Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: புறநானூறு

ஒளவையார் | இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: புறநானூறு | 12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai

   Posted On :  01.08.2022 09:10 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை

செய்யுள்: புறநானூறு

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : செய்யுள்: புறநானூறு - ஒளவையார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

கல்வி – ச 

புறநானூறு

- ஔவையார்



நுழையும்முன்

வாழ்வின் அணியாக விளங்குவது கல்வி. கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர்; தாழும் நிலை வரினும் கலங்காது, அறிவால் உலகையே சொந்தமாக்கிக்கொள்வர்; எங்குச் சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர். எல்லாப் புகழும் உடைய கற்றோரது செம்மாப்பு இங்குக் கவிதையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


வாயி லோயே! வாயி லோயே!

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன் அறியலன் கொல்? என் அறியலன் கொல்?

*அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,

வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்

காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே. (206)


பாவகை : நேரிசை ஆசிரியப்பா

திணை: பாடாண்.

பாடாண் திணை - ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

துறை: பரிசில் துறை 

பரிசில் துறை - பரிசு வேண்டி வாயிலில் நிற்பது


சொல்லும் பொருளும்

வாயிலோயே - வாயில் காப்போனே; 

வள்ளியோர் - வள்ளல்கள்;

வயங்குமொழி - விளங்கும் சொற்கள்; 

வித்தி - விதைத்து; 

உள்ளியது - நினைத்தது; 

உரன் - வலிமை; 

வறுந்தலை - வெறுமையான இடம்; 

காவினெம் - கட்டிக்கொள்ளுதல்; 

கலன் - யாழ்; 

கலப்பை - கருவிகளை வைக்கும் பை; 

மழு - கோடரி .

பாடலின் பொருள்

வாயில் காவலனே! வாயில் காவலனே! புலவர்களாகிய எங்களைப் போன்றவர்களின் வாழ்நிலை, வள்ளல்களை அணுகி அவர்தம் செவிகளிலே அறிவார்ந்த சொற்களைத் துணிச்சலுடன் விதைத்துத் தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையது; அதே வேளையில் அவ்வள்ளல்கள் பற்றித் தாம் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டுமே என நினைந்து வருந்தும் தன்மையைக் கொண்டது. பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே! விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ? (அவனை நம்பித்தான் இவ்வுலகில் வறுமை நிலையில் உள்ளோர் வாழ்கின்றனர் என்னும் நினைப்புப் போலும்.) இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை. இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை. (எங்களை அறிந்து பரிசில் தரப் பல பேர் உள்ளனர்.) ஆகவே, எம் யாழினை எடுத்துக்கொண்டோம்; கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக்கொண்டோம். மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும்? அதுபோல, கலைத் தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும். 

(பரிசிலர்க்குச் சிறுவரும், கல்விக்குக் கோடரியும், போகும் திசைக்குக் காடும், உணவுக்குக் காட்டில் உள்ள மரங்களும் உவமைகள்)


இலக்கணக் குறிப்பு

வயங்குமொழி - வினைத்தொகை

அடையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அறிவும் புகழும் - எண்ணும்மை

சிறாஅர் - இசைநிறை அளபெடை.

புணர்ச்சி விதி 

எத்திசை = எ + திசை 

விதி : இயல்பினும் விதியினும் நின்ற 

உயிர்முன் கசதப மிகும் - எத்திசை


நூல்வெளி

சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தபோது ஔவையார் பாடிய பாடல் நமக்குப் பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடல் இடம்பெற்றுள்ள புறநானூறு, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது புறப்பொருள் பற்றியது; புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது. தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஒளவை அவருக்காகத் தூது சென்றவர்; அரசவைப் புலவராக இருந்து அரும்பணியாற்றியவர்; இவர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.


Tags : by Avvaiyar | Chapter 4 | 12th Tamil ஒளவையார் | இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai : Poem: Pura naanuru by Avvaiyar | Chapter 4 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : செய்யுள்: புறநானூறு - ஒளவையார் | இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை