Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல

உடுமலை நாராயணகவி | பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல | 7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil

   Posted On :  10.07.2022 06:06 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்

கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் : கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல - உடுமலை நாராயணகவி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

கவிதைப்பேழை

ஒன்றல்ல இரண்டல்ல



நுழையும்முன்

தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதே போல தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர்.இக்கருத்துகளை விளக்கும் பாடலை அறிவோம்.

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல

ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி...) 


தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும் 

செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி...) 


பகைவென்ற திறம்பாடும் பரணிவகை - செழும்

பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை - வான் 

புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் - செம் 

பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி...)


முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி - வான்

முகிலினும் புகழ்படைத்த உபகாரி - கவிச் 

சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி - இந்த 

வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி...)

- உடுமலை நாராயணகவி


சொல்லும் பொருளும் 

ஒப்புமை - இணை 

அற்புதம்வியப்பு 

முகில் - மேகம் 

உபகாரி - வள்ளல்


பாடலின் பொருள்


தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும். அவை வேறு எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும். இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள் போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.


நூல் வெளி 

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர். இவரது பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.


Tags : by Udumalai Narayanakavi | Term 1 Chapter 1 | 7th Tamil உடுமலை நாராயணகவி | பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil : Poem: Ondruallah iranduallah by Udumalai Narayanakavi | Term 1 Chapter 1 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் : கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல - உடுமலை நாராயணகவி | பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்