Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: காடு

சுரதா | பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: காடு | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu

   Posted On :  11.07.2022 01:12 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு

கவிதைப்பேழை: காடு

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : கவிதைப்பேழை: காடு - சுரதா | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கவிதைப்பேழை 

காடு


நுழையும்முன்

காடும் கடலும் நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை. ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால்தான்காட்டின் வளமே நாட்டின் வளம்' என்று அறிஞர்கள் கூறுகின்றனர். காட்டையும் காட்டின் குளிர்ச்சியையும் காட்டு விலங்குகளின் கொண்டாட்டங்களையும் கவிதை வழி அறிவோம்.


கார்த்திகை தீபமெனக்

காடெல்லாம் பூத்திருக்கும்

பார்த்திட வேண்டுமடீ - கிளியே

பார்வை குளிருமடீ!


காடு பொருள்கொடுக்கும்

காய்கனி ஈன்றெடுக்கும் 

கூடிக் களித்திடவே - கிளியே

குளிர்ந்த நிழல்கொடுக்கும்


குரங்கு குடியிருக்கும்

கொம்பில் கனிபறிக்கும் 

மரங்கள் வெயில்மறைக்கும் - கிளியே

வழியில் தடையிருக்கும்


*பச்சை மயில்நடிக்கும்

பன்றி கிழங்கெடுக்கும்

 நச்சர வங்கலங்கும் - கிளியே

நரியெலாம் ஊளையிடும்


அதிமது ரத்தழையை

யானைகள் தின்றபடி 

புதுநடை போடுமடீ - கிளியே

பூங்குயில் கூவுமடி!


சிங்கம் புலிகரடி

சிறுத்தை விலங்கினங்கள் 

எங்கும் திரியுமடீ - கிளியே

இயற்கை விடுதியிலே!

- சுரதா


சொல்லும் பொருளும் 

ஈன்று - தந்து 

கொம்பு - கிளை 

அதிமதுரம் - மிகுந்த சுவை

களித்திட - மகிழ்ந்திட 

நச்சரவம் - விடமுள்ள பாம்பு 

விடுதி - தங்கும் இடம்

பாடலின் பொருள்

கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களைத் தரும். காய்கனிகளையும் தரும். எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழல் தரும். அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும்.

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். நரிக் கூட்டம் ஊளையிடும். மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும். பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.


நூல் வெளி 


சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் 'சுப்புரத்தினம்'. எனவே தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர். அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்

இப்பாடல் தேன்மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை 'கிளிக்கண்ணி' ஆகும்.

தெரிந்து தெளிவோம்   

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை , பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை , விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை , கணையம்.


Tags : by Suratha | Term 1 Chapter 2 | 7th Tamil சுரதா | பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu : Poem: Kaadu by Suratha | Term 1 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : கவிதைப்பேழை: காடு - சுரதா | பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு