைகிறார்களா என்பது கண்காணிக்கப்படும்.

தொலைநோக்கு கொள்கைகளும் திட்டங்களும் உருவாக்கப்பட்டு அவற்றின் வளர்ச்சியை நிதி ஆயோக் கண்காணிக்கும். படைப்பாற்றல் கொண்டவளர்ச்சிகள் உருவாக்கப்படும்.பயனாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வி மற்றும் கொள்கையாட்சி நிறுவனங்கள் போன்ற பங்காளர்களின் பங்கேற்பு ஊக்கப்படுத்தப்படும். தேசிய, சர்வதேச வல்லுநர்களைக் கொண்ட சமுதாயத்தின் மூலமாக அறிவும் ஊக்கமும், தொழில் முனைப்பும் கொண்ட ஆதரவு அமைப்பு உருவாக்கப்படும்.

செயல்பாடு

திட்ட ஆணையம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்து அட்டவணைத் தயாரிக்கவும்.


வளர்ச்சித்திட்டங்களைத்துரிதப்படுத்தும் வண்ணம் பிரிவுகள் மற்றும் துறைகள் இடையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான தளத்தினையும் வழங்குகிறது. நீடித்த மற்றும் சமத்துவமான வளர்ச்சியை அடைவதற்கான சிறந்த நடைமுறைகளை உருவாக்குவதிலும் நல்ல ஆட்சி நிர்வாகத்தை உருவாக்குவதிலும் ஆராய்ச்சி சிறப்பாக மேற்கொள்வதற்கான திறன் மிக்க வளமையம் ஒன்றையும் அது பராமரிக்கிறது. தேவையான மூலவளங்களை அடையாளம் காண உதவும் வகையில் திட்ட அமலாக்கம் வடிவமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

புதிய திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தகுதிபடுத்தலுக்கு நிதி ஆயோக் அதிக அழுத்தம் தருகிறது. தேசிய வளர்ச்சி செயல்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான இதர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

நிதி ஆயோக் தொடங்கப்பட்ட பின்னர் முன் முயற்சி மேற்கொண்ட சில திட்டங்கள் வருமாறு: பதினைந்தாண்டு செயல்திட்டம், ஏழு ஆண்டு கண்ணோட்டம், நகர்புற மாற்றம் மற்றும் மறு உருவாக்கத்திற்கான அடல் திட்டம், டிஜிட்டல் இந்தியா, அடல் புத்தாக்க திட்டம் போன்றவை. 2018-2022 காலக்கட்டத்திற்கான வளம் குன்றா வளர்ச்சி வடிவமைப்பு ஒன்றில் நிதி ஆயோக் கையொப்பமிட்டுள்ளது. வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் அரசின் உறுதிபாடு இதில் பிரதிபலிக்கிறது. வறுமை ஒழிப்பு மற்றும் நகர்மயமாக்கம், உடல்நலம், குடிநீர் மற்றும் பொது சுகாதாரம், கல்வி, வேலை உருவாக்கம், பாலினச் சமத்துவம், இளைஞர் மேம்பாடு போன்ற பகுதிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு நிலைகளில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பது மற்றும் ஒரு சிலர் கைகளில் செல்வம் குவிவதை தடுப்பது ஆகியவற்றை செயல்படுத்தக்கூடிய அம்சங்கள் தற்போதைய பொருளாதார கொள்கைகளிலும் மற்றும் செயல் அமைப்புகளிலும் காணப்படுவதில்லை . மேலும், திட்டக்குழு கலைக்கப்பட்டதால் தமது வருவாய் ஆதாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக பல மாநில அரசுகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கையின் காரணமாக தமது மக்களுக்கு தேவையான சொந்த திட்டங்களை உருவாக்கும் ஆற்றலும் செயல்படுத்தும் திறனும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. 


Tags : Functions, Composition, Organization திட்ட ஆணைய பணிகள், நிறுவனமும் அமைப்பும்.
12th Political Science : Chapter 8 : Planning and Development Politics : Planning Commission of India Functions, Composition, Organization in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் : இந்தியத் திட்ட ஆணையம் - திட்ட ஆணைய பணிகள், நிறுவனமும் அமைப்பும் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்