Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: முல்லைப்பாட்டு

நப்பூதனார் | இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: முல்லைப்பாட்டு | 10th Tamil : Chapter 2 : Uyirin osai

   Posted On :  21.07.2022 09:00 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை

கவிதைப்பேழை: முல்லைப்பாட்டு

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : கவிதைப்பேழை: முல்லைப்பாட்டு - நப்பூதனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயற்கை

கவிதைப் பேழை

முல்லைப்பாட்டு

- நப்பூதனார்



நுழையும்முன்

இயற்கைச் சூழல் நமக்குள் இனிய உணர்வுகளைத் தூண்டுகிறது. தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்தனர். மழைக்காலத்தில் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிற இயல்பு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைச் சங்க இலக்கியம் படம்பிடித்துக் காட்டுகிறது.


நல்லோர் விரிச்சி கேட்டல்

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல், நிமிர்ந்த மாஅல் போல,

பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,

அருங்கடி மூதூர் மருங்கில் போகி,

யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,

நாழி கொண்ட, நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,

பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப

*சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள் , "கைய

கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்" என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்*

அடி : 1-17

 

சொல்லும் பொருளும்

நனந்தலை உலகம் - அகன்ற உலகம்

நேமி - சக்கரம்

கோடு - மலை

கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்

நறுவீ - நறுமணமுடைய மலர்கள்

தூஉய் - தூவி

விரிச்சி - நற்சொல்

சுவல்தோள்

 

பாடலின் பொருள்

அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம், ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப்பொழுதில், முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள்; அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூ வினர். பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

அங்கு, சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள், "புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்து விடுவர், வருந்தாதே" என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர்.

நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே! என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர்.

 

இலக்கணக்குறிப்பு

மூதூர் - பண்புத்தொகை

உறுதுயர் - வினைத்தொகை

கைதொழுது - மூன்றாம் வேற்றுமைத் தொகை

தடக்கை - உரிச்சொல் தொடர்

 

பகுபத உறுப்பிலக்கணம்

பொறித்த - பொறி + த் + த் +அ

பொறி - பகுதி

த் - சந்தி

த் - இறந்தகால இடைநிலை

- பெயரெச்ச விகுதி

 

தெரிந்து தெளிவோம்

விரிச்சி

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

 

பாடப்பகுதிப் பாடலில் இடம்பெற்றுள்ள முதல் கரு உரிப்பொருள்கள்



நூல் வெளி

முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 103 அடிகளைக் கொண்டது. இப்பாடலின் 1 - 17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது. இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.

 

கற்பவை கற்றபின்...

1. முல்லைப்பாட்டின் காட்சிகளிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கைச் சூழலை உணர முடிகிறதா? உங்களின் கருத்துகளைப் பதிவு செய்க.

2. குறிப்புகளைக் கொண்டு ஆர்வமூட்டும் வகையில் கதை நிகழ்வை எழுதுக.

அமைதி - வனம் - மனத்தைத் தொட்டது - கொஞ்சம் அச்சம் - ஆனால் பிடித்திருந்தது - இரவில் வீட்டின் அமைதியை விட - வனத்தின் அமைதி - புதுமை - கால்கள் தரையில் - இலைகளின் சலசலப்பு - பறவைகள் மரங்களின் மேல் - சிறகடிப்பு - அருகில் திரும்பியவுடன் - திடீரென ஆரவார ஓசை - தண்ணீரின் ஓட்டம் - அழகான ஆறு - உருண்ட சிறுகூழாங்கற்கள் - இயற்கையின் கண்காட்சி

 

Tags : by Napputhanar | Chapter 2 | 10th Tamil நப்பூதனார் | இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 2 : Uyirin osai : Poem: Mullai paattu by Napputhanar | Chapter 2 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : கவிதைப்பேழை: முல்லைப்பாட்டு - நப்பூதனார் | இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை