Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: மெய்க்கீர்த்தி

இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: மெய்க்கீர்த்தி | 10th Tamil : Chapter 7 : Vithai nel

   Posted On :  22.07.2022 02:38 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்

கவிதைப்பேழை: மெய்க்கீர்த்தி

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : கவிதைப்பேழை: மெய்க்கீர்த்தி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

நாடு

கவிதைப் பேழை

மெய்க்கீர்த்தி



நுழையும்முன்

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்; அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி! பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது; செப்பமான வடிவம் பெற்றது; கல்இலக்கியமாய் அமைந்தது.


இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும் ஒரு வடிவாகி

வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய

படியானையே பிணிப்புண்பன

வடிமணிச்சிலம்பே யரற்றுவன

செல்லோடையே கலக்குண்பன

வருபுனலே சிறைப்படுவன

மாவே வடுப்படுவன

மாமலரே கடியவாயின

காவுகளே கொடியவாயின

கள்ளுண்பன வண்டுகளே

பொய்யுடையன வரைவேயே

போர்மலைவன எழுகழனியே

மையுடையன நெடுவரையே

மருளுடையன இளமான்களே

கயற்குலமே பிறழ்ந்தொழுகும்

கைத்தாயரே கடிந்தொறுப்பார்

இயற்புலவரே பொருள்வைப்பார்

இசைப் பாணரே கூடஞ்செய்வார்

என்று கூறி இவன்காக்கும் திருநாட்டி னியல் இதுவென

நின்று காவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது

தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும்

மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர்கட்குயிராகியும்

விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும்

மொழிபெற்ற பொருளென்னவும் முகம் பெற்ற பனுவலென்னவும்

எத்துறைக்கும் இறைவனென்னவும் யாஞ்செய்.....

 

பாடலின் பொருள்

இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றது போல் ஆட்சி செலுத்தினான் சோழன். அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன (மக்கள் பிணிக்கப்படுவதில்லை). சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் புலம்புவதில்லை). ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன (மக்கள் கலக்கமடைவதில்லை). புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது (மக்கள் அடைக்கப்படுவதில்லை).

மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன (மக்கள் வடுப்படுவதில்லை). மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன (மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை). காடுகள் மட்டுமே கொடியவனாய் - (கொடி உடையனவாக) உள்ளன (மக்கள் கொடியவராய் இல்லை). வண்டுகள் மட்டுமே கள் - (தேன்) உண்ணுகின்றன (மக்கள் கள் உண்பதில்லை). மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றது (மக்களிடையே வெறுமை இல்லை). வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன (வேறு போர் இல்லை).

நீண்ட மலைகளே இருள் சூழ்ந்தவையாயிருக்கின்றன (நாட்டில் வறுமை இருள் இல்லை). இளமான்களின் கண்களே மருள்கின்றன (மக்கள் கண்களில் மருட்சியில்லை). குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன (மக்கள் நிலை பிறழ்வதில்லை). செவிலித்தாயரே சினங் காட்டுவர் (வேறு யாரும் சினம் கொள்வதில்லை). புலவர் பாட்டில் மட்டுமே பொருள் (பொதிந்து) இருக்கின்றது (யாரும் பொருளை மறைப்பதில்லை). இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் (தேவையற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை). இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது.

அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான் தாயில்லாதோருக்குத் தாயாய் இருக்கின்றான். மகனில்லாதோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான். விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் அவன் திகழ்கிறான்; புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான்.

 

நூல் வெளி

கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது. இம்மெய்க்கீர்த்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக உள்ளது. இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு. அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது.

முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. மெய்க்கீர்த்திகளே கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள். இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.

 

கற்பவை கற்றபின்...

உங்கள் ஊரில் உள்ள பண்டைய வரலாற்றுச் சின்னங்களின் ஒளிப்படங்களைத் திரட்டிப் | படத்தொகுப்பேடு ஒன்றை உருவாக்குக.

 

Tags : Chapter 7 | 10th Tamil இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 7 : Vithai nel : Poem: MeiKeerthi Chapter 7 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : கவிதைப்பேழை: மெய்க்கீர்த்தி - இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்