Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: இரட்சணிய யாத்ரிகம்

எச்.ஏ. கிருட்டிணனார் | இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: இரட்சணிய யாத்ரிகம் | 12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum

   Posted On :  03.08.2022 04:05 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்

செய்யுள்: இரட்சணிய யாத்ரிகம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : செய்யுள்: இரட்சணிய யாத்ரிகம் - எச்.ஏ. கிருட்டிணனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

ஆளுமை – அ

இரட்சணிய யாத்திரிகம்

- எச்.ஏ. கிருட்டிணனார்



நுழையும்முன்

நிறைய அன்பு, குறையாத ஆர்வம், தொடரும் நெகிழ்ச்சி, தொண்டில் மகிழ்ச்சி என்பன மனிதத்தின் இயல்புகள். இம்மனிதமே அனைத்துச் சமயங்களின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கையைப் பேச்சாலும் வசையாலும் வாழ்வில் வதை பல பட்டு வெளிப்படுத்தியவர், இயேசு பெருமானார்.


இறைமகனின் எளியநிலை

1. பாசம் என உன்னலிர் பிணித்தமை பகைத்த

நீசமனு மக்களை நினைந்து உருகும் அன்பின் 

நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி

ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்.  -1421

2. பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி 

ஏதமில் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற 

வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால் 

நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி.* -1448


ஆளுநர் முன் நிறுத்துதல்

3. எண்ண மிட்டவர் பொந்தியு பிலாத்தேனும் இறைமுன்

அண்ணலைத் தனி நிறுவவும், ஆக்கினைத் தீர்ப்புப்

பண்ணவும் என நிண்ணயம் பண்ணினர் பகைகொண்டு 

ஒண்ணுமோ வறுங் கூவலுக்கு உத்தியை ஒடுக்க! -1464


ஆளுநர் விதித்த கொலைத்தண்டனையை நிறைவேற்ற இழுத்துச் சென்று துன்புறுத்துதல்


4. முன்னுடை களைந்து ஒரு முருக்கு அலர்ந்தெனச் 

செந்நிற அங்கிமேல் திகழச் சேர்த்தினர்; 

கொல் நுனை அழுந்தி வெம் குருதி பீறிடப் 

பின்னிய முள்முடி சிரத்துப் பெய்தனர்.

5. கைதுறுங் கோலினைக் கவர்ந்து கண்டகர் 

வெய்துறத் தலைமிசை அடித்து வேதனை

செய்தனர்; உமிழ்ந்தனர் திருமுகத்தினே;

வைதனர்; பழித்தனர், மறங்கொள் நீசரே. -1526


மக்கள் புலம்பல்

6. என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார்! 

என்கொல் வானம் இடிந்து விழுந்திலது என்பார்! 

என்கொல் வாரிதி நீர் சுவறாததும் என்பார்!

என்கொலோ முடிவு இத்துணை தாழ்த்ததும் என்பார்! -1540


பொல்லாங்கு பொறுத்தல்

7. பொல்லாத யூதர்களும் போர்ச்சேவ கர்குழுவும்

வல்லானை எள்ளிப் புறக்கணித்து வாய்மதமாய்ச்

சொல்லாத நிந்தைமொழி சொல்லித்து ணிந்தியற்றும் 

பொல்லாங்கை யெல்லாம் நம் ஈசன் பொறுத்திருந்தார். -1564


சொல்லும் பொருளும்

1) உன்னலிர் - எண்ணாதீர்கள்; 

பிணித்தமை - கட்டியமை; 

நீச - இழிந்த; 

நேசம் - அன்பு;

வல்லியதை - உறுதியை; 

ஓர்மின் - ஆராய்ந்து பாருங்கள்.

2) பாதகர் - கொடியவர்; 

குழுமி - ஒன்றுகூடி; 

பழிப்புரை - இகழ்ச்சியுரை; 

ஏதமில் - குற்றமில்லாத;

ஊன்ற - அழுந்த; 

மாற்றம் - சொல்; 

நுவன்றிலர் - கூறவில்லை .

பா வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3) ஆக்கினை - தண்டனை; 

நிண்ணயம் - உறுதி; 

கூவல் - கிணறு; 

ஒண்ணுமோ - முடியுமோ; 

உத்தி - கடல்; 

ஒடுக்க - அடக்க.

4) களைந்து - கழற்றி; 

திகழ - விளங்க; 

சேர்த்தினர் - உடுத்தினர்; 

சிரத்து - தலையில்; 

பெய்தனர் - வைத்து அழுத்தினர்.

5) கைதுறும் - கையில் கொடுத்திருந்த; 

கண்டகர் - கொடியவர்கள்; 

வெய்துற – வலிமை மிக; 

வைதனர் - திட்டினர்; 

மறங்கொள் - முரட்டுத் தன்மையுள்ளவர்.

6) மேதினி - உலகம்; 

கீண்டு - பிளந்து; 

வாரிதி - கடல்;

சுவறாதது - வற்றாதது.

7) வல்லானை - வலிமை வாய்ந்தவரை; 

நிந்தை - பழி; 

பொல்லாங்கு - கெடுதல்; தீமை.


பாடலின் பொருள்

1) இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம் மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல்தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார். இதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

2) கொடி யோர் ஒன்று கூடிக் கூறிய இகழ்ச்சி மொழி எனும் கொடிய தீக்கொள்ளியானது , மாசில்லாத அருள் நிறைந்த இறைமகன் இதயத்தில் அழுந்தியது. அவர் மிக வேதனையடைந்து மனம் வெந்து புண்பட்டாரே அல்லாமல், தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார். தாம் கருதி வந்த வேலை நிறைவேறுவதற்காக அவர் அமைதி காத்தார்.

3) பெருந்தகையரான இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரின் முன் தனியாகக் கொண்டுபோய் நிறுத்தினர். அவருக்குத் தண்டனை பெற்றுத் தரவும் உறுதியாக இருந்தனர். வற்றிய சிறிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா? முடியாது.

4) இறைமகனை இழுத்துச் சென்ற அக்கொடியவர்கள், அவர் அணிந்திருந்த வெள்ளாடையைக் கழற்றிவிட்டு, முருக்க மலர் போன்று சிவந்த ஓர் அங்கியை அவருக்குப் போர்த்தினர். துன்பம் தரும் கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட ஒரு முடியை அவருடைய தலையில் வைத்து இரத்தம் பீறிட்டு ஒழுகுமளவு அழுத்தினர்.

5) கொடுமனம் படைத்த அந்த முரடர்கள், இறைமகனுடைய கையிலிருந்த கோலினைப் பிடுங்கி எடுத்துக் கொண்டனர். முள் முடி சூட்டப்பட்ட அவர் தலையின் மேல் வன்மையாக அடித்து வேதனை செய்தனர். மேலும், அவருடைய திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து, திட்டிப் பழித்துக் கேலி செய்தனர்.

6) மக்கள் 'இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே! இது என்னே!' என்பர்; வானம் இடிந்து விழவில்லையே! இது என்னே! என்பர்; 'கடல்நீர் வற்றிப் போகவில்லையே! இது என்னே!' என்பர்; மேலும், 'இந்த உலகம் இன்னும் அழியாமல் தாமதிப்பதும் ஏனோ' என்பர்.

7) பொல்லாத யூதர்களும் போர்ச் சேவகர் கூட்டமும் எல்லாம் வல்ல இறை மகனை இகழ்ந்து பேசியும் புறக்கணித்தும் வாயில் வந்தபடி சொல்லத் தகாத பழிமொழிகளைக் கூறினர். அவர்கள் செய்த பொல்லாங்குகளை எல்லாம் நம் இறைமகன், பொறுத்திருந்தார்.


இலக்கணக் குறிப்பு 

கருத்தடம், வெங்குருதி - பண்புத்தொகைகள் 

வெந்து, சினந்து, போந்து - வினையெச்சம் 

உன்னலிர் - முன்னிலைப்பன்மை வினைமுற்று

ஓர்மின் - ஏவல் பன்மை வினைமுற்று

சொற்ற, திருந்திய -  பெயரெச்சம் 

பாதகர் - வினையாலணையும் பெயர் 

ஊன்ற ஊன்ற - அடுக்குத்தொடர் 


உறுப்பிலக்கணம்.

(i) பகைத்த = பகை + த் + த் + அ

பகை - பகுதி 

த் - சந்தி 

த் - இறந்தகால இடைநிலை

அ - பெயரெச்ச விகுதி 

(ii) களைந்து = களை + த்(ந்) + த் + உ 

களை - பகுதி

த்(ந்) - சந்தி (ந் ஆனது விகாரம்) 

த் - இறந்தகால இடைநிலை

- வினையெச்ச விகுதி 

(ii) பழித்தனர் = பழ + த் + த் + அன் + அர் 

பழடி - பகுதி

த் - சந்தி 

த் - இறந்தகால இடைநிலை 

அன் - சாரியை 

அர் - பலர்பால் வினைமுற்று விகுதி

(iv) இடிந்து = இடி + த்(ந்) + த் + உ

இடி - பகுதி 

த் - சந்தி (ந் ஆனது விகாரம்) 

த் - இறந்தகால இடைநிலை 

உ - வினையெச்ச விகுதி


புணர்ச்சி விதி 

முன்னுடை = முன்+உடை விதி 

விதி :'தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்' - முன்ன் + உடை 

விதி : 'உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது

இயல்பே - முன்னுடை.

ஏழையென = ஏழை + என 

விதி: 'இ ஈ ஐ வழி யவ்வும் - ஏழை + ய் + என 

விதி : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - ஏழையென.

தெரியுமா?

திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த 'நற்போதகம்' எனும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் பதின்மூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.

இரட்சணிய யாத்திரிகம், 1894ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.



நூல்வெளி

ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (Pilgrims Progress) எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் படைக்கப்பட்டது. இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம். இது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது. இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. இதன் ஆசிரியர் எச்.ஏ. கிருட்டிணனார். பிற சமய இலக்கியங்களைப் போலவே கிறித்துவ சமய இலக்கியங்களும் தமிழ் இலக்கிய வளமைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன. எச்.ஏ. கிருட்டிணனார் போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இவரைக் கிறித்துவக் கம்பர் என்று போற்றுவர்.


Tags : by Kirutinanaar | Chapter 8 | 12th Tamil எச்.ஏ. கிருட்டிணனார் | இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum : Poem: Rachanya yatriham by Kirutinanaar | Chapter 8 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : செய்யுள்: இரட்சணிய யாத்ரிகம் - எச்.ஏ. கிருட்டிணனார் | இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்