Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: சிலப்பதிகாரம்

புகார்க் காண்டம் - இளங்கோவடிகள் | இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: சிலப்பதிகாரம் | 12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool

   Posted On :  02.08.2022 02:06 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்

செய்யுள்: சிலப்பதிகாரம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : செய்யுள்: சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - இளங்கோவடிகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் 

அரங்கேற்று காதை 

- இளங்கோவடிகள்



நுழையும்முன்

பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை. அது நுட்பமான தன்மையையும் திறனையும் உள்ளடக்கியது. கலைகளில் நடனக் கலை தமிழர்களால் போற்றப்பட்டுக் கற்கப்பட்டது. நடனம் கற்பவர்கள், பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்வர். இது இன்றும் காணப்படுகிற ஒரு வழக்கம். கலை ஒரு சமூகத்தின் பண்பாடு, வரலாறு, அழகியல் போன்ற கூறுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அவ்வகையில் தமிழர் வாழ்வு முழுமையும் கலைகளால் நிறைந்ததாகக் காணப்படுகிறது.


மாதவியின் நாட்டியப் பயிற்சி


....... பெருந்தோள் மடந்தை 

தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை 

ஆடலும் பாடலும் அழகும் என்று இக் 

கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல், 

ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு ஆண்டில் 

சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி (5-11)


நாட்டிய அரங்கின் அமைப்பு

எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது 

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு 

புண்ணிய நெடுவரைப் போகிய நெடும் கழைக் 

கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு 

நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும் 

கோல் அளவு இருபத்து நால்விரல் ஆக, 

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து 

ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி 

உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை 

வைத்த இடைநிலம் நால்கோல் ஆக 

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் 

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப் 

பூதரை எழுதி மேல்நிலை வைத்துத் 

தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்து; ஆங்கு 

ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் 

கரந்துவரல் எழினியும் புரிந்துஉடன் வகுத்து - ஆங்கு 

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து 

மாலைத் தாமம் வளையுடன் நாற்றி 

விருந்துபடக் கிடந்த அரும்தொழில் அரங்கத்துப்


தலைக்கோல் அமைதி

பேரிசை மன்னர் பெயர்புறத்து எடுத்த 

சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு, 

கண்இடை நவமணி ஒழுக்கி, மண்ணிய 

நாவல்அம் பொலம்தகட்டு இடை நிலம் போக்கிக் 

காவல் வெண்குடை மன்னவன் கோயில் 

இந்திர சிறுவன் சயந்தன் ஆக என 

வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல் 

புண்ணிய நன்னீர் பொன்குடத்து ஏந்தி 

மண்ணிய பின்னர், மாலை அணிந்து, 

நலம்தரு நாளால், பொலம்பூண் ஓடை

அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு 

முரசு எழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப, 

அரைசொடு பட்ட ஐம்பெரும் குழுவும் 

தேர்வலம் செய்து, கவிகைக் கொடுப்ப 

ஊர்வலம் செய்து புகுந்து, முன் வைத்துஆங்கு


மாதவியின் நாட்டியம் - மங்கலப் பாடல்

இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் 

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, 

வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து 

வலத் தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி 

இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த 

தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும், 

சீர் இயல் பொலிய, நீர்அல நீங்க, 

வாரம் இரண்டும் வரிசையின் பாடப் 

பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் 

கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்


இசைக்கருவிகள் ஒலித்த முறை 

* குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித் 

 தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப் 

 பின்வழி நின்றது முழவே, முழவொடு 

 கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை* (95-142)

பாவகை : ஆசிரியப்பா


மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்

பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென 

நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்துக் 

காட்டினள் ஆதலின், (143 - 145)

.......காவல் வேந்தன் 


இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத் 

தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி 

விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்துஎண் கழஞ்சு 

ஒரு முறையாகப் பெற்றனள். (157 - 163)


சொல்லும் பொருளும் 

புரிகுழல் - சுருண்ட கூந்தல்

கழை - மூங்கில்; 

கண் - கணு ; 

விரல் - ஆடவர் கைப் பெருவிரல்; 

உத்தரப் பலகை - மேல் இடும் பலகை; 

பூதர் - ஐம்பூதங்கள்; 

ஓவிய விதானம் - ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்; 

நித்திலம் - முத்து; 

விருந்து - புதுமை.

மண்ணிய - கழுவிய;

நாவலம்பொலம் - சாம்பூந்தம் என்னும் உயர்ந்த வகைப் பொன்; 

தலைக்கோல் - நாடகக் கணிகையர் பெறும் பட்டம்; 

ஓடை - முக படாம்; 

அரசு உவா - பட்டத்து யானை ; 

பரசினர் - வாழ்த்தினர்; 

பல் இயம் - இன்னிசைக் கருவி

குயிலு வ மாக்கள் - இசைக் கருவிகள் வாசிப்போர்; 

தோரிய மகளிர் - ஆடலில் தேர்ந்த பெண்கள் ; 

வாரம் - தெய்வப்பாடல்

ஆமந்திரிகை - இடக்கை வாத்தியம்

இலைப்பூங்கோதை - அரசன் அணிந்துள்ள பச்சை மாலை ; 

கழஞ்சு - ஒரு வகை எடை அளவு


பாடலின் பொருள் 

மாதவியின் நாட்டியப் பயிற்சி

மாதவி, அழகிய தோள்களை உடையவள்; தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள்.

