Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: மெய்ப்பாட்டியல்

தொல்காப்பியர் | இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: மெய்ப்பாட்டியல் | 12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool

   Posted On :  03.08.2022 11:10 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்

செய்யுள்: மெய்ப்பாட்டியல்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : செய்யுள்: மெய்ப்பாட்டியல் - தொல்காப்பியர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

கலை – சு 

மெய்ப்பாட்டியல்

- தொல்காப்பியர்



நுழையும்முன்

இலக்கியத்தைப் படிக்குந்தோறும் அதன் பொருளை ஆழப்படுத்தும் வகையில் காட்டப்படும் உணர்ச்சி வெளிப்பாடே சுவை என்னும் மெய்ப்பாடு. "சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்" என்பார் தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர். கவி கண்காட்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். நாடகத்தில் நடிப்பவரிடத்தில் தோன்றும் மெய்ப்பாடுகள், காண்பவரிடத்திலும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும். இலக்கியத்தில் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டப்படுவதே மெய்ப்பாடு, இலக்கியத்தின் வடிவமும் பொருளும் சார்ந்த மெய்ப்பாடு மிகச் சிறந்த அழகியல் கோட்பாடு.


நகையே அழுகை இளிவரல் மருட்கை 

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று 

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப. தொல்- (1197)


சொல்லும் பொருளும்

நகை - சிரிப்பு 

இளிவரல் - சிறுமை

மருட்கை - வியப்பு 

பெருமிதம் - பெருமை 

வெகுளி - சினம் 

உவகை - மகிழ்ச்சி


நூற்பா பொருள் :

சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி என்று மெய்ப்பாடு எண்வகைப்படும்.


இலக்கணக் குறிப்பு 

நகை, அழுகை, இளிவரல், மருட்கை , அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை - தொழிற்பெயர்கள்


உறுப்பிலக்கணம்

நகை = நகு + ஐ

நகு -  பகுதி (நகை ஆனது விகாரம்)

ஐ - தொழிற்பெயர் விகுதி

மருட்கை  = மருள்(ட்) + கை

மருள் -  பகுதி (‘ள்’ ‘ட்’ ஆனது விகாரம்)

கை -  தொழிற்பெயர் விகுதி

வெகுளி = வெகுள் + இ 

வெகுள் - பகுதி 

இ - தொழிற்பெயர் விகுதி


மெய்ப்பாடுகளை விளக்கும் இலக்கிய எடுத்துக்காட்டுகள்


நகை (சிரிப்பு):

பாடிய பாணனின் குரலை எள்ளி நகையாடிய 

தலைவியின் கூற்று இது 

ஈட்டுபுகழ் நந்தி பாணநீ! எங்கையர்தம் 

வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும் 

பேயென்றாள் அன்னை , பிறர் நரியென்றார், தோழி 

நாயென்றாள், நீ என்றேன் நான்! (நந்திக்கலம்பகம் - 13 (மிகைப்பாடல்)) 

பாடலின் பொருள்:

" புகழ் மிக்க தலைவனின் புகழ்பாடுவோனே! நீ எங்கள் வீட்டின் முன் இரவு முழுவதும் பாடினாய். அதைக்கேட்டு என் தாய், விடியவிடியக் காட்டில் அழும் பேய் என்றாள்; பிறர், நரி ஊளையிட்டது என்றனர்; தோழியோ, நாய் குரைத்தது என்றாள்; இல்லை நீ என்றேன் நான்".


அழுகை :

தலைவன் காட்டில் புலியுடன் போராடி 

இறந்துபட, தலைவி துயரில் கூறுவது. 

ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே 

அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கவல்லேன் 

என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை 

இன்னாது உற்ற அறனில் கூற்றே ! (புறம் - 255) 

பாடலின் பொருள் :

போரில் இறந்துபட்ட தலைவனின் உடலைப் பார்த்து தலைவி, ஐயோ எனக் கதறினால், காட்டில் உள்ள புலி வந்துவிடுமோ என அஞ்சுகின்றேன். தூக்கி எடுத்துச் செல்லலாம் என்றால் அகன்ற மார்பு கொண்ட உன்னைத் தூக்கவும் இயலாது. இவ்வாறு துன்புறும் வண்ணம் செய்ததே கூற்றம். அக்கூற்றம் என்னைப்போல் துன்புறட்டும்.


இளிவரல் (சிறுமை) :

சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்தித் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணிப் பாடியது

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய 

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம், 

மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத் 

தாம் இரந்து உண்ணும் அளவை 

ஈன்ம ரோ, இவ் உலகத் தானே (புறம் 74)

பாடலின் பொருள் :

"நாயைக் கட்டுவது போலச் சங்கிலியினால் கட்டிவைத்து, என்னைத் துன்புறுத்திச் சிறையிலிட்டனர். அப்படிச் சிறையிலிட்டவரின் உதவியினால் வந்த தண்ணீரை மனவலிமையின்றி இரந்து உண்ணுபவரை இவ்வுலகில் அரசர் எனப் போற்றுவார்களா?"


மருட்கை (வியப்பு) :

கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியைக் கண்ட குன்றவர்கள் அடைந்த வியப்பு.

திருமா பத்தினிக்கு 

அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டி அவள் 

காதல் கொழுநனைக் காட்டி, அவளொடு எம் 

கண்புலம் காண விண்புலம் போயது 

இறும்பூது போலும்... (சிலம்பு. பதிகம்)

பாடலின் பொருள் :

"இந்திரன் கோவலனோடு வந்து பத்தினியாகிய கண்ணகியை, விண்ணுலகு அழைத்துச்சென்ற வியப்பான காட்சியை நாங்கள் கண்டோம்".


அச்சம் :

யானை சினந்து வர மகளிர் நடுங்கி 

அஞ்சியதை வெளிப்படுத்துதல்.

மையல் வேழம் மடங்கலின் எதிர்தர 

உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென 

திருந்து கோல் எல்வளை கெழிப்ப, நாணு மறந்து 

விதுப்புறு மனத்தேம், விரைந்து அவற் பொருந்தி,

சூர் உறு மஞ்ஞையின் நடுங்க (குறிஞ்சிப்பாட்டு 165-168) 

பாடலின் பொருள் :

"மதம் பிடித்த யானை மரங்களை முறித்தது. கார்கால மேகம் இடிப்பதுபோல முழங்கியது. உயிர் பிழைப்பதற்கு வேறு இடம் காணவியலாமல் மன நடுக்கம் அடைந்தோம். உயிரினும் சிறந்த நாணத்தைக் காக்க மறந்தோம். வளையல்கள் ஒலிக்க விரைந்து ஓடிச்சென்று அவனைச் சேர்ந்து மயில்போல் நடுங்கி நின்றோம்".


பெருமிதம் (பெருமை):

பெருவீரன் ஒருவன் தனியாகப் பெரும்படையை எதிர்க்கும் பெருமிதத்தைக் குறிப்பிடுதல். 

உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின் 

சிறுசுடர் முற்பேர் இருளாங் கண்டாய் – 

எறிசுடர்வேல் 

தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்தே 

நின்னோடு 

பாங்கலா மன்னர் படை - (பு.வெ.மா - 8) 

பாடலின் பொருள் :

எறிதற்குரிய ஒளிமிக்க வேலினையும் தேன் நிறைந்த பூமாலையினையும் உடைய தேர்வேந்தனே! வாளுடன் பகையரசனின் பெரும்படையை நான் தடுப்பேன். என்முன் அப்பெரும்படை சிறுவிளக்கின் முன் இருள் ஓடுவதுபோல ஓடும். 


வெகுளி (சினம்) :

தன்னை இளையவன் என்று எள்ளிய பகைவேந்தர் மீது பாண்டியன் நெடுஞ்செழியன் சினம் கொண்டு வஞ்சினம் கூறுதல்.

உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச் 

சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை 

அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு

ஒருங்கு அகப்படே என் ஆயின் (புறம். 72) 

பாடலின் பொருள் :

"சிறுசொல் சொல்லிய சினம்மிக்க வேந்தரை வென்று அவர்கள் சிதறி ஓடுமாறு, போரிட்டு அவர்களது முரசையும் ஒருங்கே கைப்பற்றுவேன்"


உவகை (மகிழ்ச்சி) :

மழை மேகத்தைக் கண்ட மயில் போல நீலவண்ணனாகிய கண்ணனைக் கண்ட குந்தியின் மகிழ்ச்சி.

மண்டல மதியமன்ன மாசறு முகத்தினாளுந் 

திண்டிறன் மருகன்றன்னைச் சென்றெதிர் கொண்டுகண்டு 

வெண்டிரை மகரவேலை விரிபுனன் முகந்து தோன்றும் 

கொண்டலை மகிழ்ந்து காணுங் குளிர்பசுந் தோகைபோன்றாள் 

பாடலின் பொருள் :

முழுநிலவு முகத்தாள் குந்தி, திறன் மிக்க மருமகன் கண்ணனை எதிர்கொண்டாள். வெள்ளலைகள் நிறைந்த நீலக் கடலின் நீரை முகந்து வரும் மேகத்தைக் கண்ட தோகை மயில் போல் மகிழ்ந்து வரவேற்றாள்.

“உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் 

மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே"

- செயிற்றியம்


நூல்வெளி

நம்பாடப் பகுதி தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியலில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் என்பதை அறிவோம். அது பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூலாகும். தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ்க் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரம் கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்புகிறது. தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர், ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியன் என்று போற்றுகின்றனர். நூல் முழுமைக்கும் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார்.


Tags : by Tholkapier | Chapter 6 | 12th Tamil தொல்காப்பியர் | இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool : Poem: Maipaatiyal by Tholkapier | Chapter 6 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : செய்யுள்: மெய்ப்பாட்டியல் - தொல்காப்பியர் | இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்