Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: காசிக்காண்டம்

அதிவீரராம பாண்டியர் | இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: காசிக்காண்டம் | 10th Tamil : Chapter 3 : Kutaanchoru

   Posted On :  22.07.2022 01:57 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு

கவிதைப்பேழை: காசிக்காண்டம்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு : கவிதைப்பேழை: காசிக்காண்டம் - அதிவீரராம பாண்டியர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

பண்பாடு

கவிதைப் பேழை

காசிக்காண்டம்

- அதிவீரராம பாண்டியர்



நுழையும்முன்

விருந்தோம்பல் முறைகள் வேறுவேறாக இருந்தாலும் எல்லாச் சமூகங்களிலும் இப்பண்பாடு போற்றப்படுகிறது. விருந்தினரை உளமார வரவேற்று விருந்தளிக்கும் முறைபற்றி இலக்கியங்கள் பேசுகின்றன. விருந்தினர் மனம் மகிழக் கூடிய முறைகளில் விருந்தோம்ப வேண்டுமல்லவா? அத்தகைய பாடல் ஒன்று விருந்தோம்பும் நெறியை வரிசைப்படுத்திக் காட்டுகிறது.


விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்

போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

ஒழுக்கமும் வழிபடும் பண்பே *

இல்லொழுக்கம், (பா எண் : 17)

 

சொல்லும் பொருளும்

அருகுற - அருகில்

முகமன் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

 

பாடலின் பொருள்

விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், 'வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.

 

இலக்கணக்குறிப்பு

நன்மொழி - பண்புத்தொகை

வியத்தல், நோக்கல், எழுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் - தொழிற்பெயர்கள்

 

பகுபத உறுப்பிலக்கணம்

உரைத்த - உரை + த் + த் + அ

உரை - பகுதி

த் - சந்தி

த் - இறந்த கால இடைநிலை

- பெயரெச்ச விகுதி

வருக - வா(வரு) + க

வா - பகுதி

வரு எனத் திரிந்தது விகாரம்

- வியங்கோள் வினைமுற்று விகுதி

"ஒப்புடன் முகம் மலர்ந்தே

உபசரித்து உண்மை பேசி

உப்பிலாக் கூழ் இட்டாலும்

உண்பதே அமிர்தம் ஆகும்

முப்பழமொடு பால் அன்னம்

முகம் கடுத்து இடுவாராயின்

கப்பிய பசியி னோடு

கடும்பசி ஆகும் தானே

- விவேகசிந்தாமணி. (4)

 

நூல் வெளி

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. 'இல்லொழுக்கங் கூறிய' பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.

முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.

 

கற்பவை கற்றபின்....

நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக எழுதிப் படித்துக் காட்டுக.

 

 

Tags : by AthiVeera Rama Pandiyar | Chapter 3 | 10th Tamil அதிவீரராம பாண்டியர் | இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 3 : Kutaanchoru : Poem: Kasikaandam by AthiVeera Rama Pandiyar | Chapter 3 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு : கவிதைப்பேழை: காசிக்காண்டம் - அதிவீரராம பாண்டியர் | இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு