Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: அகநானூறு

அம்மூவனார் | இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: அகநானூறு | 12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai

   Posted On :  02.08.2022 12:35 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை

செய்யுள்: அகநானூறு

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : செய்யுள்: அகநானூறு - அம்மூவனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

நாகரிகம் – ரு

அகநானூறு 

- அம்மூவனார்



நுழையும்முன்

மக்கள் வாழும் சூழலுக்குத் தக்கவாறு அமையக்கூடிய தன்மை உடையது தொழில். பழந்தமிழர்களின் தொழில் நிலத்தின் இயல்பைச் சார்ந்து அமைந்திருந்தது. இன்றும் கடற்கரையில் வாழும் மக்கள் மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்களைச் செய்து வருகிறார்கள். பண்டைய நெய்தல் நிலமக்கள் தங்கள் வாழிடத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தித் தொழில் செய்தனர். ஆண்களும் பெண்களும் வணிகம் செய்த செய்தியைச் சங்கப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.


பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்

இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த

வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி

என்றூழ் விடர குன்றம் போகும்

கதழ்கோல் உமணர் காதல் மடமகள்

சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி

நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்

சேரி விலைமாறு கூறலின் மனைய

விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய 

மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு, 

இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்

மாமூது அள்ளல் அழுந்திய சாகாட்டு

எவ்வந் தீர வாங்குந் தந்தை

கைபூண் பகட்டின் வருந்தி

வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே. (140)


திணை : நெய்தல் 

கூற்று : தலைமகன் பாங்கற்கு உரைத்தது. 

சொல்லும் பொருளும் 

வேட்டம் - மீன் பிடித்தல்; 

கழி - உப்பங்கழி; 

செறு - வயல்; 

கொள்ளை - விலை ; 

என்றூழ் - சூரியனின் வெப்பம் ; 

விடர - மலைவெடிப்பு ; 

கதழ் - விரைவு;

 உமணர் – உப்பு வணிகர்; 

எல்வளை - ஒளிரும் வளையல்; 

தெளிர்ப்ப - ஒலிப்ப; 

விளிஅறி - குரல் கேட்ட ; 

ஞமலி - நாய்; 

வெரீஇய - அஞ்சிய ; 

மதர்கயல் - அழகிய மீன்; 

புனவன் - கானவன்; 

அள்ளல் - சேறு; 

பகடு - எருது 

பாடலின் பொருள்

பரதவர், பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுவர். நிலப்பரப்பில் உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர். அந்த வெண்ணிறக் கல்உப்பை, உப்பு வணிகர் தங்களது வண்டியில் ஏற்றிச்செல்வர். வண்டியில் பூட்டிய எருதுகளை விரட்டக் கையில் தாழ்கோல் வைத்திருப்பர். கோடைக்காலத்தின் வெப்பத்தால் பிளவுபட்ட பாறைக் குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் விற்பனை செய்வர்.

அத்தகைய உமணர் ஒருவரின் மகள், அழகும் இளமையும் வாய்ந்தவள். அவள் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி நடந்து சென்றாள். அங்கு உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ!' என்று கூவினாள். அவள் கூவுவதைக் கேட்டு வீட்டில் உள்ள நாய் இது வேற்றுக் குரலென்று குரைத்தது. அதனை எதிர்பாராத அப்பெண்ணின் கண்கள் இரண்டும் அச்சத்தால் மீன்கள் தம்முள் போர் செய்வது போல் மருண்டன.

மருண்ட அப்பெண்ணின் கண்களை நான் அங்குக் கண்டேன். புதிதாகத் தினைப்புனம் அமைக்கும் கானவர் பழைய புனத்தைத் தீயிட்டு எரிப்பர். அப்பொழுது உண்டாகும் கரும்புகை போன்ற கருஞ்சேற்றில் அப்பெண்ணுடைய தந்தையின், உப்பு ஏற்றிச்செல்லும் வண்டி சிக்கிக்கொண்டது. அவ்வண்டியைச் சேற்றிலிருந்து துன்பத்துடன் மீட்க முயன்ற எருதிற்கு அவள் தந்தை உதவிசெய்தார். அந்த எருது அடைந்த துன்பம் போல, அவள் கண்களால் நான் துன்புற்றேன். 

உள்ளுறை: 'வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல, தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன்' என்று தலைவன் பாங்கனிடம் உள்ளுறுத்துக் கூறினான். எருதைத் தலைவனுக்கும் தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கும் உள்ளுறையாக வைத்துப் பாடல் புனையப்பட்டுள்ளது.


இலக்கணக் குறிப்பு

பெருங்கடல் - பண்புத்தொகை

உழாஅது - செய்யுளிசை அளபெடை

வெரீஇய - சொல்லிசை அளபெடை


உறுப்பிலக்கணம்

செய்த  = செய் + த் + அ

செய் - பகுதி

த் - இறந்தகால இடைநிலை

- பெயரெச்ச விகுதி

சாற்றி = சாற்று + இ

சாற்று - பகுதி

இ - வினையெச்ச விகுதி


புணர்ச்சி விதி 

பெருங்கடல் – பெருமை + கடல்

விதி : 'ஈறுபோதல்' - பெரு + கடல் 

விதி : 'இனமிகல்' - பெருங்கடல்

தெரியுமா?

பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளையும் களத்திற்கு 'அளம்' என்று பெயர். பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.

தெரிந்து தெளிவோம்

உப்பங்கழி

கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு 'உப்பங்கழி' எனப் பெயர். கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்கிறோம். ஆடை போல் படியும் இந்த உப்பைக் கூட்டிச் சேகரித்து, பக்குவப்படுத்தி விற்பனைக்கு அனுப்புவர்.


நூல்வெளி

பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. களிற்றியானைநிரையில் 120, மணிமிடை பவளத்தில் 180, நித்திலக்கோவையில் 100 எனப் பாடல்கள் உள்ளன. அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்; நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர். இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.


Tags : by Ammuvanaar | Chapter 5 | 12th Tamil அம்மூவனார் | இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai : Poem: Aaganaanuru by Ammuvanaar | Chapter 5 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : செய்யுள்: அகநானூறு - அம்மூவனார் | இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை