Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: கம்பராமாயணம்

கம்பர் | இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கம்பராமாயணம் | 10th Tamil : Chapter 6 : Nila muttram

   Posted On :  22.07.2022 02:13 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

கவிதைப்பேழை: கம்பராமாயணம்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : கவிதைப்பேழை: கம்பராமாயணம் - கம்பர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கலை

கவிதைப் பேழை

கம்பராமாயணம்

                - கம்பர்



நுழையும்முன்

உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை. கவிஞனின் உலகம் இட எல்லை அற்றது; கால எல்லை அற்றது; கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியைச் சொல்லைக்கொண்டு எழுப்புகிறான். அவன் கண்ட காட்சிகள் அதற்குத் துணைபுரிகின்றன; கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன; விழுமியங்கள் துணைபுரிகின்றன; ஒப்புமைகள் துணைபுரிகின்றன; கலையின் உச்சம் பெறுவதுதான் அவன் எல்லையாகிறது; கம்பன் அப்படிப்பட்ட கவிஞன். அதனால்தான் 'கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்' என்று பாரதி பெருமைப்படுகிறார்.


பாலகாண்டம் - ஆற்றுப்படலம்

(ஆறு இயற்கையின் தோற்றமாக இல்லாமல் ஓர் ஓவியமாக விரிகிறது. அதை உயிரெனக் காணும் அந்த அழகுணர்ச்சி கவிதையாகி ஓடி நெஞ்சில் நிறைகிறது.)


கவிதை, கவிஞன்மூலம் தன்னையே வெளிப்படுத்திக் கொள்கிறது. அது எப்படி வருகின்றதோ அதை மாற்றினால் அழகு குன்றும். மீண்டும் மீண்டும் மறிதரும் சந்தம் உணர்வுகளை நம்முள் செலுத்துகிறது. உள்ளம் சூறையாடப்படுகிறது.

தா துகு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும்

போ தவிழ் பொய்கை தோறும் புதுமணற்றடங்க டோறும்

மாதவி வேலிப் பூக வனம்தொறும் வயல்க டோறும்

ஓதிய வுடம்பு தோறு முயிரென வுலாய தன்றே. (31)

 

பாடலின் பொருள்

மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் செறிந்த செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி, கொடி வேலியுடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது சரயு ஆறு. அது, ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கிறது.

 

பாலகாண்டம் - நாட்டுப்படலம்

(இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன்கவி காட்டுகிறது.)

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல் கண் முழவி னேங்கக் குவளை கண்

விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ.* (35)

 

பாடலின் பொருள்

குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட, விரிதாமரை மலர்கள், ஏற்றிய விளக்குகள் போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண, நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய, மகர யாழின் தேனிசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது.

 

பாலகாண்டம் - நாட்டுப்படலம்

(ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக்கொண்டு, ஒரு நாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது.)

வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்

றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்

உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்

வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால். (84)

கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால், கொடைக்கு அங்கே இடமில்லை; நேருக்கு நேர் போர் புரிபவர் இல்லாததால், உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; பொய்மொழி இல்லாமையால், மெய்மை தனித்து விளங்கவில்லை; பல வகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதும் இல்லை.

 

அயோத்தியா காண்டம் - கங்கைப்படலம்

(இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை 'ஐயோ' என்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான்.)

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.* (1926)

 

பாடலின் பொருள்

பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட, இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும், இளையவன் இலக்குவனொடும் போனான். அவன் நிறம் மையோ? பச்சைநிற மரகதமோ? மறிக்கின்ற நீலக் கடலோ? கார்மேகமோ? ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்.

 

அயோத்தியா காண்டம் - கங்கை காண் படலம்

(கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம். பொருள் புரியாவிடினும் சந்த இன்பம் மகிழ்ச்சியூட்டுகிறது. 'ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா' என்று பாரதி சொல்வதை இதில் உணரமுடியும்.)

ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ

வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ

தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ

ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ. (2317)

 

பாடலின் பொருள்

ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றை பரதன் முதலானோர் கடந்து செல்வார்களா? யானைகள் கொண்ட சேனையைக்கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்! தோழமை என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா? தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா?

 

யுத்த காண்டம் - கும்பகருணன் வதைப் படலம்

(உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம், கும்பகருணனை எழுப்பும் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது.)

உறங்கு கின்ற கும்ப கன்ன வுங்கண் மாய வாழ்வெலாம்

இறங்கு கின்ற தின்று காணெழுந்தி ராயெ ழுந்திராய்

கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே

உறங்கு வாயுறங்கு வாயி னிக்கி டந்து றங்குவாய். (7316)

 

பாடலின் பொருள்

உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!

 

நூல் வெளி

கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்“ எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது. இது ஆறு காண்டங்களை உடையது. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை. அவற்றுள் அழகுணர்ச்சிமிக்க சில கவிதைகள் பாடப்பகுதியாக அமைந்துள்ளன.

"கல்வியில் பெரியவர் கம்பர்", "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்; சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்; திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்; "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்" என்று புகழ்பெற்றவர்; சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.

 

கற்பவை கற்றபின்....

கம்பராமாயணக் கதைமாந்தர்களுள் எவரேனும் ஒருவர் குறித்து வகுப்பில் உரையாற்றுக.

 

 

Tags : by Kambar | Chapter 6 | 10th Tamil கம்பர் | இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 6 : Nila muttram : Poem: Kambaramayanam by Kambar | Chapter 6 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : கவிதைப்பேழை: கம்பராமாயணம் - கம்பர் | இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்