Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: காலக்கணிதம்

கண்ணதாசன் | இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: காலக்கணிதம் | 10th Tamil : Chapter 8 : Peruvali

   Posted On :  22.07.2022 02:55 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி

கவிதைப்பேழை: காலக்கணிதம்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி : கவிதைப்பேழை: காலக்கணிதம் - கண்ணதாசன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அறம்

கவிதைப் பேழை

காலக்கணிதம்

- கண்ணதாசன்



நுழையும்முன்

கவிஞன் என்பவன் யார்? அவன் குணம் என்ன? அவன் பணி என்ன? மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக் களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன். காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.


கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;

பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்!

ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!

உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;

இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்

வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்

சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது

இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்

இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!

கல்லாய் மரமாய்க் காடுமே டாக

மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!

*மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம் ; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்! *

 

நூல் வெளி

'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

‘முத்தையா’ என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் - விசாலாட்சி ஆவர். 1949ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

 

கற்பவை கற்றபின்...

கவிதைகளை ஒப்பிட்டுக் கருத்துரைக்க.

கவிச்சக்கரவர்த்தியும் கவியரசும்

நதியின் பிழையன்று

நறும்புனலின்மை அன்றே

பதியின் பிழையன்று

பயந்த நம்மைப் புரந்தான்

மதியின் பிழையன்று

மகன் பிழையன்று மைந்த

விதியின் பிழை நீ

இதற்கென்னை வெகுண்டதென்றன்

- கம்பன்

நதிவெள்ளம் காய்ந்து விட்டால்

நதிசெய்த குற்றம் இல்லை

விதிசெய்த குற்றம் இன்றி

வேறு - யாரம்மா!

- கண்ணதாசன்

 

Tags : by Kannadasan | Chapter 8 | 10th Tamil கண்ணதாசன் | இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 8 : Peruvali : Poem: Kaala kanitham by Kannadasan | Chapter 8 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி : கவிதைப்பேழை: காலக்கணிதம் - கண்ணதாசன் | இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி