Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: சிறுபாணாற்றுப்படை

நத்தத்தனார் | இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: சிறுபாணாற்றுப்படை | 12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum

   Posted On :  03.08.2022 04:12 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்

செய்யுள்: சிறுபாணாற்றுப்படை

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : செய்யுள்: சிறுபாணாற்றுப்படை - நத்தத்தனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

ஆளுமை – அ

சிறுபாணாற்றுப்படை

- நத்தத்தனார்



நுழையும்முன்

ஈகைப்பண்பு மனிதத்தின் அடையாளமாக இருக்கிறது. கொடுக்கிற பண்பு இருந்தால் எடுக்கிற நிலை இருக்காது. தமிழ் இலக்கியங்கள் கொடைத்தன்மையை விதந்து போற்றுகின்றன; எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுக்கும் தன்மையை வலியுறுத்துகின்றன; கொடுப்பதில் மகிழ்ச்சி காணும் பண்பைப் போற்றுகின்றன. ஆற்றுப்படை இலக்கியங்கள் இக்கொடை பண்பை விளக்கும் இலக்கியங்களாக இருக்கின்றன. இன்றளவும் கொடைப் பண்பால் பெயர்பெற்றிருக்கிற வள்ளல்கள் எழுவர் பற்றிய பதிவுகள் கொடைக்கு இலக்கணமாகவும் மனிதத்தின் அடையாளமாகவும் அமைந்திருக்கின்றன.


பேகன் - (பொதினி மலை)

வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் 

கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் 

பெருங்கல் நாடன் பேகனும் ... (84-87)


பாரி (பறம்பு மலை)

....... சுரும்பு உண 

நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச் 

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய 

பிறங்குவெள் அருவி வீழும் சாரல் 

பறம்பின் கோமான் பாரியும் ..... (87-91)


காரி (மலையமான் நாடு)

........ கறங்குமணி 

வாலுளைப் புரவியொடு வையகம் மருள 

ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த 

அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் 

கழல்தொடித் தடக்கைக் காரியும் ... (91-95) 


ஆய் (பொதியமலை)

....... நிழல் திகழ் 

நீலம், நாகம் நல்கிய கலிங்கம் 

ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த 

சாவந் தாங்கிய, சாந்துபுலர் திணிதோள் 

ஆர்வ நன்மொழி ஆயும்; .... (95-99)


அதிகன் (தகடூர்)

........ மால்வரைக் 

கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி 

அமிழ்து விளை தீங்கனி ஔவைக்கு ஈந்த 

உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்

அரவக் கடல் தானை அதிகனும் ... (99-103) 


நள்ளி (நளிமலை)

.............. கரவாது 

நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் 

முட்டாது கொடுத்த முனைவிளங்கு 

தடக்கைத் துளிமழைபொழியும்வளிதுஞ்சு நெடுங்கோட்டு 

நளிமலை நாடன் நள்ளியும் .... (103-107)


ஓரி (கொல்லிமலை)

............. நளிசினை 

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக் 

குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த 

காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

ஓரிக் குதிரை ஓரியும் ... (107-111)

 

இவர்களோடு நல்லியக்கோடன்.

.......... என ஆங்கு 

எழுசமங் கடந்த எழு உறழ் திணிதோள் 

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் 

விரிகடல் வேலி வியலகம் விளங்க 

ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்*...... (111-115) 

பாவகை:நேரிசை ஆசிரியப்பா


சொல்லும் பொருளும்

வளமலை - வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது; 

கவாஅன் - மலைப்பக்கம்; 

கலிங்கம் - ஆடை; 

சுரும்பு - வண்டு; 

நாகம் - சுரபுன்னை , நாகப்பாம்பு ; 

பிறங்கு - விளங்கும்; 

பறம்பு - பறம்பு மலை; 

கறங்கு - ஒலிக்கும்; 

வாலுளை - வெண்மையான தலையாட்டம்; 

மருள - வியக்க; 

நிழல் - ஒளி வீசும்; 

நீலம் - நீலமணி; 

ஆலமர் செல்வன் - சிவபெருமான் (இறைவன்); 

அமர்ந்தனன் - விரும்பினன்; 

சாவம் - வில்; 

மால்வரை - பெரியமலை (கரிய மலையுமாம்); 

கரவாது - மறைக்காது; 

துஞ்சு - தங்கு; 

நளிசினை - செறிந்த கிளை (பெரிய கிளை); 

போது - மலர்; 

கஞலிய - நெருங்கிய; 

நாகு - இளமை ; 

குறும்பொறை - சிறு குன்று; 

கோடியர் - கூத்தர்; 

மலைதல் - போரிடல்; 

உறழ் - செறிவு; 

நுகம் - பாரம்.


பாடலின் பொருள்

பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலுக்குப் பேகன் (அது குளிரால் நடுங்கும் என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால்) தன்னுடைய ஆடையைக் கொடுத்தான். இவன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவன்; பெரிய மலை நாட்டுக்கு உரியவன்; வலிமையும் பெருந்தன்மையும் நற்பண்பும் கொண்டவன்; பொதினி மலைக்குத் தலைவன்.

வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட மலர்களைச் சிந்தும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடுவழியில், மலர்களையுடைய (கொம்பின்றித் தவித்துக்கொண்டிருந்தது) முல்லைக்கொடியொன்று பற்றிப்படரத் தான் ஏறிவந்த பெரிய தேரினை ஈந்தவன் பாரி. அவன், வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்.

உலகம் வியக்கும்படி வெண்மையான பிடரியுடன் தலையை ஆட்டும் குதிரைகளையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுப்பவன் காரி என்னும் வள்ளல். இவன், பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்ற நீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன்; தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன்.

ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்தவன், ஆய் என்னும் வள்ளல். இவன் வில் ஏந்தியவன்; சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவன்; ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவன்.

நறுமணம் கமழும் பெரிய மலைச்சாரலில் இருந்த அழகுமிக்க நெல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின் தன்மையுடையது. அது தனக்குக் கிடைக்கப் பெற்றபோது, அதனை (தான் உண்ணாமல்) ஔவைக்கு வழங்கியவன் அதிகன் என்னும் வள்ளல்; வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவன் : கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவன்.

நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவன். இவன் காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன்; போர்த் தொழிலில் வல்லமையுடையவன்; மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.

செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவன் ஓரி என்னும் வள்ளல். இவன் காரி என்னும் வலிமைமிக்க குதிரையைக் கொண்ட காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன்; ஓரி என்னும் வலிமைமிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவன்.

மேலே குறிப்பிட்ட ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர்; ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவன்.

தெரிந்து தெளிவோம்

கடையெழு வள்ளல்களும் - ஆண்ட நாடுகளும் 

பேகனின் ஊரான ஆவினன்குடி 'பொதினி' என்றழைக்கப்பட்டு, தற்போது பழனி எனப்படுகிறது. பழனி மலையும் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளும் பேகனது நாடாகும். 

பாரியின் நாடு பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. 

காரியின் நாடு (மலையமான் திருமுடிக்காரி) மலையமான் நாடு என்பதாகும். இது மருவி 'மலாடு' எனப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும். 

ஆய் நாடு (ஆய் அண்டிரன்) - பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும். 

அதியமான் நாடு (அதிகமான் நெடுமான் அஞ்சி) 'தகடூர்' என்றழைக்கப்பட்ட தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி. இப்பகுதியில் உள்ள 'பூரிக்கல்' மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியையே ஔவையாருக்கு அதிகமான் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

நள்ளியின் நாடு (நளிமலை நாடன்) நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி. தற்போது உதகமண்டலம் 'ஊட்டி' என்று கூறப்படுகிறது. 

ஓரியின் நாடு (வல்வில் ஓரி) - நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 'கொல்லி மலையும்' அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும். 

ஓய்மா நாட்டு நல்லியக்கோடனது நாடு திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.

ஏழு வள்ளல்கள் ஆண்ட இடங்கள் நிலப்படம்


தெரியுமா?

முல்லைக் கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவையல்ல. இஃது அவர்களின் ஈகை உணர்வின் காரணமாகச் செய்யப்பட்டதேயாகும். இச்செயலே இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பதாகிவிட்டது. இதையே, பழமொழி நானூறு, 'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்று கூறுகிறது.

புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல் குமணன். இவன் முதிர மலையை (பழனி மலைத்தொடர்களில் ஒன்று) ஆட்சி செய்த குறுநில மன்னனாவான். தன் தம்பியாகிய இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்து வாழ்ந்தான். இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான். அப்போது தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளைத் தந்து, தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான். இதனால் இவன் 'தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்' என்று போற்றப்படுகிறான். புறநானூறு 158 - 164, 165 ஆகிய பாடல்களிலும் இவனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.


இலக்கணக் குறிப்பு

வாய்த்த, உவப்பு, கொடுத்த, ஈந்த - பெயரெச்சங்கள்

கவாஅன் - செய்யுளிசையளபெடை

தடக்கை - உரிச்சொல் தொடர்

நீலம் - ஆகுபெயர்

அருந்திறல், நெடுவழி, வெள்ளருவி, நன்மொழி,நெடுவேல், நன்னாடு - பண்புத்தொகைகள்

கடல்தானை - உவமைத்தொகை

அரவக்கடல் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

 மலைதல் - தொழிற்பெயர் 

விரிகடல் - வினைத்தொகை


 உறுப்பிலக்கணம்

(i) ஈந்த = ஈ + த்(ந்) + த் + அ 

ஈ - பகுதி 

த்(ந்) - சந்தி ('ந்' ஆனது விகாரம்) 

த் - இறந்தகால இடைநிலை 

அ - பெயரெச்ச விகுதி

(ii) அமர்ந்தனன் = அமர் + த்(ந்) + த் + அன் + அன்

அமர் - பகுதி 

த் - சந்தி (ந் ஆனது விகாரம்) 

த் - இறந்தகால இடைநிலை 

அன் - சாரியை 

அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

(iii) தாங்கிய = தாங்கு + இ(ன்) + ய் + அ 

தாங்கு - பகுதி 

இ(ன்) - இடைநிலை


புணர்ச்சி விதி 

நன்மொழி = நன்மை + மொழி 

விதி : 'ஈறுபோதல்' - 'நன்மொழி'. 

உரனுடை = உரன் + உடை 

விதி : 'உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது  இயல்பே' - 'உரனுடை'.


சிறுபாணன் பயணம்


நல்லூர் (சிறுபாணன் பயணம்

தொடங்கிய இடம்)

8கல்

எயிற்பட்டினம் (மரக்காணம்)

12 கல்

வேலூர் (உப்பு வேலூர்)

11 கல்

ஆமூர் (நல்லாமூர்)

6 கல்

கிடங்கில் (திண்டிவனம்)

(சிறுபாணன் பயணம் முடித்த இடம்)

- மா. இராசமாணிக்கனார், 

பத்துப்பாட்டு ஆராய்ச்சி


நூல்வெளி

சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல். பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது. வள்ளல்களாகக் கருதப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் இப்பாடப்பகுதியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.


Tags : by Nathaththanar | Chapter 8 | 12th Tamil நத்தத்தனார் | இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum : Poem: Seripanachupadai by Nathaththanar | Chapter 8 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : செய்யுள்: சிறுபாணாற்றுப்படை - நத்தத்தனார் | இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்