ஆடல், பாடல், அழகு என்னும் இம் மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது பன்னிரண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள். (வீரக் கழல் பூண்ட சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள். அவளுடன் ஆடல் ஆசான், இசை ஆசான், கவிஞன், தண்ணுமை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோரும் வந்திருந்தனர்).

நாட்டிய அரங்கின் அமைப்பு

திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர். நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைத்தனர். தம் கைப் பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.

அரங்கில் தூணிற்கு மேல் வைத்த உத்திரப் பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடையே, இடைவெளி நான்கு கோல் அளவாக இருந்தது. அரங்கின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஏற்ற அளவுகளுடன் இரு வாயில்கள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. மேற்கூறியபடி அமைக்கப்பட்ட அவ்வரங்கில் மேல்நிலை மாடத்தில் ஐம்பூதங்களை யாவரும் புகழும்படி சித்தரித்து வைத்தனர். தூண்களின் நிழலானது, அவையிலும் நாடக அரங்கிலும் விழாதபடி நல்ல அழகான நிலைவிளக்குகளை நிறுத்தினர்.

மேலும், மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை, மேடையின் இரு புறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை, மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படும் கரந்துவரல் திரை, இவை மூன்றையும் சிறப்புடன் அமைத்தனர். ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தையும் அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துகளால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர். இவ்வாறு ஒவ்வொன்றையும் புதுமையாக, மேடையில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைத்தனர்.

தலைக்கோல் அமைதி

அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர். தலைக்கோல் என்பது, பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது. அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர். வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.

அத் தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர். பின்பு மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகபடாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர். முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப் பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும். பின்பு அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்த பின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான். இவ்வாறு மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.

மாதவியின் நாட்டியம் - மங்கலப் பாடல்

அரசன் முதலானோர் யாவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அதனருகே இசைக் கருவிகளை வாசிப்போர், நிற்க வேண்டிய முறைப்படி அவரவர்க்கு உரிய இடத்தில் நின்றனர். அதன்பின்பு அரங்கேற்றம் செய்ய வேண்டிய நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கில் வலக்காலை முன்வைத்து ஏறி, பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்தூண் அருகே போய் நிற்க வேண்டியது மரபு என்பதால் அங்குப் போய் நின்றாள். அவ்வாறே ஆடலில் தேர்ச்சிபெற்று அரங்கேறிய தோரியமகளிரும் தொன்றுதொட்டு வரும் முறைப்படி ஒருமுக எழினிக்கு நிலையிடனான இடப்பக்கத்தூணின் அருகே போய் நின்றனர். நன்மை பெருகவும் தீமை நீங்கவும் வேண்டி, 'ஓரொற்றுவாரம்', 'ஈரொற்றுவாரம்' என்னும் தெய்வப்பாடல்களை முறையாகப் பாடினர். பின் அப்பாடலின் முடிவில் இசைப்பதற்கு உரிய இசைக் கருவிகள் அனைத்தும் கூட்டாக இசைத்தன.

இசைக்கருவிகள் ஒலித்த முறை

குழலின் வழியே யாழிசை நின்றது; யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தளம் ஒலித்தது; தண்ணுமையோடு இயைந்து முழவு ஒலித்தது; முழவுடன் இடக்கை வாத்தியம் கூடி நின்று ஒலித்தது. (இவ்வாறு அனைத்துக் கருவிகளும் இயைந்து இசைத்தன.)

மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்

பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி வந்து நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள்.

மாதவி கூத்துக்கு உரிய இயல் பினி லிருந்து சற்றும் வழுவாது ஆடினாள். அந்த ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னனிடமிருந்து 'தலைக்கோலி' என்னும் பட்டமும் பெற்றாள். அரங்கேற்றம் செய்யும் நாடகக் கணிகையர்க்குப் 'பரிசு இவ்வளவு' என நூல் விதித்த முறைப்படி "ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை" மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்றாள்.

தெரியுமா?

யாழின் வகைகள் 

21 நரம்புகளைக் கொண்டது பேரியாழ் 

17 நரம்புகளைக் கொண்டது மகரயாழ் 

16 நரம்புகளைக் கொண்டது சகோடயாழ் 

 7 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டியாழ்


இலக்கணக் குறிப்பு

ஆடலும் பாடலும் - எண்ணும்மை

தொல்நெறி - பண்புத்தொகை


உறுப்பிலக்கணம்

தொழுதனர் -  தொழு + த் + அன் + அர்

தொழு - பகுதி

த் - இறந்தகால இடைநிலை

அன் - சாரியை

அர் - படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி


புணர்ச்சி விதி 

தலைக்கோல் = தலை + கோல் 

விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் 

கசதப மிகும் - தலைக்கோல்.


நூல்வெளி

சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒருபகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது குடிமக்கள் காப்பியம் எனப்படுகிறது. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் மூவேந்தர் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது. முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் புரட்சிக் காப்பியம் எனப்படுகிறது; இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால் முத்தமிழ்க் காப்பியம் எனப்படுகிறது. செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால் இது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' எனப்படுகிறது. மேலும், இந்நூல் 'பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம் , வரலாற்றுக் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள்' என அழைக்கப்படுகின்றன. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். 'சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்று பாரதி குறிப்பிடுகிறார். வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப்பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : by Pukar candom - by ilangovadikal | Chapter 6 | 12th Tamil புகார்க் காண்டம் - இளங்கோவடிகள் | இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool : Poem: Silappadikaram by Pukar candom - by ilangovadikal | Chapter 6 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : செய்யுள்: சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - இளங்கோவடிகள் | இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்